Published:Updated:

முதலுதவி: அவசர உதவிக்கு அலெர்ட்!

முதலுதவி: அவசர உதவிக்கு அலெர்ட்!

முதலுதவி: அவசர உதவிக்கு அலெர்ட்!
முதலுதவி
இளவரசன்
முதலுதவி: அவசர உதவிக்கு அலெர்ட்!
முதலுதவி: அவசர உதவிக்கு அலெர்ட்!
அவசர உதவிக்கு அலெர்ட்!
முதலுதவி: அவசர உதவிக்கு அலெர்ட்!
முதலுதவி: அவசர உதவிக்கு அலெர்ட்!

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு... பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் கானகத்தில் தாகத்தால் வாடி அலைவார்கள். அப்போது நகுலன், ‘நீங்கள் நால்வரும் இங்கு ஒரு மரத்தடியில் இளைப்பாறிக்கொண்டு இருங்கள். நான் போய் பக்கத்தில் ஏரி, குளம் ஏதாவது தென்பட்டால் தண்ணீர் எடுத்துக்கொண்டு வருகிறேன்’ என்று கிளம்பிச் செல்வார். வெகு நேரமாகியும் அவர் திரும்பி வராமல் போகவே, அவரைத் தேடி சகாதேவன் போவார். அவரும் வராமல் போகவே, பீமனும் அவரைத் தொடர்ந்து அர்ஜுனனும் போவார்கள். போன தம்பிகள் நால்வருமே திரும்பி வராமலிருக்கவே கடைசியாக தருமர் அவர்களைத் தேடிப் போவார்.

வழியில் ஒரு ஏரி தென்படும். ஒருவித மயான அமைதி அங்கு நிலவுவதை உணர்ந்து கலக்கம் அடையும் தர்மர், ஏரிக்குச் செல்லும் பாதையைக் கூர்ந்து கவனிப்பார். ஏரியை நோக்கிச் செல்லும் கால் தடங்கள் மட்டுமே தென்படும். ஒரு கால் தடம்கூட ஏரியிலிருந்து வெளியே வருவது போல் தென்பட்டிருக்காது. அந்த ஏரியில்தான் ஏதோ மர்மம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டுவிடுவார் தர்மர். சிறிது நேரத்தில் அந்த ஏரியில் இருந்து ஒரு அரக்கன் வெளியே வருவான். சகோதரர்கள் நால்வரையும் தான் பிடித்து வைத்திருப்பதாகவும், தான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொன்னால்தான் அவர்களை உயிருடன் விடுவிப்பேன் என்றும் அரக்கன் கொக்கரிப்பான்.

அவன் கேட்கும் கேள்விகளில் ஒன்று, ‘‘இந்த உலகில் மிகவும் அதிசயமானது எது..?’’

முதலுதவி: அவசர உதவிக்கு அலெர்ட்!

அதற்கு தருமர், ‘‘ஒரு மனிதனைச் சுற்றி தினந்தோறும் மரணம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. எனினும், ஒவ்வொரு மனிதனும் தனக்கு அது நேரப்போவதில்லை என்ற நம்பிக்கையில் எந்தவித பதட்டமும் இன்றித் தன் பணிகளைச் செய்துகொண்டு இருப்பதுதான்’’ எனப் பதில் சொல்வார்.

விபத்து குறித்து யோசிக்கும்போது, தருமர் சொன்ன பதில்தான் நினைவுக்கு வருகிறது. பத்திரிகை, டி.வி. என்று எதை எடுத்தாலும் நாள்தோறும், ‘லாரி மோதி நாலு பேர் பலி, கார் நசுங்கி இரண்டு பேர் பலி... மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்கள்’ என செய்திகள் வெளியாகின்றன. இருந்தபோதிலும், நம்மில் பலருக்கு ஏனோ முதலுதவி குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வமில்லை!

‘‘வெளிநாடுகளில் பத்து வயது குழந்தைக்குக்கூட முதலுதவி சிகிச்சை முறைகளைப் பற்றி தெரிந்திருக்கிறது. சைக்கிள் ஓட்டவோ, டைப் அடிக்கவோ கற்றுக் கொடுப்பது மாதிரி அங்கே முதலுதவி பற்றி குழந்தைகளுக்கு முறையாகக் கற்றுக்கொடுக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் ஐம்பது வயது பெரியவர்களுக்குக்கூட விபத்து நடந்தவுடன் என்ன செய்யவேண்டும் என்று தெரிவதில்லை’’ என்று ஆதங்கப்படுகிறார் கலா பாலசுந்தரம். இவர் டாக்டரோ சமூக சேவகியோ இல்லை, சாஃப்ட்வேர் இன்ஜினீயர்! முதலுதவி சிகிச்சை முறைகளை ஒவ்வொருவருக்கும் கற்றுத் தரவேண்டும் என்கிற நோக்குடையவர். இந்த நோக்கத்துக்காக பிரபல மருத்துவரான டாக்டர் ஜே.எஸ்.ராஜ்குமாருடன் இணைந்து ‘அலெர்ட்’ (Ammenity Lifeline Emergency Rescue Training) என்ற தன்னார்வ அமைப்பை ஆரம்பித்திருக்கிறார்.

‘‘இந்த அமைப்பில் இப்போது 30-க்கும் மேற்பட்ட சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நாங்கள் வேலை செய்யும் அலுவலகங்கள் பெரும்பாலும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ளன. அந்தச் சாலைகளின் வழியே அலுவலகத்துக்குச் செல்லும்போது குறைந்தது ஒரு நாளுக்கு இரண்டு விபத்துகளையாவது பார்க்கிறோம். இதில் கொடுமை என்னவென்றால், விபத்து நடந்துவிட்டால் அங்கே பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற ஓடி வருவது சக ஐ.டி. ஊழியர்களோ படித்தவர்களோ அல்ல. ஆட்டோக்காரர்களும் அருகிலிருக்கும் குடிசைவாசிகளும் மட்டும்தான். அவர்களுக்கும்

முதலுதவி: அவசர உதவிக்கு அலெர்ட்!

முதலுதவி எப்படி அளிக்க வேண்டும் என்று தெரியாது என்பதால், காப்பாற்ற முடிகிற உயிர்களைக்கூட அநியாயமாக இழந்துவிடுகிறோம். இந்த நிலையை மாற்றுவதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்த அமைப்பு.

விபத்து நடந்தவுடன் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் அந்த ஒரு மணி நேரத்தை, அதி முக்கியமான நேரம் என்று சொல்வார்கள். அடிபட்ட நபரை அந்த ஒரு மணி நேரத்துக்குள் காப்பாற்றினால்தான் உண்டு. அந்த முக்கியமான நேரத்தில் எப்படி விரைந்து செயல்பட வேண்டும். எப்படி முதலுதவி அளிக்க வேண்டும். யாரை முதலில் அழைக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களை அனைவருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்கிற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த முதலுதவி சிகிச்சைப் பயிற்சி மையம்’’ என்கிறார் கலா.

‘‘பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீடு, தொழிற்சாலை என ஒவ்வொரு இடத்திலும் முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து ஒரு நாள் வகுப்பு நடத்துகிறோம். அந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்படும். ‘விபத்தில் அடிபட்டவர் முதலுதவி சிகிச்சை கிடைக்காததால் இறந்து போனார்... ஒரு மணி நேரத்துக்கு முன்பு மருத்துவமனைக்குக் கொண்டுவந்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார்’ என்று சொல்லும் நிலை இனி ஏற்படக் கூடாது என்பதே எங்களுடைய அலெர்ட் அமைப்பின் நோக்கம்’’ என்கிறார் கலா.

‘‘அலெர்ட் அமைப்பின் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு, முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து முறையான, தெளிவான பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பிறருக்குப் பயிற்சி அளிப்பார்கள். இதற்காக எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இந்தச் சேவையில், இந்திய மருத்துவக் கழகமும் (INDIAN MEDICAL ASSOCIATION) எங்களுடன் இணைந்துள்ளது’’ என்கிறார் டாக்டர் ராஜ்குமார்.

‘‘பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், பயிற்சி பெற்றவர்களுக்கு முதலுதவி சிகிச்சைப் பெட்டியும் அளிக்கப்படும். இந்தப் பெட்டியில் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருக்கும். உதாரணமாக, விபத்து ஏற்பட்டவுடன் உதவி செய்ய வருபவர்கள், எந்த இடத்தில் எந்தவிதமான அடிபட்டிருக்கிறது என்று தெரியாமலேயே அடிபட்டவரை அந்த இடத்தில் இருந்து தூக்க முயற்சி செய்வார்கள். இது மிகவும்

முதலுதவி: அவசர உதவிக்கு அலெர்ட்!

ஆபத்தானது. பொதுவாக அடிபட்டவரைத் தூக்கும்போது கழுத்துப் பகுதியைப் பத்திரமாகப் பிடித்துத் தூக்க வேண்டும். இதற்கு கழுத்துப் பகுதியில் வைப்பதற்கென்று இருக்கும் துணியை ( Survical collar) கட்டவேண்டும். ஏனெனில், முதுகுத் தண்டில் அடிபட்டிருப்பவரை எந்தவிதமான முதலுதவியும் இல்லாமல் தூக்கும்போது நரம்புகள் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்துபோகும் வாய்ப்பு இருக்கிறது. இது போன்று மிகவும் அவசியமான பொருட்கள் இந்த முதலுதவிப் பெட்டியில் இருக்கும்.

சாலையில் விபத்து ஏற்பட்டால் அடிபட்டவருக்கு எந்த மாதிரியான முதலுதவி சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை அறிய ஏபிசி ( ABC) என்கிற சுலபமான வழிமுறையைப் பின்பற்றலாம். அதாவது, முதலில் அடிபட்டவருக்கு மூச்சுப் பாதை (Airway) சரியாக

முதலுதவி: அவசர உதவிக்கு அலெர்ட்!

இருக்கிறதா... மூக்கில், வாயில் அல்லது தொண்டையில் குச்சி அல்லது கல் ஏதாவது அடைத்துக்கொண்டு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அடுத்ததாக, சுவாசம் ( Breathing ) சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மூன்றாவதாக, ரத்த ஓட்டம் (Circulation ) சரியாக உள்ளதா என்று கையைப் பிடித்துப் பார்க்க வேண்டும். இந்த மூன்றும் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு அடிபட்டவரை அந்த இடத்தில் இருந்து நகர்த்தி, காற்றோட்டமான இடத்துக்குக் கொண்டுவர வேண்டும். சுற்றி நின்று வேடிக்கை பார்க்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்குக் காற்று வருவதற்கு இடம் கொடுக்க வேண்டும். முதலில் ஆம்புலன்ஸுக்கும் பிறகு போலீஸுக்கும் தகவல் சொல்ல வேண்டும்’’ என்கிற டாக்டர் ராஜ்குமார் ஓர் உருக்கமான வேண்டுகோளையும் வைத்தார்.

‘‘சாலை விபத்துகளைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்யும் உதவிதான் மிகப் பெரிய மனிதநேயம். விபத்து நடந்த இடத்தில் இருக்கும் யாரேனும் ஒருவருக்கு முதலுதவி சிகிச்சை முறைகள் தெரிந்திருந்தால்போதும், ஒருவர்கூட சாலை விபத்துகளால் உயிரிழக்க மாட்டார்கள். நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். விபத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், அதில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவது என்பது கடினமான காரியமல்ல. ஜனநாயக நாட்டில் அனைவரும் ஓட்டு போடவேண்டும் என்பது எவ்வளவு பெரிய கடமையோ, அதேபோல ஆபத்து நேரத்தில் சகமனிதர்களின் உயிர் காக்க உதவும் முதலுதவி பயிற்சியையும் அனைவருக்கும் கட்டாயமாக்க வேண்டும்’’ என்கிறார் டாக்டர் ராஜ்குமார்.

படங்கள் : ரவிவர்மன்
முதலுதவி: அவசர உதவிக்கு அலெர்ட்!