Published:Updated:

கிரேட் எஸ்கேப் - சென்னை to கல்லணை

கல்லணையில் புது வெள்ளம் வெர்னா!

கிரேட் எஸ்கேப் - சென்னை to கல்லணை

கல்லணையில் புது வெள்ளம் வெர்னா!

Published:Updated:

>>கா.பாலமுருகன் >> கே.கார்த்திகேயன், 'ப்ரீத்தி' கார்த்திக்

 ##~##

'வெர்னாவா இது?’ என்று அடையாளம் தெரியாத அளவுக்கு இளமைப் பொலிவு பெற்று புதிதாக வந்திருக்கிறது ஹூண்டாய் வெர்னா. 

மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் திருச்சியை நோக்கி புது வெள்ளமாய் புறப்பட்ட சமயம். புது வெள்ளத்தைப் பார்க்க புதிய வெர்னாவில் சென்னையிலிருந்து கரிகாலனின் கல்லணையை நோக்கி பயணமானோம்.

கீ லெஸ் என்ட்ரி, ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், சிஆர்டிஐ இன்ஜின் என வசதிகளோடு இருந்த வெர்னாவை சென்னையில் ஸ்டார்ட் செய்தபோது மதியம் 12 மணி.

புதிய வெர்னாவில் கியர் பட்டர் ஸ்மூத். நகர நெரிசலில் லாவகமான நீந்திச் சென்றது வெர்னா. டிரைவிங் பொஸிஷன், ஸ்டீயரிங், சைடு வியூ மிர்ரர் ஆகிய அனைத்துமே கச்சிதமாகவும், பயன்படுத்துவதற்கு வசதியாகவும் இருந்தது. வைத்த கண்ணை எடுக்க முடியாத அளவுக்கு டேஷ் போர்டு வசீகரம். காரை ரிவர்ஸ் எடுத்தால் ரியர் வியூ மிரரில் ஒரு பாதி வெண் திரையாக மாறி காருக்குப் பின்னால் இருக்கும் காட்சியைக் காட்டுவது 'வாவ்’ டைப்! பவர்டு மிர்ரர், ப்ளூ டூத் என அவசியமானவற்றை எல்லாம் பார்த்துப் பார்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.

கிரேட் எஸ்கேப் - சென்னை to கல்லணை

தாம்பரம் தாண்டியதும் வெண்ணையாக வழுக்கிச் சென்ற காரை, சாலையில் செல்வோர் திரும்பிக் பார்க்காமல் இல்லை. விசாலமான முன்னிருக்கைகள் உட்காரவும் வசதியாகவும், களைப்பு தெரியாமலும் இருக்கின்றன. பின்னிருக்கை வசதியாக இருந்தாலும், கொஞ்சம் உயரம் அதிகமானவர் அமர்ந்தால் கால் வைக்க வசதியாக இருக்காது. அதேபோல், பின் சீட்டின் நடுவே உள்ள ஹெட் ரெஸ்ட் பின்பக்க சாலையைத் தெளிவாகப் பார்க்க விடாமல் தடுக்கிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

நால்வழிச் சாலையில் பகலில் போக்குவரத்து அதிகம் இருக்கும். அதனால், வெர்னாவின் வேகத்தைச் சோதிக்கும் காரியத்தைத் தள்ளிப் போட்டோம். ஆனால், காரின் ஸ்டெபிளிட்டி, ஹேண்ட்லிங் ஆகியவற்றைச் சோதிக்க ஆயத்தமானோம். ஸ்டீயரிங் ஆரம்பத்தில் மிக மிக லைட்டாக இருப்பது பயமாக இருக்கிறது. ஆனால், வேகம் அதிகரிக்க அதிகரிக்க... அது கடினமாவதை உணர்ந்த பிறகுதான் தைரியம் பிறந்தது. டீசல் இன்ஜின் என்று சொல்ல முடியாத அளவுக்கு கமுக்கமாக இருக்கிறது சிஆர்டிஐ இன்ஜின். ஆரம்ப வேகத்தில் சற்று மந்தமாக இருந்தாலும், 2000 ஆர்பிஎம்மைக் கடந்தவுடன் ஜிவ்வென்று எகிற ஆரம்பிக்கிறது.

கிரேட் எஸ்கேப் - சென்னை to கல்லணை

சின்னச் சின்ன மேடு பள்ளங்களின் அதிர்வை, காருக்குள் கொண்டு வராமல் காக்கின்றன சஸ்பென்ஷன்கள். அதேபோல், ஓரளவுக்கு நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், டோல்கேட்டுகளில் உள்ள ஸ்பீடு பிரேக்கரில் இடித்துக் கொள்ளாமல் தப்பிக்கிறது. திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை ஆகிய ஊர்களைக் கடந்தபோது, வளைவு நெளிவுகள் இல்லாமல் நீண்டு கிடந்த நால்வழிச் சாலை வெர்னாவுக்கு 'வா... வா!’ என்று தார் கம்பளம் விரித்தது. இந்த இடத்தில் வெர்னாவின் அதிகபட்ச வேகத்தைப் பார்த்துவிடலாம் என முடிவு செய்து ஆக்ஸிலரேட்டரை அழுத்தினோம்.

100, 120, 140 என எந்தச் சிரமுமில்லாமல் சீறிய வெர்னாவை மேலும் அழுத்த... 160 கி.மீ வேகத்தைத் தாண்டி 180-ஐ ஸ்பீடோ மீட்டரை முள் நெருங்கியபோது... முன்னால் வாகனம் ஒன்று செல்வது தெரிந்ததும் ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்து பிரேக்கில் வைத்தோம். எந்த அலட்டலும் இல்லாமல் கார் கட்டுக்குள் வந்தது.

இவ்வளவு வேகத்திலும் கார் கட்டுப்பாட்டுடன் பயமேற்படுத்தாமல் இருந்ததை ஒப்புக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, சாலை வளைந்து நெளிய ஆரம்பித்ததால், வேகத்துக்குத் தடா போட்டு விட்டு, நிதானத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து, திருச்சியை எட்டினோம். கொள்ளிடம் பாலம் தாண்டி காவிரியைக் கடந்து நகருக்குள் நுழைந்தோம். ரயில் நிலையம் அருகே நமக்காக மோ.வி வாசகர் நஸீர் அகமது காத்திருந்தார்.

புதிய வெர்னாவை ஓட்டிப் பார்க்கும் ஆவலுடன் வந்திருந்த நஸீர் அகமதுவிடம் ஹூண்டாய் சான்ட்ரோ இருக்கிறது. திருச்சியில் ஹோட்டல், வாடகை விடுதி போன்றவற்றை நடத்தி வரும் இவருக்கு, அடுத்த கார் ஹூண்டாய் காராகத்தான் இருக்க வேண்டுமென்பது விருப்பம். புதிய வெர்னா மோ.வி டெஸ்ட்டுக்காக திருச்சி வருகிறது என்பதை அறிந்ததும் மகிழ்ச்சியடைந்தார். ரயில் நிலையத்தில் இருந்து காரை எடுக்கும் முன்பு, டிரைவர் சீட்டில் அமர வைத்து காரில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி விளக்கினோம். ''இந்த காரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?'' என ஆச்சரியமடைந்த நஸீர் அகமது, மதுரை நோக்கிச் செல்லும் நால்வழிச் சாலையை நோக்கி காரைச் செலுத்தினார். நகருக்குள் நிதானமாக ஓட்டியவர், நால்வழிச் சாலையில் நுழைந்ததும் வேகமெடுக்க ஆரம்பித்தார். சுமார் 15 கி.மீ தூரம் ஓட்டியவர், மனதே இல்லாமல் மீண்டும் திருச்சியை நோக்கி திருப்பினார்.

சான்ட்ரோ ஓட்டிக் கொண்டு இருந்தவருக்கு புதிய வெர்னா பல ஆச்சரியங்கள் அளித்தது. ''குடும்பத்தோட வெளியூர் போக ரொம்ப வசதியா இருப்பதோட ரொம்ப கௌரவமாவும் இருக்கும். ஹைவேஸ்ல தைரியமா, வேகமா போறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு. ஸ்டீயரிங் இவ்வளவு ஸ்மூத்தா இருக்கும்னு நெனச்சுக்கூடப் பார்க்க முடியலை! காரோட உள்பக்கம் படு பிரம்மாண்டம். வெர்னாவுல எனக்கு ரொம்பப் பிடிச்சது ரிவர்ஸ் கேமராதான். ரிவர்ஸ் கியரை மாத்துனதும் பின் பக்கம் பார்க்குற கண்ணாடியிலேயே ஸ்கிரீன் இருக்குறது ஆச்சரியமா இருக்கு. அதுவும் பின் பக்கம் இருக்குற இடத்தை பச்சை, மஞ்சள், சிவப்புன்னு மூணு விதமா தூரத்தை மார்க் பண்ணிக் காட்டுறது ரொம்ப யூஸ்ஃபுல். அடுத்து என்னோட கார் வெர்னாதான்!'' என்று சந்தோஷ முகத்தோடு கூறினார் நஸீர் அகமது.

கிரேட் எஸ்கேப் - சென்னை to கல்லணை

அவரிடம் விடை பெற்ற பின்பு, கல்லணை நோக்கி கார் சென்றது. திருச்சியில் இருந்து 14 கி.மீ தூரத்தில் இருக்கிறது கல்லணை. மேலும், திருச்சியில் இருந்து கல்லணை செல்ல மூன்று வழிகள் இருக்கின்றன. அதில் கொள்ளிடத்துக்கும், காவிரிக்கும் நடுவே இருக்கும் தீவில் செல்லும் ஒற்றையடிப் பாதை போன்ற சாலையில் சென்றோம். எதிரே வந்த மணல் லாரிகளையெல்லாம் கவனமாகக் கடந்து கல்லணை அடைந்தபோது, அப்போதுதான் மேட்டூரிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் லேசாக எட்டி இருந்தது. பெரும் வெள்ளத்தை எதிர்பார்த்துச் சென்ற நமக்கு சற்றே ஏமாற்றமாக இருந்தது. நாளை முழு வெள்ளம் எட்டிவிடும் என்றார்கள். கல்லணை அருகே எந்தக் குடியிருப்புகளும் இல்லை. ஆனால், ஏராளமான மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. அனைவரும் கல்லணையைச் சுற்றிப் பார்க்க வந்தவர்கள்.

கிரேட் எஸ்கேப் - சென்னை to கல்லணை

இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழரின் பொறியியல் சாதனையை உலகுக்குப் பறைசாற்றும் இடமாக இருக்கிறது கல்லணை. சோழ மன்னர் கரிகால சோழனால் கட்டப்பட்ட இந்த அணை, மணல் மீது கற்களை அடுக்கி, நீரில் கரையாத களிமண்ணை கற்களுக்கிடையே பூசி உருவாக்கி இருக்கிறார்கள். இதை வியக்காதவரே எவருமில்லை. நம் நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது, இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஆர்தர் தாமஸ் காட்டன் என்ற பிரபல பொறியாளர், கல்லணையை வெகுகாலமாக ஆராய்ச்சி செய்து, இந்த அணையின் கட்டுமான அமைப்பைக் கண்டு வியந்து, அவர் வைத்த பெயர்தான் 'கிராண்ட் அணைகட்.’ கடந்த நூற்றாண்டில் இருந்தே புதிய அணைத் திட்டங்களுக்கும், கூடுதல் பணிகளுக்கும், அணையின் மீது பாலம் அமைக்கவும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருந்தாலும், அணையின் அடிப்படைக் கட்டுமானத்தில் யாரும் இதுவரை கை வைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

திருச்சிக்கு மேற்கே காவிரி ஆறு இரண்டாகி, ஒன்று காவிரியாகவும் மற்றொன்று கொள்ளிடமாகவும் பயணித்து கல்லணையில் மீண்டும் இணைகிறது. காவிரியில் வரும் வெள்ளம் கல்லணை கால்வாய்கள் மூலம் பாசனத்துக்காகச் செல்கிறது. காவிரியில் மீதமாகும் உபரி நீர், கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் வடிகிறது. கொள்ளிடத்தில் விடப்பட்ட நீர் நேராக கடலில் கலந்துவிடுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கமாக யோசித்து, மிகத் தெளிவாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணை, நமது கட்டுமானக் கலை சிறப்பு மட்டுமல்ல... பண்பாட்டு அடையாளமும் கூட!