Published:Updated:

பஸ்ஸுக்கு தனி வழி!

பஸ்ஸுக்கு தனி வழி!

பஸ்ஸுக்கு தனி வழி!

குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தை, '40 மினிட்ஸ் சிட்டி’ என்று பெருமையாகக் குறிப்பிடுகிறார்கள் அந்த ஊர்வாசிகள். நகரில் எந்த ஓர் இடத்தில் இருந்தும் இன்னோர் இடத்துக்குச் செல்ல, அதிகபட்சம் 40 நிமிடங்கள்தான் ஆகுமாம். இத்தனைக்கும் அந்த ஊரில் நம் சென்னையைப் போல புறநகர் ரயிலோ அல்லது எம்ஆர்டிஎஸ் லட்சம் பேர் வசிக்கும் அந்த நகரில், இப்போதைக்கு இருப்பது பிஆர்டிஎஸ் எனப்படும் 'பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம்’ மட்டுமே! 

'சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு இந்த பிஆர்டிஎஸ் ஓர் சிறந்த தீர்வாக அமையும்’ என்று சொல்லி, அதைப் பார்வையிடுவதற்காக ஐடிடிபி (இன்ஸ்டியூட் ஃபார் டிராஸ்போர்ட்டேஷன் அண்டு டெவலப்மென்ட்) எனும் சர்வதேசத் தொண்டு நிறுவனம், சில பத்திரிகையாளர்களை அஹமதாபாத் அழைத்துச் சென்றது. அந்தக் குழுவோடு நாமும் அஹமதாபாத் சென்றிருந்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 ##~##

நாம் அஹமதாபாத் சென்றது ஒரு வேலை நாளில்தான் என்றாலும், அங்கே பொதுவாகவே சென்னை அளவுக்கு சாலைகளில் நெரிசல் இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள்; ஒன்று, சென்னையின் ஜனத்தொகையைவிட அந்த ஊரின் ஜனத்தொகை பாதிதான். அடுத்து, அந்த ஊரின் முக்கியச் சாலைகள் எல்லாம் 100 அடி அகலத்துக்குக் குறையாமல் இருக்கின்றன.

தங்குதடையில்லாமல் தனித் தண்டவாளத்தில் ரயில் செல்வதைப்போல, இந்த பிஆர்டிஎஸ் பஸ்கள் தனிப் பாதையில்தான் செல்கின்றன. இந்தப் பாதையில் வேறு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படுவது இல்லை என்பதால், இதில் பயணிக்கும் பிஆர்டிஎஸ் பஸ்கள், ரயில் மாதிரி வேகமாகச் செல்கின்றன. அதனால், ஒரே பஸ்ஸே பல ட்ரிப்புகள் சென்றுவர முடிகிறது.

ஐடிடிபி அதிகாரி ஒருவர் பேசும்போது, 'சென்னையில் பீக் ஹவர் டிராஃபிக்கின்போது, ஒரு பஸ்ஸின் சராசரி வேகம் மணிக்கு 14 கி.மீ-தான். ஆனால், அஹமதாபாத்தில் பிஆர்டிஎஸ் பஸ்ஸின் வேகம் சராசரியாக மணிக்கு 24 கி.மீ’ என்றார்.

பஸ்ஸுக்கு தனி வழி!

ஒருவகையில் பார்த்தால், பிஆர்டிஎஸ் பஸ்கள், ரயிலைவிடவும் சௌகரியம். ரயிலில் 20 பெட்டிகள் இருந்தால், ஒரே சமயத்தில்தான் ஓர் இடத்தில் இருந்து புறப்படும். ரயிலில் இருக்கும் ஒவ்வொரு பெட்டியும் போதுமான கால இடைவெளியில் தனித்தனியாகக் கிளம்பினால், பயணிகளுக்கு எத்தனை சௌகரியமாக இருக்கும். அப்படி ஒரு வசதி பிஆர்டிஎஸில் கிடைக்கிறது.

பொதுவாக, பஸ்ஸில் இருந்து பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வெகுநேரம் எடுத்துக்கொள்வார்கள். காரணம், சாதாரண பஸ் உயரமாக இருப்பதால், அதன் படிக்கட்டுகளில் ஏறி நிதானமாக உள்ளே செல்ல பயணிகளுக்குச் சற்று நேரமாகும். ஆனால், பிஆர்டிஎஸ் பஸ்ஸின் தளமும் பிஆர்டிஎஸ் பஸ் நிறுத்தத்தின் தளமும் சமமாக இருப்பதால், பயணிகள் சிரமமே இல்லாமல் துரிதமாக பஸ்ஸுக்குள் ஏறி இறங்க முடிகிறது.

சென்னையைப்போல அந்த ஊரிலும் மெட்ரோ ரயில் வரப்போகிறது. 'மெட்ரோ ரயிலில் இருந்து இறங்கினால், இன்னோர் இடத்துக்குச் செல்ல பிஆர்டிஎஸ் பஸ்ஸில் போகலாம்’ என்பதைப்போல, மெட்ரோ ரயிலையும் பிஆர்டிஎஸ் விரிவாகத் திட்டத்தையும் அங்கே ஒருங்கிணைத்து வடிவமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அஹமதாபாத்தின் நெரிசல் நிறைந்த பகுதிகள் சிலவற்றில், இவற்றுக்கு தனி லேன் அமைக்க இடம் இல்லை. அதுபோன்ற இடங்களில் பிஆர்டிஎஸ் பஸ்கள் டவுன் பஸ்களைப் போலவே பொதுவான சாலையில்தான் செல்கின்றன. இந்த பஸ்களில் நடத்துனர் கிடையாது. பஸ் நிறுத்தத்திலேயே டிக்கெட் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது இன்னொரு வசதி.  

அஹமதாபாத்தில், தற்போது 45 கி.மீ தூரத்துக்கு சுமார் 140 பிஆர்டிஎஸ் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கையைப் பெருக்கத் திட்டமிருப்பதைப் போலவே, இந்த பஸ்கள் இயங்கும் தூரத்தை 88 கி.மீ தூரத்துக்கு நீட்டிக்கவும் வேலைகள் நடந்துவருகின்றன. மெட்ரோ ரயிலுக்குத் தேவைப்படுவதைப்போல இதற்கு சுரங்கங்களோ, பறக்கும் பாலங்களோ தேவை இல்லை. அதனால், இதற்கு ஆகும் செலவும் மெட்ரோ ரயிலுக்கு ஆகும் செலவைவிட நிச்சயம் குறைவுதான். மேலும், குஜராத்தைப் பொறுத்தவரை சாலைகள் அமைத்துக் கொடுப்பது, பஸ் நிறுத்தங்களை அமைத்துக்கொடுப்பது மட்டும்தான் அரசின் வேலை. அங்கே பிஆர்டிஎஸ் பஸ்களை இயக்குவது ஒரு நிறுவனம். பஸ் ஸ்டாண்டுகளில் டிக்கெட் வசூல் செய்வது இன்னொரு நிறுவனம். ஒவ்வொரு பஸ்ஸும் எத்தனை கி.மீ பயணிக்கிறது என்ற கணக்கை வைத்தே இந்த நிறுவனங்களுக்கு அரசு கமிஷன் கொடுக்கிறது.

ஊர் திரும்புவதற்கு முன்பு, கடைசி கடைசியாக பிஆர்டிஎஸ் அதிகாரியான அஹில் கூறிய கருத்து சிந்தனைக்குரியது. ''பிஆர்டிஎஸ் பஸ்கள் அறிமுகமானதில் இருந்து சாலையில் புழங்கும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்திருக்கிறது. காரணம், ஒரு இடத்துக்கு காரில் செல்வதைவிட பஸ்ஸில் சீக்கிரமாகச் செல்ல முடியும் என்றால், மக்கள் நிச்சயம் பஸ்ஸில்தான் பயணம் செய்வார்கள். அதுதான் இதன் வெற்றி!''

பஸ்ஸுக்கு தனி வழி!