Published:Updated:

பீச் டூர்!

பீச் டூர்!

 ##~##

கடல், நமக்குள் உறங்கும் உணர்வுகளைக் கிளர்த்தும் மோகினி. உதடுகளில் உரசும் உப்புக் காற்று, எண்ணங்களில் புதையும் மணல் வெளி, கரையைச் சுருட்ட முயலும் அலைகள் என நம் மனவெளி புதிது புதிதாக எண்ணக் கடலில் முங்கிக் குளிக்கும். 

கோட்டை முதல் குமரி வரை நீளும் தமிழகக் கடற்கரை, பல வரலாற்றுச் சிறப்புகள் கொண்டது. கடல் பயணம் கிட்டாதவர்களுக்கு, கடற்கரையோரப் பயணம்தான் வரப்பிரசாதம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னையில் ஆரம்பித்து புதுச்சேரி வரை கடற்கரை ஓரமாகவே மணலில் சுமார் 120 கி.மீ தூரம் பயணம் செய்ய முடியுமா? கடற்கரை மணலில் சிக்காத ஏடிவி (ஆல் டெரைன் வெஹிக்கிள்) வாகனத்தில் அந்தப் பயணம் அமைந்தால்..? ஏடிவி தயாரிக்கும் நிறுவனமான போலாரிஸ் ஏற்பாடு செய்திருந்த அப்படிப்பட்ட ஓர் ஆஃப் ரோடு அட்வென்ச்சர் பயணத்தில் நானும் இணைந்துகொண்டேன்.

இந்த சாகச நாள் அன்று, கிழக்குக் கடற்கரைச் சாலையில் பட்டிப்புலம் என்ற இடத்தில் இருக்கும் ஏடிவி டிராக்கில், மொத்தம் 13 போலாரிஸ் ஏடிவி வாகனங்கள் சீறிக்கொண்டு இருந்தன. அதில் ஒன்றில் நானும் ஏறிக்கொண்டேன்.

பீச் டூர்!

இந்த இரண்டு நாள் பயணத்தில், கடற்கரை ஓர‌மாகவே மகாபலிபுரம், கல்பாக்கம், பெரியகுப்பம், ஆழிகுப்பம் ஆலம்பரை கோட்டை, மரக்காணம் வழியாக புதுச்சேரி செல்வதுதான் திட்டம். கொடி அசைத்து எங்களை வழியனுப்பிவைப்பதற்கு முன்பாக, ஹெல்மெட், பாதுகாப்பு உடைகள், முதலுதவிப் பெட்டி, சீட் பெல்ட் போன்றவற்றின் அவசியத்தை அழுத்தமாக எடுத்துச் சொன்னார், ஆப் ரோட் அட்வெஞ்ச்சர் ட்ராக் உரிமையாளர் சுந்தர்.

இந்தப் பயணத்துக்காக கோவையில் இருந்து நான்கு பேர் வந்திருந்தனர். அவர்களுடன் மெக்கானிக்குகள், உதவியாளர்கள் என ஒரு சின்னப் படையும் திரண்டிருந்தது. போலீஸ் பாதுகாப்பும் இருந்தது. காலை 10.30 மணிக்குப் பயணம் துவங்க... வானம், மேகத் திரளைக் காட்டி அச்சுறுத்த... அசராமல் ஆரம்பமானது அலுங்கல் குலுங்கல் பயணம்.

பீச் டூர்!

ஆனால், நான் நினைத்தபடி அலுங்கல் குலுங்கல், அதிர்வுகள் அதிகமாக இல்லை. மணல், சஸ்பென்ஷனைப் போலச் செயல்பட்டது ஆச்சரியமாக இருந்தது. மேடு பள்ளங்களில் சாய்ந்து வளைந்துபோவது, கடலுக்குள் படகில் செல்வது போல இருக்கிறது. மதியம் 12.30 மணிக்கு பெரியகுப்பம் என்ற இடத்தில் அரை மணி நேரம் ஓய்வு. புறப்பட்ட பத்தாவது நிமிடத்தில், கோவையில் இருந்து வந்திருந்த சம்பத் ஏடிவி வீலில் பிரச்னை. மெக்கானிக் அதை சில நிமிடங்களில் சரிசெய்ய, மதியம் மூன்று மணிக்கு ஆலம்பரை கோட்டைக்கு ஆரவாரமாக வந்து சேர்ந்தோம்.

அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பிவிட்டு, மதிய உணவு சாப்பிட்டுப் புறப்படும்போது, ''சாப்பிட்டுத் தெம்பாகிட்டோம். ஒரு ரேஸ் போலாமே'' என்றார் ஒருவர். உடனே உற்சாகமானது மொத்தக் கூட்டமும்.

பீச் டூர்!

''வெற்றிவேல், வீரவேல்...'' என உற்சாக முழக்கமிட்டவாறு அணிவகுக்க... போர்க்களம் போல புழுதிக் கனல் அடித்தது. 500 மீட்டர் தூரம் என இலக்கு நிர்ணயித்து, 'ரெடி... ஸ்டார்ட்’ சொன்னதும் ஏடிவி-கள் அத்தனையும் சீறிப் பாய்ந்தன. 'வெற்றி தோல்விகள் மேட்டரே இல்லை. அனுபவம்தான் முக்கியம்’ என்பதை உணர்ந்தவர்கள்தான் அனைவரும் என்பதால், போட்டியை ஆரம்பித்த வேகத்திலேயே முடித்துக்கொண்டு, மாலை 4 மணியளவில் மரக்காணம் சேர்ந்தோம்.

அங்கு இருந்த சறுக்கு மணலில் ஏடிவி ஏற முடியாமல் திண‌ற... பிறகு, அதுவே ஒரு விளையாட்டாக மாறி, பலமுறை ஏற்றி இறக்கி விளையாடினர். பின்பு, புதுச்சேரிக்கு முன்பாக இருக்கும் பீச் ரிஸார்ட்டை அடைந்தபோது, இரவு 7 மணி ஆகிவிட்டது. ஹோட்டல் ரிசப்ஷ‌னில் அனைவரும் சட்டையை உதற... ''எல்லார் உடம்புல இருந்து கொட்டுற மணல்ல இருந்து ஒரு குட்டி ரூமே கட்டலாம்'' என கமென்ட் அடித்தார் 'போலீஸ்’ வேலு.

பீச் டூர்!

மறுநாள் காலை 10 மணிக்கு சென்னையை நோக்கிக் கிளம்பினோம். வழியில் முதலியார்குப்பம் அருகே, ஒரு ஏடிவியில் பெல்ட் அறுந்துவிட்டது. இன்னொரு ஏடிவி இன்ஜினில் கடல் நீர் புகுந்து, நின்றுவிட்டது. மெக்கானிக் அதைச் சரிசெய்யப் போராடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கே கூடிய சிறுவர்கள்,  ''டேய், இது சின்னப் பசங்க விளையாடுற பொம்மை கார் மாதிரி, பெரியவங்க விளையாடுற காருங்கடா...'' என்று கமென்ட் அடித்துவிட்டுச் சென்றனர்.

அங்கிருந்து ஒரு வழியாகக் கிளம்பி மகாபலிபுரம் வழியாக பட்டிப்புலம் ஆஃப் ரோட் டிராக் வந்து சேர்ந்தபோது இருட்டிவிட்டது. உடல் வலித்தாலும், சாகசம் செய்த சந்தோஷத்தில், மனம் உற்சாகத்தின் உச்சத்தில் மிதந்தது.

பீச் டூர்!