Published:Updated:

சிட்டிக்குள் சுட்டி எது?

சிட்டிக்குள் சுட்டி எது?

 ##~##

ஹேட்ச்பேக் காராக இருந்தாலும் சரி, மிட் சைஸ் காராக இருந்தாலும் சரி, பவர்ஃபுல் காராக இருக்க வேண்டும். நகர எல்லைகள் விரிவடைந்துவிட்ட நிலையில், வீடும் அலுவலகமும் கிட்டத்தட்ட 25 கி.மீ தாண்டிப் போய்விட்டன. தினசரி காரில் அலுவலகம் சென்றுவரும்போது, அது அலுப்பை ஏற்படுத்தாத பயணமாக இருக்க வேண்டும்.

 மைலேஜும் அதிகம் கிடைக்க வேண்டும். அலுவலகத்துக்குக் கொண்டு செல்ல ஸ்டைலான காராகவும் இருக்க வேண்டும் என, இன்றைய காலத்துக்கு ஏற்ப தேவைகள் மாறிவிட்டன. அதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட ஃபோக்ஸ்வாகன், தனது திட்டங்கள் அனைத்தையும் இத்தகைய கார்ப்பரேட் வாடிக்கையாளர்களை மனதில்கொண்டு செயல்படுத்தி வருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏற்கெனவே, ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் தரமான கார் எனப் பெயர் பெற்ற போலோவில், அதிக சக்திகொண்ட வென்ட்டோவின் இன்ஜினைப் பொருத்தியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். வென்ட்டோவின் இன்ஜின் என்பதால், பவரும் அதிகம்; மைலேஜும் அதிகம். அதேசமயம், தரத்தில் எந்த காம்ப்ரமைஸும் இல்லை. இந்த டீல், இளம் தலைமுறையை அதிகம் கவர்கிறது.

சிட்டிக்குள் சுட்டி எது?

பவர்ஃபுல் காராக வெளிவந்திருக்கும் போலோ ஜிடி காருக்கும் வென்ட்டோவுக்கும் விலையில், கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய்தான் வித்தியாசம். இரண்டில் எதை வாங்கலாம்? எது, கொடுக்கும் விலைக்கு ஏற்ற தரமான கார்?

ஸ்டைல், டிசைன்!

போலோ - வென்ட்டோ ஆகிய இரு கார்களைப் பார்க்கும்போதே, ஹை-கிளாஸ் கார் என்ற எண்ணம் தோன்றும். கண்களை உறுத்தும் ஜிகினா ஸ்டைல் எதுவும் இல்லாமல், இரண்டுமே மாடர்ன் கார்கள். இரண்டிலும் இருப்பது ஒரே ஹெட்லைட் மற்றும் டெயில்லைட்ஸ் தான். போலோ ஜிடிக்கும், வென்ட்டோவுக்கும் முன் பக்கத்தைப் பொறுத்தவரை, பனி விளக்குகள் மற்றும் அடிப்பக்க கிரில்லில் மட்டுமே வித்தியாசங்கள்.  போலோவின் கிரில்லில் 'ஜிடி’ என்ற எழுத்துகள் இடம் பிடித்திருப்பது கூடுதல் அட்ராக்ஷன். இரண்டு கார்களிலுமே அலாய் வீல் உள்ளன. ஆனால், போலோ ஜிடியில் இருக்கும் அலாய் வீல்கள்தான் செம ஸ்டைல். பின் பக்கத்தைப் பொறுத்தவரை, டிக்கி இருப்பது மட்டுமே போலோவுக்கும் வென்ட்டோவுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

உள்ளே

போலோ ஜிடியில் உள்பக்கம் கறுப்பு மற்றும் பழுப்பு என இரட்டை வண்ணத்தில் மிளிர்கிறது. வென்ட்டோவின் உள்பக்கம் கிளாஸிக் கலரான பீஜ் வண்ணத்தில் கிளாஸாக இருக்கிறது. இரண்டு கார்களுமே ஃபோக்ஸ்வாகன் என்ற பெயருக்கு ஏற்றபடி, தரமான பாகங்களைக் கொண்டிருக்கின்றன. ஸ்விட்ச், லீவர், கன்ட்ரோல்கள் ஆகிய அனைத்துமே மிகத் தரமாக உள்ளன.

சிட்டிக்குள் சுட்டி எது?

உள்பக்கத்தைப் பொறுத்தவரை, வென்ட்டோவில் இருக்கும் டிரைவர் ஆர்ம் ரெஸ்ட், போலோவில் இல்லை. வென்ட்டோவில் ஆர்ம் ரெஸ்ட் இருப்பது, சொகுசான ஓட்டுதல் அனுபவத்துக்குத் துணை நிற்கிறது. மேலும், வென்ட்டோவில் பின் இருக்கைகளில் உட்காருபவர்களின் வசதிக்கு ஏற்ப பின் பக்க ஏ.சி உண்டு. இதனால், முழுமையான கூலிங் அனுபவத்தை வென்ட்டோவில் உணர முடிகிறது.  

டயல்களைப் பொறுத்தவரை, இரண்டு கார்களிலுமே அசரடிக்கும் டயல்கள் இல்லை. இரட்டை டயல்களில் ஒன்றில் டேக்கோ மீட்டரும், மற்றொன்றில் ஸ்பீடோ மட்டும் டிஜிட்டலாக இடம் பெற்றுள்ளன. எந்த கியரில் செல்கிறோம் என்பதோடு, கியர்களை மாற்ற வேண்டும்; குறைக்க வேண்டும் என்பதை, டிரைவருக்குச் சொல்லும் கியர் இண்டிகேட்டரும் இதில் உள்ளன.

சிட்டிக்குள் சுட்டி எது?

ஸ்போர்ட்டியான அலுமினியம் பெடல்களைக் கொண்டிருக்கிறது போலோ ஜிடி. ஆனால், இரண்டு கார்களிலுமே கிளட்ச் மிதிக்கத் தேவையில்லாத நேரங்களில் கால் வைத்துக்கொள்ள வசதியாக, 'டெட் பெடல்’ இல்லை. ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல், கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, பார்க்கிங் சென்ஸார், சீட் உயர்த்தும் அட்ஜஸ்ட், ப்ளூ-டூத், யூஎஸ்பி போர்ட், இரண்டு காற்றுப் பைகள், ஏபிஎஸ் ஆகியவை இரண்டு கார்களிலுமே உள்ளன.

இட வசதி

ஹேட்ச்பேக், மிட் சைஸ் என போலோவுக்கும் வென்ட்டோவுக்கும் தோற்றத்தில் வித்தியாசம் இருந்தால், உள்ளே இட வசதியைப் பொறுத்தவரை பெரிய வித்தியாசம் இல்லை. போலோவைவிட வென்ட்டோவின் வீல்பேஸ் அதிகம். அதனால், கால்களை நீட்டி மடக்கி உட்கார அதிக இடம் இருக்கிறது. போலோவின் டிரைவர் சீட்டில், தொடைக்கான சப்போர்ட் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம். ஆனால், போலோவிலும் சரி; வென்ட்டோவிலும் சரி; பின் இருக்கையில் மூன்று பேர் வசதியாக உட்கார முடியாது. இரண்டு இருக்கைகளுக்கு நடுவே நீண்டிருக்கும் டனல்தான் இட வசதியைக் குறைத்துவிடுகிறது. டிக்கி இருப்பதால், வென்ட்டோவில் பொருட்கள்வைக்க அதிக இடம் இருக்கிறது. ஹேட்ச்பேக் கார்தான் என்றாலும், போலோவின் டிக்கியிலும் பொருட்கள் வைக்கப் போதுமான இடம் உண்டு.

இன்ஜின்

இரண்டிலுமே இருப்பது ஒரே இன்ஜின்தான். 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு டைரக்ட் இன்ஜக்ஷன் டீசல் இன்ஜின்தான் போலோ ஜிடி மற்றும் வென்ட்டோவில் இடம் பிடித்திருக்கிறது. இது, அதிகபட்சம் 4400 ஆர்பிஎம்-ல் 104bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. அதிகபட்சமாக 2500 ஆர்பிஎம்-ல் 25.5 kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இவ்வளவு அதிகமான டார்க், போலோ செக்மென்ட்டில் உள்ள எந்த சின்ன ஹேட்ச்பேக் காரிலும் இல்லை என்பது, போலோவின் மிகப் பெரிய ப்ளஸ்.

சிட்டிக்குள் சுட்டி எது?

பவர் வெளிப்பாடு இரண்டிலுமே ஒரே சீராக உள்ளது. இதனால், ஆரம்பத்தில் பவர் குறைபாடு; மிட்ரேஞ்சில் பவர்; மீண்டும் அதிக வேகத்தில் பவர் இல்லை என எந்தக் குறைகளும் இல்லை. ஆக்ஸிலரேட்டரை மிதிக்க மிதிக்க... அதிக பவரால் சீறிப் பறக்கிறது போலோ ஜிடி. இரண்டாவது அல்லது மூன்றாவது கியரிலேயே நகருக்குள் முழுவதுமாக ஓட்ட முடியும். மேலும், டார்க் அதிகமாக இருப்பதால், 20 கி.மீ வேகத்தில் மூன்றாவது கியரில் செல்ல முடியும். அதேபோல், 80 - 90 கி.மீ வேகத்திலும் மூன்றாவது கியரில் செல்ல முடியும்.

சின்ன கார், எடை குறைவு என்பதால், பெர்ஃபாமென்ஸில் வென்ட்டோவைவிட வேகமாக இருக்கிறது போலோ ஜிடி. 0 - 100 கி.மீ வேகத்தை வென்ட்டோ 11.3 விநாடிகளில் கடக்க, இதே வேகத்தை 10.51 விநாடிகளில் கடந்துவிடுகிறது போலோ ஜிடி.  போலோவில் மட்டும் கிளட்ச் லீவர் மற்றும் கியர் லீவரில் அதிர்வுகள் அதிகமாகத் தெரிகிறது.

சிட்டிக்குள் சுட்டி எது?

வென்ட்டோவுடன் ஒப்பிடும்போது, காருக்குள்ளே போலோவில் அதிக சத்தம் கேட்கிறது. ஆனால், வெளிப்பக்கம் இருந்து கேட்டால் இரண்டு கார்களுக்கும் வித்தியாசம் இல்லை. மினி ஆட்டோ போலச் சத்தம் போடுகிறது ஃபோக்ஸ்வாகனின் டீசல் இன்ஜின். போலோவின் கியர்பாக்ஸைப் பொறுத்தவரை, கியர்கள் அந்தந்த பொசிஷனில் சரியாக ஸ்லாட் ஆகாமல் மிஸ் ஆகிறது. இரண்டிலுமே ஒரே இன்ஜின் இருந்தாலும், இன்ஜின் ரெஸ்பான்ஸ் மற்றும் வேகம் வென்ட்டோவில் அதிகமாக இருக்கிறது.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

இரண்டு கார்களிலுமே சின்னச் சின்ன மேடு பள்ளங்களில் ஏற்றி இறக்கும்போது, காருக்குள் எந்த ஆட்டமும் இல்லை. ஓட்டுதல் அனுபவம் மிகவும் சொகுசாக இருக்கிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 168 மிமீ என்பதால், ஸ்பீடு பிரேக்கரில் பயப்படாமல் காரை ஓட்டலாம். ஆனால், அதிக எடை காரணமாக வென்ட்டோவில் சில நேரங்கள் கீழே அடி வாங்குகிறது. இரண்டிலுமே எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்தான். ஆனால், ஃபன்-டு-டிரைவ் ஆக இல்லை. அதேசமயம், இந்த எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் மற்ற கார்களில் இருப்பதைவிட மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதிக வேகத்தில் செல்லும்போது, ஸ்டீயரிங் ஸ்டிஃப் ஆவதால், பயம் இல்லாமல் ஓட்ட முடிகிறது.

மைலேஜ்

இரண்டு கார்களிலுமே ஒரே இன்ஜின்தான். அதனால், மைலேஜில் பெரிய வித்தியாசம் இல்லை. வென்ட்டோ லிட்டருக்கு நகருக்குள் 13.1 கி.மீ, நெடுஞ்சாலையில் 17.3 கி.மீ மைலேஜ் தருகிறது. போலோ ஜிடி கொஞ்சம் அதிகமாக நகருக்குள் 13.5 கி.மீ, நெடுஞ்சாலையில் 17.8 கி.மீ மைலேஜ் தருகிறது!

சிட்டிக்குள் சுட்டி எது?

இரண்டு கார்களிலுமே 'டிரைவ் டு ஃபன்’ என்று சொன்னால், அது நேர்கோட்டுச் சாலை வேகத்திலும் இன்ஜின் ரெஸ்பான்ஸிலும்தான் உள்ளது. 2 லட்ச ரூபாய் அதிகம் கொடுத்தால், டிக்கி மற்றும் கொஞ்சம் அதிக இட வசதிகொண்ட வென்ட்டோ கிடைக்கும். ஆனால், அதிக சக்திகொண்ட ஹேட்ச்பேக் கார்களில், மிகச் சிறப்பான கார் வேண்டும் என்றால், போலோ ஜிடி வாங்கலாம். நகருக்குள் நீண்ட நேரம் பயணம் செய்தாலும் களைப்புத் தெரியாத அளவுக்குப் பவர் அதிகமாக இருப்பதோடு, மைலேஜும் அதிகம். சிட்டி டிராஃபிக்கில் புகுந்து புறப்பட காம்பேக்ட்டாக இருப்பதும் போலோ ஜிடி-யின் பலம். ஆனால், அதற்கு நீங்கள் 9.48 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

சிட்டிக்குள் சுட்டி எது?