Published:Updated:

பைக்கால் கூடிய நட்பு!

பைக் கிளப்

பைக்கால் கூடிய நட்பு!

பைக் கிளப்

Published:Updated:

>>க.ராஜீவ்காந்தி  >>'ப்ரீத்தி’கார்த்திக்  

 ##~##

லைக்கோட்டை மாநகரான திருச்சியைக் கலக்கும் பைக் கிளப், ராக்ஃபோர்ட் ராக்கர்ஸ். வெவ்வேறு கல்லூரியில் படிக்கும் இந்த இளசுகளை இணைப்பது பைக்குகள்தானாம். ''ரெகுலரா எங்களுக்கு சண்டே குளியல் கல்லணைலதான். இந்த வாரம் கல்லணைல தண்ணி வேற திறந்து விட்டாங்களாம். வாங்க சார்! அப்படியே ஜாலியா போய் ஒரு குளியல் போட்டுட்டு வருவோம்!'' என அழைத்தனர் ராக்கர்கள்.

மாம்பழச்சாலை சிக்னல் அருகே ஆரம்பித்தது பைக் ஊர்வலம். யமஹா ஆர்-15, கரீஸ்மா, டிவிஎஸ் அப்பாச்சி, யமஹா ஆர்எக்ஸ்-135 ஆகிய பைக்குகளில், அன்றைக்கு ஆஜராகி இருந்த கிளப் உறுப்பினர்கள் மோகன், அருண், வினோத், தீக்ஷித், அபிஜித் மற்றும் இரண்டு கார்த்திக்குகளுடன் ஊர்வலம் கிளம்பியது. திடீரென ஒரு மரத்தடியில் பிரேக் போட்டனர். ''எங்க சாகசப் பயிற்சிகளுக்கான ரெகுலர் ப்ளேஸ் இதுதான்'' என்று கூறிவிட்டு, ஸ்டன்டுகளை செய்ய முயற்சித்தவர்களை நிறுத்தி, கிளப் உருவான கதையைக் கேட்டபோது, ஏழு பேரும் மிகவும் சீரியஸாக வானத்தைப் பார்த்தனர் (ஃப்ளாஷ்பேக்குக்குப் போறாங்களாம்!).

பைக்கால் கூடிய நட்பு!

முதலில் பேசிய (மொக்கை போட்ட) மோகன், ''நாங்க எல்லோரும் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் ஸ்கூல்ல ஒண்ணா படிச்சதுலேர்ந்தே திக் ஃப்ரென்ட்ஸ். எங்க எல்லாருக்குமே பைக் வாங்குற ஆசை இருந்தாலும், அதை முதல்ல செயல்படுத்துனது நானும் தீக்ஷித்தும்தான். அப்போ நான் டென்த் படிச்சுக்கிட்டு இருந்தேன். என்னோட பர்த்டேக்கு, 'என்னப்பா கிஃப்ட் வேணும்?’னு கேட்டார் எங்க அப்பா. நான் உடனே, 'கரீஸ்மா பைக்’ன்னு சொன்னதுக்குக் கிடைச்சது சின்ன ஸ்மைல் மட்டும்தான். ஆனா, என்னோட பிடிவாதம் அதிகமாக அதிகமாக... எங்க அப்பா ஒரு கட்டத்துல இறங்கி வந்து, ''நீ டென்த்துல 400 மார்க் எடுத்தா கண்டிப்பா பைக் வாங்கித் தர்றேன்’ன்னு சொன்னார். நம்ம பையன் எங்க மார்க் எடுக்கப் போறான்னு அலட்சியத்துல அவர் சொன்னாலும், நான் அதை சவாலா எடுத்துக்கிட்டுப் படிக்க ஆரம்பிச்சேன்! டென்த்துல நான் எடுத்த மார்க் 405. அப்புறம்... ப்ளஸ் ஒன் சேரும்போதே ஸ்கூலுக்கு பேஸன் ப்ளஸ்ல போனேன். காலேஜ்ல சேரும்போது பல்ஸர், இப்ப ஆர்-15. ஆக, இது தான் இந்த மோகன் ஹீரோ ஆன கதை!'' என்று சொல்லிக் கொண்டு இருந்தவரை இடைமறித்தார் தீக்ஷித்.

''சார், இவன் சொன்ன சீன் எல்லாம் எந்தப் படத்துலேர்ந்து சுட்டான்னு தெரியலை. ஆனா, நான் சொல்றதுலாம் உண்மை'' என சொல்ல ஆரம்பித்தார் தீக்ஷித். ''எனக்கு நைன்த் படிக்கும்போதே பைக் ஓட்டத் தெரியும்! எங்க அப்பா எனக்கு தந்த முதல் கிஃப்ட்டே பைக்தான்! சொன்னா நம்பமாட்டீங்க... நான் ப்ளஸ் டூ படிக்கும்போதே 225 சிசி பைக் ஓட்டினேன். பிளஸ் டூவுல எங்க குரூப் பைக் வாங்க ஆரம்பிச்ச உடனேயே ஒரு தீர்மானம் போட்டுக்கிட்டோம்.

'பைக்கும் காலேஜும் அவங்கவங்க டேஸ்ட்டுக்கு செலெக்ட் பண்ணிக்கலாம். ஆனா, அடிக்கடி மீட் பண்ணணும். எல்லாரும் 150 சிசி பைக்தான் வாங்கணும். ஆனா, அவங்க பைக்கை அவங்க மட்டும்தான் ஓட்டணும்னு நினைக்கக் கூடாது’ அப்படின்னு. நாங்க எல்லாம் 150 சிசி-க்கு மேலதான் பைக் வெச்சிருக்கோம். எங்க கேங்க்லயே 135 சிசி பைக் வெச்சிருக்கறவன் கார்த்தி மட்டும்தான். அந்த யமஹா ஆர்எக்ஸ் 135 பைக் எங்களோட செல்லம். என்னா பைக் சார் அது?'' என்றவர், சொன்னதோடு நிற்காமல், அந்த பைக்கில் கொஞ்சம் வீலிங் செய்து காண்பித்தார்.

''சார், எங்க கேங்க்ல தீக்ஷித் தவிர மத்த எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. நாங்க யாருமே எடுத்தவுடனே 150 சிசி பைக் வாங்கிடலை. முதல்ல 100 சிசி. அடுத்தது 125 சிசி. இப்படியே ரொம்ப சேஃப்டியா சிசியை ஏத்துனோம். அதேபோல, எல்லாருக்குமே ஃபேவரைட்டா ஒரு மெக்கானிக்கை  வெச்சிக்கிட்டு அவர்கிட்டயே சர்வீஸ் பண்ணிக்கிறோம். எங்களோட மீட்டிங் பாயின்ட். கண்டோன்மென்ட்ல இருக்கற எல்.ஆர் டீ ஸ்டால்தான். புது படம் ரிலீஸ்னா ஃபர்ஸ்ட் ஷோவுல அந்த தியேட்டர் பைக் ஸ்டாண்ட்ல எங்க பைக்குகளை வரிசையா பார்க்கலாம். எங்களோட ஃபேவரிட் மேகஸீன் மோட்டார் விகடன்ல எங்க பைக்கோட போட்டோ வரப் போறதை நெனைச்சா ரொம்பப் பெருமையா, சந்தோஷமா இருக்கு!'' என்று புளகாங்கிதம் அடைகிறார் அருண்.

''வாரா வாரம் கல்லணைலதான் குளியல். திருச்சியிலேர்ந்து காலைல 10 மணிக்குக் கிளம்புற எங்க கேங், குளியல் முடிச்சு திரும்ப சாயங்காலம் ஆயிடும்! ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை பைக்லேயே கொடைக்கானல் போயிடுவோம். அந்த ஹில்ஸ்ல ஓட்டுறதுதான் செம த்ரில்லிங்கா இருக்கும்'' என்கிறார் இன்னொரு கார்த்திக்!

''சார் இவனுக குளிக்கிறதே வாரத்துல ஒரு தடவைதான். விட்டா பேசிக்கிட்டே இருந்துட்டு வீட்டுக்குத் திரும்பிடுவானுங்க, கிளம்பலாம் சார்!'' என்றவாறே அஸைன்மென்டை முடித்து வைத்தார் அபிஜித்!