தொழில்நுட்பம்
Published:Updated:

ரேஸ் ஒரு தியானம்!

போலோ கப் பயிற்சி

>>பி.ஆரோக்கியவேல்  

 ##~##

வேகமும் விவேகமும் கொண்ட விசாகப்பட்டினத்தின் சைலேஷ் பொலிஷெட்டி, கோலாப்பூரைச் சேர்ந்த பர்த் கோர்பாடே, சென்னையின் விஷ்ணு பிரசாத் -இவர்களைப் போன்ற கார் ரேஸர்களை ஊக்குவித்து, இவர்கள் புதிய உயரங்களைத் தொடுவதற்குக் காரணமாக இருந்த ஃபோக்ஸ்வாகன், இப்போது புதிய அணியோடு 'போலோ கப் 2011’-க்குத் தயாராகிவிட்டது!

தேர்வு செய்தது எப்படி?

ஆன் லைனில் விண்ணப்பித்த சுமார் 1,600 வீரர்களை, பல்வேறு விதமாக அலசி ஆராய்ந்து 60 பேர்களாக வடிகட்டியது ஃபோக்ஸ்வாகன். இந்த 60 வீரர்களுக்கும் கோ-கார்ட்டிங் ரேஸ் வைத்து, மேலும் இருபதாக வடிகட்டி கடைசிக் கட்டத் தேர்வை நடத்த கோவைக்கு வரவழைத்தார்கள்.

ரேஸ் ஒரு தியானம்!

இன்னொருபுறம் கோவா, மும்பை, ஹைதராபாத் என ஒன்பது நகரங்களில் நடைபெற்ற 'அமரான் கார்டிங் சேலஞ்ச்’ போட்டியில் வெற்றி பெற்ற 40 வீரர்களையும், போலோ கப் 2011 போட்டிக்கு விண்ணப்பித்தவர்களாகக் கருதி, அவர்களையும் இறுதித் தேர்வு நடைபெறும் கோவைக்கு அழைத்தார்கள்.

கோவையில் நடைபெற்ற இறுதித் தேர்வில், ஆன் லைனில் விண்ணப்பித்து இறுதி நிலையை அடைந்த 20 வீரர்களும், அமரான் கார்டிங் ரேஸ் மூலமாக இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வான 40 பேர்களும் குவிந்தார்கள். இதில் தேர்வானால், எந்த போலோ காரை ஓட்ட வேண்டுமோ, அதே போலோ காரை ஓட்டக் கொடுத்தனர். இந்த 60 பேர்களிலிருந்து 14 வீரர்களைத் தேர்வு செய்தது ஃபோக்ஸ்வாகன் நடுவர்கள் குழு. இந்த நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் சென்னையைச் சேர்ந்த அக்பர் இப்ராஹிம் மற்றும் ரேமண்ட் பானர்ஜி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ரேஸ் ஒரு தியானம்!

போலோ கப் 2010-ல் கலந்து கொண்ட 6 பேர், போலோ கப் 2011-க்காக இப்போது தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் சென்னையைச் சேர்ந்த அலிஷா அப்துல்லா, விஷ்ணு பிரசாத் ஆகியோரும் அடக்கம்.

ரேஸ் கார் மாறியதா?

போலோ கப் 2011-ல் இவர்கள் ஓட்டப் போகும் போலோ கார் 1.6 லிட்டர் காமென் ரெயில் டீசல் இன்ஜின் கொண்டது. 6 கியர்களைக் கொண்ட இதில் இருப்பது 17 இன்ச் அலாய் வீல். ஆடுகளத்தில் பொசுங்கப் பொசுங்க சுழலப் போவது 200/605 ஸி17 டயர்கள். சென்ற ஆண்டு பயன்படுத்தப்பட்ட கார்களுக்கும், இந்த ஆண்டு பயன்படுத்த இருக்கும் கார்களுக்கும் இடையே இருக்கும் முக்கியமான வித்தியாசம், காரிலிருந்து வெளிப்படும் சத்தம். அடுத்ததாக, இன்ஜினை கூல் செய்யவும் அதற்கு காற்றோட்டம் கொடுக்கவும் பேனட்டில் ஸ்டைலாக ஒரு வென்டிலேட்டர் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல, ஸ்டீயரிங் வீல் இப்போது மேலும் வசதியோடு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்டீயரிங் வீல், 'தன்னை டிரைவர் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்’ என்பதைப் பதிவு செய்து வைத்துக்கொண்டு, டிரைவர் கேட்கும்போது கொடுக்கும்! இந்த தகவல்களை அடுத்த டிரைவர்களின் ஓட்டுதலோடு ஒப்பிட்டுப் பார்க்கவும் உதவும். இதை வைத்து நாம் மேலும் எப்படிச் சிறப்பாக காரை ஓட்டியிருக்க முடியும் என்பதை டிரைவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

ரேஸ் ஒரு தியானம்!
ரேஸ் ஒரு தியானம்!

பந்தய மைதானத்தில் காரை ஓட்டும் போது கார் கதவுகளின் கண்ணாடிகள் எல்லாம் முழுமையாக ஏற்றப்பட்டே இருக்கும். அதனால், வெளியில் இருந்து காருக்குள் காற்று வர வழியில்லை. அதேபோல, கொதி நிலையில் இருக்கும் இன்ஜினிலிருந்து வெளிப்படும் வெப்பம், டிரைவரை மேலும் உஷ்ணமாக்கும். அதனால், டிரைவரின் உடம்பிலிருந்து வேர்வை கொட்டிக்கொண்டே இருக்கும்.

ரேஸ் ஒரு தியானம்!

உடம்பில் தண்ணீரின் அளவு குறைந்தால் ஆபத்துதான். அதனால், பட்டனைத் தட்டினால் ஹெல்மெட்டில் இருக்கும் ட்யூப் வழியாக வாய்க்கு தண்ணீர் கொடுக்கும் ஒரு வசதியை இந்த காரில் அமைத்திருக்கிறார்கள்.

பயிற்சி

'கார் ரேஸ் என்பது தியானத்துக்கு ஒப்பானது’ என்று சொல்வார்கள். தியானம் செய்யும்போதுகூட ஒரு சில விநாடிகள் சிந்தனைக் கலையலாம். ஆனால், ரேஸ் ஓட்டும்போது ஒரே ஒரு கணம் சிந்தனை சிதறினாலும், காரே சிதறிவிடும்! அதனால், சிந்தனையை ஒருமுகப்படுத்த தேவையான அனைத்து பயிற்சிகளையும் பற்பல நிபுணர்களைக் கொண்டு ஃபோக்ஸ்வாகன் ரேஸ் வீரர்களுக்கு அளித்தது.

சிந்தனையை ஒருமுகப்படுத்த கற்றுக்கொடுக்கும் முகாம் என்பதால், மும்பைக்கு அருகில் இருக்கும் அமைதி ததும்பும் குளுகுளு வாசஸ்தலமான லோனாவாலாவைத் தேர்ந்தெடுத்திருந்தது ஃபோக்ஸ்வாகன். பவர் யோகா, வில் வித்தை, மலை ஏற்றம், கிக்-பாக்ஸிங், ஏரோபிக்ஸ் என மூன்று நாட்களும் சிந்தனையை ஒருமுகப்படுத்த எத்தனை விதமான யுக்திகள் உண்டோ, அவை அத்தனையையும் கற்றுக்கொடுத்தார்கள். இந்தப் பயிற்சிகள் அனைத்துமே உடம்பை வலிமைப்படுத்தும் என்பதால், ரேஸ் வீரர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு அத்தனை பயிற்சிகளையும் எடுத்தார்கள்!