Published:Updated:

இங்கு பஞ்சர் போடப்படும்!

இங்கு பஞ்சர் போடப்படும்!
News
இங்கு பஞ்சர் போடப்படும்!

இங்கு பஞ்சர் போடப்படும்!

நண்பர்களிடம் நீண்ட நாள் பயங்கர ஆலோசனை நடத்தி, பத்திரிகை, ஆன்லைனில் விமர்சனங்கள் படித்து, அலசி ஆராய்ந்து நல்ல காரைத் தேர்ந்தெடுத்து வாங்கிவிடலாம். ஆனால், காருக்கான டிரைவர் தேவை வரும்போது, நண்பர்களிடம் கேட்டால்.... 'ப்ச்’ என்ற அலுப்புச் சத்தத்துடன்தான் ஆரம்பிப்பார்கள்.

 ''நல்ல டிரைவர் இப்ப எல்லாம் கிடைக்கிறதே இல்லை. நானே ரெண்டு வருஷத்துல நாலு டிரைவர் மாத்திட்டேன். இப்பக்கூட நல்ல டிரைவர் தேடிட்டுதான் இருக்கேன்'' எனக் கூறி, திகில் கிளப்புவார்கள். ''டிரைவர் வெக்கிறதெல்லாம் சாதாரணம் இல்லை மாப்ள. அவங்கதான் இப்ப நம்ம வீட்டை நோட்டம் பார்த்து, திருடனுங்களுக்குப் போட்டுக்கொடுக்கிறது; குழந்தையைக் கடத்த ஐடியா கொடுக்கிறது'' என்றெல்லாம் கூறி அடி வயிற்றில் ஐஸ் கத்தியைச் சொருகுவார்கள்.

இங்கு பஞ்சர் போடப்படும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு காலத்தில், டிரைவர் என்பவர் வீட்டின் ஓர் அங்கம். குழந்தைக்கு அவர் மாமா, அப்பாவுக்குத் தம்பி, மனைவிக்கு அண்ணன், தன் வீட்டு டிரைவரைப் பார்த்து, மரியாதையாக 'தம்’மைத் தூக்கிப்போடும் இளசுகள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்தார்கள். அவரும் காரை தன் தெய்வம்போல பார்த்துக்கொள்வார். குடும்பத்துக்கு மிக நம்பிக்கையான ஆளாக இருப்பார். ஒரு குடும்பத்துக்கோ அல்லது ஒரு கம்பெனிக்கோ மட்டுமே வாழ்க்கை முழுக்க டிரைவராக இருந்த அனுபவமெல்லாம் பலருக்கு உண்டு.

 ##~##

என்னுடைய நண்பர் ஒருவரின் குழந்தைக்குக் கிட்டத்தட்ட சீரியஸ் கண்டிஷன். முகப்பேரில் உள்ள மருத்துவமனையில் இடம் இல்லை என்று சொல்லி, நுங்கம்பாக்கத்துக்குக் கொண்டுசெல்லச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது நேரம் மாலை 6.30. சென்னை டிராஃபிக்கின் உச்சத்தில் இருக்கும் நேரம். முகப்பேரில் இருந்து நுங்கம்பாக்கம் செல்ல குறைந்தது 1 மணி நேரம் ஆகும். நுங்கம்பாக்கம் மருத்துவமனையில் இருப்பவர்கள் ''ஒரே ஒரு பெட்தான் இருக்கிறது. யார் முதலில் வருகிறார்களோ, அவர்களைத்தான் அட்மிட் பண்ணுவோம்'' என்று சொல்ல, சட்டென ரோட்டில் போன கால் டாக்ஸியைப் பிடித்து ஏறியிருக்கிறார்கள். டிரைவரிடம் நிலவரத்தைச் சொல்ல, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார். ''கடவுளை டிரைவர் ரூபத்தில் பார்த்தேன். என் குழந்தையைக் காப்பாற்றிய கடவுள் அந்த டிரைவர்தான்'' என்று என் நண்பன் கண்கலங்கச் சொன்னான்.

பஸ் டிரைவர், கார் டிரைவர், ஆட்டோ டிரைவர் என டிரைவர்களுடன் நமக்கும் பல நெகிழ்ச்சியான அனுபவங்கள் இருக்கும். ஆனால், இது 'பஞ்சர்’ கட்டுரை என்பதால், நெஞ்சைப் பஞ்சராக்கி டிஞ்சர் போட்ட டிரைவர்கள் பற்றி மட்டும் இதில் எழுதுகிறேன்.

கால் டாக்ஸி டிரைவர், ஆட்டோ டிரைவர், ஆம்னி பஸ் டிரைவர் மற்றும் நம் சொந்த காரின் டிரைவர் எனப் பலரும் பலவிதங்களில் நம்மை டென்ஷனாக்கி, அவ்வப்போது நரக வாசலைக் கண்ணில் காட்டிவிடுகின்றனர். சாலையில் நடக்கும் பெரும்பாலான விபத்துகள் டிரைவர் ஓட்டும் வாகனத்தின் மூலமாக நடப்பதைப் பார்க்கலாம். விசாரித்துப் பார்த்தால், அந்த டிரைவர் இரவு போதுமான நேரம் தூங்கி இருக்க மாட்டார்.  

இப்போது கால் டாக்ஸிகள் மற்றும் பிரைவேட் கேப்ஸ் பெருகிவிட்டதாலும், ஆளாளுக்கு கார்கள் வாங்குவதாலும் நல்ல டிரைவர்களுக்குப் பஞ்சம் நிலவுகிறது. அரைகுறையாகக் கற்றுக்கொண்டு அனுபவமே இல்லாமல் பல டிரைவர்கள் சுற்றுவதைப் பார்க்க முடிகிறது.

கால் டாக்ஸி நிறுவனத்தில் இருந்து டிரைவர் போன் நம்பர் எஸ்எம்எஸ்-ஸில் பக்காவாக வந்துவிடும். ஆனால், அவருக்கு போன் செய்து 'தி.நகர் போக வேண்டும்’ என்று சொன்னால், 'டீ நகரா?’ என்று ஆச்சரியமாகக் கேட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்.

''நான் ராஜகீழ்ப்பாக்கத்தில இருக்கேன். வர்றதுக்கு ஒன்றரை மணி நேரம் ஆகும்'' என்று அடுத்த குண்டைப் போடுவார். அதன் பிறகு, எத்தனை முறை கேட்டாலும் அதே அரை மணி நேரத்தை மெயின்டெயின் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

இங்கு பஞ்சர் போடப்படும்!

மீட்டர் போட மறப்பார்கள்; வழி தெரியாமல் முழிப்பார்கள்; ''வழிகூடத் தெரியலையா?'' எனக் கேட்டால், ''சென்னை வந்து ஒரு வாரம்தான் சார் ஆகுது'' என அப்பாவியாகச் சொல்வார்கள். நாம் விமானத்தைப் பிடிக்கச் செல்கையில், ஹாயாக விசிலடித்தபடி பெட்ரோல் போட்டு, காற்றுப் பிடிக்க லைன் கட்டி நிற்பார்கள். சிலர் விடிகாலை 6 மணிக்கு பிக்-அப் செய்வதற்கு, அதிகாலை 3 மணியில் இருந்தே போன் செய்து வழி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால், வர வேண்டிய நேரத்துக்கு வரவே மாட்டார்கள். சிலர் 4 மணி பிக்-அப்புக்கு 2 மணிக்கே வந்துவிட்டு நம்மைக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குவார்கள்.

எங்கே சென்றாலும் காரை நானேதான் ஓட்டிச் செல்வது வழக்கம். நண்பர்களுடன் ஒரு கன்னா பின்னா டூர் போகலாம் என முடிவெடுத்து, எந்தத் திட்டமும் இல்லாமல் சுற்றலாம் என்று கிளம்பியபோது, 'டிரைவர் வைத்துத்தான் பார்ப்போமே... நாம கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம்’ எனத் தெரிந்தவர் மூலம் ஒரு டிரைவரைத் தேர்ந்தெடுத்தோம். 'சொக்கத் தங்கம்’ என சர்ட்டிஃபிகேட் கொடுக்கப்பட்ட  டிரைவர், தாம்பரத்தில் காத்திருந்து காரைக் கைப்பற்றினார்.

''நைட் டிரைவிங் செய்ய வேண்டும். அதனால்தான் டிரைவரே வைக்கிறோம். நன்கு தூங்கிவிட்டு வரச் சொல்லுங்கள்'' எனக் கூறி இருந்தேன். மாலை 5 மணி சுமாருக்கு தாம்பரத்தில் இருந்து காரைக் கிளப்பியவர் கூடுவாஞ்சேரியிலேயே, டீ-க்கு பிரேக் போட்டார். திண்டிவனம் தாண்டியதும் கார் ஒரு மாதிரி சீற ஆரம்பித்தது. ஒரே லேனில் நேர்கோடாகச் செல்லாமல் பிசிறு தட்டியது. டிரைவரைப் பார்த்தால்... கஷ்டப்பட்டபடி விறுவிறுவென கண் சிமிட்டியபடியே இருந்தார். 'அய்யய்யோ, அதுக்குள்ளவா?’ என நினைத்தபடி, ''ஏங்க, தூக்கம் இல்லையா?'' எனக் கேட்டேன்.

''இல்லை சார், பசி...'' என்றார்.

பொய் சொல்கிறார் எனத் தெரிந்தாலும், விழுப்புரம் நெருங்கும் சமயத்தில் நிறுத்தி அவரைச் சாப்பிடச் சொன்னோம். மீண்டும் கார் கிளம்பியது. 45 நிமிடங்கள் ஓட்டியிருப்பார். திரும்பவும் கார் சீறியது. டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

திருச்சி நெருங்குவதற்கு முன்னமே அன்னார் சொக்க ஆரம்பித்தார். பேசிப் பேசி ஓரளவுக்கு அவரை உற்சாகப்படுத்தியபடி இருந்தோம். எங்கள் டூர் உற்சாகம் போயே போய், டிரைவரை உற்சாகப்படுத்துவதுதான் எங்கள் முழு நேரப் பணி ஆனது. திருச்சி நெருங்கியதும், அவரால் கன்ட்ரோல் செய்ய முடியாதவண்ணம் தூங்க ஆரம்பித்தார்.

வேறு வழியில்லாமல், ''சரிங்க, நான் கொஞ்ச நேரம் ஓட்டட்டுமா?'' எனக் கேட்டதுதான் தாமதம், சடன் பிரேக் போட்டுத் தாவிக் குதித்து பின் சீட்டுக்கு வந்து, அடுத்த செகண்டே குறட்டைவிட்டுத் தூங்க ஆரம்பித்தார். நாங்கள் தென்காசி வரை செல்ல வேண்டும்.

வழியில் எங்காவது டீ குடிக்க நிறுத்தினால் மட்டும், கில்லி மாதிரி எழுந்து வந்து பிஸ்கட், வாழைப்பழம் சாப்பிட்டு, டீ குடித்து தம் அடித்துவிட்டு, சமர்த்தாக திரும்பவும் படுத்துத் தூங்க ஆரம்பிப்பார்.

குற்றாலத்தில் மூன்று இரவுகள் தங்கினோம். வழக்கமாக டிரைவர்கள் கார்களிலேயே படுத்துக்கொள்வார்கள். எனக்கு அது மிகக் கொடூரமானதாகத் தோன்றும். நான் எங்கள் ரிஸார்ட் மேனேஜரிடம் பேசி, ஒரு அறையை எடுத்துக்கொடுத்தேன். அருவியில் குளித்துவிட்டு மாலை ரிஸார்ட்டுக்குத் திரும்பிவந்து பார்த்தால், படு வேடிக்கையாக இருந்தது.

வேறு ஒரு டிரைவரையும் சேர்த்துக்கொண்டு, அறையில் நன்கு குடித்துவிட்டு, கார் சிஸ்டத்தில் ஜாலியாகப் பாட்டுக் கேட்டுக்கொண்டு இருந்தனர். நானும், இப்போ அவரை 'மூட் அவுட்’ செய்ய வேண்டாம் என நினைத்தபடியால், ''ஜாலியா என்ஜாய் பண்றீங்களா?'' என்றேன்.

''நீங்க சாப்ட்டீங்களா சார்?'' என்றார்.

என்னடா, நம்ம மீது பாசம் காட்டுகிறாரே என நினைத்தபடி, ''இல்லீங்க, இனிமேதான் வெளில போய் சாப்பிடணும்'' என்றேன்.

''சார், அப்பிடியே எனக்கு நாலு புரோட்டாவும் சிக்கன் பிரியாணியும் வாங்கிட்டு வந்துடுங்க. இவரு நம்ம ஃப்ரெண்டுதான். இவருக்கு ஒரு மட்டன் பிரியாணி. அவரு காசை அவரு கொடுத்துடுவாரு'' என்றார். இப்படியே மூன்று இரவுகள் ஒரு பகல் நன்றாக ஹாலிடேவை என்ஜாய் செய்தார்.

''நாளை காலை கேரளா செல்ல வேண்டும். தயாராகிக்கொள்ளுங்கள். இன்று இரவு குடிக்க வேண்டாம்'' என்று சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ''அதெல்லாம் மொறையாப் பண்ணிடுவேன் சார்!'' என்றார்.

காரில் ஏறலாம் எனப் பார்க்கையில்தான் தெரிந்தது, காரைச் சுத்தமே செய்யவில்லை. ''ஏங்க, மூணு நாள் சும்மாதானே கிடந்தது. சுத்தம் பண்ணி இருக்கலாமே?'' என்றதும், அவசர அவசரமாக கடமைக்குக் கண்ணாடியை மட்டும் துடைத்து காரைக் கிளப்பினார். நீண்ட பயணம் என்றபடியால், இம்முறையும் நானும் அவரும் மாறி மாறி ஓட்டினோம். குமுளி வந்தடைந்து, அங்கும் அவருக்கு அறை ஏற்பாடு செய்து கொடுத்து, ''இங்கே சாப்பிட்டுக் கொள்ளுங்கள்'' என ஒரு ஹோட்டலிலும் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

மறுநாள் காலை பில் செட்டில் செய்தபோதுதான் தெரிந்தது. குமுளியில் இவருக்கு நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். அனைவரையும் அழைத்து வந்து பின்னி எடுத்திருக்கிறார். பில் எகிறியது. நாம் டென்ஷன் ஆகி, பயணத்தின் மூடை கெடுத்துக்கொள்ளக் கூடாது என அமைதியாக பில் செட்டில் செய்துவிட்டு, வழக்கம் போல காரை மாற்றி மாற்றி ஓட்டி வந்தோம். சென்னை திரும்ப இரவு ஆகி விட்டிருந்தது. நான்தான் ஓட்டிகொண்டு இருந்தேன். கிண்டி கத்திப்பாராவில் காரை நிறுத்தி அவரை எழுப்பினேன். கண்ணைக் கசக்கிக்கொண்டே இறங்கியவர், ''வீட்ல டிராப் பண்ணுங்க சார்'' என்றார் உரிமையோடு.

(கியரை மாத்துவோம்)

இங்கு பஞ்சர் போடப்படும்!