தொழில்நுட்பம்
Published:Updated:

மைலேஜ் ராலி

டாடா இண்டிகா ev2 25 கி.மீ

>>  க.நாகப்பன்   >> பு.நவீன்குமார்  

 ##~##

லிட்டருக்கு 25 கி.மீ மைலேஜ்’ என டாடா, இண்டிகா இ.வி-2 காரை விளம்பரப்படுத்துகிறது. 'அராய்’ அளித்த இந்த மைலேஜ் சான்றிதழ் உண்மைதானா என்பதை டெஸ்ட் செய்ய விரும்பிய வாடிக்கையாளர்களுக்கு, சமீபத்தில் சென்னையில் மைலேஜ் ராலியை நடத்தியது டாடா நிறுவனம். இதற்காக, புத்தம் புது டாடா இண்டிகா இ.வி-2 மாடலில் 21 கார்கள், சென்னை அண்ணா மேம்பாலம் அருகே இருக்கும் இஸ்பஹானி சென்டரில் அணிவகுத்திருந்தன.

'ஒரு லிட்டர் டீசலுக்கு 25 கிலோ மீட்டரா?!’ என வியந்து, 'அது உண்மையா எனப் பார்த்து விடலாம்’ என சந்தேகக் கேள்விகளுடன் கிளம்பி வந்த டாடாவின் வாடிக்கையாளர்களில் சிலர், குடும்பத்துடன் பங்கேற்றது ஆச்சரியம். 'வாராயோ... வாராயோ... மைலேஜ் பார்க்க...’ என பாட்டுப் பாடி வாடிக்கையாளர்களை வரவேற்றார் பின்னணிப் பாடகி சின்மயி.

மைலேஜ் ராலி

மைலேஜ் டெஸ்ட்டில் கலந்துகொண்ட அனைவரின் கைகளிலும் ரூட் மேப் கொடுக்கப்பட்டு, காரில் டாடா நிறுவனத்தின் பணியாளர் ஒருவரும் உதவிக்கு உட்கார... சின்மயி கொடி அசைத்ததும் ராலி துவங்கியது. 'லிட்டருக்கு 25 கி.மீ மைலேஜ்’ என்று கூறப்பட்டாலும் 'அதிகபட்ச மைலேஜை ஓட்டிக் காட்டும் வாடிக்கையாளர்களுக்கு, முறையே

மைலேஜ் ராலி

25,000, 15,000, 10,000 கிஃப்ட் வவுச்சர் வழங்கப்படும்’ என்று அறிவித்தனர் டாடா நிறுவனத்தினர். ஆர்வத்துடன் களம் காணப் புறப்பட்டவர்கள், ராணி சீதை மன்றம் அருகிலுள்ள பெட்ரோல் பங்க்கில் டேங்கை நிரப்பிக் கொண்டு, ரூட் மேப்பில் சொல்லியிருந்த வழியில் விரைந்தனர்.

மைலேஜ் ராலி

மெரினா, பெசன்ட் நகர், நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் என மூன்று இடங்களில், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட படிவத்தில் சீல் வாங்கிக்கொண்டு, மீண்டும் இஸ்பஹானி சென்டரை வந்தடைய வேண்டும். போட்டியின் மொத்த தூரம் 58 கி.மீ. சந்து பொந்துகளில், குறுக்கு வழிகளில் செல்லக்கூடாது என்பது விதி. ரூட் மேப்பில் உள்ளபடி செல்ல வேண்டும் என கட்டுப்பாடு விதித்திருந்தனர்.

ராலி துவங்கிய இடத்துக்கு போட்டியாளர்கள் திரும்ப வந்தடைந்ததும், காரில் மீண்டும் டீசல் நிரப்பப்பட்டு, லிட்டருக்கு எத்தனை கி.மீ மைலேஜ் கிடைத்துள்ளது எனக் கணக்கிடப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட பெரும்பான்மையானவர்கள், டாடா கூறும் லிட்டருக்கு 25 கி.மீ மைலேஜைத் தாண்டி இருந்ததுதான் நம்ப முடியாத ஆச்சரியம். மூன்று ரவுண்டுகளாக நடந்த இந்த ராலியில், கலந்து கொண்ட 65 பேரில் முதலிடம் பிடித்தது சதீஷ்குமார். இவருக்குக் கிடைத்த மைலேஜ் என்ன தெரியுமா? லிட்டருக்கு 45.8 கி.மீ! (நீங்க காமெடி, கீமடி பண்ணலையே!) இரண்டாவதாக வந்த ருத்ரகுமாருக்குக் கிடைத்த மைலேஜ் 42.5 கி.மீ! அதேபோல், மூன்றாவது இடம் பிடித்த சக்திக்குக் கிடைத்தது 41.49 கி.மீ! நம்ப முடியாத மைலேஜ் கிடைத்த உற்சாகத்தில் மிதந்தனர் இந்த வெற்றியாளர்கள். அதேசமயம், 40.4 கி.மீ மைலேஜ் எடுத்துக் காட்டி, நூலிழையில் வெற்றியைத் தவற விட்டார் ராஜேந்திரன்.

மைலேஜ் ராலி

''சுமோ, டவேரா, இனோவாவில் இருந்து ரோடு ரோலர் வரைக்கும் அசால்ட்டா டிரைவ் பண்ணி இருக்கேன். ஓவர் ஸ்பீடு போகலை. கியரைத் தேவையில்லாம மாத்தலை. சிக்னல்ல 40, 45 செகண்ட்ஸ் இருந்தா, காரை ஆஃப் பண்ணிட்டு, 5 செகண்ட்ஸ் இருக்கும்போது ஸ்டார்ட் பண்ணேன். ஏ.ஸி யூஸ் பண்ணலை. ஒரே மாதிரி ஸ்பீடுல போனேன். வீல்ல ஏர் சரியா இருந்துச்சு. தேவையில்லாம வளைச்சு நெளிச்சு ஓட்டலை. இப்படி பயன்படுத்துனா மைலேஜ் மட்டுமில்ல, எந்த பொருளும் டேமேஜ் ஆகாது. நீண்ட காலமும் உழைக்கும்'' என்றார் சதீஷ்குமார்.

இந்த மைலேஜ் ரகசியத்தை டாடா எல்லோருக்கும் சொன்னால் நல்லாயிருக்கும்!

லிம்கா ரெக்கார்டு! 

சந்தோஷமான சேதி! 'மோட்டார் விகடன்’ முன்னிலையில் ஒரே ஒரு லிட்டர் பெட்ரோலில் சுமார் 39 கி.மீ தூரம் காரை ஓட்டிச் சென்று ஆச்சர்யப்பட வைத்த நாராயணன் மேனன் (2010 ஜூன் இதழ்), 'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில்’ சாதனையாளராகப் பதிவாகி இருக்கிறார்.

''சரி, லிம்காவில் பதிவானது எப்படி?'' என்று நாராயணனிடம் கேட்டபோது, ''மோட்டார் விகடன்ல வந்த பிறகு, இன்னும் சில மீடியாக்கள் இதைப் பதிவு பண்ணினாங்க. அப்புறமா லிம்காவோட கவனத்துக்கும் கொண்டு போனோம். அவங்க முன்னாடி டெஸ்ட் டிரைவ் பண்ணி காட்டச் சொன்னாங்க. மே மாதம் (25-05-2010) கோவை- அவினாசி பைபாஸ் ரோட்ல ஓட்டிக் காண்பிச்சேன். வெறும் 1.58 லிட்டர் டீசல்ல 73.2 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்தேன். இதோ லிம்காவோட 2011-ம் ஆண்டு நேஷனல் ரெக்கார்டுல நானும் இருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்றார் மேனன்!

- எஸ்.ஷக்தி