Published:Updated:

ரீடர்ஸ் ஹெல்ப்லைன்

சத்தம் இல்லாத ஃபோர்ஸ் ஒன் கேட்டேன்!

 ##~##

''காதலிச்சு ஏமாந்தவங்களைவிட கார் வாங்கி ஏமாந்தவங்கதான் அதிகம்! நானும் இப்போ அந்த லிஸ்ட்டைச் சேர்ந்துட்டேன் சார்!'' என்று நொந்துபோன நிலையில் நம் அலுவலகம் வந்திருந்தார் ரோலண்ட் வெஸ்லி.

 நாகப்பட்டினத்தில் வசிக்கும் வெஸ்லி, புதிதாக தான் வாங்கிய ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி காரைப் பற்றியும், சர்வீஸ் அலட்சியங்கள் பற்றியும் பக்கம் பக்கமாகக் குறைகளை வாசிக்க ஆரம்பித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''எஸ்யூவி-ன்னா எனக்கு உயிர். 15 லட்ச ரூபாய்க்குள்ள ஒரு எஸ்யூவி வாங்கலாம்னு திட்டம். என்னுடைய சாய்ஸ் - டொயோட்டா இனோவா, மஹிந்திரா பொலேரோ. 'எல்லாரும் இனோவா வெச்சிருக்காங்க... ஃபோர்ஸ் ஒன்-னு ஒரு கார் வந்திருக்கு. பார்க்கிறதுக்கு சும்மா கும்முன்னு இருக்கு. பென்ஸோட இன்ஜின்... வித்தியாசமா டிரை பண்ணு’னு ஃப்ரெண்ட்ஸ் ஐடியா கொடுத்தாங்க. அம்பத்தூர்ல இருக்கிற எம்பிசி மோட்டார்ஸ் போனேன். அவங்களும் என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னதையேதான் சொன்னாங்க. ஜெர்மன் டெக்னாலஜி, பென்ஸோட 2.2 லிட்டர் டீசல் இன்ஜின், பின் பக்க சீட்டில் உட்கார்றதுக்கு நல்ல ஸ்பேஸ், நீளமான வீல்பேஸ், உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ்னு நானே மிரண்டுட்டேன். பார்க்கிறதுக்கு பிரம்மாண்டமா இருக்கு; இவ்வளவு வசதிகள் இருக்கு; விலையும் குறைவா இருக்கு.. அப்புறம் ஏன் மக்கள் இதை செலெக்ட் பண்ண மாட்றாங்கன்னு எனக்கு நானே கேட்டுக்கிட்டேன்! இப்போ உணர்ந்துட்டேன்... மக்கள் ஏன் இந்தப் பக்கம் வர மாட்டேங்கிறாங்கன்னு!'' என்றவர், மேலும் தொடர்ந்தார்.

ரீடர்ஸ் ஹெல்ப்லைன்
ரீடர்ஸ் ஹெல்ப்லைன்

''எனக்கு, வீட்டுக்கே வந்து டெஸ்ட் டிரைவ் பண்ண கார் கொடுத்தாங்க. ரெண்டு தடவை ஃபோர்ஸ் ஒன் காரை டெஸ்ட் டிரைவ் பண்ணிப் பார்த்தேன். பிரமாதமா இருந்துச்சு. உடனடியா 14.25 லட்சத்துக்கு புக் பண்ணினேன். இரண்டு வாரத்தில் கார் வீட்டுக்கு வந்தது! டெலிவரி எடுத்தப்பவே முதல் சிக்கல்... முன் பக்க ஏசி வென்ட் சரியா நிற்கவே இல்லை. 'தொளதொள’ன்னு ஆட ஆரம்பிச்சது. முன் பக்கம் மட்டும்தான் அப்படி இருக்குன்னு நினைச்சேன். எல்லா ஏசி வென்ட்டுமே அப்படி லூஸாத்தான் இருந்துச்சு. அப்புறம் மேலே சின்னதா ஒரு க்ளோவ் பாக்ஸ் இருக்குமே... அது கீழே விழுந்த பொசிஷன்லேயே இருந்துச்சு. ஷோ ரூம் ஆட்கள்கிட்ட கேட்டப்போ, 'ஃபர்ஸ்ட் சர்வீஸ்ல சரிபண்ணிடலாம் சார்’னு சொன்னாங்க. அதெல்லாம் பிரச்னை இல்லை. போகப் போக, கியர் பாக்ஸ் ரொம்ப டைட் ஆக ஆரம்பிச்சது. கியர் போடவே ரொம்ப சிரமமா இருந்துச்சு. ரெண்டாவது கியரிலிருந்து மூணாவது போறப்போ, 'கடங் கடங்’னு ஒரு சத்தம் வர ஆரம்பிச்சதும் பயந்து போய் சர்வீஸுக்கு போன் பண்ணினேன். 'ரோப் பிராப்ளமா இருக்கும்... அது ஒண்ணும் பிரச்னை இல்லை. சர்வீஸ்ல பார்த்துக்கலாம்’னு சொன்னாங்க. இது பரவாயில்லை. சில நேரங்கள்ல கியர்பாக்ஸ் அதுவாவே வேலை செய்ய ஆரம்பிச்சிடுது. அதாவது, மூணாவது கியர்ல இருக்கிறப்போ, பள்ளத்துல இறக்கி ஏத்துனா அதுவாகவே நியூட்ரலுக்கு ஷிஃப்ட் ஆகிடுது. எப்படா ஃபர்ஸ்ட் சர்வீஸ் வரும்னு காத்திருந்து கொண்டுபோய்விட்டேன். எல்லா பிரச்னைகளையும் நோட் பண்ணிக்கிட்டாங்க. சர்வீஸ் முடிஞ்சு வீட்டுக்கு எடுத்துட்டுப் போனப்புறமும் அப்படியேதான் இருந்துச்சு. 'கியர்பாக்ஸ் சரி பண்ணலையா?’னு கேட்டப்போ, 'எல்லாமே பக்கவா இருக்கு சார்.. ஒண்ணுமே பிரச்னை இல்லை’னு சொன்னாங்க.

ரீடர்ஸ் ஹெல்ப்லைன்

ஒரு தடவை ஊட்டிக்கு ஃபேமிலியோட ட்ரிப் போயிருந்தேன். ஹில்ஸ் ஏரியாவில் பெரும்பாலும் எல்லா கண்ணாடிகளையும் இறக்கிவிட்டு டிரைவ் பண்றது வழக்கம். அப்போ, மழை பெய்ஞ்சதால, கண்ணாடியெல்லாம் ஏத்திவிட முடிவு பண்ணி, பவர் விண்டோஸ் சுவிட்ச்சை ஆன் பண்ணினேன். அப்படியே ஸ்ட்ரக் ஆகி நின்னுடுச்சு. எவ்வளவோ பாடுபட்டும் கடைசி வரை கண்ணாடியை மூடவே முடியலை. காருக்குள்ளே மழைத் தண்ணியோடதான் பயணம் செஞ்சோம். அப்புறம் செகண்ட் சர்வீஸ்ல இதைச் சரி பண்ணினது எனக்குக் கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு. இதே மாதிரிதான் லேசான மலை இறக்கத்துல, ஒருநாள் ஹேண்ட் பிரேக் மட்டும் போட்டு பார்க் பண்ணிட்டுப் போயிட்டேன். அக்கம் பக்கத்துல உள்ளவங்கதான், 'சார், அது உங்க காரா? பின்னாலேயே போகுது’ன்னு சொன்னாங்க, நாலு பேர் உதவியோட காரை திரும்பவும் கியர் போட்டு பார்க் பண்ணினேன். இப்பவும் என் ஹேண்ட் பிரேக் சுமாராதான் இருக்கு.

ரீடர்ஸ் ஹெல்ப்லைன்

பெரிய பள்ளங்களில் ஏற்றி இறக்கும்போது, முன் பக்க இடது பக்க சேஸியில் இருந்து 'டம் டமார்’னு சத்தம் வர்றது ரொம்பக் கொடூரமா இருக்கு. 100 கி.மீ ஸ்பீடுல போனா, கார் ஜெர்க் ஆகுது. அதாவது, டப்னு ஏதோ அடைக்கிற மாதிரி சவுண்டு வந்துச்சு. செகண்ட் சர்வீஸ் அப்போ மறுபடியும் எல்லாத்தையும் சொன்னேன். பவர் விண்டோஸ் தவிர்த்து எதையுமே அவங்க இன்னும் சரிபண்ணலை. 'நான் நாகப்பட்டினத்தில் இருக்கிறதால, என்னால அடிக்கடி சென்னை சர்வீஸ் சென்டருக்கு வர முடியாது. தயவுசெஞ்சு கொஞ்சம் எல்லாத்தையும் நல்லாப் பண்ணிக் கொடுங்க’னு சொன்னேன். ஒவ்வொரு தடவையும் சர்வீஸ் சென்டர் போறப்போ, என்னை மாதிரியே எக்கச்சக்கமான பேர் கத்திட்டுப் போறது அங்க வழக்கமா இருந்துச்சு. இந்தக் கூட்டத்துல நம்மளை எங்க கண்டுக்கப் போறாங்கனு நினைச்சு, மூணாவது தடவை நானே புனேவில் இருக்கிற சர்வீஸ் ஹெட் ஆபீஸுக்கு மெயில் அனுப்பிட்டேன். என்னோட காட்டமான மெயில் பார்த்துட்டு, பெரிய அதிகாரிங்களே இந்த தடவை வந்து பார்த்தாங்க. ஆனாலும், பெருசா ஒண்ணும் எனக்குத் திருப்தி இல்லை. இந்தத் தலைவலி போதாதுன்னு இப்போ புதுசா ஒரு பிரச்னை... என்னன்னா, டீசல் டேங்க்கோட வாய் ரொம்பச் சின்னதா இருக்கிறதால, டீசல் போடுறப்போ, ஓவர்ஃப்ளோ ஆகுது. 500 ரூபாய்க்கு டீசல் போடணும்னாக்கூட, கிட்டத்தட்ட ஏழு நிமிஷம் ஆகுது. டீசல் போட பின்னால வெயிட் பண்றவங்க திட்ட ஆரம்பிச்சுடுறாங்க. இப்போதைக்கு என் காரில் இன்ஜினும், இட வசதியும்தான் ஒரே ஆறுதல்.

இன்னொரு முக்கியமான விஷயம் - கார் வாங்கின நாளிலிருந்து இப்போது வரைக்கும் என் கார்ல நான் ஆடியோ சிஸ்டம் போட்டுக் கேட்டதே இல்லை. கொள்கைனு நினைச்சுடாதீங்க... அட அதுவும் வொர்க் ஆகலை சார். இது எல்லாத்தையும் திரும்பவும் சர்வீஸ் சென்டர்ல பட்டியல் போட்டேன். மேனேஜர் என்கிட்ட, 'சார், இங்க சர்வீஸ் பெர்சன்ஸ் எல்லாரும் புது ஆளுங்க.. அதான் உங்களுக்கு டிலே ஆகுதுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க’னு சொல்றாரு. இப்போ வரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிட்டுத்தான் இருக்கேன். மாசம் 24,500 ரூபாய் தவணை கட்டறேன் சார். ஆனா, சந்தோஷமா இல்லை!'' என்று ரொம்பவும் மூட்-அவுட் ஆகச் சொன்னார் வெஸ்லி.

ரீடர்ஸ் ஹெல்ப்லைன்

நாம் அவர் சொல்வது உண்மைதானா என்றறிய, அவருடைய ஃபோர்ஸ் ஒன் காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்தோம். டிரைவிங் பொசிஷன் விசாலமாக, வசதியாக இருந்தது. வெஸ்லி சொன்னதுபோல், கியரைப் போடவே ரொம்ப சிரமப்பட வேண்டியிருந்தது. சின்னப் பள்ளங்களில் இறக்கும்போது, ஆடியோ சிஸ்டம் தானாகவே பாடுவதும், ஆஃப் ஆவதுமாக இருந்தது. ஸ்பீடு பிரேக்கர்களில் ஏற்றி இறக்கும்போது, இடது பக்க சஸ்பென்ஷனிலிருந்து, 'கடங்’ சத்தம் வருவது உறுதியானது. சில நேரங்களில் இதே சத்தம் கியர் போடும்போது, கியர் பாக்ஸில் இருந்தும் வந்தது. ஏசி வென்ட்டுகள் அதன் போக்குக்குக் கீழே இறங்கி இருந்தன. பனி விளக்குகளுக்கான ஆப்ஷன், அதற்கடுத்த ஹெட்லைட் ஸ்விட்ச்சில் கனெக்ஷன் கொடுக்கப்பட்டிருந்தது. விளக்குகள் ஒளிர வேண்டுமென்றால், நாம் ஸ்விட்ச்சை அழுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஸ்விட்ச்சில் இருந்து கையை எடுத்தால், பனி விளக்குகள் அணைந்து போய்விடுகின்றன. என்னவென்று விசாரித்ததில், 'சர்வீஸ்ல ஆப்ஷனை மாத்திட்டாங்க. இன்னும் சரி பண்ணலை’ என்று சோகமாகச் சொன்னார் வெஸ்லி.

இது பற்றி எம்பிசி ஃபோர்ஸ் ஒன் மோட்டார்ஸ் சர்வீஸ் அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?

 வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்குள் இல்லை!

 வெஸ்லியின் காரில் உள்ள பிரச்னை பற்றி அறிய, ஃபோர்ஸ் ஒன் சர்வீஸின் தமிழக முதன்மை அதிகாரியைத் தொடர்புகொண்டோம்.

''அவர் சொல்வதுபோல், கியர் பாக்ஸில் எந்தப் பிரச்னையும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. ஃபோர்ஸ் ஒன்-க்கு உரிய கியர் செட்டிங் எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்து பிரச்னை என்று பார்த்தால், டேஷ் போர்டிலிருந்து சத்தம் வருவதாகச் சொன்னார்கள் எங்கள் சர்வீஸ் ஊழியர்கள். அதை அடுத்த சர்வீஸில் சரிபார்ப்பதாகவும் சொல்லியிருந்தோம். இது சம்பந்தமாக அவருக்குப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஆனால், எங்கள் தொடர்பு எல்லைக்குள் அவர் அகப்படவே இல்லை. மேலும், அவருக்கு நாங்கள் டெமோ காரைக் கொடுத்து ஓட்டச் சொன்னபோது, எல்லாமே நன்றாக இருப்பதாக அவரே தெரிவித்தார். எங்கள் சர்வீஸில் திருப்தி ஏற்பட்டதாகவும் சொன்னார். வாடிக்கையாளர்களின் சேவைக்காகத்தான் நாங்கள் இருக்கிறோம். அடுத்த சர்வீஸின்போது, நிச்சயம் அவருடைய குறைகள் சரிசெய்யப்படும்!'' என்றார்.

ரீடர்ஸ் ஹெல்ப்லைன்