தொழில்நுட்பம்
Published:Updated:

சிக்க வெச்சு சிக்க வெச்சு விளையாடலாமா?

ஆனைக்கட்டி ஆஃப் ரோடிங்

>>எஸ்.ஷக்தி  

 ##~##

னைக்கட்டி பக்கமா நாளைக்கு வாங்க. சிக்க வெச்சு சிக்க வெச்சு விளையாடலாம்’ - சமீபத்திய சனிக்கிழமையன்றில் எனது ஜிமெயில் சாட்டிங்கில் வந்த ஜீப் ஆனந்த், இப்படியரு மெசேஜைத் தட்டிவிட்டு சட்டென்று ஆஃப் லைன் போய்விட்டார். அதீத ஆர்வத்துடன் கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் ஆஜரானோம். தமிழக - கேரள எல்லை வரை சென்றும்கூட ஆனந்த் டீம் கண்ணில் அகப்படாததால், செக்போஸ்ட் அருகிலிருக்கும் டீக்கடையில் 'ஏட்டா சூடா ரண்டு சாயா!’ என்று ஆர்டர் கொடுத்துவிட்டுத் திரும்பினால், புளுதியைக் கிளப்பியபடி சரசரவென வந்து நிற்கின்றன ஆறு சிங்கங்கள். அவை முறையே... வில்லீஸ், சிஜே-3பி, எம்எம்540, ஜிப்ஸி கிங் மற்றும் ஃபோர்டு ஜிபி டபிள்யூ.

ஆளுக்கொரு சாயாவை உள்ளுக்குள் சாய்த்துவிட்டு, ஜீப்புக்குத் தாவி 'வேட்டை ஆரம்பமாயிடுச்சுடோய்’ என்று விஜய் ஸ்டைலில் (இன்னுமா இந்த ஊரு இதையெல்லாம் தாங்கிட்டு இருக்கு) பஞ்ச் அடித்தது ஆனந்தின் டீம்.

சிக்க வெச்சு சிக்க வெச்சு விளையாடலாமா?

இந்த டீம் அடிக்கடி கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஆஃப் ரோடிங்கில் அதகளம் பண்ணக்கூடியவர்கள். ஆனைக்கட்டியில் நடக்கும் இந்த ஆஃப் ரோடிங்குக்காக பதினாறு நபர்கள் ஆறு ஜீப்களில் வந்திருந்தார்கள். இதில் இரண்டு பேர் மெக்கானிக்குகள்!

ஆனைக்கட்டி அருகிலிருக்கும் சங்கிலிப் பள்ளம்தான் ஈவென்ட் ஸ்பாட். செமத்தியான புகை மண்டலத்தைக் கிளப்பியபடி யானைகள் நடக்கும் வழித் தடத்தில் பாய்ந்து பறந்து ஸ்பாட்டை அடைந்தன ஜீப்புகள். அது ஒரு மெகா மணல் பிரதேசம். சமீபத்தில் பெய்திருந்த மழையால் குறு குறு குட்டைகளால் நிரம்பி வழிந்தது. எம்எம் 540-யின் ஸ்டீயரிங்கைச் சுழற்றிய அருண் பாய்ந்து போய் சேற்றிலிறங்கி சிதறியடிக்க... அவரை ஃபாலோ பண்ணி நின்ற டீம் அலறி அடங்கியது. நீர் நிரம்பி இருந்ததால், எந்தக் குழி அதிக ஆழத்தில் இருக்கிறது என்பதை ஃபிக்ஸ் செய்ய முடியவில்லை. ஆனாலும், மிரட்டலாக ஜீப்பை ஓட்டிச் சென்ற சதீஸ் ஒரு மெகா குழியில் இறக்கி ஏற்ற முயல, வகையாக சிக்கிக் கொண்டார். பிறகு, மற்றொரு ஜீப்பை வைத்து 'டோ’ செய்து கரையேறினார்கள். எத்தனை தடவை குழியில் விழுந்தும் அடங்கவுமில்லை, அசரவுமில்லை ஆஃப் ரோடிங் பட்டாளம் (ஆனந்த் தனது மெசேஜில் சொல்லியிருந்த 'சிக்க வெச்சு சிக்க வெச்சு ஆடும் விளையாட்டு’ இப்போது புரிந்தது). கையோடு அழைத்து வந்திருந்த மெக்கானிக்குகளின் இடுப்பைக் கழற்றி மாட்டி விட்டார்கள்.

சிக்க வெச்சு சிக்க வெச்சு விளையாடலாமா?

ஜிக் ஜாக்காக ஜீப்பைச் செலுத்தும் சாகசங்களை முடித்து விட்டு, பெரும் மணல் திட்டின் மேல் கிட்டத்தட்ட செங்குத்தாக ஏறும் 'டாப் க்ளைம்பிங்’ சாகசத்தை முயற்சி செய்தது ஆனந்த் டீம். முதலில் மேலிருந்து கீழ் நோக்கி இறங்கி, மணலின் ஆழத் தன்மையைப் பார்த்துவிட்டு, பிறகு கீழிருந்து மேலே ஏறினார்கள். சில நொடிகள் 90 டிகிரியில் ஜீப் ஏறியபோது ரோமங்கள் சிலிர்த்து நின்றன.

இப்படி மணல் பிரதேசத்தில் கெட்ட ஆட்டம் போட்டவர்கள், அப்படியே வன ஓடை ஒன்றினுள் ஜீப்பை இறக்கி அடுத்த இன்னிங்ஸை நடத்தினார்கள். பானெட் வரை தண்ணீர் எகிறியபோது, செம ஜில்லிப்பு! பிறகு, ஒரு தனியார் எஸ்டேட் வரை ரேஸ் நடத்திய அந்த டீம், லஞ்ச் இடைவேளைக்குப் பிறகு அங்கேயிருந்து கோவை சிட்டி வரை மீண்டும் ஒரு ஜாலி ரேஸை நடத்தியது.

பொதுவாக, சோம்பலோடு கழியும் ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் செம சுறுசுறுப்பாக நகர்ந்திருந்தது!