Published:Updated:

சாம்பியன் ஆவாரா வெட்டல்?

FORMULA ONE

சாம்பியன் ஆவாரா வெட்டல்?

FORMULA ONE

Published:Updated:

>>சார்லஸ்

 ##~##

சாம்பியனுக்குப் பொறுமை இல்லை. தொடர்ந்து இரண்டாவது வருடமாக சாம்பியன் பட்டத்தை எட்டிப் பிடிக்கும் வெறியில் ஓடிக் கொண்டிருக்கிறார் வெட்டல். நடந்து முடிந்திருக்கும் 7 ரேஸ்களில் 5-ல் வெற்றி பெற்று, சீக்கிரத்தில் யாரும் அருகே நெருங்க முடியாத இடத்தைப் பிடித்து விட்டார் செபாஸ்ட்டியன் வெட்டல்.

 ஃபார்முலா-1 -ஸ்பெயின்

ஃபார்முலா-1 ரேஸ் பந்தயத்தின் 5-வது சுற்று, கடந்த மே மாதம்  22-ம் தேதி ஸ்பெயினில் நடைபெற்றது. ரெட்புல் அணியின் மார்க் வெப்பர் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்கினார். செபாஸ்ட்டியன் வெட்டல், லூயிஸ் ஹாமில்டன், ஃபெர்னாண்டோ அலான்சோ ஆகியோர் 2, 3 மற்றும் 4-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்கள். 66 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியில் இறுதிவரை விறுவிறுப்பு குறையவில்லை.

சாம்பியன் ஆவாரா வெட்டல்?

சொந்த மண்ணில் ரேஸ் என்பதால், மிகவும் தில்லாக ரேஸ் ஓட்டினார் ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலான்சோ. ரேஸின் ஆரம்பத்திலேயே மார்க் வெப்பர், வெட்டல், ஹாமில்டன் என அனைவரையும் முந்திச் சென்று முதலிடம் பிடித்தார் அலான்சோ. ஸ்பெயின் ரசிகர்கள் ஆரவாரமாக ஆர்ப்பரிக்க முதலிடத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் அலான்சோ. ஆனால், 18-வது லேப்புக்குப் பிறகு ரேஸ் டிராக் கிட்டத்தட்ட சதுரங்கப் பலகை போல மாறியது! அலான்சோ, வெட்டல், ஹாமில்டன், வெப்பர், ஜென்சன் பட்டன் என ஐந்து வீரர்களும் மாறி மாறி ஒருவரை ஒருவர் முந்தும் முயற்சியில் இறங்க... நொடிக்கு நொடி காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தன.

சாம்பியன் ஆவாரா வெட்டல்?

ரேஸ் நடந்த கேட்டலுன்யா ரேஸ் மைதானம், ஓவர்டேக் செய்வதற்கு சற்று சிரமமான மைதானம். இருப்பினும், வீரர்கள் மாறி மாறி மோதிக்கொண்டிருந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 19-வது லேப்பின் முடிவில் ஹாமில்டன், வெட்டல், அலான்சோ, வெப்பர் என காட்சிகள் மாறின. அலான்சோ பின்தங்க... ஸ்பெயின் ரசிகர்கள் முகத்தில் வாட்டம். இதற்கிடையே ரேஸ் முடிய 6 லேப்புகளே இருந்த நிலையில் வெட்டல், ஹாமில்டன் யுத்தம் ஆரம்பமானது. வெட்டலை முந்தும் முயற்சியில் மிகவும் வெறி பிடித்த மாதிரி ரேஸ் ஓட்டினார் ஹாமில்டன். ஆனால், இறுதி வரை வெட்டலை ஹாமில்டனால் முந்த முடியவில்லை.

வெறும் 0.6 மைக்ரோ விநாடி வித்தியாசத்தில் ஹாமில்டனை முந்திச் சென்று முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார் சாம்பியன் வெட்டல். மெக்லாரன் அணியின் மற்றொரு வீரர் ஜென்சன் பட்டன் மூன்றாவது இடம் பிடிக்க, மார்க் வெப்பர் நான்காவது இடம் பிடித்தார். ஸ்பெயின் வீரர் அலான்சோவுக்கு ஐந்தாவது இடமே மிஞ்யது!

சாம்பியன் ஆவாரா வெட்டல்?

ஃபார்முலா-1

உலகின் அழகிய சின்ன நாடான மொனாக்கோ நகர வீதிகளில் ஸ்ட்ரீட் ரேஸாக நடைபெற்றது ஃபார்முலா-1 பந்தயத்தின் 6-வது சுற்று. கடந்த 2010-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மொனாக்கோவின் மொத்த மக்கள் தொகை வெறும் 31,000 மட்டுமே! மிகவும் சின்ன நாடான இதில், ரேஸ் டிராக்குக்கு என தனியாக இடம் ஒதுக்க முடியாது என்பதால்தான் ஸ்ட்ரீட் ரேஸ். அதுவும் சுரங்கப் பாதைகளுக்குள் எல்லாம் ரேஸ் நடைபெறும் அனுபவம் இங்குதான் கிடைக்கும். மிகக் கடினமான வளைவுகளையும், குறுகலான பாதையும் கொண்டது மொனாக்கோ நகர வீதிகள். ஆனால், ஒவ்வொரு ரேஸ் வீரரும் வெற்றி பெறத் துடிக்கும் சவாலான ரேஸ் டிராக் என்பதால், மொனாக்கோ ரேஸின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகம்!

சாம்பியன் ஆவாரா வெட்டல்?

மே 29-ம் தேதி நடைபெற்ற மொனாக்கோ ரேஸில், தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்கினார் செபாஸ்ட்டியன் வெட்டல். மெக்லாரன் அணியின் ஜென்சன் பட்டன் இரண்டாம் இடத்தில் இருந்தும், ரெட்புல் அணியின் மற்றொரு வீரர் மார்க் வெப்பர் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். 78 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே அதிரடி ஆரம்பமானது. நான்காவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய அலான்சோ, தனது ஃபெராரியில் பேய் வேகம் பிடிக்க... முதல் லேப்பிலேயே நான்கு முனைப் போட்டி உருவானது. வெட்டல், பட்டன், அலான்சோ, வெப்பர் என ரேஸ் விறுவிறுப்பானது. இதற்கிடையே ஊழியர்கள் தயாராவதற்கு முன்பே பிட் ஸ்டாப்புக்குள் நுழைந்தார் வெட்டல். அவரைத் தொடர்ந்து வெப்பரும் பிட் ஸ்டாப்புக்குள் நுழைய... ரெட்புல் மெக்கானிக்குகள் பாடு திண்டாட்டமானது. சில விநாடிகள் தாமதத்துக்குப் பின்பு வெட்டல் மீண்டும் ரேஸ் டிராக்குக்குள் நுழைய, டயரை மாற்றிக் கொண்டு மீண்டும் ரேஸ் டிராக்குக்குள் நுழைய வெப்பருக்கு 20 விநாடிகள் பிடித்ததால், அவர் 14-வது இடத்துக்குப் பின் தங்கினார்.

இதற்கிடையே வெட்டல், ஜென்சன் பட்டனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்துக்கு முன்னேறிப் பறந்து கொண்டு இருந்தார். இதற்கிடையே விபத்துகளுக்குப் பெயர் பெற்ற மொனாக்கோ ஸ்ட்ரீட் ரேஸில் 20-வது லேப்பின்போது ஹாமில்ட்டன் மற்றும் மாஸாவின் கார்கள் மோதிக்கொண்டன. மாஸாவின் காரை இடித்ததால் சில நிமிடங்கள் தாமதமாகச் செல்ல வேண்டும் என்று ஹாமில்டனுக்கு பெனால்ட்டி விதிக்கப்பட்டது.

முதலிலேயே பிட் ஸ்டாப்பில் தாமதம் ஏற்பட்டுவிட்டதால், சாஃப்ட் டயர்களுடன் ரேஸ் ஓட்டிய வெட்டல், 62-வது லேப்பில்தான் பிட் ஸ்டாப் பக்கம் வந்தார். குறுகிய சாலைக்குள் ரேஸ் இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்க... டென்ஷன் எகிறியது. 6 லேப்புகளே மீதம் இருந்த நிலையில் ஹாமில்ட்டனுக்குப் பின்னால் வந்துகொண்டு இருந்த ஜேமி அல்குஸரியின் கார், ஹாமில்டன் கார் மீது மோத... ஜேமியின் கார் மீது பெட்ரோவின் கார் மோத... பின்னால் வந்த ஐந்து கார்களும் ஒன்றோடு ஒன்று மோதி நிலவரம் கலவரமானது! சிவப்புக் கொடி காட்டப்பட்டு ரேஸ் நிறுத்தப்பட்டது. 15 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரேஸ் ஆரம்பமானது. ரேஸ் துவங்கிய சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு விபத்து. ஹாமில்டனின் கார் வில்லியம்ஸ் அணியின் மால் டொனால்டோவின் மீது மோத... ரேஸை விட்டு விலகினார் மால்டொனால்டோ.

78 லேப்புகளின் முடிவில் செபாஸ்ட்டியன் வெட்டல் வெற்றி பெற, அலான்சோ இரண்டாம் இடத்தையும், ஜென்சன் பட்டன் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

ஃபார்முலா-1 கனடா!

மழையின் குறுக்கீடுகளுக்கு இடையே கனடாவின் மான்ட்ரீலில் ஜூன் 12-ம் தேதி நடைபெற்றது ஃபார்முலா-1 பந்தயத்தின் 7-வது சுற்று. இந்த ரேஸிலும் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்கினார் செபாஸ்ட்டியன் வெட்டல். ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலான்சோ இரண்டாவது இடத்தில் இருந்தும், மாஸா மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். மழையின் குறுக்கீடுகளால் நிறுத்தி நிறுத்தி நடத்தப்பட்ட இந்த ரேஸ்தான் ஃபார்முலா-1 வரலாற்றிலேயே மிக நீளமான ரேஸ். மொத்தம் 4 மணி நேரம் 4 நிமிடங்கள் நடந்தது கனடா ரேஸ். ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில் இருந்த செபாஸ்ட்டியன் வெட்டலை கடைசி லேப்பில் முந்திச் சென்று வெற்றிக் கோட்டை முத்தமிட்டது மெக்லாரன் அணியின் ஜென்சன் பட்டனின் கார். ரேஸ் டிராக்கில் முழுவதுமாக தண்ணீர் நிரம்பியிருந்தபோதும் கவனமாக ரேஸ் ஓட்டி வெற்றி பெற்றார் பட்டன். செபாஸ்ட்டியன் வெட்டல் இரண்டாவது இடத்தையும், மார்க் வெப்பர் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

7 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், செபாஸ்ட்டியன் வெட்டல் 161 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜென்சன் பட்டன் 101 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மார்க் வெப்பர் 94 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன் வாலன்சியாவில் ஃபார்முலா-1 பந்தயத்தின் 8-வது சுற்று ஜூன் 26-ம் தேதி நடந்து முடிந்திருக்கும்!

சாம்பியன் ஆவாரா வெட்டல்?
சாம்பியன் ஆவாரா வெட்டல்?

மெக்லாரன் அணிக்குள் மீண்டும் ஒரு மோதல்! கடந்த முறை அலான்சோவுடன் மோதிய ஹாமில்டன், இப்போது பட்டனுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க, பிரச்னை பெரிதாக வெடித்திருக்கிறது. கடந்த மாதம் கனடாவில் நடைபெற்ற ரேஸில் பட்டனின் கார் மீது வேண்டுமென்றே மோதினார் என்பதுதான் ஹாமில்டன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. கனடா ரேஸில் மட்டும் அல்ல... எல்லா ரேஸிலுமே கொஞ்சம் அபாயகரமாகத்தான் ரேஸ் ஓட்டுகிறார் ஹாமில்டன் என்கிறார்கள் சக ரேஸ் வீரர்கள். பட்டன், ஹாமில்டன் இருவருமே இங்கிலாந்து நாட்டுக்காரர்கள். ஆனால், ''நாங்கள் இருவருமே ரேஸைத் தவிர மற்ற நேரங்களில் பேசிக் கொள்வது இல்லை'' என்று இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்னையை வெட்ட வெளிச்சமாக்கினார் பட்டன். இதற்கிடையே அடுத்த ஆண்டு லூயிஸ் ஹாமில்டன் ரெட்புல் அணிக்குத் தாவ இருப்பதாகவும் செய்திகள் அலையடிக்கின்றன!

சாம்பியன் ஆவாரா வெட்டல்?

ஆஸ்திரேலியா 27-03-2011

ஃபார்முலா-1 ரேஸ் போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் நடப்பு சாம்பியன் செபாஸ்ட்டியன் வெட்டல். இந்த ரேஸில் மெக்லாரன் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன் இரண்டாவது இடத்தையும், ரெனோ அணியின் பெட்ரோவ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்! 

மலேசியா 10-04-2011

மலேசியாவில் நடைபெற்ற இரண்டாவது ரேஸிலும் வெற்றி பெற்று அசத்தினார், ரெட்புல் அணியின் செபாஸ்ட்டியன் வெட்டல். இந்த ரேஸில் மெக்லாரன் அணியின் ஜென்சன் பட்டன் இரண்டாவது இடம் பிடித்தார்! 

சீனா 17-04-2011

வெட்டலின் தொடர் வெற்றிக்கு சீனாவில் முற்றுப் புள்ளி வைத்தார் முன்னாள் சாம்பியன் லூயிஸ் ஹாமில்டன். வெட்டலை இரண்டாவது இடத்துக்குப் பின் தள்ளி 2011-ம் ஆண்டின் முதல் வெற்றியை ருசித்தார் லூயிஸ் ஹாமில்டன்!

துருக்கி 08-05-2011

துருக்கியில் வெப்பரைத் தோற்கடித்து முதலிடம் பிடித்தார் செபாஸ்ட்டியன் வெட்டல். ஃபெராரியின் அலான்சோ மூன்றாம் இடம் பிடித்தார்.