Published:Updated:

ரீடர்ஸ் ரிவியூ - கேடிஎம் டியூக் 390

ரீடர்ஸ் ரிவியூ - கேடிஎம் டியூக் 390

 ##~##

பைக்குகள் மீது இந்த அளவுக்கு ஆசை வர, என் அப்பாவும் ஒரு காரணம். என் அப்பாவும் பைக் பிரியர். இது வரை 15-க்கும் மேற்பட்ட பைக்குகளை மாற்றியிருப்பார். அதனால், வீட்டில் பைக் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கியது இல்லை. நான் கேட்டவுடன் அப்பாவே வாங்கிக் கொடுத்துவிடுவார்.

 நான் 12-ம் வகுப்புப் படித்து முடிக்கும்போதுதான் யமஹா ஆர்-15 அறிமுகம். அது, ஷோரூமில் வந்து இறங்கியதுமே அங்கு வேலை செய்யும் அப்பாவின் நண்பர் தகவல் சொல்ல... அன்றே அதை புக் செய்தோம். யமஹா ஆர்-15 பைக்தான் என்னுடைய முதல் பைக். பின்பு, யமஹாவில் புது வெர்ஷன் வாங்கி ஏழு மாதங்கள் வைத்திருந்துவிட்டு, கல்லூரி படித்தபோது மூன்றாம் ஆண்டில் கேடிஎம் டியூக் 200 பைக்குக்கு மாறினேன்.

கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் பைக்கில் சுற்றாத இடமே இல்லை. டென்ஷன், மூட் அவுட் என மனசுக்கு ஏதாவது பிரச்னை என்றால், என்னுடைய டியூக் 390 பைக்கை எடுத்துக்கொண்டு தனியாக லாங் டிரைவ் போய்விடுவேன்; எந்தக் கவலையானாலும் பறந்துவிடும்.

ரீடர்ஸ் ரிவியூ - கேடிஎம் டியூக் 390
ரீடர்ஸ் ரிவியூ - கேடிஎம் டியூக் 390

என்னைச் சுற்றியுள்ள நண்பர்களும் என்னைப் போல பைக் பிரியர்கள்தான். அதனால், எனக்கு பைக் மீதான ஆர்வம் அதிகமாகிக்கொண்டேதான் இருக்கிறது. மேலும், மோட்டார் விகடன் வரத் தொடங்கிய நாளில் இருந்தே நானும் அப்பாவும் அதன் வாசகர்கள். எனவே, தவறாமல் மோட்டார் விகடன் படித்து, புதிதாக வந்திருக்கும் பைக், அதன் பெர்ஃபாமென்ஸ் பற்றித் தெரிந்துகொண்டு அப்டேட் செய்துகொள்வோம். இணையதளங்களிலும் பைக்குகள் சம்பந்தமாக எதையாவது தேடிக் கொண்டே இருப்பேன். அப்போதுதான் கேடிஎம்-ல் ட்யூக்-200 பைக்குக்கு  அடுத்ததாக, ஒரு வருடத்தில் டியூக் 390 அறிமுகம் செய்யப் போகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டேன். எப்போது வரும் என ரொம்பவே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்து, மதுரையில் உள்ள ஆர்.கே பைக் ஷோரூமில் அடிக்கடி சென்று விசாரித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் ஷோரூம் சென்றபோது, லாரியில் இருந்து ஆரஞ்சு - வெள்ளை வண்ண டியூக் 390 பைக்கை இறக்கிக்கொண்டிருந்தார்கள். அந்த நிறமே என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

390 சிசி பைக் இவ்வளவு குறைவான விலையில் கிடைக்கிறது என்றால், அதுவே பெரிய விஷயம். அப்பாவுக்கும் பைக் என்றால் பிடிக்கும் என்பதால், அன்றே வாங்கிவிட்டோம். டெலிவரி எடுத்த நாளன்று பைக்கின் 'கண்டிஷன்’ எப்படி இருக்கிறது என்று பார்க்க மதுரை முழுவதும் நன்றாகச் சுற்றினேன். சில நாட்களுக்குப் பின்பு, நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு ட்ரிப் சென்றுவந்தேன். அடுத்து, டுகாட்டி வாங்குவதுதான் எனது டார்கெட்.

பிடித்தது: டியூக் 390 பைக்கின் பெர்ஃபாமென்ஸ், மிகப் பெரிய பலம். சடர்ன் பிக்-அப் மிரளவைக்கும் விதத்தில் இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இருப்பதாலும் டயரின் க்ரிப் அதிகம் என்பதாலும் அவ்வளவு சீக்கிரம் 'ஸ்கிட்’ ஆகவிடாது.

பிடிக்காதது: பைக்கின் இன்ஜின் சீக்கிரமாகவே சூடாகிவிடுகிறது. இதனால் கால் மற்றும் தொடையிலும் அந்த சூடு தொற்றிக்கொள்கிறது. மேலும், பைக்கை இன்னும் கொஞ்சம் புதுமையாக வடிவமைத்திருக்கலாம். மற்ற பைக்குகளைப் போல சாதாரணமாக இல்லாமல், இதன் வடிவமைப்பில் சற்று வித்தியாசம் காட்டியிருந்தால், இன்னும் சிறப்பாக இளைஞர்களை ஈர்க்கும்!

லோ.இந்து >> இ.பொன்குன்றம்