Published:Updated:

ஹோண்டா ஆக்டிவா -ஐ Vs டிவிஎஸ் ஜுபிட்டர்

ஜூபிட்டர் வருகை.. அசையுமா ஆக்டிவா?

ஸ்கூட்டர் செக்மென்ட் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. காரணம், டிராஃபிக் நெருக்கடிகளில் கியர் லீவரை மாறி மாறி மிதித்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஆன் செய்தோமா, பறந்தோமா என டென்ஷன் இல்லாமல் ஓட்டவே பலரும் விரும்புவதுதான்.

 இப்படி எல்லாம் நடக்கப்போகிறது என்பதை, 10 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்ததால்தான் ஹோண்டா நிறுவனம், இந்த செக்மென்ட்டின் லீடராக உள்ளது. இப்போது டிவிஎஸ் நிறுவனமும் ஸ்கூட்டர் செக்மென்ட்டில் தீவிரமாக இருக்கும் தயாரிப்பாளர்தான். ஆனால், ஜப்பானியத் தயாரிப்பாளர்களுக்குப் போட்டியாக, தரத்திலும் மதிப்பிலும் போட்டி போட முடியாத நிலையில் அது சிக்கித் தவிக்கிறது. அதனால், தீவிர தர முன்னேற்ற நடவடிக்கைகளுக்குப் பின்பு, வெளியிட்டுள்ள அல்டிமேட் வெப்பன் - ஜூபிட்டர். ஸ்கூட்டர் மார்க்கெட்டில் இந்த குருப்(ஜூபிட்டர்) பெயர்ச்சி, என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும்?

ஹோண்டா ஆக்டிவா  -ஐ Vs டிவிஎஸ் ஜுபிட்டர்

டிசைன்

 ##~##

டிவிஎஸ் ஜூபிட்டர், ஹோண்டா ஆக்டிவா-ஐ - இரண்டுமே ஸ்டைலாகத்தான் இருக்கின்றன. 'கொழுக் மொழுக்’ என்று இருக்கும் சாதாரண ஆக்டிவாவை, கொஞ்சமும் ஞாபகப்படுத்தவில்லை ஆக்டிவா-ஐ. சிக்கென்று ஸ்டைலாக இருக்கிறது.

டிவிஎஸ் ஜூபிட்டரில், சீட்டுக்கு அடியில் இருக்கும் பகுதி ஹோண்டா ஆக்டிவாவை நினைவுப்படுத்துகிறது. ஜூபிட்டரின் டிசைனில் பக்குவம் தெரிகிறது. ஆக்டிவா-ஐ-யில் ஸ்பீடோ மீட்டரும் ஃப்யூல் மீட்டரும் அனலாக் முறையில் இருக்கின்றன. ஆனால், ஜூபிட்டரில் இதையும் தாண்டி எக்கனாமி, பவர் மோட் விளக்குகளும் உள்ளன. முக்கியமாக, ஜூபிட்டரில் லோ-ஃப்யூல் இண்டிகேட்டர் இருப்பது பெரிய ப்ளஸ்.

'குவாலிட்டி’ விஷயத்தில் டிவிஎஸ் முன்னேறியிருப்பது, ஜூபிட்டரின் ஹேண்டில்பார் ஸ்விட்ச்களை ஆப்பரேட் செய்யும்போது தெரியும். மேலும், ஜூபிட்டரில் பாஸ் லைட் ஃப்ளாஷரும் உண்டு. ஆக்டிவா-ஐ ஸ்கூட்டரின் பிரேக் லாக் திருப்தியாக இயங்கவில்லை. ஜூபிட்டரின் பிரேக் லாக் எளிதாகவும் சிறப்பாகவும் இயங்குகிறது. அண்டர் சீட் ஸ்டோரேஜ் இடவசதி, இரு ஸ்கூட்டர்களிலுமே நன்றாகவே இருக்கின்றன. ஜூபிட்டரில் ஃப்யூல் டேங்க் மூடி வெளியே இருந்தாலும், உள்ளே இடம் அதிகமாகவில்லை.

ஆக்டிவா-ஐ, ஸ்டீல் வீல் ரிம்கள் கொண்ட ஸ்கூட்டர். ஆனால், ஜூபிட்டரில் ட்ரெண்டுக்கு ஏற்றதுபோல 5-ஸ்போக் பிளாக் அலாய் வீல் இருக்கின்றன. ஸ்டைலிங் விஷயத்தில் ஜூபிட்டர்தான் நன்றாக இருக்கிறது. பில்டு குவாலிட்டியில் இரண்டுமே திருப்திப்படுத்துகின்றன.

ஹோண்டா ஆக்டிவா  -ஐ Vs டிவிஎஸ் ஜுபிட்டர்

இன்ஜின்

ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டரில் இருப்பது, வழக்கமான ஆக்டிவாவில் இருக்கும் அதே 109.2 சிசி 4 ஸ்ட்ரோக், கார்புரேட்டர் கொண்ட ஏர் கூல்டு இன்ஜின்தான். ஹோண்டாவின் லேட்டஸ்ட் HET  தொழில்நுட்பம் இந்த இன்ஜினிலும் இருக்கிறது. இது, அதிகபட்சமாக 7,500 ஆர்பிம்-ல் 8 bhp சக்தியையும் 5,500 ஆர்பிஎம்-ல் 0.9kgmடார்க்கையும் அளிக்கிறது. ஜூபிட்டரில் இருப்பது 109.7 சிசி கொள்ளளவுகொண்ட 4 ஸ்ட்ரோக், கார்புரேட்டர் கொண்ட ஏர் கூல்டு இன்ஜின். இது, அதிகபட்சமாக 7,500 ஆர்பிம்-ல் 8 bhp சக்தியையும் 5,500 ஆர்பிஎம்-ல் 0.81 kgm டார்க்கையும் அளிக்கிறது.

இரண்டுமே ஆட்டோமேட்டிக் சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட ஸ்கூட்டர்கள். ஆக்டிவா-ஐ, 0 - 100 கி.மீ வேகத்தை 8.09 விநாடிகளில் அடைய, ஜூபிட்டர் இதே வேகத்தை 9.9 விநாடிகளில் கடக்கிறது. குறைந்த ஆர்பிஎம்-ல் ஜூபிட்டரில் கூடுதலாக இன்னும் கொஞ்சம் பவர் இருந்தால், சிட்டி டிராஃபிக்கில் ஓட்ட இன்னும் எளிதாக இருக்கும். மைலேஜ் விஷயத்தில் மெல்லிய அளவில் ஜூபிட்டரை முந்திவிட்டது ஆக்டிவா-ஐ. இது, நகரத்தில் லிட்டருக்கு 47 கி.மீ, நெடுஞ்சாலையில் 49.5 கி.மீ மைலேஜ் அளிக்கிறது. டிவிஎஸ் ஜூபிட்டர் நகரத்தில் 43.4 கி.மீ, நெடுஞ்சாலையில் 45.3 கி.மீ மைலேஜ் அளிக்கிறது.

ஹோண்டா ஆக்டிவா  -ஐ Vs டிவிஎஸ் ஜுபிட்டர்

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

டிவிஎஸ் ஜூபிட்டர், ஹோண்டா ஆக்டிவா-ஐ ஆகிய இரண்டுமே, நகரப் பயன்பாட்டுக்கு எனப் பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட ஸ்கூட்டர்கள். இதில், டிவிஎஸ் ஜூபிட்டர் 108 கிலோ எடைகொண்டு இருக்க, ஆக்டிவா-ஐ எடை 103 கிலோதான். இத்தனை ஆண்டுகளாக ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருப்பதால், ஹோண்டா சற்று மிதப்பில் இருந்து விட்டது போலத் தெரிகிறது. அது, இன்னமும் ஸ்கூட்டர்களின் முன் பக்கம் லிங்க்டு-டைப் ஷாக் அப்ஸார்பரையே தருகிறது. பழைய ஆக்டிவாவில்தான் இப்படி என்றால், ஆக்டிவா-ஐ மாடலிலும் அப்படியே.  டிவிஎஸ் நிறுவனம், ஹோண்டா செய்த இந்தத் தவறைச் செய்யாமல் லேட்டாகக் கொண்டுவந்தாலும் லேட்டஸ்ட்டாக, டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனை ஜூபிட்டரின் முன் பக்கம் கொடுத்திருக்கிறது. இரண்டிலுமே பின் பக்கம் சிங்கிள் ஷாக் அப்ஸார்பர்தான்.

இரண்டு ஸ்கூட்டர்களிலுமே, ஓட்டுபவர் நேராக அமர்ந்து செல்லும் வகையில்தான் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வழக்கமான ஆக்டிவாவைவிட ஆக்டிவா-ஐ மாடலில் ஹேண்டில்பார் சற்றுத் தாழ்வாக இருப்பதால், வளைக்கும்போது உயரமான ஓட்டுநர்களின் முட்டியில் இடிக்கும்.

ஹோண்டா ஆக்டிவா  -ஐ Vs டிவிஎஸ் ஜுபிட்டர்

ஆக்டிவா-ஐ எடை குறைவு என்பதால், டிராஃபிக்கில் சற்று ஈஸியாக வளைத்து ஓட்டலாம். ஜூபிட்டரும் டிராஃபிக்கில் ஓட்ட நன்றாக இருக்கிறது. நல்ல சஸ்பென்ஷன் சிஸ்டம் காரணமாக, ஜூபிட்டர்தான் கையாளுமையில் சிறப்பாக உள்ளது. ஆக்டிவா-ஐ இருக்கை நன்றாக உள்ளது. ஜூபிட்டரின் இருக்கை ரொம்பவே அகலம். தேவைக்கும் அதிகமாக சாஃப்ட் குஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ஆக்டிவா-ஐ சஸ்பென்ஷன் அவுட்டேட்டட் என்று சொல்லியிருந்தோம். இப்போது சின்ன 10 இன்ச் வீல்களைச் சேர்த்திருப்பதால், ஓட்டுதல் இன்னும் மோசமாகிவிடுகிறது. ஜூபிட்டரில் சஸ்பென்ஷனும் லேட்டஸ்ட், பெரிய 12 இன்ச் வீல்களையும் கொண்டிருப்பதால், ஓட்டுதல் சிறப்பாக இருக்கிறது. இரண்டு ஸ்கூட்டர்களுமே முன்னும் பின்னும் 130 மிமீ டிரம் பிரேக்குகளைக் கொண்டுள்ளன. ஆனால், ஹோண்டாவில் சிஙிஷி (கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம்) இருப்பதால், பிரேக்கிங் சிறப்பாக இருக்கிறது.

ஹோண்டா ஆக்டிவா  -ஐ Vs டிவிஎஸ் ஜுபிட்டர்

ஹோண்டா தயாரிப்புகளின் பக்கா ப்ளஸ் பாயின்ட்கள் அனைத்துடனும் களத்தில் நிற்கிறது ஆக்டிவா ஐ. எல்லா விஷயங்களிலும் நல்ல பெயர் எடுத்த ஆக்டிவா-ஐ, ஒரு சிட்டி ஸ்கூட்டரின் முக்கிய அம்சமான ஓட்டுதல் தரத்தில் சொதப்பிவிட்டது. டிவிஎஸ் ஜுபிட்டர் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறது. ஆக்டிவா ஐ அளவுக்கு பெர்ஃபாமென்ஸ் இல்லை என்றாலும் ஒரு சிட்டி ஸ்கூட்டருக்கான பெர்ஃபாமென்ஸ், போதுமான அளவுக்கு இதில் இருக்கிறது. இந்த இரு ஸ்கூட்டர்களைப் பொறுத்தவரை, பல விஷயங்களில் இப்போது ஹோண்டாவை முந்திவிட்டது டிவிஎஸ். இரண்டு ஸ்கூட்டர்களுமே விலையில் நெருக்கமாகத்தான் உள்ளன. எனவே, டிவிஎஸ் ஜூபிட்டர்தான் நீங்கள் கொடுக்கும் காசுக்கான ஸ்கூட்டர்!

தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி