Published:Updated:

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - நாகப்பட்டினம் to தென்மலை

நினைவில் நீங்கா அமேஸ்; மனதில் பதிந்த தென்மலை!

 ##~##

''அன்பு - மூன்றெழுத்து; அன்பின் பிறப்பிடமாம் அன்னை - மூன்றெழுத்து; அன்னைக்குப் பின் நம்மை ஆள வரும் மனைவி - மூன்றெழுத்து... என் மனைவிக்கு நான் பரிசளித்த அமேஸ் - மூன்றெழுத்து!'' என்று கன்னாபின்னாவென்று 'ஹலோ விகடனில்’ (044-66802926) மெசேஜ் தட்டியிருந்தார் யுவன்ராஜ். ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்பில் கலந்துகொள்ள, இப்படித்தான் தன்னை அறிமுகம் செய்துகொண்டார் யுவன்ராஜ். 'ஒருவேளை தி.மு.க. அபிமானியா... அல்லது கவிஞரா இருப்பாரோ...’ என்ற சந்தேகத்துடன் நாகப்பட்டினத்தில் அவர் வீட்டு வாசலில் நின்றோம். 

யுவன்ராஜ், நாகையில் உள்ள பில்டிங் கான்ட்ராக்டர்களில் முக்கியப் புள்ளி. 'என் அமேஸைப் பார்த்தா, காக்காகூட கவிதை பாடும் சார்!’ என்றபடி, தனது கராஜுக்கு அழைத்துச் சென்றார். செக்கச் செவேரென, அடர் சிவப்பு நிறம். ஹோண்டாவின் முதல் டீசல் கார் என்ற பெருமைக்குரிய அமேஸ்.

''மச்சான்... நீயே கவிதை சொல்லும்போது, காக்கா சொல்லாதாடா?'' என்று 'கலாய்ச்சுட்டாராம்’ பாணியில் நம்முடன் பயணத்துக்கு ரெடியாகிக்கொண்டிருந்தார், யுவன்ராஜின் 'நண்பேன்டா’ மரைன் இன்ஜீனியர் கிஷோர்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - நாகப்பட்டினம் to தென்மலை

நாகப்பட்டினம், வேளாங்கன்னி, மீமிசல், தொண்டி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, குற்றாலம், செங்கோட்டை தாண்டி கேரளாவில் நுழைந்து ஆரியங்காவு, தென்மலை என தடதடவென ஜிபிஎஸ்ஸில் ரூட் மேப் தயாரானது. ஏறி உட்கார்ந்ததும், கொஞ்சூண்டு அலட்டலுடன் உறுமியது ஹோண்டாவின் 1.5 எர்த் ட்ரீம்ஸ் டீசல் இன்ஜின். ''காதலின்னா ஊடல் இருக்கணும்; மனைவின்னா கரைச்சல் இருக்கணும்; டீசல்னா வைப்ரேஷன் இருக்கணும்! இது ஹோண்டாவுக்கும் பொருந்தும் போல!'' என்றபடி சீட் பெல்ட்டை மாட்டினார்கள் யுவன்ராஜும், கிஷோரும்.

ஐடிலிங்கில் அலட்ட ஆரம்பித்தாலும், டிராஃபிக் நெருக்கடியிலும் சரி; ஆள் அரவமற்ற நெடுஞ்சாலைகளிலும் சரி... அலட்டாமல் செல்கிறது அமேஸ். ஆனால், மைலேஜுக்காக இன்ஜினை டியூன் செய்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அந்த நம்பிக்கையில்தானோ என்னவோ, டீசல் டேங்க்கின் கொள்ளளவையும் 35 லிட்டராக அமைத்திருக்கின்றனர்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - நாகப்பட்டினம் to தென்மலை

'மோட்டார் விகடன்ல நீங்க சொன்ன மாதிரி கிளட்ச் கொஞ்சம் டைட்டாத்தான் இருக்கு சார்!’ என்று சொன்னார் யுவன்ராஜ். அமேஸின் டீசல் பவர் 98.6 தீலீஜீ. டார்க், அதிகபட்சமாக 20.39 ளீரீனீ. குறைந்த ஆர்பிஎம்-ல் டார்க் பீறிடுவதால், சிட்டி டிராஃபிக்கில் அமேஸை வைத்து நன்றாக 'சீன்’ போடலாம். ஆனால், நெடுஞ்சாலையில் ஓவர்டேக் செய்யும்போது, பவர் டெலிவரி சீராக இல்லாததால், கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். 100 கி.மீ வேகத்தில் சென்று, காரைத் திருப்பினாலும் டயர்கள், காரை ஸ்லிப் ஆக விடாமல் தடுக்கின்றன.

வேளாங்கன்னி, திருப்பூண்டி தாண்டி மேலப்பிடாகையில் ஒரு சின்ன டீ பிரேக் எடுத்தோம். வலது பக்கம் உள்ள வழிகாட்டியில், 'திருக்குவளை 8 கி.மீ’ என்று இருந்தது. பிரம்மபுரீஸ்வரன் சிவன் கோவிலுக்குப் பிரசித்தம் திருக்குவளை. திமுக தலைவர் கருணாநிதி பிறந்த ஊரும் இதுதான். பொதுக்குழுக் கூட்டம் இல்லை; பிறந்த நாள் இல்லை... இருந்தாலும்... எதுகை மோனைகளுடன், 'தமிழ் இனத் தலைவரே... நீ இன்றி தமிழ் இல்லை... உன் நிழல் இன்றி தமிழனுக்கு வேறு குடையுமில்லை!’ 'சோதனைகளைச் சாதனைகளாக்கினாய்... அதையே எங்களுக்குப் போதனைகளாக்கினாய்!’ என்று ஆங்காங்கே சுவரொட்டிகள்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - நாகப்பட்டினம் to தென்மலை

கடலை ஒட்டியுள்ள பைபாஸ் வழியாகவே மணமேல்குடி வந்தடைந்திருந்தோம். அமேஸின் டாப் ஸ்பீடை செக் செய்வதற்கு இந்த இரண்டு வழிச் சாலை சரியான தீனியாக அமைந்திருந்தது. கிட்டத்தட்ட 148 கி.மீ. வேகம் வரை தொட்டுவிட்டு வரலாம். இதற்கு மேல் என்னதான் நீங்கள் ஆக்ஸிலரேட்டரை மிதித்தாலும், டீசல் கட்-ஆகி விடுகிறது. ஹோண்டாவின் ஏரோ-டைனமிக் டிசைன் நன்றாக வடிவமைக்கப்பட்டு இருப்பதால், மூன்று இலக்க வேகங்களில் சென்றாலும், கார் கொஞ்சம்கூட அலைபாயவில்லை. ஸ்பீடோ மீட்டரின் வலது பக்கம் உள்ள டிஜிட்டல் மீட்டரில் 'ஈக்கோ மோட்’ எனும் விளக்கு ஒளிர்ந்தால், உங்களுக்குக் கூடுதல் மைலேஜ் கிடைக்க வாய்ப்பு உண்டு என்கிறது ஹோண்டா. சமயங்களில் இது டாப் ஸ்பீடான 140 கி.மீ வேகத்திலும் ஒளிர்வது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - நாகப்பட்டினம் to தென்மலை

கடற்கரையை ஒட்டிய சாலை... மதிய வெயில்... தார் ரோடு என்பதால், காருக்குள் ஏ.சி-யை ஆன் செய்தும், மிதமான சூட்டை உணர முடிந்தது. டாப் வேரியன்ட்டில் மட்டும் இருக்கும் 'ஹீட் அப்ஸார்பர் விண்ட்ஷீல்டு’ இருப்பதற்கான பலனை நம்மால் நிச்சயம் அனுபவிக்க முடியவில்லை. ''சன் கன்ட்ரோல் ஃபிலிமும் ஒட்டக் கூடாதுன்னுட்டாங்க. வெயில் நேரத்துல இதான் மிகப் பெரிய டார்ச்சர்!'' என்று அலுத்தார் யுவன்ராஜ். கடலை ஒட்டியபடியே தொண்டி வந்தடைந்தபோது, நம் ட்ரிப் மீட்டர் 169 கி.மீ என்று காட்டியது. ராமநாதபுர மாவட்டத்தில் தொண்டி மீன் பிடித் துறைமுகம் ஃபேமஸ். அரசர்கள் காலத்திலும், பிரிட்டீஷ் ஆட்சியின்போதும் கப்பல் போக்குவரத்துக்கும், மீன் பிடித்தலுக்கும் தொண்டி துறைமுகம்தான் கைகொடுத்தது. பண்டைய சேர மன்னர்கள் சேரலாதன், இரும்பொறை போன்றவர்களின் ஆட்சிக் காலத்தில் வாஞ்சியைத் தலைநகரமாகவும், போர்க் காலங்களில் தொண்டியை முதன்மைத் துறைமுகமாகவும் கொண்டு ஆண்டு வந்தார்களாம்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - நாகப்பட்டினம் to தென்மலை

தொண்டியின் பழம்பெருமை பேசியபடி, மேலக்கிடாரம், சாயல்குடி தாண்டி தூத்துக்குடியை வந்தடைந்தோம். இந்த கடற்சாலை வழியைத் தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணம் - அமேஸை ஹை ஸ்பீடு டெஸ்ட் செய்வதற்காக மட்டுமல்ல; அடிக்கடி ஸ்பீடு பிரேக்கர்களாக வந்து நம்மைச் சோதிக்கும் டோல்கேட்டுகள் எதையும் சந்திக்க வேண்டியதில்லை என்பற்காகவும்தான். நாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி வரை ஒரே ஒரு டோல்கேட் மட்டும்தான். டோல்கேட்டைக் கடந்து வலதுபுறம் திரும்பினால், தூத்துக்குடி பைபாஸ். இடதுபுறம் வரிசையாக இருந்த பனை மரக் காட்டுக்குள் பதநீர் இறக்கி பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.

மரத்தில் இருந்து இறக்கப்பட்ட பதநீரை, பெரிய அண்டாவில் தபதபவெனக் கொதிக்கும் வரை சுண்டக் காய்ச்சி... சுண்ணாம்பு, ஏலக்காய்த் தூள், வெல்லம் போன்றவற்றைக் கலந்து, கொட்டாங்குச்சியில் சூடான பதத்தில் பிடித்து வெயிலில் காய வைத்தால், தூய்மையான பனங்கருப்பட்டி ரெடி!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - நாகப்பட்டினம் to தென்மலை

சூடாக பனை வெல்லம், கருப்பட்டி தயாரித்து, ஆன் தி ஸ்பாட்டிலேயே ரோட்டோரக் கடைகளில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். தூத்துக்குடியில் ஒரிஜினல் கருப்பட்டி, பனங்கற்கண்டு கிடைக்கிறது. கிலோ 120 ரூபாய் முதல் விற்கப்படும் கருப்பட்டிகள், நகர சூப்பர் மார்க்கெட்டுகளில் 200 வரை விற்கப்படுகிறது. ஆனால், கடைகளில் விற்கப்படுவதில் சர்க்கரை கலந்து கலப்படம் செய்வதாகச் சொன்னார் கருப்பட்டி விற்கும் அம்மா ஒருவர்.

ஒரிஜினல் கருப்பட்டிகளை பார்சல் செய்துகொண்டு கிளம்பினோம். திருநெல்வேலியில், தாமிரபரணி ஆற்றைக் கடந்து செல்வது வித்தியாசமான ஒரு அனுபவம். 'ஜீவநதிகளுக்கு என்றும் களங்கமே இல்லை’ என்பதுபோல், களங்கம் இல்லாமல் பயணித்துக் கொண்டிருந்த தாமிரபரணி ஆற்றிலும் சிறுசுகளும், பெருசுகளுமாய் டைவ் அடித்துக் குளித்துக் கொண்டிருந்தனர். நாமும் சின்னதாக கால் நனைத்துவிட்டு, போட்டோ ஷூட் முடித்துக் கிளம்பினோம். ஆலங்குளம் கடந்து, மாலை 6 மணியாவதற்குள் தென்காசியைத் தாண்டி செங்கோட்டையை அடைந்திருந்தோம். இடதுபுறம் திரும்பினால் குற்றாலத்தில் குளிக்கலாம். இருளத் தொடங்கியிருந்ததால், இனிமேல் குளிப்பது உகந்தது அல்ல என்று முடிவெடுத்தோம். நேராக தென்மலை நோக்கி ஆக்ஸிலரேட்டரை மிதித்தோம்.

கேரளா - தமிழ்நாடு பார்டரில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் உணவருந்திவிட்டுக் கிளம்பினோம். திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு 74 கி.மீ. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பிடித்தது. செங்கோட்டையில் இருந்து தென்மலைக்கு 28.5 கி.மீ. ''அரைமணி நேரத்துல போயிரலாம் சார்'' என்றார் யுவன்ராஜ். ஆனால், 28 கி.மீ.-ஐக் கடக்க அமேஸ் எடுத்துக்கொண்ட நேரம் - 3 மணி நேரம். ஒரு குழியில் இறங்கி ஏறி முடிக்கும் தருவாயில், அடுத்த பள்ளம் நம்மை வரவேற்கத் தயாராக இருக்கிறது. 'வேற ரூட்ல போயிருக்கலாமோ’ என்று நினைத்தால், அதற்கும் வழியில்லை.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - நாகப்பட்டினம் to தென்மலை

கார்களில் சஸ்பென்ஷனைச் சோதிக்க இந்தச் சாலைதான் சரியானது என்று தீர்ப்பே எழுதலாம். அமேஸின் டீசல் இன்ஜினின் எடை கொஞ்சம் அதிகம் என்பதால், முன் பக்க சஸ்பென்ஷன் சாஃப்ட்டாக இருந்தால் வேலைக்கு ஆகாது. எனவே, இறுக்கமான சஸ்பென்ஷன் சிஸ்டம் கொண்ட அமேஸ், சின்ன மேடு பள்ளங்களில் இறங்கினாலும், முன் பக்கம் தடபுடாவென சத்தம் வருவதைத் தடுக்க முடியவில்லை.

அமேஸில் 165 மி.மீ. கிரவுண்ட் கிளியரன்ஸ் என்றாலும், அவ்வளவாக அமேஸின் 'பெல்லி’ அடி வாங்கவில்லை. காரணம் - குறைவான வீல்பேஸும். முன் பக்கம் உள்ள டைட் சஸ்பென்ஷனும்தான்.

சின்ன செடான் காரில் சின்ன ஆஃப் ரோடிங் செய்து தென்மலையை அடைந்தபோது, இருட்டியிருந்தது. தென்மலைக்குச் செல்பவர்கள், தயவுசெய்து ஹோட்டல் ரூமை புக் செய்துவிட்டுச் செல்வது நலம். ஏனென்றால், மலைக் கிராமமான தென்மலையில் இருப்பது 'ஈக்கோ டூரிஸம்’ எனும் ஒரே ஒரு கவர்ன்மென்ட் காட்டேஜ் மட்டுமே. ஹவுஸ் ஃபுல் என்றதால், சின்னதாக ஒரு மலைக் குடிலில் இரவைக் கழித்தோம். மறுநாள் காலை இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்றான தென்மலை அணையை அடைந்தோம். இங்கு புகைப்படத்துக்கு அனுமதி இல்லை.

1961-லேயே சுமார் 13 கோடியில் கட்டப்பட்ட இந்த அணை, 1999-ல் 728 கோடிக்கு மதிப்பிடப்பட்டதாம். கிட்டத்தட்ட பல ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் தென்மலை அணை, கேரளாவில் உள்ள நீளமான நீர்த் தேக்கங்களில் ஒன்று. கேரளாவில் பவர் கட் இல்லாமல் இருப்பதற்கு தென்மலை அணைத் தேக்கமும் ஒரு காரணம். இதில் படகு சவாரியும் உண்டு. இங்கு போட்டிங் செய்தால் மன அமைதிக்கு உத்திரவாதமே கொடுக்கலாம்!

பசி வயிற்றைக் கிள்ளியது. தென்மலையில் ஓட்டல்களுக்கும் பஞ்சமாகத்தான் இருக்கிறது. தென்மலை

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - நாகப்பட்டினம் to தென்மலை

மூலையில் இருந்த ஒரு தமிழ்நாட்டு ஏழை அம்மா உணவகத்தில், விலை குறைந்த அதே சமயம் தரமான சில ஆப்பங்களை ருசித்துவிட்டுக் கிளம்பினோம். ''பசித்தவுடன் உண்பவனுக்குப் பசியின் கொடுமை தெரியாது. பசித்துக் காய்ந்த வயிற்றுக்கு பழைய உணவு புளிக்காது!'' என்று உண்ட மயக்கத்தில் தத்துவம் சொன்னார் யுவன்.

மறுபடியும் ஆஃப் ரோடிங் ஆரம்பமானது. இங்குள்ள வளைவுகள் ஹேர்ப்பின் பெண்டுகளைவிட மிகவும் மோசமானவை. அடிக்கடி லாரிகள் கவிழும் அபாயம் இருப்பதால், உயிர்ப் பலிகள் சாதாரணமாக நடக்கிறதாம். ''சமயங்களில் டிராஃபிக் ஜாமானால், ஒன்றிரண்டு நாட்கள் வரை நகர முடியாமல் இருக்கும் கொடுமையும் உண்டு'' என்கிறார்கள் ஏரியாவாசிகள்.

தென்மலைவில் இன்னொரு டெரர் - ராஜநாகம். ஆனால், நமது நல்ல நேரம்... எந்த ராஜதரிசனமும் கிடைக்கவில்லை.

ஆரியங்காவு தாண்டி வலதுபுறம் திரும்பினால், சுற்றுலாவாசிகளுக்கு ஓர் அற்புதமான இடம் - பாலருவி. அருவிக்குச் செல்லும் வழியெங்கும் அழகான அமைதி நிலவியிருந்தது. அழகான அமைதியைக் குலைத்தபடி, பெயருக்கு ஏற்றபடியே பால் போன்று அழகாகப் பொங்கி வருகிறது பாலருவி. குற்றாலத்தில் கூட்டம் அதிகமாகி, குளிக்க வாய்ப்பில்லாமல் போனவராக நீங்கள் இருந்தால், தாராளமாக பாலருவியைத் தேர்ந்தெடுக்கலாம். ஆங்காங்கே அருவியிலிருந்து வழிந்த மிச்ச நீர் தேங்கி, குட்டியூண்டு அகழிகளாக மனதைக் கொள்ளை கொள்கின்றன. தடாலென காரை பார்க் செய்து, குளியலுடைக்கு மாறி, அருவியில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தார் யுவன்ராஜ். மைனஸ் டிகிரி குளிருக்கு இணையான நீர், வழுக்குப் பாறைகள், மீன் கடிகளுக்கு மத்தியில் உற்சாகமாக அருவி அகழியில் குளியலை முடித்துவிட்டுக் கிளம்பினோம்.

மறுபடியும் திரும்பி மலையில் இறங்கியபோது, குற்றாலம் வந்திருந்தது. சீஸன் இல்லை என்றாலும், கூட்டம் ஓரளவு திரண்டிருந்தது. போட்டோ ஷூட்டுக்குப் பிறகு, குற்றாலத்துக்கு 'பை’ சொல்லிவிட்டுக் கிளம்பினோம். இப்போது, அமேஸுக்கும் நமக்குமான நெருக்கம் கொஞ்சம் அதிகரித்திருந்ததால், முன்பைவிட லாவகமாகவும், நேர்த்தியாகவும் கையாள முடிந்திருந்தது. ஒரு தாய் தன் பிள்ளையை கைப் பிடித்து அழைத்துச் செல்வதுபோல் நம்மைப் பாதுகாப்பாக நாகப்பட்டினத்துக்கு கொண்டு வந்து சேர்த்தது அமேஸ்.

'காரணம் இல்லாமல் யார் மீதும் அன்பு வருவதில்லை; அந்தக் காரணம்தான் யாருக்கும் புரிவதில்லை’ என்று டூர் முடிந்த மறுநாள், சீரியஸாக நமக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார் யுவன்ராஜ்!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - நாகப்பட்டினம் to தென்மலை
அடுத்த கட்டுரைக்கு