Published:Updated:

காரா? எஸ்யூவியா? வேனா?

டெஸ்ட் டிரைவ்: மெர்சிடீஸ் பென்ஸ் ஆர் கிளாஸ்

காரா? எஸ்யூவியா? வேனா?

டெஸ்ட் டிரைவ்: மெர்சிடீஸ் பென்ஸ் ஆர் கிளாஸ்

Published:Updated:

>>சார்லஸ், >> சுரேன்:>> கே.கார்த்திகேயன்  

 ##~##

மெர்சிடீஸ் பென்ஸ் கார்களை ஓட்டுவது என்பது எப்போதுமே தனி சுகம்தான்! சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பென்ஸ் ஆர் கிளாஸ் காரை, மோட்டார் விகடன் அலுவலகத்துக்கு புனேவில் இருந்து அனுப்பி வைத்தது மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம். டெஸ்ட் டிரைவுக்கு பென்ஸ் ஆர் 350 காரை எடுத்துக்கொண்டு, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகப் பறந்தோம்.

வடிவமைப்பு

பென்ஸ் ஆர் கிளாஸைப் பார்த்தவுடனே... 'இது காரா அல்லது எஸ்யூவியா அல்லது வேனா?’ என்ற குழப்பம் எல்லோருக்குமே வரும்! பென்ஸின் அசரடிக்கும் டிசைனையோ, ஸ்டைலையோ இதில் எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும். வசதியான பெரிய குடும்பங்கள் சொகுசாகப் பயணிக்க, பென்ஸ் அறிமுகப்படுத்தி இருக்கும் 'மினி வேன் டைப் கார்’தான் ஆர் கிளாஸ்!

காரா? எஸ்யூவியா? வேனா?

பென்ஸ் எம்எல் மற்றும் ஜிஎல் கிளாஸ் கார்கள் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில்தான் ஆர் - கிளாஸும் தயாரிக்கப்படுகிறது. பென்ஸ் ஆர் கிளாஸ் 4-மேட்டிக், 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. 5.1 மீட்டர் நீளம் கொண்ட இந்த கார், பென்ஸ் எஸ் கிளாஸ் மற்றும் ஜிஎல் கிளாஸ் கார்களைவிட நீளம் அதிகம். காரின் எடை 2,270 கிலோ!

இடவசதி

காருக்குள்ளே புகுந்து விட்டால், பென்ஸ் காருக்கான அத்தனை சொகுசு வசதிகளும் இருக்கின்றன. இருக்கைகள் சரியான உயரத்தில் இருப்பதோடு, பட்டனைத் தட்டினால் நமக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. டேஷ் போர்டில் இருக்கும் எல்சிடி திரை மிகவும் சிறிதாக இருக்கிறது. அமெரிக்க மார்க்கெட்டை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப் பட்ட கார் என்பதால், பெரிய சைஸ் டோர் பாக்கெட்டுகள், பொருட்கள் வைக்க அதிக இட வசதியுடன் இருக்கின்றன. பென்ஸ் ஆர் கிளாஸ் காரை நிச்சயம் வாங்க வேண்டும் என்று தூண்டுகிற காரணங்களில் ஒன்று, இதன் நடுவரிசை இருக்கைகள். ஏக்கர் கணக்கில் இடவசதி இருப்பதால், ஒருநாள் முழுக்க காரில் பயணம் செய்தாலும் அலுப்புத் தெரியவே இல்லை! விமானத்தில் பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வது போலவே இருக்கிறது. நடுவரிசை இருக்கையில் மூன்று பேர் தாராளமாக உட்கார்ந்து பயணிக்க முடியும். நடுவரிசை இருக்கைகளின் பின்னால் பொருத்தப்பட்டு இருக்கும் எல்சிடி ஸ்கிரீன்கள் இவ்வளவு பெரிய காருக்குள் இருந்து பார்க்கும்போது மிகவும் சிறிதாகத் தெரிகிறது. இந்த ஸ்கிரீன்கள் பொருத்துவதற்கான விலை மட்டும் 1.4 லட்சம் ரூபாயாம்!

காரா? எஸ்யூவியா? வேனா?
காரா? எஸ்யூவியா? வேனா?

நடுவரிசை மட்டும் அல்ல, கடைசி வரிசை இருக்கைகளும் மிகவும் சௌகரியமாக இருப்பதுதான் பென்ஸ் ஆர் கிளாஸின் ஹை-லைட். பெரியவர்கள்கூட சௌகரியமாக கடைசி வரிசையில் உட்கார்ந்து பயணிக்கும் அளவுக்கு இடவசதி இருக்கிறது. மூன்று வரிசை இருக்கைகளில் அனைவரும் உட்கார்ந்து விட்டாலும்கூட பொருட்கள் வைத்துக் கொள்ள பின்னால் இடமும் இருக்கிறது. பின்னால் ஆட்கள் இல்லை என்றால், இரண்டு வரிசை சீட்டுகளையும் மடக்கிவிட்டால் போதும், ஒரு ஃபுட் பால் கிரவுண்டு சைஸுக்குப் பொருட்கள் வைக்க இடம் கிடைக்கிறது.

எலெக்ட்ரிக் மிரர், அட்ஜஸ்ட்டபிள் சீட், ஸ்டீயரிங் அட்ஜஸ்ட், சன் ரூஃப், ஆடியோ சிஸ்டம், எல்சிடி சிஸ்டம் ஆகிய சிறப்பம்சங்கள் ஆர்-350 காரில் இருக்கின்றன. சிறப்பம்சங்கள் குறைவுதான் என்றாலும், இதற்கு மேல் எந்த வசதிகளும் இந்த காருக்குத் தேவையானதாகவும் இருக்காது.

இன்ஜின்

இ மற்றும் எஸ் கிளாஸ் கார்களில் இருக்கும் அதே இன்ஜின்தான் ஆர் கிளாஸிலும் இருக்கிறது. 3498 சிசி திறன் கொண்ட ஆர் 350, 272 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் V6 இன்ஜின்தான் என்றாலும், ஆக்ஸிலரேட்டரை மிதித்தவுடன் டீசல் இன்ஜின் போல வேகம் பிடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதற்குக் காரணம், காரின் அதிகபட்ச எடைதான். 2,270 கிலோ எடையுடன், காரில் ஏழு பேர் உட்கார்ந்துவிட்டால், பவருக்குத் திணறுகிறது இன்ஜின். ஆனால் இந்தக் குறைகள் அனைத்தையுமே பென்ஸ் கார் என்பதால்தான் சொல்கிறோம். சாதாரண கார்களின் வேக விபரங்களுடன் ஒப்பிடும்போது, வேகமாகவே இருக்கிறது ஆர் கிளாஸ். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட இந்த கார், 0-100 கி.மீ வேகத்தைப் பிடிக்க சுமார் 10 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. 0-180 கி.மீ வேகத்தைப் பிடிக்க 34 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 230 கிமீ!

ஓட்டுதல்

பெரிய காரான இதை சென்னை போன்ற நகர்களில் ஆட்டோ, டூ-வீலர்களூக்கு இடையே ஸ்கிராட்ச் விழாமல் ஓட்டுவது என்பது சிரமமே. அது மட்டுமல்ல, இந்த காரை ஆல்ட்டோவை நிறுத்துவது போல் சின்ன இடங்களுக்குள் கொண்டு போய் எல்லாம் நிறுத்திவிட முடியாது. காரை நிறுத்தவே நீங்கள் சிங்கள் பெட்ரூம் சைஸ் ஃபிளாட்டைத் தேட வேண்டும். ரிவர்ஸ் கேமரா வசதி இதில் இல்லை. அதற்குப் பதில் சென்ஸார்கள் மட்டுமே உள்ளன. குறைந்த வேகத்தில் பயணிக்கும் போது அலுங்கல் குலுங்கல்களை காருக்குள் உணர முடிகிறது.

பெரிய கார், கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாக இருக்கும் என்று நீங்கள் நம்பினால், அது தவறு! ஸ்பீடு பிரேக்கர்களில் கவனமாக, மெதுவாக காரை ஓட்ட வேண்டும். இல்லையென்றால் காருக்கு அடியில் கடமுடா சத்தம் வருவது உறுதி!

காரா? எஸ்யூவியா? வேனா?

மைலேஜ்

குடும்பத்துடன் டூர் போக சரியாக இருக்கிறதே என்று நினைப்பவர்கள், கொஞ்சம் இதன் மைலேஜ் விபரங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். நகருக்குள் லிட்டருக்கு 5.4 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 8.7 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது இந்த பென்ஸ் ஆர்-350. 

ஹை கிளாஸ் - பெரிய சைஸ் குடும்பங்களுக்கான கார் பென்ஸ் ஆர்-350. இடவசதியும், சொகுசான இருக்கைகளும் தான் இதன் மிகப் பெரிய பலம். நெடுஞ்சாலையில் சொகுசாகப் பயணிக்க சிறந்த காராக இருக்கிறது. இ-கிளாஸ் மற்றும் எஸ்-கிளாஸ் கார்களில் இருக்கும் அதே இன்ஜின்தான் என்றாலும், அதிக எடை காரணமாக பவர் தெரியவில்லை. கிட்டத்தட்ட முக்கால் கோடி ரூபாய் கொடுத்து இந்த காரை வாங்குவதற்குப் பதில் பென்ஸ் ஜிஎல் எஸ்யூவியை வாங்கலாம்!

காரா? எஸ்யூவியா? வேனா?