Published:Updated:

ஸ்டைல் ஓகே.. ஆனால், பெர்ஃபாமென்ஸ்?

ஸ்டைல் ஓகே.. ஆனால், பெர்ஃபாமென்ஸ்?

தடதட தட்...தட்... பைக் தயாரிப்பாளர் என்ற முகத்தை மாற்ற, ராயல் என்ஃபீல்டு கொண்டு வந்திருக்கும் பைக்தான் கான்டினென்ட்டல் ஜிடி. டூரிங் பைக்தான் என்றாலும், இதை ஸ்போர்ட்ஸ் டூரர் என்ற அடையாளத்துடன் கொண்டுவருகிறது ராயல் என்ஃபீல்டு. 1970 - 80-களில் வெளிவந்த ராஜ்தூத் மற்றும் ஆர்டி 350 போன்ற பைக்குகளுக்கு, இன்றுவரை செல்வாக்கு இருப்பதுதான் கான்டினெட்டல் ஜிடி தயாரிப்புக்கான இன்ஸ்பிரேஷன். 

ஸ்டைல் ஓகே.. ஆனால், பெர்ஃபாமென்ஸ்?

'கஃபே ரேஸர்’ எனச் சொல்லப்படும் இந்த வகை பைக்குகள் அதிக வேகம், சிறந்த கையாளுமை, சொகுசான இருக்கை ஆகிய மூன்று விஷயங்களிலும் சிறப்பான பைக்குகளாக இருக்கும். ராயல் என்ஃபீல்டின் இந்த கஃபே ரேஸர் பைக், உண்மையிலேயே இந்த மூன்றிலும் சிறந்த பைக்கா?

ஸ்டைல்

 ##~##

கான்டினென்ட்டல் ஜிடி பைக்கைப் பார்த்த உடனே, சிலருக்குப் பிடித்துவிடும்; சிலருக்குப் பிடிக்காது. காரணம், முழுக்க முழுக்க நேக்கட் பைக்காக இதை வடிவமைத்திருக்கிறார்கள். தற்போது சிவப்பு வண்ணத்தில் மட்டுமே வெளிவரும் (விரைவில் மஞ்சள் வண்ணமும் வரும்) இந்த பைக்கின் டேங்க்கில், எந்தக் கவர்ச்சியும் இல்லை. புல்லட்டில் இருப்பது போலவே வட்ட வடிவ ஒற்றை ஹெட்லைட்டில், ஹலோஜன் பல்ப் பொருத்தப்பட்டிருக்கிறது. இது, இரவில் பளீர் வெளிச்சத்தைத் தருகிறது. இரட்டை ஸ்பிளிட் ஹேண்டில்பார் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பைக்கில், ஸ்விட்ச்கள் தரமாக இருக்கின்றன. 'பாஸ் லைட் ஃப்ளாஷர்’ மற்றும் இன்ஜின் ஆஃப் ஸ்விட்ச்களும் உண்டு. கிளட்ச், பிரேக் லீவர்கள் மற்றும் கைப்பிடிகள், பிடித்து ஓட்டுவதற்கு வசதியாக இருக்கின்றன. ஆப்ஷனல் வசதியாக ஹேண்டில்பாரிலேயே பொருத்தப்படும் ரியர் வியூ கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு. இந்தக் கண்ணாடி சிறிதாக இருந்தாலும், பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகிறது.

இரட்டைக் குடுவை பெரிய டயல்கள், ஜிடியில் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஸ்பீடோ, ஓடோ மீட்டர்கள் அனலாக் மீட்டராகவே இருக்கும் இந்த பைக்கை, சர்வதேச பைக் என நிரூபிப்பதற்காக கி.மீ ரீடிங் உடன் மைல் ரீடிங்கும் கொடுத்திருக்கிறார்கள்!? ஃப்யூல் இண்டிகேட்டர் மற்றும் டிரிப் மீட்டர் மட்டும் டிஜிட்டல் மீட்டர்களாக இடம் பிடித்திருக்கின்றன. பெட்ரோல் டேங்க்கை முழுவதும் திறக்காத வகையில், ஃபிளிப் டு ஓப்பன் வகை அலாய் மூடி பொருத்தப்பட்டுள்ளது. இன்ஜின் அலாயால் மூடப்பட்டிருக்கிறது. ஆனால், செயின் ஓப்பன் டைப். அலாய் ரிம் கொண்ட இந்த பைக்கில், ஸ்போக்குகள்தான் பொருத்தப்பட்டுள்ளன. தங்க வண்ண டிஸ்க் பிரேக் ரோட்டர் பொருத்தப்பட்டிருப்பது கவர்கிறது.

ஸ்டைல் ஓகே.. ஆனால், பெர்ஃபாமென்ஸ்?
ஸ்டைல் ஓகே.. ஆனால், பெர்ஃபாமென்ஸ்?

கஃபே ரேஸர் பைக்குகளுக்கே உரிய வகையில், ஒற்றை சீட்தான் கான்டினென்ட்டல் ஜிடி பைக்கிலும். ஆப்ஷனல் வசதியாக தனியாகப் பொருத்திக்கொள்ளும் பின் சீட் கொண்ட மாடலும் வருமாம். ஆனால், இது பைக்கின் இயல்போடு பொருந்தாத வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தத் தரம், பில்டு குவாலிட்டி, ஃபிட் அண்டு ஃபினிஷில் கான்ட்டினென்ட்டல் ஜிடி எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக இல்லை.

இன்ஜின்

இதில் இருப்பது 535 சிசி, 4-ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர், ஃப்யூல் இன்ஜெக்ஷன், ஏர் கூல்டு இன்ஜின். இதன் அதிகபட்ச பவர் 5,100ஆர்பிஎம்-ல் 29.1 bhp. அதிகபட்ச டார்க் 4,000 ஆர்பிஎம்-ல் 4.49 kgm. பட்டன் மற்றும் கிக் ஸ்டார்ட் வசதிகொண்ட இந்த பைக்கில் இருப்பது 5-ஸ்பீடு கியர்பாக்ஸ். கியர்களை மாற்ற, கிளட்ச்சை முழுவதுமாக அழுத்திப் பிடிக்க வேண்டும். ஆரம்பம் மற்றும் மிட் ரேஞ்சில் பவர் சிறப்பாக இருந்தாலும், 535 சிசி கொண்ட இந்த பைக்கின் ஆக்ஸிலரேட்டரை முழு வேகமாகத் திருப்பினால், பவர் இல்லாமல் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அதிர்வுகளும் அதிகமாக ஆரம்பிப்பதால், தானாகவே கை வேகத்தைக் குறைக்க ஆரம்பித்துவிடுகிறது.

0 - 60 கி.மீ வேகத்தை 4.34 விநாடிகளில் கடக்கும் கான்டினென்ட்டல் ஜிடி, 100 கி.மீ வேகத்தை 11.21 விநாடிகளில் கடக்கிறது. மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளுடன் ஒப்பிடும் போது, இந்த வேகம் அதிகம். ஆனால், அதிக பவர்கொண்ட இந்த பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு வெறும் 128 கி.மீ-தான் என்பது பெரிய ஏமாற்றம். ஆனால், ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கே உரிய ஆயில் ஒழுகும் பிரச்னை இந்த பைக்கை டெஸ்ட் செய்தவரை எழவில்லை என்பது ஆறுதல்.

ஸ்டைல் ஓகே.. ஆனால், பெர்ஃபாமென்ஸ்?

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

184 கிலோ எடைகொண்ட இந்த பைக், மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளைக் காட்டிலும் எடை குறைவு. இந்த பைக்கின் சேஷியை இங்கிலாந்தில் உள்ள ஹாரிஸ் பர்ஃபாமென்ஸ் என்னும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. முன் பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின் பக்கம் கேஸ் சார்ஜ்டு சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளன.

கஃபே ரேஸர் பைக் என்பதால், கொஞ்சம் குனிந்துதான் பைக்கை ஓட்ட வேண்டும். ஒற்றை சீட்தான் என்றாலும் நீளமாக இருப்பதால், கனமானவர்களும் வசதியாக உட்கார்ந்து ஓட்ட முடிகிறது. வளைவுகளில் வளைத்து நெளித்து ஓட்டவும், நெடுஞ்சாலையில் வேகமெடுத்துப் பறக்கவும் ஸ்டெபிளிட்டி சிறப்பாக இருக்கிறது.

தரமான பைரலி டயர்கள் கான்டினென்ட்டல் ஜிடியில் பொருத்தப்பட்டுள்ளன. முன் பக்கம் 100/90 செக்ஷன் டயர், பின் பக்கம் 130/70 செக்ஷன் டயர். முன் பக்கம் 300 மிமீ பிரம்போ டிஸ்க் பிரேக், பின் பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக். தரமான டயர் மற்றும் பிரேக்கால், பைக்கின் கன்ட்ரோல் சிறப்பாக இருக்கிறது.  60 கி.மீ வேகத்தில் சென்று சடன் பிரேக் அடித்தால், 19.35 மீட்டருக்குள் முழுவதுமாக நின்று விடுகிறது ஜிடி.

மைலேஜ்

500 சிசிக்கும் அதிகமான பைக் எனும்போது, மைலேஜ் லிட்டருக்கு 30 கி.மீ-தான் இருக்கும் என நம் மனதைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். கான்டினென்ட்டல் ஜிடி நகருக்குள் லிட்டருக்கு 25.9 கி.மீ, நெடுஞ்சாலையில் 27.3 கிமீ மைலேஜ் தருகிறது.

ஸ்டைல் ஓகே.. ஆனால், பெர்ஃபாமென்ஸ்?

கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வரவிருக்கிறது கான்டினென்ட்டல் ஜிடி. இந்த விலையுடன் ஒப்பிடும்போது,   இதன் கையாளுமை சிறப்பாக இருந்தாலும் பெர்ஃபாமென்ஸ் ரொம்பவும் சுமார். ஆனால், இதுவரை வெளிவந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகளிலேயே ஒருபடி மேலான பைக்காக இருக்கிறது கான்டினென்ட்டல் ஜிடி.

ஸ்டைல் ஓகே.. ஆனால், பெர்ஃபாமென்ஸ்?
ஸ்டைல் ஓகே.. ஆனால், பெர்ஃபாமென்ஸ்?