தொழில்நுட்பம்
Published:Updated:

பிரெஞ்ச் அழகி ப்ளூயன்ஸ்!

பிரெஞ்ச் அழகி ப்ளூயன்ஸ்!

>>சார்லஸ் >> கே.ராஜசேகரன்  

பிரெஞ்ச் அழகி ப்ளூயன்ஸ்!
 ##~##

சென்னையில் 110 டிகிரி வாட்டி வதைத்துக் கொண்டு இருந்த கத்திரி வெயில் சீசனில், என்னுடைய கையில் கிடைத்தது ரெனோ ஃப்ளூயன்ஸ். ரெனோ இந்தியா நிறுவனத்தின் முதல் கார் இந்த ஃப்ளூயன்ஸ். இது, சென்னை ரெனோ -  நிஸான் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள ரெனோவின் முதல் காரும் கூட!

சென்னையில் இருந்து புதுச்சேரி வரை டீசல் ஃப்ளூயன்ஸ்; புதுச்சேரியில் இருந்து சென்னை வரை பெட்ரோல் ஃப்ளூயன்ஸ் என டெஸ்ட் செய்வதுதான் என்னுடைய பிளான். காரை டெஸ்ட் செய்வதற்கு முன்பு ரெனோ இந்தியா நிறுவனத்தைப் பற்றி ஒரு முன்னோட்டம்!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டணி போட்டு இந்தியாவில் கடை திறந்தது இந்த பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனம். இந்தியர்களுக்கு இதுதான் சரியான கார் என லோகனைக் களமிறக்கியது. ஆரம்பத்தில் லோகனின் விற்பனை அதிகமாக இருந்தாலும், டல்லான தோற்றத்தால் விற்பனை சரிந்தது. ஆனால், அதிக மைலேஜ், 5 பேர் தாராளமாக உட்காரக் கூடிய இட வசதி, குறைந்த விலை ஆகியவற்றால் டிராவல்ஸ் மார்க்கெட்டில் இன்றும் இதற்கு டிமாண்ட் இருக்கிறது.

ஆனால், மஹிந்திராவுடன்  இணைந்து நிறுவனத்தை நடத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம் எழுந்ததால், அந்த உறவை விவாகரத்து செய்துவிட்டு சர்வதேச அளவில் தன்னுடைய கூட்டாளியான நிஸானுடன் இணைந்து, சென்னையில் தொழிற்சாலை அமைத்தது ரெனோ. சென்னை அருகே ஒரகடத்தில் உள்ள இந்தக் கூட்டணி தொழிற்சாலையில் இருந்து, முதல் காரான நிஸான் மைக்ரா கடந்த ஆண்டு வெளிவர... ரெனோவின் முதல் காராக இப்போது வெளிவந்திருக்கிறது ரெனோ ஃப்ளூயன்ஸ்!

பிரெஞ்ச் அழகி ப்ளூயன்ஸ்!

ஸ்டைல்

லோகன் எடுபடாமல் போனதற்கு ஸ்டைல்தான் முக்கியக் காரணம் என்பதால், இந்தியர்களுக்கு ஸ்டைலான கார்களைத் தயாரிக்கும் நிறுவனம்தான் ரெனோ என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம்! ஃப்ளூயன்ஸ் உலகம் முழுவதும் ரசிக்கப்படும் ரசனையான கார். மேலும், லோகன் விஷயத்தில் தரத்தில் சொதப்பியது போல, ஃப்ளூயன்ஸில் ரெனோ ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. கிட்டத்தட்ட 99 சதவிகித பாகங்கள் அப்படியே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இன்று, இந்தியாவில் விற்பனையாகும் மற்ற எல்லா கார்களில் இருந்தும் வேறுபட்ட காராகக் காட்சியளிப்பது ப்ளூயன்ஸின் பலம். பார்க்கிங் ஏரியாவில் எத்தனை கார்கள் நின்றாலும், ப்ளூயன்ஸ் கார் மட்டும் நிச்சயம் தனித்துத் தெரியும்!

பிரெஞ்சு அழகியைப் போல சிக்கென இல்லாமல், இந்தியர்கள் விரும்பும் 'கொழுக் மொழுக்’ தோற்றத்துடன் இருக்கிறது ரெனோ ஃப்ளூயன்ஸ். வழவழப்பான, பளபளப்பான ரூஃப் மற்றும் முன் பக்கத்தைக் கொண்டிருக்கிறது. அழகாகச் செதுக்கப்பட்டு இருக்கும் பானெட் மற்றும் ஹெட் லைட்டுகள் முன்பக்க கவர்ச்சியைக் கூட்டுகின்றன. ஆனால், ரெனோவை இன்னும் அழகுபடுத்தவது அதன் 'ரோட் பிரஸன்ஸ்’தான். சொகுசு கார் போல நீளமாகவும், அகலமாகவும் இருக்கிறது. ஃப்ளூயன்ஸ் தன்னுடைய போட்டியாளர்களான டொயோட்டா கரோலா ஆல்டிஸைவிட 103 மிமீ நீளமும், ஸ்கோடா லாராவைவிட 125 மிமீ நீளமும் அதிகம்!

பிரெஞ்ச் அழகி ப்ளூயன்ஸ்!

வெளிநாடுகளில் 15 இன்ச் டயர்களைக் கொண்டிருக்கும் ஃப்ளூயன்ஸில், இந்திய ஸ்பெஷலாக 16 இன்ச் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், கிரவுண்டு கிளியரன்ஸ் உயர்ந்திருப்பதோடு, உயரமான காராகவும் காட்சியளிக்கிறது. காரின் பின் பக்க விளக்குகளும் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. பானெட்டை வெளியே இருந்து திறக்கும் வசதி இருக்கிறது.

காரின் உட்பக்கத்தைப் பொறுத்தவரை அதிக இடவசதியுடன் இருக்கிறது. எடை அதிகமான மூன்று பேர்கூட பின் சீட்டில் தாராளமாக உட்கார முடியும் என்பதோடு, கால்களை நீட்டி மடக்கி வசதியாக உட்கார முடியும். இதனால், போட்டியாளர்களான லாரா, ஜெட்டா, கரோலா ஆல்டிஸ் ஆகியவற்றை இட வசதியில் பின்னுக்குத் தள்ளுகிறது ஃப்ளூயன்ஸ்.

அதிக இட வசதியால் ஒரே நாளில் நெடுந்தூரம் பயணித்தாலும் அலுப்பு தெரியாது. மேலும், ஏ.ஸி, ஸ்டார்ட் பட்டனை அழுத்திய சில விநாடிகளிலேயே கேபினை சில்லென மாற்றிவிடுகிறது. கத்திரி வெயில் உச்சத்தில் இருந்தபோது, இந்த காருக்குள் புகுந்த நமக்கு ஏறியவுடனேயே இதன் ஏ.ஸி-யின் அருமை புரிய ஆரம்பித்தது.

பெட்ரோல் மாடலில் ஏபிஎஸ், ஈபிடி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், 4 காற்றுப் பைகள், லெதர் சீட்,  பவர் மிரர், ரியர் ஏ.ஸி வென்ட், பார்க்கிங் சென்ஸார், வெளிச்சம் குறைந்தால் ஆட்டோமேட்டிக்காக ஒளிரும் ஹெட் லைட்ஸ், மழை வந்தால் ஆட்டோமேட்டிக்காக இயங்கும் வைப்பர் ரெயின் சென்ஸார், க்ரூஸ் கன்ட்ரோல், கிளைமேட் கன்ட்ரோல் ஏ.ஸி... என ஏராளமான வசதிகள். ஆனால், டீசல் காரில் இதில் இருக்கும் பாதி சிறப்பம்சங்கள் அப்படியே காணாமல் போய்விட்டன. கிளைமேட் கன்ட்ரோல் ஏஸி, பக்கவாட்டு காற்றுப் பைகள், லெதர் சீட், பின்பக்க ஏ.ஸி வென்ட், பார்க்கிங் சென்ஸார், காருக்குள் வெயில் தாக்கத்தைக் குறைக்கும் சன் பிளைண்டர் ஆகியவை டீசல் ஃப்ளூயன்ஸில் இல்லை. 13 லட்ச ரூபாய் காரில் இந்த வசதிகள் நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும்!

டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் புதுமையாகவும், எண்களைத் துல்லியமாகவும் காட்டுகிறது. ஆனால், பிரெஞ்சு கார்களுக்கே உரிய சில சொதப்பலான விஷயங்கள் இதிலும் தொடர்கின்றன. ஸ்டீயரிங் கன்ட்ரோல் ஆடியோ சிஸ்டம் என்றாலே, பட்டன்கள் ஸ்டீயரிங்கில்தான் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதில் ஸ்டீயரிங் வீலுக்கு அடியில் ஒளிந்திருக்கிறன! க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை இயக்குவதற்கான சுவிட்ச் முன் பக்க இரண்டு சீட்டுகளுக்கு நடுவில் உள்ளது. ஏ.ஸி பட்டன்கள் மிகவும் சிறிதாகவும், ஸ்டீயரிங் கன்ட்ரோல்கள் மிகவும் தாழ்வாகவும் உள்ளன.

துருக்கியில் இருந்து பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, அசெம்பிள் செய்யப்படும் இந்த காரில் இடது பக்க டிரைவிங் சிஸ்டம் போலவே பல வசதிகளும் இடம்பெற்றுள்ளன. 'ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன்’ சென்டர் கன்ஸோலின் இடது பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. முன் பக்க பயணி கால் வைக்கும் இடத்தில் இன்ஜின் பானெட்டைத் திறக்கும் லீவரும், ஹேண்ட் பிரேக் லீவர் முன் பக்க பயணி இயக்குவதற்கு வசதியாகவும் வைக்கப்பட்டுள்ளது போலவும் இருக்கிறது. இப்போது இந்தியாவில் ஸ்டார் ஹோட்டல், ஷாப்பிங் மால் என எங்கே போனாலும் பானெட்டைத் திறந்து காட்ட வேண்டியிருக்கும் சூழ்நிலையில், பானெட்டைத் திறக்கும் லீவர் இடது பக்கத்தில் இருப்பது மிகவும் அசௌகரியமாக உள்ளது.

பிரெஞ்ச் அழகி ப்ளூயன்ஸ்!

530 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கியில் ஏராளமான பொருட்களை வைக்க முடியும். இதனால், நீண்ட தூரப் பயணங்கள் செல்பவர்கள், விமான நிலையத்துக்கு செல்பவர்கள் கவலைப்படாமல் லக்கேஜ்களை டிக்கியில் ஏற்றலாம்.

ஃப்ளூயன்ஸின் பில்டு குவாலிட்டியில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. ஸ்ட்ராங்கான, ஸ்டேபிளான காராக இருக்கிறது ரெனோ ஃப்ளூயன்ஸ்.

இன்ஜின்

1.5 லிட்டர் டீசல் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வெளிவந்திருக்கிறது ஃப்ளூயன்ஸ். பெட்ரோலில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மட்டுமே உண்டு. டீசலில் வெறும் மேனுவல் கியர் பாக்ஸ்தான். இதனால் டீசல் காரைவிட பெட்ரோல் காரின் விலை அதிகம். டீசல் இன்ஜின் 105 bhp சக்தியை வெளிப்படுத்த, பெட்ரோல் இன்ஜின் 135 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. நிஸான் மைக்ராவில் இருக்கும் அதே டீசல் இன்ஜின்தான் என்றாலும், வேரியபிள் ஜியோமெட்ரி டர்போ தொழில்நுட்பம் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. 0-100 கி.மீ வேகத்தை 14 விநாடிகளில் கடக்கும் டீசல் இன்ஜினின், மிட் ரேஞ்சில் பவர் டெலிவரி மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதனால், நெடுஞ்சாலையில் ஓவர்டேக் செய்து ஓட்ட உற்சாகத்தைத் தூண்டுகிறது ஃப்ளூயன்ஸ். அதேபோல், 120-130 கி.மீ வேகத்தைத் தாண்டும்போதும்கூட உள்ளே உட்காருபவர்களுக்கு எந்த பயமும் ஏற்படவில்லை. காரில் அதிர்வுகள் எதுவும் இல்லை. டீசல் இன்ஜின் லிட்டருக்கு 21.8 கி.மீ மைலேஜ் தரும் என்கிறது ரெனோ!

ஆனால், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட டீசல் இன்ஜின் ஆரம்ப வேகத்தில் சொதப்புகிறது. டிராஃபிக்கில் நிறுத்திவிட்டு மீண்டும் வேகத்தைப் பிடிக்க வேண்டுமென்றால், ஆக்ஸிலரேட்டரில் எழுந்து நின்றுதான் மிதிக்க வேண்டும். பெரிய காரான இதில் வெறும் 1.5 லிட்டர் இன்ஜின் போதுமானதாக இல்லை என்பதையே இதுக் காட்டுகிறது.

டீசல் இன்ஜினைவிட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மட்டுமே கொண்ட பெட்ரோல் இன்ஜினின் செயல்பாடு மிகவும் பிரமாதம். நகருக்குள் பயன்படுத்துவதற்கு என்று ட்யூன் செய்யப்பட்டு இருக்கும் இந்த காரில் பிக்-அப் சூப்பர். சிக்னலில் இருந்து சீறிப் புறப்படுகிறது ஃப்ளூயன்ஸ் பெட்ரோல். 0-100 கி.மீ வேகத்தை 13 விநாடிகளில் கடந்து விடுகிறது. சிறு அதிர்வுகள்கூடத் தெரியவில்லை. ஆனால், பர்ஃபாமென்ஸில் பெட்ரோலை விட அதிகமாக இருந்தாலும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் காரணமாக இதன் மைலேஜ் குறைவாகவே இருக்கிறது. லிட்டருக்கு 13.2 கி.மீ மைலேஜ் தரும் என்று சொல்கிறது ரெனோ. இதன் மைலேஜ் விவரங்கள் கார் முழுவதுமாக டெஸ்ட் செய்யப்பட்ட உடன் வெளியிடப்படும்.

கையாளுமை

ஓட்டுதல் மற்றும் கையாளுமையில் பெஸ்ட் ஃப்ளூயன்ஸ். வளைவுகளில் வளைத்து நெளித்து ஓட்டுவதற்குச் சிறப்பாக இருப்பதோடு, நெடுஞ்சாலையில் ஸ்டெபிளிட்டி மிகவும் சூப்பர். மேடு, பள்ளங்களில் ஏறி இறங்கும்போது ஆட்டமும், அதிர்வுகளும் அதிகமாக இல்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா, ஸ்கோடா லாரா ஆகிய கார்களைவிட ஓட்டுதல் தரத்தில் மிகவும் சிறப்பாக இருக்கிறது ஃப்ளூயன்ஸ்.

பிரெஞ்ச் அழகி ப்ளூயன்ஸ்!

பெட்ரோலா? டீசலா?

பெட்ரோல், டீசல் என இரண்டு கார்களையும் மாறி மாறி ஓட்டிய பிறகு பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களிலுமே ரெனோ மாற்றத்தைச் செய்ய வேண்டும் என்பது புரிகிறது. பெட்ரோல் மாடலில் ரெனோ நிச்சயம் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடலை அறிமுகப்படுத்த வேண்டும், டீசல் இன்ஜின் சிறப்பாக இருந்தாலும், பெட்ரோல் காரில் இருக்கும் சிறப்பம்சங்கள் பலவற்றையும் டீசலில் நீக்கியிருப்பது... 'டீசல் காரை நான் ஏன் வாங்க வேண்டும்’ என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்திய வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை மைலேஜ் முக்கியம்தான். ஆனால், காரை வாங்க மைலேஜ் மட்டும் இருந்தால் போதாதே! டீசலில் சிறப்பம்சங்களைக் கூட்டி, பெட்ரோலில் மேனுவல் கியர் பாக்ஸையும் சேர்த்தால், ரெனோ ஃப்ளூயன்ஸ் விற்பனை ஏணியில் விறுவிறுவென ஏறும்!

ரெனோவின் பிளான்!

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஐந்து  புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது ரெனோ. இரண்டு செடான், இரண்டு எஸ்யூவி, ஒரு சிறிய ஹேட்ச்பேக் கார் என்பதுதான் ரெனோவின் பிளான். இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியா முழுவதும் 100 டீலர்ஷிப்புகள் என்கிற மெகா பிளானோடு இயங்கிவருகிறது ரெனோ. சென்னையில் தொழிற்சாலை மட்டுமல்லாமல், அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி பிரிவையும் இயக்கி வருகிறது. இதில் 2500-க்கும் மேற்பட்ட இன்ஜினீயர்கள் வேலை செய்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில் ரெனோ-நிஸான் கார்கள் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகள் இங்கே மேற்கொள்ளப்படுகின்றன!