Published:Updated:

டாப் 8 கிளாஸிக் பைக்ஸ்

டாப் 8 கிளாஸிக் பைக்ஸ்

டாப் 8 கிளாஸிக் பைக்ஸ்

காலத்தால் அழியாத காவியங்கள் போல, நமது நினைவை விட்டு அகலாத பைக்குகள் சில உண்டு. இன்றைக்கு எத்தனையோ நவீனத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும், பல ஆண்டுகளுக்கு முன்பே திறனிலும், செயலிலும் மறக்க முடியாத, தவிர்க்க முடியாத கிளாஸிக் பைக்குகளாக பல இருக்கின்றன. அப்படிப்பட்ட 8 பைக்குகளின் தனித்தன்மை என்ன என்பதைப் பார்ப்போம்.

1.யமஹா ஆர்டி 350 (1983 டி 89)

ஐரோப்பிய நாடுகளில் மிகப் பிரபலமான மாடல் இந்த பைக். 1975-ம் ஆண்டுடன் இதன் தயாரிப்பை நிறுத்தியது ஜப்பான் யமஹா நிறுவனம். இதன் டூல் கிட்-ஐ ஜப்பானில் இருந்து விலைக்கு வாங்கிவந்தது இந்தியாவைச் சேர்ந்த எஸ்கார்ட் நிறுவனம். ராஜ்தூத் ஆர்டி 350 என்பதுதான் இதன் ஒரிஜினல் இந்தியப் பெயராக இருந்தாலும், யமஹா ஆர்டி 350 என்றுதான் இன்றும் இதைக் குறிப்பிடுகிறார்கள் ரசிகர்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ட்வின் சிலிண்டர் பைக்கும் இதுதான்; 0 - 60 கி.மீ வேகத்தை 4 விநாடிகளில் எட்டிய முதல் இந்திய பைக்கும் இதுதான். \

டாப் 8 கிளாஸிக் பைக்ஸ்

6 ஸ்பீடு கியர்பாக்ஸ், 7 போர்ட் ரீட் வால்வு இன்ஜின் என பல சிறப்பம்சங்கள் இதில் இருந்தாலும்கூட, 39 bhp பவர் அளிக்கும் இதன் பவரை 30.5 bhp பவராகக் குறைத்தார்கள். இருந்தும் இது லிட்டருக்கு 18 கி.மீ வரைதான் மைலேஜ் தந்தது. 1985-ம் ஆண்டு முதல் இதன் சக்தியை மேலும் குறைத்து 27 bhp-யில் எல்டி(லோ டார்க்) என்ற மாடலை வெளியிட்டது எஸ்கார்ட். ஆனால், மைலேஜ் சுமார் 3 கி.மீ அளவுக்குத்தான் அதிகரித்தது. டாப் ஸ்பீடும் குறைந்தது.

ஸ்பேர் பார்ட்ஸ், 2 சிலிண்டர் டைமிங், கார்புரேட்டர் ட்யூனிங் போன்ற விஷயங்களில், இதன் தொழில்நுட்பத்தில் அனுபவம் இல்லாத அன்றைய தனியார் மெக்கானிக்குகள், இந்த பைக்கைக் கண்டாலே ஓடினர். சுமார் 35,000 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கிய பைக்கை ஐந்தாயிரம், பத்தாயிரம் என கிடைத்த விலைக்கு விற்றனர். ஆனால் இன்று, இந்தியாவின் கிளாஸிக் பைக் மார்க்கெட்டில் அதிக விலை கொண்ட பைக்காக இருக்கிறது. இன்றைய சந்தை நிலவரம் குறைந்தது 1 லட்சத்தில் இருந்து, ஷோரூம் கண்டிஷனில் இருக்கும் பைக்குகள் 3 லட்ச ரூபாய் வரை விலை போகின்றன.

2.ராயல் என்ஃபீல்டு புல்லட் - 1965

டாப் 8 கிளாஸிக் பைக்ஸ்

புழக்கத்தில் உள்ள எல்லா புல்லட்டுகளுமே கிட்டத்தட்ட கிளாஸிக் அந்தஸ்தைப் பெற்றவைதான். ஆனாலும், இங்கிலாந்தில் இருந்து டூல்ஸ் டிசைனை வாங்கிவந்து, அதில் எந்த மாற்றமும் செய்யாமல் தயாரிக்கப்பட்ட மாடல் இந்த பைக். 1965-க்குப் பிறகு, நமக்கு ஏற்றபடி பல மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்து விட்டோம். அதனால், இந்த ஒரிஜினல் டிசைன் மாடல் பைக்குக்கு சந்தையில் தனி மதிப்பு உண்டு. வீல்களின் ஒரு பக்கம் மட்டுமே பிரேக் இருப்பதைப் பார்த்தால் விந்தையாக இருக்கும். இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஒரிஜினல் வீல்கள் இதன் அடையாளம். லூகாஸ் இக்னீஷியன், அட்வான்ஸ் ரிட்டார்டு என இந்த பைக்குக்கு என சிலத் தனித்துவங்கள் உண்டு. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 1.5 லட்சம்!

3.யமஹா ஆர்எக்ஸ் 100

(1985 to 1987) ஃபர்ஸ்ட் பேஜ்

டாப் 8 கிளாஸிக் பைக்ஸ்

யமஹாவின் 2 ஸ்ட்ரோக் பைக். இதன் சத்தமே சங்கீதம். இளைஞர்களை என்றென்றைக்கும் கவரும் இந்த பைக்குகள், சந்தையில் அதிமுக்கிய மதிப்பு வாய்ந்தவை. லேசான எடைகொண்டது போன்ற உணர்வு, கிளாஸிக் லுக், பெர்ஃபாமென்ஸ், கையாளுமை, எக்ஸாஸ்ட் சத்தம் என இதன் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். 6 வோல்ட் எலெக்ட்ரிகல், 4 ஸ்பீடு கியர்பாக்ஸ், 100 சிசி இன்ஜின் கொண்டது இந்த பைக். ஆனால், இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தி, 115 சிசி வரை இன்ஜினை போர் செய்து, டிஸ்க் பிரேக் பொருத்தி சாலையில் வலம் வருகின்றனர். 1985 - 87 காலகட்டத்தில் முதன்முதலாக வந்த பைக் (இதில் 'மேட் இன் ஜப்பான்’ என சேஸியில் ப்ளேட் பொருத்தப்பட்டு இருக்கும்) எங்கே இருந்தாலும் கொத்திக்கொண்டுபோக ஒரு கூட்டமே காத்திருக்கிறது. இதன் தற்போதைய மதிப்பு 1 லட்சம் வரை.

4.யமஹா ஆர்எக்ஸ்ஸீ-135

டாப் 8 கிளாஸிக் பைக்ஸ்

5ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வந்த இந்த பைக், 4 ஸ்ட்ரோக் பைக்குகளுக்கு இணையாகக் கொடுக்கப்பட்ட 2 ஸ்ட்ரோக் பைக் எனலாம். 2 ஸ்ட்ரோக் பைக்கின் அடையாளம் எனச் சொல்லலாம். கேட்டலிக் கன்வெர்ட்டர், டிஸ்க் பிரேக், ஸ்கூப், இன்ஜின் கார்டு என அப்போது வந்த பைக்குகளில் நவீன தொழில்நுட்பத்துடன் வந்தது. இதன் இன்ஜினைத் தேவைக்கு ஏற்ப ட்யூன் செய்துகொள்ளலாம் என்பதுதான் இதன் பலம். இதிலேயே 'ஜி’ என ஒரு வேரியன்ட் வந்தது. அதில், எலெக்ட்ரிக்கல் பிரச்னை இருந்தது. அதேபோல், இதிலேயே 4 ஸ்பீடு கியர்பாக்ஸ்கொண்ட மாடலும் வந்தது. இது, பவர் குறைவு என்பதால், பெரிதாக பிரபலமாகவில்லை. இன்றைக்கும் இந்த பைக்குக்கான உதிரி பாகங்கள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தாராளமாகக் கிடைக்கின்றன. சந்தையில் 50 முதல் 70 ஆயிரம் வரை விலை போகிறது ஆர்எக்ஸ்ஸீ 135 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்.

5.ஜாவா 250 டைப் ஏ (12bhp)

டாப் 8 கிளாஸிக் பைக்ஸ்

செக் குடியரசில் இருந்து ஜாவா பைக்கின் டூல் கிட்-ஐ வாங்கிவந்து, மைசூரில் தொழிற்சாலை அமைத்து தயாரிக்கப்பட்டவை ஜாவா - யெஸ்டி பைக்குகள். 'ஐடியல் ஜாவா இந்தியா’ என்ற நிறுவனம்தான் நம் நாட்டில் 1960 முதல் இதைத் தயாரித்து விற்பனை செய்துவந்தது. ஐரோப்பிய நாடுகளில் ரேஸ் போட்டிகளில் பிரபலமாக விளங்கிய 2 ஸ்ட்ரோக் பைக். டர்ட் ரேஸ், ஐஸ் ரேஸ் என எல்லா களங்களிலும் சாதனைகள் நிகழ்த்தியது ஜாவா. ஹில் க்ளைம்பிங் கிரேடியன்ட் அதிகம்கொண்ட பைக்கும் இதுதான். அதாவது சுமார் 50 டிகிரி வரை செங்குத்தாக மலைப் பாதையில் ஏறும் திறமை கொண்டது. பைக்கின் இரு வீல்களும் ஒரே மாதிரியானவை. முன்னால் இருப்பதை பின்னாலும், பின்னால் இருப்பதை முன்னாலும் மாற்றிக்கொள்ள முடியும். மேலும், அந்த சமயத்தில்; ஸ்டெப்னி வைத்த மோட்டார் சைக்கிளும்கூட. 4 ஸ்பீடு கியர் பாக்ஸ்கொண்ட இந்த பைக்கின் தனித்துவம் கியர் ஷிஃப்டர்தான். மேலும் முதல் கியர் மாற்றும் போது கிளட்ச் பிடித்தால் போதும்; அடுத்த கியர்களுக்கு மாறும்போது அவ்வளவாக கிளட்ச் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், கிக்கரையும் கியர் லீவரையும் ஒன்றாக இணைத்ததால் உருவான மெக்கானிக்கல் தொழில்நுட்பம் அப்படி. பயணங்களின்போது கிளட்ச் ஒயர் அறுந்தாலும் ஓட்டிக்கொண்டு வரலாம் என்பது இதன் சிறப்பு. சென்னை சோழவரம் ரேஸில் பலரை சாதனை நாயகன் ஆக்கிய பைக் இது. இந்த மாடல் தற்போது சந்தையில் 50 ஆயிரம் வரை விலை போகிறது.

6.லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்

டாப் 8 கிளாஸிக் பைக்ஸ்

ஸ்கூட்டர் தயாரிப்புக்குப் புகழ் பெற்றது இத்தாலி. இந்த நாட்டின் தயாரிப்புதான் லாம்ப்ரெட்டா. 1950 முதல் 1972-ம் ஆண்டுவரை ஏபிஐ எனும் நிறுவனம்தான் இந்தியாவில் இந்த ஸ்கூட்டர்களை இறக்குமதி செய்து விற்பனை செய்துவந்தது. இதில், எல்டி 200 எனும் மாடல் பிரபலம். எல்ஐ 150 என்ற மாடலும் விற்பனை செய்யப்பட்டது. 1972-ம் ஆண்டுக்குப் பிறகு, சட்டப் பிரச்னை காரணமாக எல்ஐ 150 ஸ்கூட்டர்தான் 'லேம்பி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு விற்பனையானது. பிறகு, ஸ்கூட்டர் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் இந்த ஸ்கூட்டரை விஜய் சூப்பர் 200 என்ற பெயரில் தயாரித்து விற்பனை செய்தது. இதன் பாடி அமைப்பு படு வித்தியாசமாக இருக்கும். ஒரிஜினல் இத்தாலி டிசைன் ஸ்கூட்டர்தான் லாம்ப்ரெட்டா. பொதுவாக, ஸ்கூட்டர்களில் இன்ஜின் ஒரு பக்கமாக இருக்கும். ஆனால், லாம்ப்ரெட்டாவில் இன்ஜின் நடுவே இருக்கும். ஆண்களும் பெண்களும் ஓட்டும் வகையில் டிசைன் செய்யப்பட்டது.

7.வெஸ்பா ஸ்கூட்டர்

டாப் 8 கிளாஸிக் பைக்ஸ்

வெஸ்பா என்ற பெயரை இந்திய ஸ்கூட்டர் ரசிகர்கள் மறக்கவே முடியாது. அரை நூற்றாண்டு காலமாக இந்திய மனங்களுக்குள் புகுந்துவிட்ட பெயர் வெஸ்பா. 1960 முதல் 1971 வரை பஜாஜ் நிறுவனம்தான் இந்த ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்துவந்தது. வெஸ்பா 100, 125, 150 என பல மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. பிறகு, எல்எம்எல் நிறுவனத்துடன் 1983-ம் ஆண்டு முதல் இணைந்து எல்.எம்.எல் வெஸ்பா என்ற பெயரில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துவந்தது. இதில் பி 150 என்ற மாடல் பிரபலம். இந்த ஸ்கூட்டரின் தனித்தன்மை என்னவென்றால், பிரஸ்டு பாடி. அதாவது காரைப் போல சேஸி-பாடி இணைத்து தயாரிக்கப்பட்டது. 3 ஸ்பீடு, 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வந்த இதில் டிரைவ் செயின் கிடையாது. அதற்குப் பதில் டிரைவ் ஷாஃப்ட் இருந்தது குறிப்பிடத்தக்கது. பராமரிப்புச் செலவு குறைவான, மைலேஜ் அதிகம் அளித்த ஸ்கூட்டர் இது.

8.சுஸ¨கி ஷோகன் - 14 bhp, 110 cc

டாப் 8 கிளாஸிக் பைக்ஸ்

யமஹாவின் ஆர்எக்ஸ் 100 பைக்கின் கொட்டத்தை அடக்க, டிவிஎஸ் - சுஸ¨கி பொறியாளர்கள் இணைந்து உருவாக்கிய டெரர் பைக் ஷோகன். க்ளோஸ் ரேஷியோ கியர் பாக்ஸ், ரேஸ் ட்யூன் இன்ஜின் - கார்புரேட்டர், எக்ஸ்பான்ஷன் சேம்பர், கறுப்பு க்ரோம் பூச்சு, ஆர்பிஎம் டிஜிட்டல் மீட்டர் என பல நவீன விஷயங்களை அறிமுகம் செய்த பைக் இது. இதன் எக்ஸாஸ்ட் சத்தம் தனித்துவம் வாய்ந்தது. இதில், டிஸ்க் பிரேக் மட்டுமே இல்லை. மற்றபடி ஆர்எக்ஸ் 100 பைக்கைவிட பல படிகள் தொழில்நுட்பத்தில் முன்னே இருந்தது ஷோகன். ஆனால், இதன் அருமை அப்போது நம் மக்களுக்குப் புரியவில்லை என்று சொல்லலாம்.

டாப் 8 கிளாஸிக் பைக்ஸ்

படங்கள்: வி.ராஜேஷ், ஜா.ஜாக்சன்,  ர.சதானந்த்