தொழில்நுட்பம்
Published:Updated:

முதல்வர் யூஜின்!

WSBK வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ்

 ##~##

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸின் லேட்டஸ்ட் ஹீரோ யூஜின் லாவெர்ட்டி! அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவரும், யமஹா அணியின் ரேஸ் வீரருமான யூஜின், இத்தாலியின் மான்ஸா நகரில் நடைபெற்ற ரேஸ் போட்டியில் டபுள் பட்டம் வென்று, ரேஸ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார். 

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ்- மான்ஸா

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் பந்தயத்தின் நான்காவது சுற்று மே 8-ம் தேதி இத்தாலியில் உள்ள மான்ஸா நகரில் நடைபெற்றது. உலக சாம்பியினும் ஏப்ரில்லியா அணி வீரருமான மேக்ஸ் பியாஜி, ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்க தகுதி பெற, யமஹா அணியின் புதுமுக வீரரான யூஜின் லாவெர்ட்டி இரண்டாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். ஹோண்டா அணியின் ஜோனத்தன் ரியா மூன்றாவது இடத்தில் இருந்தும், பிஎம்டபிள்யூ அணியின் ட்ராய் கோர்ஸர் நான்காவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள்.

முதல்வர் யூஜின்!

ரேஸ்-1

ஆரம்பம் முதலே மேக்ஸ் பியாஜிக்கும், யூஜின் லாவெர்ட்டிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. நேர் டிராக்கில் யூஜினின் வேகம் அதிகமாக இருக்க, வளைவுகளில் யூஜினை நெருக்கினார் மேக்ஸ் பியாஜி. ஆனால், யூஜினின் வேகம், பியாஜியை பதற்றப்பட வைத்தது. இதனால், தவறுகள் செய்ய ஆரம்பித்தார் பியாஜி. தவறான நேரத்தில் பிரேக்கிங், வளைவுகளில் திருப்பும்போது அதிக நேரம் எடுத்துக் கொண்டது என பியாஜி தடுமாற... யூஜின் லாவெர்ட்டி 18 சுற்றுகள் கொண்ட முதல் ரேஸின் வெற்றிக் கோட்டைத் தொட்டார். மேக்ஸ் பியாஜி இரண்டாவது இடத்தையும், சுஸ¨கியின் லியான் ஹஸ்லாம் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

முதல்வர் யூஜின்!

ரேஸ்-2

இரண்டாவது ரேஸிலும் யூஜின் லாவெர்ட்டியின் அதிரடிதான். ஆனால், முதல் ரேஸ் வெற்றி போல, இரண்டாவது வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடவில்லை. முதல் லேப்பிலேயே இடிதடிக்குள்ளானார். ஜோனத்தன் ரியா மற்றும் ஹஸ்லாமின் பைக்குடன் யூஜின் மோத... பல இடங்கள் பின்னால் போய்விட்டார். ஆனால், இறுதி வரை விடாமல் துரத்திய யூஜின், கடைசி லேப்பில் யமஹாவின் மற்றொரு வீரரான மார்க்கோ மெலாண்ட்ரியை முந்திச் சென்று வெற்றி பெற்றார். இரண்டு ரேஸ்களிலும் யூஜின் லாவெர்ட்டி வெற்றி பெற்றதால் டபுள் பட்டம் அவருக்குக் கிடைத்தது. ஃபெப்ரிஸியோ மூன்றாவது இடம் பிடித்தார். நடப்பு சாம்பியன் பியாஜி தவறான முறையில் ஓவர்டேக் செய்ததற்காக 5 விநாடிகள் பெனால்ட்டி அளிக்கப்பட்டதால், பியாஜி எட்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

முதல்வர் யூஜின்!

நான்கு சுற்றுகளின் முடிவில் சாம்பியன்ஷிப் பட்டியலில் கார்லோஸ் செக்கா 145 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். மார்க்கோ மெலாண்ட்ரி 118 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மேக்ஸ் பியாஜி 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன் வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் பந்தயத்தின் ஐந்தாவது சுற்று, அமெரிக்காவின் மில்லர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் மே 30-ம் தேதி நடந்து முடிந்திருக்கும்!