Published:Updated:

சேச்சி டாக்ஸி!

சேச்சி டாக்ஸி!

 ##~##

கேரளாவுக்குச் செல்பவர்கள் பிங்க் நிற கால் டாக்ஸிகளை அடிக்கடி பார்க்க முடியும். மாநில அரசின் முயற்சியால் முழுக்க முழுக்க பெண்களால், பெண்களுக்காக மட்டுமே இயக்கப்படும் இந்த டாக்ஸிகளுக்கு, அங்கே செம டிமாண்ட்!

 பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில், கேரள அரசின் சார்பில் பாலின பாகுபாட்டைக் களைய 'ஜெண்டர் பார்க்’ என்ற அமைப்பு உருவாக்கப் பட்டது. மாநில சமூக நீதிக்கான அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, பெண்கள் முன்னேற்றத்துக்கான பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

நம் ஊரில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களைப்போல, பெண்களின் தொழில் வளத்துக்காகவும் சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு திட்டங்களை இந்த அமைப்பு செய்தாலும் அதில், கவனத்தை ஈர்க்கும் திட்டம் இந்த 'ஷீ டாக்ஸி.’ இந்த டாக்ஸிகளின் உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் பெண்களே! தனியாகச் செல்லும் பெண்கள், குடும்பத்தினர் ஆகியோருக்காக இந்த டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. தனியாகவோ, கூட்டாகவோ செல்லும் ஆண்களுக்கு, இந்த டாக்ஸியில் இடம் கிடையாது.

சேச்சி டாக்ஸி!

இந்தத் திட்டம் பற்றி, 'ஜெண்டர் பார்க்’ அமைப்பின் திட்ட அலுவலரான லிஜின்.கே.எல் நம்மிடம் விவரித்தார்.

''எல்லா ஊர்களிலும் பகல் வேளைகளில் பெண்கள் தனியாகப் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால், இரவு நேரங்களிலும் பல சமயம், முன் பின் அறிமுகம் இல்லாத டிரைவர்களை நம்பி பயணம் செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அது போன்ற சமயங்களில், தனியாகச் செல்லும் பெண்கள் மிகுந்த பயத்துடன் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது.

சேச்சி டாக்ஸி!
சேச்சி டாக்ஸி!

இதை மனதில் கொண்டுதான், ஷீ டாக்ஸியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதற்கான பயனாளிகளை முதலில் தேர்வுசெய்து, டிரைவிங் கற்றுக்கொடுத்தோம். பிறகு, அவர்களுக்குச் சொந்தமாக கார் வாங்க உதவினோம். மாருதி நிறுவனம் கடன் கொடுக்க முன்வந்தது. மாருதியின் ஸ்விஃப்ட் டிசையர் டூர் மாடல் காரை வாங்கினோம். கூடுதல் மைலேஜ், பராமரிப்பில் சிக்கனம், குறைவான விலை போன்ற பல காரணங்களுக்காக இந்த காரைத் தேர்வுசெய்தோம்.

பயனாளிகள் முதல் கட்டமாக காருக்கான தொகையில் 10 சதவிகிதத்தைச் செலுத்தினார்கள். எஞ்சிய தொகையை 8 சதவிகித வட்டியுடன் ஆறு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த கார்கள் அனைத்தும் எங்களது கட்டுப்பாட்டில் உள்ள கால் சென்டருடன் தொடர்பில் இருக்கும். இந்த காரில் வாக்கி டாக்கியுடன், ஜிபிஆர்எஸ் வசதியும் இருப்பதால், கார் எந்த இடத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை எங்களால் கண்காணிக்க முடியும்.

காருக்கான கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவை மூலம் செலுத்தும் வசதியும் காரிலேயே இருக்கிறது. தவிர, காரில் அவசர காலத்தில் பயன்படுத்தும் அலாரம் இணைத்துள்ளோம். அது, நகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் பெண் பயணிகளுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.

இந்த டாக்ஸியில் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரத்தைப் பெற்று, அதை காரில் எழுதும் திட்டமும் இருக்கிறது. இந்த விளம்பரங்களின் மூலமாக மட்டுமே ஷீ டாக்ஸிக்கான மாதத் தவணையைக் கட்டிவிட முடியும் என்பதால், பெண் பயனாளிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தத் திட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

ஷீ டாக்ஸி திட்டத்தில் பங்கேற்றுள்ள ரெஸியா பேகம், ஹீரா ஆகியோர் பேசுகையில், ''ஆரம்பத்தில் இந்தத் திட்டத்தில் சேரத் தயங்கினோம். ஆனால், எங்களுக்கு டிரைவிங் பயிற்சி கொடுத்ததோடு, எதையும் சமாளிக்க வேண்டும் என்பதற்காக கராத்தே பயிற்சியும் கொடுத்தார்கள். இது, எங்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. பெண்களைச் சுயமாகச் சம்பாதிக்கவைக்கும் அருமையான திட்டம் இது'' என்றார்கள் சந்தோஷமாக.

இந்த டாக்ஸியில் பயணம் செய்த பெண் பயணியிடம் பேசியபோது, ''நான் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். சில நாட்களில் புராஜெக்ட் முடிய நள்ளிரவுகூட ஆகிவிடும். அப்போது வீட்டுக்கு ஆட்டோவிலோ, கால் டாக்ஸியிலோ வரும்போது பயமாக இருக்கும். இப்போது அந்த பயம் இல்லை. நிம்மதியாகப் பயணிக்கிறேன்'' என்றார் மகிழ்ச்சியாக.

தமிழ்நாட்டிலும் அறிமுகப்படுத்தலாமே!

பி.ஆண்டனிராஜ்  ரா.ராம்குமார்