Published:Updated:

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to கூர்க்

குடகுமலைக் காட்டில் யெட்டி!

 ##~##

''எல்லாப் படத்துலேயும் ஒரே மாதிரி நடிச்சா - விமல். ஒரு படத்திலேயே பல கெட்-அப்ல நடிச்சா - அது கமல்! என்னோட ஸ்கோடா யெட்டி, கமல் மாதிரி!'' என்று குறும்புத்தனமாக நமது மோட்டார் விகடனுக்கு ட்வீட்டியிருந்தார் கோவையைச் சேர்ந்த சந்தோஷ்.

தனது ஸ்கோடா யெட்டி 4 x 4 - சொகுசு கார், எஸ்யூவி, ஆஃப் ரோடர், சாஃப்ட் ரோடர், காம்பேக்ட் க்ராஸ்ஓவர் கார் எனப் பல பரிமாணங்களில் அசத்துவதைத்தான் இப்படி பஞ்ச் டயலாக் மூலம் நமக்கு உணர்த்தினார் சந்தோஷ். 4 x 4 என்பதால், ஹைவேஸில் பறக்கும்போதும் கரடு முரடான காட்டுப் பகுதிகளிலும், ''தைரியமா ஆக்ஸிலரேட்டரை மிதிங்க!'' என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே வந்தார் சந்தோஷ்.  

கோவையில் டெலிகாம் பிசினஸில் கரை கண்ட சந்தோஷின் கராஜில் - ரேபிட், தார், ஐ10, சுஸ¨கி பேண்டிட் இவற்றுக்கு மத்தியில் வெள்ளை நிற யெட்டி, குழந்தை மாதிரி நின்றிருந்தது. ''நான் சொன்னது உண்மைதானானு டெஸ்ட் பண்ணித்தான் பார்த்துடுங்களேன்'' என்று தனது ஸ்கோடா யெட்டியின் சாவியைத் தந்தார். நமது சிறப்பிதழ் கிரேட் எஸ்கேப்புக்காக, மைசூர் தாண்டி 'கூர்க்’ செல்வதாகத் திட்டமிடப்பட்டது. ''கூர்க்ல காபி நல்லாயிருக்கும்ல?'' என்றபடி யெட்டியின் பின் சீட்டை ஆக்கிரமித்தார் சந்தோஷின் நண்பர் ராஜ்மோகன். இவர் கோவையில் ஒரு ரியல் எஸ்டேட் புள்ளி.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to கூர்க்

இருவரும் 'கார் ஃப்ரீக்ஸ்’ என்பதால், உற்சாகமாகப் பயணம் தயாரானது. ''சோறு இல்லாமக்கூட இருந்திடுவேன். கார் இல்லாம இருக்க மாட்டேன்!'' என்று சிரித்தவரிடம் புன்னகைத்தபடி, யெட்டியை ஸ்டார்ட் செய்தோம். யெட்டியில் அனைத்தும் ஜெர்மன் டெக்னாலஜி என்பதால், எல்லாமே ஸ்மூத். சத்தியமங்கலம், பண்ணாரி, சாம்ராஜ் நகர், மைசூர், அப்புறம் கூர்க் என ஜிபிஎஸ் செட் செய்தோம்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to கூர்க்

'குறை ஒன்றும் இல்லை... மறைமூர்த்தி கண்ணா’ என்பது மாதிரி, யெட்டியின் பெர்ஃபாமென்ஸில் குறை கூறி எழுதுவதற்கு வார்த்தைகள் இல்லை. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸில் இருந்து கிரவுண்ட் கிளியரன்ஸ் வரை எந்தக் குறைகளும் இல்லை. ஆனால், எல்லா கார்களிலும் உள்ளதுபோல, டேஷ்போர்டு டனல் பின்பக்கம் வரை நீண்டு, பின் சீட்டின் நடுவில் வந்து தொந்தரவு கொடுப்பது, யெட்டியிலும் இருக்கிறது. ''யெட்டி வாங்கினால், மெயின்டனன்ஸ் பற்றிக் கவலைப்படக் கூடாது!'' என்றார் சந்தோஷ். ஒவ்வொரு தடவை சர்வீஸ் விடும்போதும், கிட்டத்தட்ட 13 முதல் 15 ஆயிரம் வரை செலவு செய்வதாகச் சொன்னார் அவர்.

4 x 4 யெட்டியின் பவர் 140 bhp என்பதால், லோ-எண்டில் ஆரம்பித்து ஹை-எண்ட் வரை பவர் பீறிடுகிறது. கியர்களுக்கான இடைவெளி அதிகம் என்பதால், சும்மா சும்மா கியரை மாற்றவைத்து எரிச்சலை ஏற்படுத்தவில்லை. மூன்றாவது கியரிலேயே கிட்டத்தட்ட 80 கி.மீ. வேகம் வரை அழுத்தினாலும் சரி; டாப் கியரில் 30 கி.மீ. வேகமே சென்றாலும் சரி; யெட்டியில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to கூர்க்

களைப்பே இல்லாமல் சத்தியமங்கலம் தாண்டியபோது, தூரத்தில் கானல் நீரில் பண்ணாரி அம்மன் கோவில் நிழலாடிக்கொண்டிருந்தது. வெளியே டெம்பரேச்சர் 40 டிகிரி என்றும், உள்ளே 20 டிகிரி என்று க்ளைமேட் கன்ட்ரோல் ஸ்க்ரீன் சொன்னது. யெட்டியில் நான்கு பக்கவாட்டிலும் 'ஹீட் அப்ஸார்பிங் விண்ட் ஷீல்டு’ என்பதால், வெயில் உள்ளே இறங்கவில்லை. டிரைவர் சீட் விண்ட் ஷீல்டின் வழியாக கண்களும் அவ்வளவாகக் கூசவில்லை. பண்ணாரி அம்மன் கோவில், ஓர் அமைச்சரின் வருகையால் அதகளப்பட்டுக் கொண்டிருந்தது. சாமி பார்க்க வந்த பொதுமக்கள், அமைச்சரைப் பார்த்துக் கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to கூர்க்
ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to கூர்க்

அடுத்தது சத்தியமங்கலம். மூங்கில் குருத்துகள் வளரும் சீஸன் என்பதால், இப்போது யானைகளை அதிகம் பார்க்கலாம் என்றார்கள். ஆனால், பகல் நேரம் என்பதால், யானைகள் தென்படவில்லை. யானைகளைத் தேடியபடியே கர்நாடகத்திற்கு வந்திருந்தோம். கர்நாடக எல்லை வந்துவிட்டது என்பதை, நாம் மொபைல் சிக்னல் வைத்தோ, பெயர்ப் பலகையை வைத்தோ கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஸ்பீடு பிரேக்கர்களின் எண்ணிக்கையை வைத்தே தெரிந்துகொள்ளலாம். அவ்வளவு ஸ்பீடு பிரேக்கர்கள்... சிக்னல்கள்! சந்து பொந்துகளிலும்கூட சிக்னல்கள் இருக்கின்றன. ''இங்க பெரிய வீடு வச்சிருக்கிறவங்க, வீட்டுக்குள்ளகூட சிக்னல், ஸ்பீடு பிரேக்கர்லாம் வெச்சிருப்பாங்கபோல!'' என்று சிரித்தார் சந்தோஷ்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to கூர்க்
ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to கூர்க்

ஆனால், இதுதான் மைசூரில் விபத்துகள் குறைவாக நடப்பதற்கு மிகப் பெரிய காரணம் என்றார்கள். ஹை ஸ்பீடில் பயணிக்கும் நம் ஊர்க்காரர்களுக்கு, சடன் பிரேக் போட்டு... ஆக்ஸிலரேட்டர் மிதித்து என்று... இது கொஞ்சம் களைப்பை ஏற்படுத்துவது உண்மைதான். எனினும், யெட்டியில் ஆக்ஸிலரேட்டரை மிதிப்பதே தனி சுகம். வழக்கமான கார்களில் இருப்பதுபோல இல்லாமல், நீளமாக ஆக்ஸிலரேட்டர் பெடல் இருப்பதால், ஆக்ஸிலரேட்டரை மிதிக்க மிதிக்க, யெட்டியை நமக்குப் பிடிக்கிறது.

'எனக்கு வேலை செஞ்சா வியர்க்கிற வியாதி இருக்கு’ என்று யாரும் இங்கு டபாய்க்க முடியாது. காரணம், இங்கு வெயில் அடித்தாலும் வியர்க்கவில்லை. மைசூரின் வியர்வை வாடையே இல்லாத ஒரு ரெஸ்டாரன்ட்டில், அசைவ உணவுகளை உள்ளே தள்ளி விட்டு, கூர்க் நோக்கிக் கிளம்பினோம். மைசூரில் இருந்து கூர்க் - சரியாக 81.8 கி.மீ. மணிக்கு 60 கி.மீ வேகத்தில் போனால்கூட, கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகலாம். 90 கி.மீ வேகத்தில் போன போதும், இரண்டரை மணி நேரம் பிடித்தது. ஹேர்பின் பெண்டுகள், குண்டும் குழியுமான மலைச் சாலைகள் போன்றவற்றுக்கு நல்ல சவால் விடுகின்றன யெட்டியின் சஸ்பென்ஷன்கள்.

காபி எஸ்டேட்களுக்கு நடுவே யெட்டியை விரட்டுவது புது அனுபவமாக இருந்தது. குடகு மலை எனும் கூர்க் பகுதிக்குள் நுழைந்ததுமே, காபி வாசம் காற்றில் அடிக்க ஆரம்பித்தது. கூர்க்கின் தலைநகரமான மடிக்கேரி ஆரம்பத்தில் காரை பார்க் செய்யச் சொல்லிவிட்டு, காபிக் கொட்டைகளை பர்ச்சேஸ் செய்தனர் சந்தோஷ§ம் ராஜ்மோகனும். கர்நாடக மாநில மேற்குத் தொடர்ச்சி மலைச் சாலையின் அழகான நகரம்தான் மடிக்கேரி. ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில், அரேபிய நாட்டுக்கு மெக்கா புனிதப் பயணத்துக்குச் சென்ற முஸ்லிம்கள், அங்கிருந்து காபி விதைகளை வாங்கி வந்து கர்நாடக மாநிலம் முழுவதும் நட்டு வளர்த்த பிறகுதான் காபி பதனிடப்படுதல் முக்கியத் தொழில் ஆனதாம். மலைக் கிராமங்கள் எல்லாவற்றிலும் காபிச் செடிகளைப் பதனிட முடியாது. கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டருக்கு மேல் 1,750 மீட்டர் உயரத்துக்குள் இருக்கும் மலைப் பகுதிகளில் மட்டும்தான் காபி எஸ்டேட்டுகளை உருவாக்க முடியுமாம். இதுவே ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்கள், காபிக்குச் சிம்ம சொப்பனம்தான். டீ எஸ்டேட்கள்தான் இங்கு பிரபலம்.

மடிக்கேரியில் 22 டிகிரி குளிர் எந்த நேரமும் சில்லிடுகிறது. மாலை 5.30 மணிக்கெல்லாம் இங்கு சூரியன் மறைந்துவிடுகிறது. மடிக்கேரியில் தங்குவது ஓர் அலாதியான அனுபவம். இதில் காபி

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to கூர்க்

எஸ்டேட்களுக்கு நடுவே 'ஹோம் ஸ்டே’ எனும் காட்டேஜ்கள் பிரபலம். அதாவது, மலை... காபி எஸ்டேட்களின் அடிவாரம்... அதற்கு நடுவே வீடு போன்ற காட்டேஜ்கள், சின்ன கிரிக்கெட் மைதானம் அளவுக்கு வசதி கொண்ட கார் பார்க்கிங் ஏரியா, சூடாகச் சமைக்கும்போதே 'சில்’லென்று ஆகிப் போகும் பிரமாதமான காலை உணவு என்று ஒரு நபருக்கு 900 முதல் 1,200 வரை வசூலிக்கிறார்கள். காட்டுக்கும் மலைக்கும் நடுவே இருந்தாலும், விலங்குகள் பயம் இல்லை.

சரியாக 6.02 மணிக்கு சூரியன் உதயமானதும், வாசகர்கள் இருவரும் கேமராவில் விதம்விதமான பறவைகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். ''நாங்க ரெண்டு பேரும் ஆட்டோஃபோகஸ் ஆர்வலர்கள். வைல்டு லைஃப் போட்டோகிராபர்களும்கூட!'' என்றனர். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக ஏகப்பட்ட பறவைகளைப் படம் பிடிப்பதாகவும், மடிக்கேரியில்தான் நீண்ட நாட்களாகத் தாங்கள் தேடிக் கொண்டிருந்த 'ஹார்ன் பில்’ கிடைத்ததாகவும் மகிழ்ச்சியுடன் சொன்னார்கள். அதே மகிழ்ச்சியுடன் காலை உணவை முடித்துவிட்டு, மடிக்கேரியில் இருந்து 'அபே அருவி’க்குப் பயணத்தைத் தொடர்ந்தோம். பிரிட்டிஷ் காலத்தில் மடிக்கேரியின் கேப்டனாக இருந்தவரின் மகள் ஜெஸ்ஸி நினைவாக, ஜெஸ்ஸி அருவி என்று இதற்கு முதலில் பெயர் சூட்டினார்களாம். அபே அருவிக்குச் செல்ல வேண்டுமென்றால், ஒரு மினி அட்வென்ச்சரே நிகழ்த்த வேண்டும். சில பல ஏலக்காய் மற்றும் காபி எஸ்டேட்களைக் கடந்து... தொங்கு பாலத்தைத் தாண்டி... செங்குத்தான மலைத் திருப்பங்களில் ஊர்ந்துதான் அபேவுக்குச் செல்ல முடியும்.

நாம் சென்ற நேரம், நேபாளத்தில் இருந்து வந்திருந்த பெண் புத்த பிட்சுகள் சிலர், அபே அருவியின் ஃபேவரைட்டான வெள்ளரிக்காய் - மாங்காயைச் சுவைத்தபடி அருவியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். விசாரித்ததில், அவர்கள் பாகமண்டலாவில் இருக்கும் தலைக்காவிரிக்கு ஆன்மிகச் சுற்றுலா வந்ததாகச் சொன்னார்கள். குடகு மலையில் பெயர் பெற்ற ஆன்மிகச் சுற்றுலாத் தலம் தலைக்காவிரி. காவிரி ஆற்றின் 'ஆரம்பம்’ இங்கிருந்துதான் என்பதால், இதற்கு 'தலை’ என்னும் பெயர் வந்தது. இங்குள்ள காவிரியம்மன் கோயில் குளத்தில் காசுகளை எறிந்து வேண்டினால், பலிக்கும் என்பது ஐதீகம். விரைவில் ஆஸ்டன் மார்ட்டின் வாங்க வேண்டும் என்று நினைத்து குளத்தில் காசு எறிந்து வேண்டியதாகச் சொன்னார் சந்தோஷ்.

தலைக்காவிரியில் இருந்து 60 கி.மீ தொலைவில் இருக்கிறது துபேர் யானைகள் கேம்ப். இங்கு 150-க்கும் மேற்பட்ட யானைகள், காட்டிலாகாவினரால் பராமரிக்கப்படுகின்றன. டூரிஸ்ட்கள் இங்கு யானைகளின் குளியலை, பிரேக்ஃபாஸ்ட்டை நாம் அவற்றின் அருகே இருந்து கவனிக்கலாம். யானை எக்ஸ்பர்ட் ஒருவர் நம்மிடம் யானைகளைப் பற்றிய ஆதி முதல் அந்தம் வரை விளக்குவார். பின்னர், நீங்கள் உங்களுக்குப் பிடித்த யானையில் துபேர் காட்டில் அரைமணி நேரம் சவாரி செய்யலாம். காவிரி நதியில் மூங்கில் போட்டிங் போகலாம். மின்சாரம் இல்லாத துபேர் காட்டில் காட்டேஜில் தங்கலாம். எல்லாமே அற்புதம்!

நேரமின்மையால், மனமில்லாமல் அனைத்துக்கும் 'பை’ சொல்லிவிட்டு, யெட்டி கோவையை நோக்கி விரட்டப்பட்டது. குடும்பத்துடன் திருவிழாவுக்குச் செல்லும்போது குழந்தைகளிடம் தொற்றும் குதூகலம், வீடு திரும்பும்போது காணாமல் போகுமே.. அதே மனநிலையில் நம்மை கோவையில் இறக்கிவிட்டு, நம்மை விட்டு எட்டிப் பறந்து கொண்டிருந்தது யெட்டி.

தமிழ்  க.ரமேஷ்