Published:Updated:

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 Vs ஹோண்டா பிரியோ

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 Vs ஹோண்டா பிரியோ

 ##~##

ஹூண்டாய் கிராண்ட் ஐ10. ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டுக்குப் பிறகு, அதிக ஆரவாரங்களோடு விற்பனைக்கு வந்த கார் என்றால் அது இதுதான். வந்த வேகத்தில் புக்கிங்குகளை அள்ளிக் குவித்து, நம் நாட்டுச் சந்தையில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது கிராண்ட் ஐ10.

 இன்னொரு பக்கம், ஹோண்டா பிரியோவை எடுத்துக்கொண்டால், அது ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் தனக்கென தனி இடத்தை வைத்துக்கொண்டு, அமைதியாக விற்பனையாகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஹூண்டாய் ஐ10 காரோடு போட்டி போட்டால், பிரியோதான் ஜெயிக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், இப்போது ஹோண்டா தனக்கென வைத்திருந்த மார்க்கெட்டில், கிராண்ட் ஐ10 காரோடு ஹூண்டாய் உள்ளே நுழைந்திருப்பதால், ஒரு பிராக்டிக்கலான கம்பேரிஸன் அவசியமாகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 Vs ஹோண்டா பிரியோ

சொகுசு மற்றும் வசதிகள்

ஹோண்டா பிரியோ மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஆகிய இரு கார்களின் அழகு அம்சங்களை ஏற்கெனவே பல முறை ஆராய்ந்திருக்கிறோம். மேலும், டிசைன் என்பது, வாங்கும் வாடிக்கையாளர்களின் மனசு சம்பந்தப்பட்டது. அதனால், இப்போது நேராக காரின் வசதிகள் மற்றும் சொகுசு அம்சங்களைப் பற்றிப் பார்ப்போம். ஹோண்டா பிரியோவின் உள்பக்கத்தை ஹோண்டா நிறுவனம் நிச்சயம் அழகுக்காக வடிவமைக்கவில்லை.

எந்த அம்சமாக இருந்தாலும் பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து, காரின் உள்ளலங்காரத்தை வடிவமைத்திருக்கிறது ஹோண்டா.  ஸ்டீயரிங் வீலின் இட அமைப்பு பெர்ஃபெக்ட். பிரியோவின் டிரைவர் சீட்டில் இருந்து பார்க்கும்போது சாலை விசாலமாகத் தெரிவதால், நம்பிக்கையுடன் இக்கட்டான டிராஃபிக் நெரிசல்களில்கூட காரைச் செலுத்த முடிகிறது. ஸ்பீடோ மீட்டர் மற்றும் டேக்கோ மீட்டரின் எழுத்துகள் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாம். பிளாஸ்டிக் தரம் சிறப்பாக இருந்தாலும் டிசைன் சிம்பிளாக இருப்பதால், தரமான டேஷ்போர்டுகூட, பார்க்கச் சுமாராகத் தெரிகிறது.

நாம் இதற்கு முன்பு பலமுறை சொன்னதுபோல, பிரியோ பார்க்கத்தான் சின்ன கார். ஆனால், காரின் உள்பக்கம் குறிப்பாக, பின்னிருக்கை இட வசதி உண்மையிலேயே எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளது. இருக்கைகளும் வசதியாக இருக்கின்றன. ஆனால், தொடைக்கு சப்போர்ட் இல்லை. பாட்டில்களைக்கூட வைக்க இடம் இல்லாதது மைனஸ்தான். பிராக்டிக்கலாகப் பார்க்கும்போது, பிரியோவின் பூட் ஸ்பேஸ் குறைவாக இருப்பது எதிர்பார்த்ததுதான். மேலும், லோடிங் பாயின்ட் வேறு அதிக உயரத்தில் இருக்கிறது. ஒரு சின்ன சூட்கேஸ் மற்றும் சின்ன பையைத்தான் பிரியோவின் டிக்கியில் வைக்கமுடியும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காருக்குள் நுழைந்தால், இதமாக இருக்கிறது. உள்பக்கம் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகள் தரமாக இருக்கின்றன. முக்கியமாக, நம்முடைய கை அடிக்கடி படும் இடங்களில் எல்லாம், மெட்டீரியல் இன்னும் தரமாக உள்ளது. உதாரணத்துக்கு, சுற்றும் முறையில் இயங்கும் திருகுகள் எல்லாவற்றிலும் ஸ்பெஷல் ஃபினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளன. ஏ.சி கன்ட்ரோல்கள்தான் பயன்படுத்தும்போது, சற்று இறுக்கமாக இருப்பதுபோல ஃபீல். கிராண்ட் ஐ10 காரின் டிரைவிங் பொசிஷன் பிரியோ அளவுக்குச் சிறப்பாக இல்லை. மேலும், டேஷ்போர்டை எதற்கு அவ்வளவு உயரமாக அமைத்தார்கள் எனத் தெரியவில்லை. இதனால், நம் டிரைவிங் சீட்டையும் உயர்த்திகொள்ள வேண்டியுள்ளது. பின் பக்க இட வசதியும் இருக்கையின் சொகுசும் பிரியோ போலத்தான் இருக்கிறது. ஆனால், இருக்கை சற்று தாழ்வாக இருப்பதும் ஜன்னல்கள் உயரமாக இருப்பதும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். இந்த செக்மென்ட்டிலேயே கிராண்ட் ஐ10 காரில்தான் ரியர் ஏ.சி வென்ட் இருக்கிறது. ஆனால், இந்த ஏ.சி வென்ட் எதிர்பார்த்ததுபோல குளிர்ச்சியை அளிக்கவில்லை. மேலும், டிக்கியில் பிரியோவைவிட இடம் தாராளம்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 Vs ஹோண்டா பிரியோ
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 Vs ஹோண்டா பிரியோ
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 Vs ஹோண்டா பிரியோ

இன்ஜின் - பெர்ஃபாமென்ஸ்

ஹோண்டாவின் பெட்ரோல் இன்ஜின்கள் ஏன் பிரபலம் என்பதை, பிரியோவை ஓட்டியவர்களுக்குத் தெரியும். பிரியோவின் 88 bhp சக்தியை அளிக்கும் 1.2 லிட்டர் இன்ஜின், இந்த 925 கிலோ காரை நன்றாகவே இழுக்கிறது. 3,000 ஆர்பிஎம்-க்கு மேல் சக்தி வெளிப்பாடு பிரமாதம். அதுவும் ரெட்லைன் ஆர்பிஎம்-க்குச் சற்று முந்தைய ஆர்பிஎம்-ல் இன்ஜின் இயங்கும்விதம் அருமை. ஆனால், கார் முழு லோடில் செல்லும்போதுதான் இன்ஜினின் பலவீனம் தெரிகிறது. இதுபோன்ற சமயங்களில், அடிக்கடி 'டவுன் ஷிஃப்ட்’ செய்ய வேண்டியிருந்தாலும் கியர் ஷிஃப்ட் ஆகும் விதம் செம ஸ்போர்ட்டியாக இருப்பதால், நமக்கு இது பெரிய தொந்தரவாகத் தெரியவில்லை. 0 - 100 கி.மீ வேகத்தை 12.86 விநாடிகளில் அடைகிறது பிரியோ. அப்படியே ஆக்ஸிலரேட்டரை மிதித்துக் கொண்டிருந்தால், மணிக்கு 140 கி.மீ வேகத்துடன் பிரியோ 'லிமிட்’ செய்யப்பட்டிருப்பது புரிகிறது. அதிக வேகங்களிலும் பிரியோ அலைபாயாமல் செல்வது மிகப் பெரிய ப்ளஸ்.

பிரியோவை ஓட்டிவிட்டு ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரை ஓட்டினால், அப்படியே நிலைமை தலைகீழ். பிரியோ அளவுக்கு இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பவர்ஃபுல் கிடையாது என்றாலும் குறைந்த ஆர்பிஎம்-ல் டார்க் நன்றாக வெளிப்படுவதால், பிரியோவைவிட இதை ஈஸியாக சிட்டி டிராஃபிக்கில் ஓட்ட முடியும். பிரியோவை ஃபுல் லோடில் ஓட்டிவிட்டு, அதே ஃபுல் லோடில் கிராண்ட் ஐ10 காரை ஓட்டினால், இந்த வித்தியாசத்தை உணரலாம். ஆனால், கியர்பாக்ஸ் தரம், டீசல் கிராண்ட் ஐ10 காரில் இருந்த அளவுக்கு இல்லை என்பது மைனஸ்தான். பிரியோவில் இருக்கும் கியர் ஷிஃப்ட் ஃபீல்கூட இதில் இல்லை.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 Vs ஹோண்டா பிரியோ

கையாளுமை

இரண்டு கார்களுமே முற்றிலும் வித்தியாசப்படுவது, கையாளுமையில்தான். ஒரு ஹேட்ச்பேக் காருக்கு எப்படி ஓட்டுதல் மற்றும் கையாளுமை இருக்க வேண்டும் என்பதற்குச் சரியான உதாரணம், ஹோண்டா பிரியோ. ஓட்டுதலில் பெரிய ஆர்வம் இல்லாதவரையும்கூட ஆர்வமாக ஓட்டவைக்கிறது பிரியோ. மோசமான சாலைகளிலும் கார் கட்டுப்பாடுடன் செல்கிறது. சில சாலைகள் வேகமாக ஓட்ட வேண்டும் எனத் தோன்றவைக்கும். பிரியோவுக்கு அந்த மாதிரியான சாலைகளை உணவாகக் கொடுத்துக் கொண்டிருந்தால், ஜாலியாக காரை ஓட்டலாம். பிரியோவில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சம், இதன் ஸ்டீயரிங் ஃபீல். முன் சக்கரங்களுக்கும் ஸ்டீயரிங் வீலுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லாதது போல, கைவிரல்களும் சாலையை உணருகின்றன. மொத்தமாகச் சொன்னால், ஓட்டுதல் மற்றும் கையாளுமையில் இந்த செக்மென்ட்டின் பெஞ்ச் மார்க், ஹோண்டா பிரியோ.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் சஸ்பென்ஷன், சாதாரண ஐ10 போலவே முழுக்க முழுக்கக் குறைந்த வேகங்களில் சிறப்பாக இருக்கும்படியே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மோசமான சாலைகளில் சற்று வேகமாகப் போனாலும் கார் ரொம்பவுமே குலுங்குகிறது. ஹூண்டாயின் வழக்கமான உயிரோட்டமில்லாத ஸ்டீயரிங்தான் கிராண்ட் ஐ10-ல். 110 கி.மீ வேகத்துக்கு மேல் கிராண்ட் ஐ10-ன் ஸ்டீயரிங், 'கார் இப்படித்தான் செல்லும்’ என நினைத்துச் செலுத்த முடியவில்லை.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 Vs ஹோண்டா பிரியோ

மைலேஜ்

இரண்டு கார்களுமே நல்ல மைலேஜ் தருபவைதான். ஹோண்டா பிரியோ, நகரத்தில் லிட்டருக்கு 12.6 கி.மீ, நெடுஞ்சாலையில் 17 கி.மீ அளித்தது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10, நகரத்தில் லிட்டருக்கு 11.7 கி.மீ, நெடுஞ்சாலையில் 16.3 கி.மீ மைலேஜ் அளித்தது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 Vs ஹோண்டா பிரியோ

ஹேட்ச்பேக் கார்தான், ஒரு நிறுவனத்தின் வல்லமையையும் அது எப்படி வாடிக்கையாளர்களைப் புரிந்துவைத்திருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டும். ஹோண்டா கார்களில் இருக்கும் வழக்கமான பிளஸ் பாயின்ட்டுகள் அனைத்தும் பிரியோவில் இருக்கின்றன. அருமையான பெட்ரோல் இன்ஜின், அதை அழகாகச் சமாளிக்கும் கியர் பாக்ஸ், பெர்ஃபெக்ட்டான ஸ்டீயரிங் ஃபீல் என ஓட்டுதலை முன்னிலைப்படுத்தும் அனைத்து விஷயங்களும் பிரியோவில் இருக்கின்றன. ஆனால், இன்டீரியர்கள் மிகவும் சாதாரணமாக இருப்பதும் டிக்கியில் இடம் மிகக் குறைவாக இருப்பதும் மைனஸ்தான். எப்படிப் பார்த்தாலும் ஜாலியாக ஓட்ட வேண்டும் என்பவரைத் திருப்திப்படுத்தும் காராகவே இருக்கிறது ஹோண்டா பிரியோ.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10, வழக்கமான ஐ10 காரின் வாடிக்கையாளர்களின் ஃபீட்பேக் ஃபார்மில் இருந்து எடுக்கப்பட்ட ஐடியாக்களை வைத்து உருவாக்கப்பட்ட கார் போல இருக்கிறது. ஹோண்டா பிரியோவில் இருக்கும் மெக்கானிக்கல் பெர்ஃபெக்ஷன், கிராண்ட் ஐ10 காரில் இல்லை. ஆனால், தினமும் ஓட்டப்படும் ஒரு காருக்குத் தேவையான அம்சங்களோடு வந்திருக்கிறது கிராண்ட் ஐ10. உள்ளே, வெளியே பார்க்க அழகாக இருக்கிறது. வசதிகளுக்கும் பஞ்சம் இல்லை; இட வசதிக்கும் குறைவு இல்லை. முக்கியமாக டிக்கியில் பிரியோவை விட அதிக இடம் கொண்டுள்ளது. காரை ஓட்டும்போது பிரியோ அளவுக்கு ஜாலியாக இருக்காது. ஆனால், அது இந்த செக்மென்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை. ஹூண்டாய் கிராண்ட் ஐ10, ஒரு பேக்கேஜாக ஹோண்டா பிரியோவின் மெக்கானிக்கல் பெர்ஃபெக்ஷனை ஓவர்டேக் செய்துவிட்டது என்பதே உண்மை!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 Vs ஹோண்டா பிரியோ
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 Vs ஹோண்டா பிரியோ