Published:Updated:

இங்கு பஞ்சர் போடப்படும்!

இங்கு பஞ்சர் போடப்படும்!
இங்கு பஞ்சர் போடப்படும்!

காமெடி அனுபவம்

இங்கு பஞ்சர் போடப்படும்!
 ##~##

ஒவ்வொரு குடும்பஸ்தனுக்குள்ளும் கார் ஆசை துளிர்விட மிக முக்கியக் காரணம், 'ஜாலியா குடும்பத்தோடு டூர் போகலாம்’ என்ற ஆசைதான். பொது வாகனங்களைப் பயன்படுத்தி வெளியூருக்குச் சுற்றுலா செல்வதில் பல சிரமங்கள்... ரயில் டிக்கெட்டைவிட இரண்டு மடங்கு அதிகப் பணத்தில் ஆட்டோ, கால் டாக்ஸி பிடித்து ரயில்வே ஸ்டேஷனுக்குச் செல்ல வேண்டும். அங்கே போய் இறங்கியதும் ஹோட்டலுக்குச் செல்ல ஆட்டோ; சுற்றிப் பார்க்க டாக்ஸி; அதுவும் நாம் செல்லும் இடத்தில் நிறுத்த முடியாது எனக் கடுப்பைக் கிளப்பும் டிரைவர்... என பல இம்சைகளைப் பார்த்துக் கடுப்பானவர்களில் முக்கால்வாசிப் பேர்தான், நம் ஊரில் முதல் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள்.

 ஆசை ஆசையாக கார் வாங்கிவிட்டு, அதில் டூர் போய்வருவது என்பது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்’ பட ரீலீஸைவிட பல சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

இங்கு பஞ்சர் போடப்படும்!

டூர் எனச் சொன்னதுமே, எப்போதும் போல முதலில் ஆர்வம் காட்டுபவர் மனைவிதான். அதேபோல், டூர் கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்தே பேக்கிங்கைப் பரபரப்பாக ஆரம்பிப்பாள். 'அட, ரொம்ப அட்வான்ஸா வேலையை ஆரம்பிச்சிட்டாளே’ என திருப்தியுடன் இருப்போம். கார் கிளம்பும் வரையும்... கார் கிளம்பிய பின்னும்... அதே பரபரப்போடு அவள் பேக்கிங் செய்துகொண்டே இருப்பதைப் பார்த்ததும்தான், பாதி வீடே காருக்குள் இடம் மாறி இருப்பது நமக்குப் புரியும். யாருமில்லாத தீவுக்கோ அல்லது பழங்குடியினர்கூட இல்லாத வனாந்திரத்துக்கோ செல்வதுபோல இருக்கும் அந்த பேக்கிங். இண்டக்ஷன் ஸ்டவ், கெட்டில், எவர்சில்வர் பாத்திரங்கள், மிக்ஸி என ஆரம்பித்து எஸ்கிமோக்கள் ஏரியாவுக்குப் போவதுபோல பலவிதமான ஸ்வெட்டர்கள், மங்கி கேப், ஷால், மஃப்ளர் என காரே இது போன்ற சாமான்களால் திணறும். மளிகைச் சாமான்கள், சமைத்த பண்டங்கள், குழந்தைக்கான தின்பண்டங்கள், மருந்து - மாத்திரைகள் என கன்டெய்னரில் ஏற்ற வேண்டிய ஐட்டங்கள் எல்லாம் முட்டி மோதி காருக்குள் முடங்கிக் கிடக்கும். ரயில் அல்லது பஸ் என்றால் அடித்துப் பிடித்துக் கிளம்பி 'கன்’ டைமுக்கு வண்டியைப் பிடிக்கும் கூட்டம்... கார் என்றதும், 'ஓட்டுறவன் நம்மாளுதானே’ என்ற அலட்சியத்தில் சொன்ன நேரத்திற்குக் கிளம்பாது!

இதற்கு மனைவி சொல்லும் ரீஸன்தான் செமயாக இருக்கும். ''உங்களுக்கு என்னங்க... நீங்க ஒரு ஆளு (!?) நாங்க அப்படியா? வீட்டைப் பாக்கணும், உங்களைப் பெத்த பாவத்துக்காக உங்க அப்பா - அம்மாவுக்கும் எல்லாம் செய்யணும், பால்காரன், பேப்பர்காரன், வேலைக்காரி எல்லார்கிட்டயும் சொல்லணும். குழந்தைகளைக் கிளப்பணும்'' என்று அகில உலகமும் ஒப்புக்கொள்ளக் கூடிய காரணத்தைச் சொல்வாள்.

எனக்கு என்ன குழப்பம் எனில்... இதே மனைவி,  ரயிலில் டிக்கெட் ரிசர்வ் செய்துவிட்டால், இதே குழந்தை குட்டி; மூட்டை முடிச்சுக்களுடன் சூப்பர் வுமனாக மாறி, பறந்தாவது போய் எப்படி ரயிலைச் சரியான நேரத்தில் பிடிக்க முடிகிறது என்பதுதான்.

அப்பாடா, கிளம்பலாம் என நீங்கள் பெருமூச்சுவிட்டால், ஏமாற்றம்தான் மிஞ்சும். 'குழந்தைக்கு டயப்பர் வாங்கணும்; பூ வாங்கணும்; கிராண்ட் ஸ்வீட்ஸ்ல ஸ்வீட் வாங்கணும்’ என ஷாப்பிங் லிஸ்ட்டைக் கையில் எடுப்பாள் மனைவி. எதுவுமே ஒரே கடையில் வாங்கக்கூடிய பொருட்களாக இருக்கக் கூடாது

இங்கு பஞ்சர் போடப்படும்!

எனப் போட்ட பிளானில் தெளிவாக இருப்பாள். டூர் போகும் போது டென்ஷனாகக் கூடாது என்று நாம் நரம்புகளை அடக்கி, மனைவியின் மெமரியில் உள்ள, மெமரியில் இல்லாத அத்தனையையும் வாங்கி காருக்குள் திணிப்போம்.

ஆனால், அதன் பிறகும் வண்டி பல்லாவரம் தாண்டாது. ஒரு குழந்தை, 'அம்மா பசிக்குது, பிஸ்கேட்டு’ எனச் சொல்லும். குரோம்பேட்டை தாண்டியதும் இன்னொரு குழந்தை, 'உச்சா’ போக வண்டியை நிறுத்தச் சொல்லும். கார், செங்கல்பட்டைத்  தாண்டுவதற்குள் ஒரு லைஃப் சைக்கிளே முடிந்திருக்கும்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் அப்பா ஆரம்பிப்பார். 'ரோடு ஓரத்துல நல்ல ஹோட்டலா பார்த்து நிறுத்துப்பா’ என பிரேக்கை ஆழமாக அழுத்துவார். 25 கிலோ மீட்டர்தான் ஓட்டியிருக்கிறோம் என்ற பதட்டத்தில் நாம் இருப்போம். ஆனால், மக்கள் அனைவரும் எதோ ஆம்ஸ்டர்டாம் வந்து இறங்கி விட்டதைப்போல... அந்தப் பாடாவதி ஹோட்டலில் சோம்பல் முறித்துக்கொண்டு இறங்குவார்கள். இதுவரை ஹோட்டலுக்கே செல்லாதவர்கள்போல, கர்ம சிரத்தையாக மெனு முழுவதையும் படிப்பார்கள். கடைசியில் ரவா தோசை, ஆனியன் தோசை, ஊத்தாப்பம் என சீக்கிரத்தில் சர்வர் கொண்டு வரமுடியாத ஐட்டங்களாக ஆர்டர் செய்து அமைதி காப்பார்கள். நாம் கடுப்பில், 'சாப்பாடு வேண்டாம்’ என்று சொல்லிவிட்டால் போதும்... குழந்தைகளை நம்மிடம் தள்ளிவிட்டு மனைவி, நம்முடைய அப்பா, அம்மாவுடன் ஒன்றுபட்டு சாப்பிட்டு, உரையாடி ஆச்சரியப்படுத்துவாள். அனைவரும் மீண்டும் காருக்குள் வந்து ஏற, குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும்.

திரும்ப வண்டியை எடுத்தால்... நடுநடுவில், 'குழந்தை தூங்கறான், சவுண்ட் கொஞ்சம் கம்மி பண்ணுங்க. ஏ.சி.யைக் கொஞ்சம் கொறைச்சி வைங்க, அந்த தண்ணி பாட்டிலை பின்னால எடுத்துக் குடுங்க, 'கும்பக்கரை தங்கய்யா’ படப் பாட்டு சிடி இருந்தா கொஞ்சம் போடுங்க, இந்த பென் டிரைவ்ல சாலமன் பாப்பையா பட்டிமன்றம் இருக்கு, போட முடியுமா?’ போன்ற அன்புக் கட்டளைகளையும் நிறைவேற்றிக்கொண்டு செல்ல வேண்டி இருக்கும். இந்த அன்புத் தொல்லைகள் அடுத்த அரை மணி நேரத்தில் முடிந்து, காருக்குள் 'கொர்...கொர்...’ சத்தம் கேட்க ஆரம்பிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கார் ஓட்டுபவனை டிஸ்டர்ப் செய்யக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் தூங்கிக்கொண்டிருப்பார்கள். அப்போதுதான் நமக்குப் புரியும்... 'நாம டூர் போகவில்லை.... டிரைவர் வேலை பார்க்க வந்திருக்கிறோம்’ என்பது.

குடும்பத்தோடு போனால்தானே டார்ச்சர்? ஆபீஸ் மீட்டிங் என வீட்டில் சொல்லிவிட்டு, நண்பர்களோடு காரில் சுற்றுலாவுக்கு பிளான் போட்டால்...

நண்பர்கள் ஒவ்வொருவரையும் அரை மணி நேரம் காத்திருந்து, அவரவர் ஏரியாவில் பிக்கப் செய்வதற்குள்ளாகவே லோடு லாரி ஓட்டும் டிரைவர்போல டயர்டாக்கிவிடும்.

கார் என்றால், இத்தனை மணிக்குக் கிளம்ப வேண்டும்; இன்ன நேரத்தில்  குறிப்பிட்ட இடத்துக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற பதற்றம், காரை ஓட்டுபவருக்கு மட்டுமே சொந்தம் என்பது போல, மற்றவர்கள் எல்லாம் மசாஜ் சென்டருக்குள் நுழையும் ஃபீலிங்குடன் செம ரிலாக்ஸாக காருக்குள் ஏறுவார்கள்.

ஒருவழியாக அனைவரையும் கலெக்ட் செய்துகொண்டு வண்டியை மிதித்தால், தாம்பரம் தாண்டியதுமே வண்டியை நிறுத்தி டீ குடித்தபடியே அரை மணி நேரம் அரட்டைக் கச்சேரி ஓடும். அதைத் தாண்டி அரை மணி நேரம் மிதித்ததும் ஒரு இடத்தில் நிறுத்தச் சொல்லி, அனைவரும் ஷாப்பிங் சென்றுவிடுவார்கள். என்ன ஷாப்பிங்கா? யூஸ் அண்டு த்ரோ கிளாஸ்... சிப்ஸ், இன்ன பிற தளவாடங்கள் வாங்கத்தான்.

ஷாப்பிங் முடிந்து கார் கிளம்பியதும், காருக்குள் ஒரு மினி பார் உதயமாகும். சர்வர் இல்லாமலேயே செயல்படும் இந்த மினி பாரில், சைட் டிஷ்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ஓர் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு, சூரியனை கோள்கள் சுற்றி வருவதைப்போன்று சுற்றி வந்துகொண்டு இருக்கும். உற்சாகம்தான் என்றாலும், அவர்கள் பேப்பர் கிளாஸில் அடிக்கும் சியர்ஸ் நம் தலையின் மீது அவ்வப்போது சிந்தி ஆசீர்வதிக்கும். முதல் ரவுண்டில் 'ஸ்டெடி’யாக இருப்பவர்களுக்கு, அடுத்தடுத்த ரவுண்டுகளில் நம் மீது கட்டுக்கடங்காத பாசம் புடுங்கிக்கொண்டு அடிக்கும். ''சைட் டிஷ் சாப்டு மாப்ள, தண்ணி குடி மாப்ள, கோக் வேணுமா?'' என உபசரிக்க ஆரம்பிப்பவர்கள், ஒரு கட்டத்தில் வலுக்கட்டாயமாக ஊட்டிவிட முயற்சிப்பார்கள்.

கியரைத் தாண்டி பாதி உடம்பை வளைத்து நம் மடி மீது படுத்துக்கொண்டு ஊட்டிவிட முயற்சிக்கும் இவர்களின் இந்த பொசிஷனை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

இப்படியாக ஒரு பேரண்டமே நடுங்கும்படி கார் சென்றுகொண்டு இருக்கையில், கைவசம் உள்ள டிஷ்கள் தீரும் நேரத்தில் சரியாக ஒரு டோல் பிளாசா வந்து மாட்டும். அங்கு விற்கும் வெள்ளரி, பலாச் சுளை, கடலை, நுங்கு, முந்திரி என எதை விற்றாலும் வாங்கி ஸ்பெஷல் சாலட் போடுவார்கள். ஒருமுறை சமையலுக்கு விற்ற கத்தரிக்காய், பாகற்காய் எல்லாம் வாங்கிக் கசக்கிப் பிழிந்து கலவை போட்டதில்... கண்ணால் காதால் எல்லாம் வாந்தி எடுத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு கட்டத்தில் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைபோல, பூனைக்குட்டிகள் படுத்து உறங்குவதுபோல ஒருவர் மீது ஒருவர் படுத்து உறங்குவர். இந்தக் காட்சியை மட்டும் ஏதேனும் கார் கம்பெனி பார்த்தால், அதை போட்டோ எடுத்து, 'நான்கு பேர் நிம்மதியாக உறங்க ஏற்ற கார்... எங்கள் கார்’ என விளம்பரப்படுத்திவிடும்.

காரில் மதுரைக்குச் சராசரியாக ஆறு மணி நேரத்தில் செல்லலாம் என நீங்கள் போட்ட பிளான் பல்லிளிக்கும். மாலை ஐந்து மணிக்கு திருச்சி பை-பாஸில் நிற்கும்போது, ''மாப்ழே இருட்டுல ஓட்டிடுவ இல்லை... பீ கேர்ஃபுல்டா’ என சீரியஸ் அட்வைஸ் கொடுத்துவிட்டு, கலைந்த தூக்கத்தை கன்டினியூ செய்வார்கள். அடப் பாவிகளா... இங்கேயும் எனக்கு டிரைவர் வேலைதானா?

அடுத்த முறை உஷாராகி, இன்னொரு நண்பனின் காரில் ஏறி டூர் போக பிளான் போட்டால், அதுவும் செட் ஆகாது என்பதுதான் காலம் கற்றுத் தந்த பாடம்!

காருக்குள் அனைவரையும் ஏற்றிக்கொண்ட பிறகு, நீண்ட வரிசையில் பெட்ரோல் அல்லது டீசல் பிடிக்க நிற்பான் நண்பன். அடுத்துக் கொஞ்சம் தள்ளிப் போய் காற்றுப் பிடிக்க அரை மணி நேரம் காத்திருந்து, டிக்கிக்குள் ஒளிந்திருக்கும் ஸ்டெப்னிக்கும் காற்று அடித்து கடுப்பைக் கிளப்புவான். 'அப்பாடா கிளம்பலாம்’ என ரிலாக்ஸ் மூடுக்கு வரும்போது, திடீரென பரபரப்பாகி, 'கிளட்ச் கொஞ்சம் ஹெவியா இருக்கு, அதை மட்டும் செக் பண்ணிக்கலாம்’ என ஒரு மணி நேரம் மெக்கானிக் ஷாப்பில் தேவுடு காக்க வைப்பான். அடுத்து ஏடிஎம் மையத்தைத் தேடுவான். அதுவும் மற்ற வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுத்தால் 25 ரூபாய் பிடித்துவிடுவார்கள் என்பதற்காக, அவனுடைய வங்கி ஏடிஎம் எங்கே இருக்கிறது என ரூட்டை மாற்றித் தேடும்போது, நாம் ஆட்டோ பிடித்து தியேட்டருக்குப் போய் படம் பார்த்துவிட்டு, வீட்டுக்குத் திரும்புவதே மேல் என்று முடிவெடுத்திருப்போம்!  

(கியரை மாத்துவோம்)

அடுத்த கட்டுரைக்கு