Published:Updated:

இடுக்கி வரை முரட்டுப் பயணம்!

இடுக்கி வரை முரட்டுப் பயணம்!

 ##~##

இந்த மாதம் ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்பை முடித்து வீடு வந்துசேர்ந்தபோது, திருப்பூரைச் சேர்ந்த ஜாவித் ரஹ்மான் சொன்னது மீண்டும் நினைவுக்கு வந்தது. ''என்னோட ஃபார்ச்சூனர் ஆட்டோமேட்டிக்கை நீங்க ஒரு தடவை ஓட்டினா, ஆட்டோமேட்டிக்கா உங்க மனம் ஃபார்ச்சூனருக்கு அடிமையாகிடும்!''

 இனி, ஓவர் டு கிரேட் எஸ்கேப்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 மும்பையில் இருந்து வந்து திருப்பூரில் செட்டிலாகி, ஹீரா ஃபேஷன்ஸ் எனும் பெயரில் டி-ஷர்ட் மற்றும் கார்மென்ட் ஃபேக்டரி நடத்தி வரும் ஜாவித்துக்கு... தனது திருமண நாளும் ஃபார்ச்சூனரை டெலிவரி எடுத்த நாளும் ஒரே நாள் என்பதில், பரம மகிழ்ச்சி. ''முரட்டுத்தனமா, கம்பீரமா இருந்தாலும் ஃபார்ச்சூனர் எனக்குக் குழந்தை மாதிரி!'' என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்.

இடுக்கி வரை முரட்டுப் பயணம்!

ஃபார்ச்சூனரை வைத்துக்கொண்டு, ஹைவேஸில் பறப்பது த்ரில்தான். இருந்தாலும், கரடுமுரடாகப் பயணிப்பதுதானே ஃபார்ச்சூனருக்கு மரியாதை. 'எங்கே போகலாம்’ என்று யோசித்தபோது, தடாலென ரூட் மேப் செட் செய்தார் ஜாவித். திருப்பூர், பல்லடம், உடுமலைப்பேட்டை, சின்னாறு, மறையூர், மூணாறு, இடுக்கி என ஸ்கெட்ச் போட்டார். ''தூரம் கம்மிதானுங்க. ஆனா, அட்வென்ச்சர் அதிகமா இருக்குமுங்க!'' என்று பயணத்தைத் தொடங்கி வைத்தார் நம்முடன் வந்த ஜாவித்தின் நண்பர் பிரபு. இவரும் திருப்பூரில் டெக்ஸ்டைல் ஓனர்.

இடுக்கி வரை முரட்டுப் பயணம்!

ஆட்டோமேட்டிக் கார் என்பதால் கிளட்ச், 'மலை ஏறும்போது ஆஃப் ஆயிடுமோ’ என்ற பயம், கியரை அடிக்கடி மாற்ற வேண்டிய தொந்தரவுகள் என்று எதுவும் இல்லை. ஏகப்பட்ட வசதிகள் கொண்ட ஃபார்ச்சூனரில், ஆன் செய்வதற்கு பட்டன் சிஸ்டம் எதுவும் இல்லை. பழைய முறையில் சாவியைத் திருகி ஆன் செய்தபோது, செல்லமாக உறுமியது ஃபார்ச்சூனர். 'பார்க்கிங் மோடி’ல் இருந்து கியர் லீவரை 'டிரைவ் மோடு’க்குத் தள்ளினால், சீற ஆரம்பிக்கிறது ஃபார்ச்சூனரின் 3.0 டீசல் இன்ஜின். ஏற்கெனவே இருந்த 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்தான், இப்போது 5 ஸ்பீடாக மாறியிருக்கிறது. நம் புகைப்பட நிபுணரையும் சேர்த்து, நான்கு பேர் கொண்ட டீமை அழகாக டீல் செய்தது 7 சீட்டர் ஃபார்ச்சூனர்.

திருப்பூரில் இருந்து இடுக்கி வரையிலுமான நமது பயணத்தில், ஃபார்ச்சூனரின் டாப் ஸ்பீடை சோதனை செய்ய நமக்கு வாய்ப்புக் கிடைக்காமலே போனது. உடுமலைப்பேட்டை கடந்து, அமராவதி அணைக்கு ஃபார்ச்சூனரைத் திருப்பினோம். 25 கி.மீ. தூரத்தை, கிட்டத்தட்ட 15 நிமிடங்களில் கடந்திருந்தோம். 168 தீலீஜீ என்பதால், கன்னாபின்னாவென பவர் பீறிடுகிறது. ஸ்பீடோ மீட்டரைப் பார்க்காதவரை, நாம் சுமார் 120 கி.மீ. வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர முடியவில்லை.

இடுக்கி வரை முரட்டுப் பயணம்!

இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயப் பகுதிக்குக் கீழ் வரும் அமராவதி அணை, சுற்றுலாவாசிகளை நிச்சயம் கவரும். 33 மீட்டர் ஆழம் கொண்ட செங்குத்தான அமராவதி அணை, 1957-ல் கட்டப்பட்டதாம். இது, நீர்ப் பாசனத்திற்கும் மின்சாரம் எடுப்பதற்கும் பயன்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் அமராவதி அணை உதவுகிறது. இங்குள்ள பூங்காவின் படிகளின் உச்சியில் ஏறினால், பழனி மலையையும், ஆனைமலையையும் ஒரே நேரத்தில் கண்டுகளிக்கலாம்.  டெரரான விஷயம் என்னவென்றால், 'மக்கர் க்ரொகொடைல்ஸ்’ என்னும் பரந்த மூக்கு கொண்ட முதலைகள், அமராவதி அணையின் பெரும்பான்மையான ஏரியாவாசிகளாம்.

அமராவதி அணைக்குப் போகும் வழியில், 'சய்னிக் ஸ்கூல்’ எனும் ராணுவப் பள்ளி பிரபலம். ஹோட்டல்களில் 'உயர்தர சைவம்’ மாதிரி, பள்ளிகளிலேயே உயர்தர பொதுக்கல்வி இங்கு கற்றுத் தரப்படுகிறது. ராணுவம் சம்பந்தமான பாடங்களுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். துப்பாக்கி சுடுதல், பாரா கிளைடிங், மரம் ஏறுதல் போன்ற விஷயங்களும் பாடத் திட்டத்தில் உண்டு. 'ழிஞிகி’ எனும் 'நேஷனல் டிஃபென்ஸ் அக்காடமி’யில் சேர்ந்து ராணுவ வேலை பயில விரும்புபவர்களுக்கு இந்தப் பள்ளி ஒரு நல்ல சாய்ஸ். இந்திய ராணுவத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் பலர் இந்தப் பள்ளியில் பயின்றவர்கள்தானாம்.

இடுக்கி வரை முரட்டுப் பயணம்!

பசி வயிற்றைக் கிள்ளியது. ஜாவித், தனது வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த திருப்பூர் ஃபேமஸான 'அரிசிம்பருப்பு’ என்ற உணவுதான் லஞ்ச். ''என்னதான் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிட்டாலும், அம்மா-மனைவி கையால செஞ்ச சமையலுக்கு ஈடாகுமா..?'' என்று நெகிழ்ந்தார் ஜாவித்.

செக் போஸ்ட் கடந்து மறையூர் செல்லும் வழியில் ஆள் நடமாட்டமே இல்லை. ''இதுவே, மாலை நேரம் என்றால், கவனமாகப் பயணிக்க வேண்டும்'' என்றார் ஒரு காட்டிலாகா அதிகாரி. ''மாலை நேரம் யானைகள் கூட்டம் கூட்டமாகப் பாதையில் குறுக்கிடும் ஏரியா . எனவே, இந்தப் பகுதியில் காரை விட்டு இறங்கினால், 5,000 ரூபாய் அபராதம்'' என்றும் எச்சரித்து அனுப்பினார்.

மறையூர் செல்லும் வழியில் இருக்கிறது சின்னாறு வனவிலங்குச் சரணாலயம். சின்னாறில் இருந்து மூணாறு செல்லும் பாதை வரையிலும், குட்டிக் குட்டியாக ஏராளமான அருவிகள் அழகு சேர்க்கின்றன. ஆபத்தில்லாத, மிகப் பெரிய அணில்கள், சின்னாறு காட்டில் அதிகமாக வசிக்கின்றன. சின்னாறில் இருந்து நீளும் சந்தன மரக் காடு, செம ரம்மியம். இதுதான், கூட்டம் கூட்டமாக தண்ணீர் அருந்த வரும் யானைகளையும், காட்டு எருதுகளையும் பார்ப்பதற்குரிய கச்சிதமான இடம் என்றார்கள். யானைகளும், காட்டு எருதுகளும், புள்ளி மான்களும், மலை அணில்களும் செல்லும் வழியில் ஹாய் சொல்லின.

இடுக்கி வரை முரட்டுப் பயணம்!

யானைகள் நீர் அருந்தும் அழகைப் பார்த்து ரசித்தோம். '''ஊருக்குள் நுழைந்து யானைகள் அட்டகாசம்’ என்று அடிக்கடி  செய்திகள் வருவதைப் பார்க்கிறோம். யானைகளுக்கு ஏது வீடு? அது வீட்டைத் தொலைக்கவில்லை; நாம்தான் அதன் காட்டைத் தொலைத்துவிட்டோம்!'' என்று டச்சிங்காகப் பேசினார் பிரபு.

கேரள சுற்றுலாத்தலங்களில் மறையூர் முக்கியமான ஊர். இங்குள்ள பழங்குடிகளில் சிலர் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் போர்த் தளபதிகளாகவும், வீரர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்கிறது வரலாறு. மலையாளத்தில் 'மற’ என்றால் மறைந்திருத்தல், 'ஊர்’ என்றால் தமிழில் நிலப்பகுதி. இரண்டும் சேர்த்து மறையூர் என்னும் பெயர்க் காரணம் வந்ததாகச் சொல்கிறார்கள்.

இந்தப் பகுதி மக்கள் தங்களுக்குள்ளாக ஐந்து கிராமங்களை உருவாக்கிக் கொண்டார்கள். காந்தளூர், கீழந்தூர், கறையூர், மறையூர், கொட்டக்குடி. இந்த ஐந்து கிராமங்களும் சேர்ந்துதான் 'ஐந்து நாடு’ என்றும் அழைக்கப்படுகிறது. இன்றும் பழங்குடியினர் இங்கு வசிப்பதாகவும் சொன்னார்கள்.

இடுக்கி வரை முரட்டுப் பயணம்!

மறையூரில் இருந்து கடுமையான ஹேர்பின் வளைவுகள் ஆரம்பமாகின்றன. ஆட்டோமேட்டிக் என்பதால், ஃபார்ச்சூனரில் டர்போ லேக் பிரச்னை துளியூண்டுகூட இல்லை. சிரமப்படாமல் மலை ஏறினோம். மேலும், எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங், அத்தனை கடுமையான வளைவுகளிலும் காரைத் திருப்புவதற்கு உற்சாகமாகக் கைகொடுத்தது. கிட்டத்தட்ட 18 வளைவுகளை அநாயாசமாகக் கடந்து, பாதி இருளில் மூணாறு வந்தடைந்தோம். கிளைமேட் கன்ட்ரோல், வெளியே டெம்ப்ரேச்சர் 13 என்று காட்டியது. மூணாறுக்குச் செல்பவர்கள், ஜெர்க்கின் இல்லாமல் செல்ல வேண்டாம். மூணாறு நுழைவு வாயிலிலேயே கைடுகள் நம்மைச் சுற்றி வளைத்துவிடுகிறார்கள். கைடுகளைத் தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

இடுக்கி வரை முரட்டுப் பயணம்!

இவர்கள் கார்களுக்கு ஏற்றபடி காட்டேஜ் பிடித்துக் கொடுக்கிறார்கள். மாருதி, ஹூண்டாய் என்றால் மிடில் கிளாஸ் காட்டேஜ், செடான் அல்லது எஸ்யூவி கார்கள் என்றால் அப்பர் கிளாஸ் காட்டேஜ், பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் போன்ற கார்கள் என்றால் அல்டிமேட் ஹை கிளாஸ் காட்டேஜ் என்று கச்சிதமாக வகை பிரித்து வைத்திருக்கிறார்கள். இதில் ஆச்சரியம், நாம் பார்த்த பல டூரிஸ்ட் கைடுகள், கார்களின் சிசி முதல் டாப் ஸ்பீடு வரை கரெக்ட்டாகச் சொல்லி மிரளவைத்தார்கள். மூணாறில் மூலைக்கு மூலை காட்டேஜ்கள் இருந்தாலும், புக் செய்துவிட்டுப் போவதே நல்லது.

இரவு மலையோர காட்டேஜ்களில் தங்குவது அலாதி சுகம். ஏசி இல்லாத ரூமில் சில்லென்று உறங்கிவிட்டு, காலை உணவை முடித்து, இடுக்கியை நோக்கி ஃபார்ச்சூனரின் ஸ்டீயரிங்கைத் திருப்பினோம். காலை உணவின்போது, அசைவ விரும்பிகளுக்கு ஒரு சின்ன டிப்ஸ் சொன்னார் நம்மூரில் இருந்து மூணாறில் செட்டிலான ஒரு ஹோட்டல் நண்பர். ''மூணாறு அசைவ ஹோட்டல்களில் பெரும்பான்மையாக கடல் மீன் உணவுகளைத் தவிர்த்தல் மிக்க நலம். ஒரு மீடியம் சைஸ் வஞ்சிரம் அல்லது நெய் மீனின் விலை, ஃபார்ச்சூனரின் பவரைவிட கன்னாபின்னாவென்று அதிகம். கடல் பகுதியிலிருந்து மூணாறு விலகி இருப்பதால், மீன் உணவுகள் தொலைதூர ஊர்களில் இருந்துதான் இறக்குமதி ஆகிறது என்பதால், கவனமாக இருக்க வேண்டும்'' என்றார் அந்த நண்பர்.

மூணாறு பகுதிக்கு அழகு சேர்ப்பதே டீ எஸ்டேட்கள்தான். பச்சைப் பசேலென தேயிலைச் செடிகளுக்கு நடுவே ஃபார்ச்சூனரில் பயணிக்கும் சுகத்தை வார்த்தைகளால் வழங்க முடியாது. கண்ணன் தேவன் டீ எஸ்டேட் இங்கு பிரபலம். ஜிபிஎஸ் மேப்பில் மூணாறில் இருந்து இடுக்கி 38 கி.மீ என்று காட்டியது. நாம் நினைத்ததுபோலவே இடுக்கி செல்லும் பாதை, ஃபார்ச்சூனருக்கு ஏற்றபடி கரடுமுரடாகவே இருந்தது. இந்த நேரத்தில் ஃபார்ச்சூனரின் டயர்கள் பற்றிச் சொல்லியாக வேண்டும். டன்லப்பின் 265/65 ஸி17 ரேடியல் டயர்கள் செம கிரிப். ஒவ்வொரு மலைத் திருப்பத்தின்போதும் இதை உணர முடிந்தது. இதுவே 4 வீல் டிரைவ் என்றால், க்ஷிஷிசி எனும் 'வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்’ எனும் வசதி இருக்கிறது. இது, நாம் எவ்வளவு வேகமாகச் சென்று காரைத் திருப்பினாலும், 'வீல் சிலிப்’ ஏற்படாமல், ஸ்டெபிளிட்டி குறையாமல் பார்த்துக்கொள்ளும்.

இடுக்கி வரை முரட்டுப் பயணம்!

செல்லும் வழியில், மலையில் விளைந்த தூய்மையான கேரட்களையும், மீன் குழம்பையும், ஆப்பத்தையும் ஒரு பிடி பிடித்தோம். 38 கி.மீ-ஐ ஒருவழியாக இரண்டரை மணி நேரமாகப் பயணித்து முடித்தபோது, இடுக்கி வந்திருந்தது. அமைதியாக, தனியாக, ஆனால் பிரம்மாண்டமாக நின்றிருந்தது இடுக்கி அணை. குறவன் மலை, குறத்தி மலை என்னும் இரண்டு மலைகளுக்கும் நடுவே, 555 அடி உயரத்தில் மிக கம்பீரமாகக் கட்டியிருக்கிறார்கள்.

இடுக்கிக்குள் நுழைவது ரொம்ப சிரமமான காரியம். அரசியல், சினிமா என்று எந்த வி.ஐ.பி.யாக இருந்தாலும், முறையான அனுமதிக்குப் பிறகுதான் அனுமதி கிடைக்குமாம். மற்ற நேரங்களில் இது மூடியே இருக்கிறது. ஓணம் பண்டிகைக்கு மட்டுமே இடுக்கியின் மிகப் பெரிய கதவைத் திறப்பார்களாம். ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய அணையான இடுக்கியை அரைகுறையாக ரசித்துவிட்டு, அரை மனதோடு கிளம்பினோம்.

மலை ஏறும்போது, மதியம் சாப்பிட்ட மீன் குழம்பும், ஆப்பத்தின் சுவையும் நாக்கில் அப்படியே இருந்தது. மெதுவாக, பாதுகாப்பாக நம்மைச் சுமந்தபடி - தேவலோகத்தின் வெள்ளை யானைபோல ஃபார்ச்சூனர் மலைச் சாலைகளில் இறங்கிக் கொண்டிருந்தது. ஸ்டீரியோவில் இருந்துவந்த இளையராஜா பாடல்கள், பயணத்தை இன்னும் இனிமையாக்கின.

 வாசகர்களே!

நீங்களும் இதுபோல் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி (044 - 66802926) தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!

இடுக்கி வரை முரட்டுப் பயணம்!