Published:Updated:

உலகின் உயரமான சாலை!

கோவை to கார்துங்லா பாஸ்

 ##~##

ஒவ்வொரு ஆட்டோமொபைல் ஆர்வலரும், 'வாழ்வில் ஒருமுறையாவது செல்ல வேண்டும்’ என்று நினைக்கும் இடம், இமயமலைச் சிகரத்தில் இருக்கும் கார்துங்லா பாஸ். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இந்தப் பயணம் குறித்து, தனது அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார் மோட்டார் விகடனின் புகைப்பட நிபுணர் விஜய்:

 உலகின் உயரமான வாகனச் சாலையான கார்துங்லா பாஸ்தான், ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் புனிதத் தலம். இங்கு வாகனத்தில் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களில், சொந்த ஊரில் இருந்தே தனது வாகனத்தை ஓட்டிச் செல்வது ஒருவகை. வாகனத்தை டெல்லி வரை ரயிலில் அனுப்பிவிட்டு, அங்கிருந்து செல்வது மற்றொரு வகை. இவை இல்லாமல் இன்னொரு வகையும் உண்டு. அதாவது, தனது சொந்த வாகனத்தை எடுத்துச் செல்ல முடியாதவர்களுக்காகவே, லடாக்கில் பைக்குகளை வாடகைக்குத் தருகின்றனர். இதைத்தான் நான் தேர்ந்தெடுத்திருந்தேன்.

உலகின் உயரமான சாலை!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் 20 முதல் 26-ம் தேதிவரை ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக்கில், சுற்றுலாப் பயணிகளுக்காக 'லடாக் திருவிழா’ நடைபெறும். எனவே, அந்தத் திருவிழாவை ஒட்டி எனது பயணத் திட்டத்தை அமைத்துக்கொண்டேன். முதலில், கோவையில் இருந்து டெல்லி சென்றேன். அங்கே எனது நண்பர்கள் இருவர் இணைந்துகொள்ள, மூவருமாக அதிகாலையில் டெல்லியில் விமானம் ஏறி லே ஏர்போர்ட்டை அடைந்தோம். சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில், முக்கால் மணி நேரம் இமாலய மலைகள் மீது பறந்தது விமானம். அதிகாலை விடியல், செவ்வானம், பனி படர்ந்த மலைகள் மேல் பயணிக்கும் அந்தத் தருணத்தில், பூமியின் ஒட்டுமொத்த அழகைக் கண்டுகளித்ததுபோல பரவசமானோம்.

லே முதல் நுபுரா பள்ளத்தாக்கு வரை பைக்கில் சென்றுவருவதுதான் எங்கள் பயணத் திட்டம். ஆனால், உடல்நலப் பிரச்னையால் கார்துங்லா பாஸ் வரை மட்டுமே பைக்கில் சென்றுவர முடிந்தது. லடாக் டு ஸ்ரீநகர் காரில் சென்றோம்.

உலகின் உயரமான சாலை!

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட பகுதி லே - லடாக். அதனால், நாம் என்னதான் இந்தியப் பிரஜையாக இருந்தாலும் இஷ்டம் போல அங்கு வாகனப் பயணங்களை அனுமதி இன்றி மேற்கொள்ள முடியாது. ஆகையால், உள்ளூர் மேஜிஸ்ட்ரேட் அலுவலகத்தில் அதற்கான அனுமதியை வாங்கிக் கொண்டு, பயணத்துக்கான பைக்கைத் தேர்ந்தெடுக்க கடை வீதிக்குச் சென்றோம். 'டிஸ்கவர் ஹிமாலயாஸ் அட்வென்ச்சர்’ எனும் ஷோரூமில், நம் ஊரில் வாடகை சைக்கிள் நிற்பதுபோல வாடகை பைக்குகளை நிறுத்திவைத்திருந்தனர். டிவிஎஸ் ஸ்கூட்டி முதல் லேட்டஸ்ட் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு வரை நின்றன. ராயல் என்ஃபீல்டு புல்லட் எலெக்ட்ராவை பயணத்துக்குத் தேர்வுசெய்தோம். முதலில், லே முதல் கார்துங்லா பாஸ் வரை சென்று வரத் திட்டமிட்டோம்.

மறுநாள் அதிகாலை எங்கள் பயணத்தைத் ஆரம்பித்தோம். வெப்பநிலை 10 டிகிரி. குளிர் காற்றில் பைக் ஓட்டும் அனுபவமே மிகுந்த ஆனந்தமாக இருந்தது. 11,300 அடி உயரத்தில் இருக்கும் லேவில் இருந்து கிளம்பிய நாங்கள், 18,380 அடி உயரத்தில் இருக்கும் கார்துங்லா பாஸை அடைய வேண்டும். வழியெங்கும் ராணுவ மையங்களும் நீர் ஓடைகளுமாக இருந்தன. லேவில் இருந்து சரியாக 24 கிலோ மீட்டரில் சவுத் புல்லூ எனும் இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. அதுவே நாம் சந்திக்கும் முதல் செக்-போஸ்ட். அங்குள்ள டீக்கடையில் பைக்கை நிறுத்தினோம். அங்கு ஒரு எச்சரிக்கைப் பலகையில் கார்துங்லா பாஸ் பற்றிய விரிவான குறிப்புகள் இடம் பெற்றிருந்தன.

உலகின் உயரமான சாலை!

அதில் இடம்பெற்ற சில அறிவுரைகள்: 'தலைச் சுற்றல், தலைவலி, மூச்சுத் திணறல், கைவிரல்கள் வீக்கம், வாந்தி, மயக்கம் போன்ற ஏதேனும் அறிகுறி தென்பட்டால், உடனடியாக அருகிலிருக்கும் ராணுவ முகாமை அணுக வேண்டும். ஏனென்றால், இரண்டு மணி நேரத்தில் இப்படி ஒரு உயரத்தை அடையும்போது, அந்த ஹை ஆல்ட்டிடியுட் பிரஷர் நம்மைப் பாதிக்கும். ஆதலால், கார்துங்லாவில் 30 நிமிடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. அங்கு ஓடக் கூடாது. வேகமாக நடக்கக் கூடாது.’

உலகின் உயரமான சாலை!

கொஞ்ச நேர ஓய்வுக்கு பின்பு, பயணத்தைத் தொடர்ந்தோம். எங்களைப் போலவே தென் இந்தியாவிலிருந்து நிறைய பைக் பிரியர்களை அங்கு பார்த்தோம். மேலே செல்லச் செல்ல... தார் ரோடு மெள்ள மெள்ள மறைந்தது. மிகவும் கரடுமுரடான, குண்டு குழிகள் நிறைந்த ரோடுகளாக மாறியது. அங்கிருக்கும் மலைகள் அனைத்தும் சரளைக் கற்களைக் குவித்துவைத்தது போலக் காட்சியளித்தது. வேகமாகக் காற்று வீசிய தருணத்தில், மலையிலிருந்து கற்கள் பாதையில் விழுந்துகொண்டே இருந்தன. கற்கள் உருண்டுவரும் மலை, சற்று அசந்தாலும் புரட்டிவிடும் பாதை, கிறுகிறுக்க வைக்கும் பள்ளத்தாக்கு ஆகியவற்றைத் தாண்டி, பனி போர்த்திய மலைகளை அவ்வப்போது ரசித்தபடி பயணித்துக்கொண்டிருந்தோம்.

நாங்கள் சென்ற வழியில் பல இடங்களில் பாறைகள் பாதையை மூடிக்கிடந்தன. அவற்றை அங்கு வந்த பணியாளர்கள் சரிசெய்தார்கள். இதேபோல், கார்துங்லா பாஸ் உச்சியைத் தொடும் முன் 5 இடங்களில் இந்த மாதிரியான பாறைகள் சரிந்துகிடந்தன. காலை உணவு சாப்பிடாததாலும், போகும் பாதையில் இந்த மாதிரியான இயற்கைத் தடங்கலாலும் சற்று சோர்வாக இருந்தது. ஒருவழியாக பல்லாயிரம் பாறைகளைக் கடந்து எங்களின் முதல் இலக்கான கார்துங்லாவை அடைந்தோம். உலகின் உயரமான சாலை உச்சியை ராயல் என்ஃபீல்டு பைக்கில் தொட்டோம்.

அங்கும் ராணுவ முகாம் மற்றும் புத்தர் கோவில்கள் உள்ளன. ஆனால், அவர்கள் 25 நிமிடங்கள் மேல் அங்கு யாரையும் இருக்கவிடுவது இல்லை. படங்கள் எடுத்துக்கொண்டு, அங்கு இருக்கும் ராணுவத்தினருக்கு ஒரு ராயல் சல்யூட் கொடுத்துவிட்டு, லே நோக்கி யூ டர்ன் எடுத்தோம்.

இதுதான் இமாலய சாதனையோ?!

 அழகும் ஆபத்தும்!

 லடாக்கில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் வழியில் இருக்கும் இடம் திராஸ். இது உலகின் இரண்டாவது குளிர்ச்சியான இடம் என்ற பெருமைபெற்றது. பனிக் காலங்களில் மைனஸ் 60 டிகிரி வரை தட்பவெப்பநிலை மாறும் என்பது இங்குள்ள பதிவு. அந்தச் சமயங்களில் சாலையில் 20 அடிக்கும் குறையாமல், பனி இருக்கும் என்கிறார்கள்.

கண்ணுக்கு எட்டும் தூரத்தில்தான் பாகிஸ்தானின் மலைச் சிகரங்கள் தெரிகின்றன. அண்டை நாட்டு ஆபத்தும், நம் பயணிக்கும் சாலையின் ஆபத்தும் ஒருசேர அனுபவிக்கும் இடம்தான் 'ஜோஜில்லா பாஸ்’. சுமார் 11,645 உயரத்தில் இது அமைந்துள்ளது.

உலகின் உயரமான சாலை!

இரு ஒரு வழிப் பாதைகள் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில், கார்கிலில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் வாகனங்கள் மேல் பாதையிலும், ஸ்ரீநகரில் இருந்து கார்கில் வரும் வாகனங்கள் மற்றொரு பாதையிலும் பயணிக்க வேண்டும். இரண்டு சாலைகளும் ஆபத்து நிறைந்தவை. எந்த நேரமும் மலைகளில் இருந்து மண் சரிவு இருந்துகொண்டே இருக்கும்.

ஸ்ரீநகர் செல்லும் வழியில் சோனாமார்க் என்ற இடம் உள்ளது. அதிபயங்கரமான பள்ளத்தாக்குகளைக்கொண்ட பகுதி. இந்தச் சாலையில் பயப்படாமல் பைக் ஓட்ட வேண்டும். 'கரணம் தப்பினால் மரணம்’ என்பதை இந்த இடத்தில் நேரடியாக அனுபவிக்கலாம். இந்த 18 கி.மீ தூரத்தைக் கடக்க டிராஃபிக் இல்லை என்றால், 2.30 மணி நேரம் ஆகும்.

ஒரு நாளைக்கு சாராசரியாக 200 லாரிகளும், 75 சிறு நான்கு சக்கர வாகனங்களும், ஜாக்கிரதையுடன் இந்த அபாயத்தைக் கடக்கின்றன.

உலகின் உயரமான சாலை!
அடுத்த கட்டுரைக்கு