Published:Updated:

ரீடர்ஸ் ரிவியூ - நிஸான் டெரானோ டீசல்

ரீடர்ஸ் ரிவியூ - நிஸான் டெரானோ டீசல்

 ##~##

கோவையைச் சேர்ந்த ஐயப்பனுக்கு கார்களின் மீது ஆர்வம் பிறந்தது சமீபத்தில்தான். உடனே கார் ஓட்டக் கற்றுக்கொண்டவர், கார் ஆர்வம் மோட்டார் விகடன் மீதும் திரும்ப... கடந்த மூன்று ஆண்டுகளாக மோட்டார் விகடனின் தீவிர வாசகர். இவர் சமீபத்தில் வாங்கிய நிஸான் டெரானோ பற்றி தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

ஏன் நிஸான் டெரானோ?

முதன்முதலாக  நான் வாங்கிய கார் இண்டிகா விஸ்டா. அப்போதைக்கு அது நல்ல மாடல் கார். மூன்று ஆண்டுகளில் 80,000 கி.மீ வரை ஓட்டிவிட்டதால், விஸ்டா எனக்குச் சலித்துவிட்டது. எனவே, எஸ்யூவி போன்று அடுத்த லெவலுக்குப் போக வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது. அந்தச் சமயம், டஸ்ட்டரைத் தாண்டி வேறு என்ன சாய்ஸ் இருக்கிறது எனத் தேடியபோது, மோட்டார் விகடனில் நிஸான் டெரானோ பற்றிப் படித்தேன். பார்த்த உடனே டிசைன் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. தொழில்நுட்பரீதியாகவும் இது சிறப்பாக இருப்பதாக எழுதியிருந்தீர்கள். விலையும் நியாயமாகப் பட்டது. எனவே, டெரானோ வாங்கலாம் என முடிவு செய்தேன்.

ரீடர்ஸ் ரிவியூ - நிஸான் டெரானோ டீசல்

ஷோரூம் அனுபவம்

கோவையில் நிஸான் டெரானோ அறிமுகம் செய்தபோது, ரமணி நிஸான் ஷோரூமில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. உடனே  நேரில் சென்று பார்த்தேன். அப்போதே டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தேன். எனக்குத் திருப்தியாக இருந்தது. இதன் வடிவமைப்பும் இன்டீரியரும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதனால், அக்டோபர் மாதம் முதல் தேதி டெரானோவை புக் செய்தேன்.

நவம்பர் 15-ல் கிடைக்கும் என்றார்கள். ஆனால், அக்டோபர் இரண்டாம் தேதியே ஷோரூமில் இருந்து போன். வங்கிக் கடனுக்கான சம்பிரதாயங்களை முடித்து விட்டு, அடுத்த நாளே  டெரானோவை வீட்டுக்கு ஓட்டி வந்துவிட்டேன்.

ஷோரூமில், வாடிக்கையாளர்களை அணுகும்விதம் மிகச் சிறப்பாக இருந்தது. எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களைத் தெளிவாக விளக்கி நிவர்த்தி செய்தனர். அங்கு ஏற்பட்ட ஒரே பிழை, எனது ஆர்.சி புத்தகத்தில் நான் வாங்கியுள்ள கலருக்குப் பதிலாக வேறு கலரைப் போட்டு விட்டனர். அது யார் தவறு எனத் தெரியவில்லை. மாற்றித் தருவதாகக் கூறியுள்ளனர். விற்பனையின்போது சில சலுகைகள் கேட்டிருந்தேன். விற்பனைக்குப் பின் செய்து தருவதாகக் கூறினர். ஆனால், இதுவரை செய்து தரவில்லை.

ரீடர்ஸ் ரிவியூ - நிஸான் டெரானோ டீசல்

எப்படி இருக்கிறது நிஸான் டெரானோ?

கார் வாங்கியதும் முதலில் ஹில் ஸ்டேஷன் செல்லலாம் என முடிவெடுத்து, வால்பாறை வரை சென்றுவந்தோம். மலைகளில் ஏறும்போது நல்ல அனுபவமாக இருந்தது. மைலேஜ், நகருக்குள் லிட்டருக்கு 14 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 18 கி.மீ-யும் எனக்குக் கிடைக்கிறது. பிறகு, நீண்ட தூரம் செல்ல முடிவெடுத்து, கோவில்பட்டி வரை 350 கி.மீ தூரம் சென்றேன். நீண்ட தூரம் ஓட்டிய களைப்பு கொஞ்சம்கூட இல்லை. எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் சென்று வந்தேன்.

ஏ.சி, திறன் மிக்கதாக இருப்பதால், பயணம் இதமாக இருக்கிறது. 5 பேர் வரை தாராளமாக அமர முடிகிறது. நல்ல எஸ்யூவி வாங்கிய திருப்தியைக் குறைவின்றி தருகிறது டெரானோ.

ரீடர்ஸ் ரிவியூ - நிஸான் டெரானோ டீசல்

ப்ளஸ்

5 பேர் அமர்வதற்கு மிகத் தாராளமாக இடம் உள்ளது. டிக்கியும் கொஞ்சம் பெரிதாக இருப்பதால், கூடுதலாகப் பொருட்களை வைத்துக்கொள்ள முடிகிறது. இன்டீரியர் அருமையாக வடிவமைத்துள்ளனர். வெளியே இருந்து காரைப் பார்க்கும்போது, பெரிய காராகத் தோன்றும். ஆனால், கையாளும் போது மிகச் சிறிய காரைப் போல சுலபமாக இருக்கிறது.

காரின் உயரம் அதிகமாக இருப்பதால், கிரவுண்ட் கிளியரன்ஸும் அதிகம். சாலையை முழுமையாகப் பார்த்து ஓட்ட முடிகிறது. இதன் முன் பக்க, பின் பக்க வடிவமைப்பு மிக அருமை. அது ஒன்றே இதைப் பார்த்தவுடன் வாங்கத் தூண்டும். இதன் டயர்கள் பிரமாண்டமாக இருப்பதால், நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி கரடுமுரடான சாலைகளிலும் தைரியமாகப் பயணிக்கத் தூண்டுகிறது.

டர்னிங் ரேடியஸ் கச்சிதமாக இருப்பதால், வளைவுகளில் எளிதாகத் திருப்ப முடிகிறது. ஹெட்லைட்டின் தோற்றமும் அதன் செயல் திறனும் இரவு நேரங்களில் நன்றாக உதவுகிறது. அது, இதன் கூடுதல் சிறப்பம்சம். கலர் ஆப்ஷன்கள் நிறைய இருப்பதால், தேர்ந்தெடுக்க சாய்ஸ் அதிகம். இதை வாங்கியது முதல் இன்று வரை ஆக்சஸரீஸ் தவிர, பராமரிப்புக்கு எனக் கூடுதலாக எந்தச் செலவும் செய்யவில்லை.

ரீடர்ஸ் ரிவியூ - நிஸான் டெரானோ டீசல்

மைனஸ்:

நான் வைத்துள்ள மாடல் 85bhp. ஆனால், இதில் எதிர்பார்த்த பவர் குறைவு என்பதே என் அனுபவம். பிக்-அப் எடுக்க இன்ஜின் சற்று நேரம் எடுத்துக்கொள்கிறது. கார் ஓட்டும்போது ஸ்மூத்தாக இருந்தாலும், இன்ஜின் சத்தம் அதைக் கெடுக்கிறது. காரை ஓட்டும்போதும் கியர் மாற்றும்போதும் அடிக்கடி சத்தம் வருவது அதன் தரத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதன் விலை வேறு எஸ்யூவிகளோடு ஒப்பிடும்போது, சற்று அதிகமாகப்படுகிறது. இதில், ஆர்ம் ரெஸ்ட் இல்லை. அதனால், நீண்ட தூரப் பயணத்தின்போது கைவலி ஏற்படுத்துவதால், பிரச்னையாகப் படுகிறது. ஸ்டீயரிங்கில் ஆடியோ கன்ட்ரோல் இல்லை என்பதால், அடிக்கடி ஆடியோ ப்ளேயரை ஸ்டீயரிங்கில் இருந்து கையை எடுத்துக் கையாள வேண்டியிருப்பது, மற்ற கார்களைப்போல இது இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

என் தீர்ப்பு:

ஓரளவு குறைவான விலையில் 5 பேருக்கு ஏற்ற எஸ்யூவி கார் வாங்கலாம் என்று நினைப்பவர்களுக்கு நிஸான் டெரானோ நல்ல சாய்ஸ்.

இதன் வடிவமைப்பும், கலர் ஆப்ஷனும் அதிகமாக இருப்பதால், நல்ல மைலேஜ் விரும்புகிறவர்களும் இதைக் கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம்.

  ஞா.சுதாகர்   ர.சதானந்த்