Published:Updated:

வெர்னாவை வீழ்த்துமா புதிய சிட்டி?

வெர்னாவை வீழ்த்துமா புதிய சிட்டி?

 ##~##

'இந்தியாவில் சின்ன கார்களைத்தான் வாங்குவார்கள்’ என்ற பிம்பத்தை உடைத்த கார், ஹோண்டா சிட்டி. 1997-ம் ஆண்டு, ஹோண்டா இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்தபோது, பெரிய செடான் காரான சிட்டியைத்தான் முதலில் அறிமுகப்படுத்தியது. அன்று முதல் இன்று வரை மிட் சைஸ் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டிக்கு நிகரான பெட்ரோல் கார் இல்லை. ''ஹோண்டா சிட்டி வாங்கியதற்காக வருந்துகிறேன்'' எனச் சொல்லும் ஒரே ஒரு வாடிக்கையாளரைக்கூடப் பார்க்க முடியாது என்பதுதான், சிட்டியின் வெற்றிக்கு மூலதனம். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக விற்பனையில் சரிவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது சிட்டி. காரணம், ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ போன்ற கார்களை வீழ்த்த, ஹோண்டாவில் டீசல் இன்ஜின் இல்லை என்பதுதான். இப்போது பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் விற்பனைக்கு வருகிறது ஹோண்டா சிட்டி.

 புதிய ஹோண்டா சிட்டியின் டீசல் இன்ஜின் மாடலை ஜெய்ப்பூரில் டெஸ்ட் செய்தேன்.  

வெர்னாவை வீழ்த்துமா புதிய சிட்டி?

டிசைன்

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புத்தம் புதிய டிசைனுடன் சிட்டியைக் களமிறக்கும் ஹோண்டா, இந்த முறை அப்படி புதிய டிசைனுடன் சிட்டியை வடிவமைக்கவில்லை. ஆனால், புதிய சிட்டி - புதிய டிசைன் கொள்கையான 'எக்ஸைட்டிங் ஹெச் டிசைன்’படி வடிவமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறது ஹோண்டா. 'ஹெச் டிசைன்’ என்பதற்கு 'ஹியூமன் சென்டர்டு’ - அதாவது மனிதர்களை மையமாக வைத்துத் தயாரிக்கப்படுகிறது என்று அர்த்தமாம்.

புதிய சிட்டியின் முன் மற்றும் பின் பக்கத்தில் சில மாற்றங்கள் செய்ததோடு, ஹோண்டா நிறுத்திக் கொண்டதுபோல இருக்கிறது. முன் பக்கம் ஹெட் லைட்களுடன் இணைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் க்ரோம் பட்டை, ஹோண்டாவின் டிசைனுடன் பொருந்தாதது போலவே இருக்கிறது. இரட்டை ஹெட்லைட் டிசைன் புதுமை. இதனால், நான்கு ஹெட்லைட்கள் இருப்பதுபோன்ற தோற்றம். காரின் பின் பக்கம், பழைய சிவிக் காரை நினைவுபடுத்துகிறது. பழைய காரைவிட நீளமும் வீல்பேஸும் அதிகம் என்பதால், புதிய சிட்டி இன்னும் பெரிய காராகத் தெரிகிறது.

வெர்னாவை வீழ்த்துமா புதிய சிட்டி?

டிசைன் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும், இது புத்தம் புதிய பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகிறது. பழைய சிட்டியைவிட புதிய சிட்டியின் எடை 45 கிலோ குறைவு. அதேசமயம், கட்டுமானத் தரத்தில் 24 சதவிகிதம் இன்னும் உறுதியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கொண்ட மாடல், பழைய சிட்டியைவிட 75 கிலோ எடை குறைவு. பழைய சிட்டியில் காரின் நடுவே இருந்த பெட்ரோல் டேங்க், இப்போது மற்ற கார்களைப்போல பின்னிருக்கைகளுக்குக் கீழே கொண்டுசெல்லப்பட்டிருப்பது எடையைக் குறைக்க உதவியிருக்கிறது.

புதிய சிட்டியின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மிமீ. இது, வென்ட்டோவைவிட 3 மிமீ, ஹூண்டாய் வெர்னாவைவிட 5 மிமீ குறைவு. இதனால், மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது  கண்டிப்பாகக் கவனம் தேவை.

உள்ளே

வெளிப்பக்கம் பெரிய மாற்றங்கள் இல்லையே என ஏமாற்றத்துடன் காரின் கதவைத் திறப்பவர்களுக்கு, பல ஆச்சரியங்களைக் கொடுத்திருக்கிறது ஹோண்டா. வெர்னாவை மனதில் வைத்தே சிட்டியில் புதிய சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மூன்று குடுவை டயல்களுக்கு வெளியே பச்சை மற்றும் நீல வண்ணத்தில் விளக்குகள் ஒளிர்கின்றன. பச்சை வண்ணத்தில் டயல்கள் ஒளிர்ந்தால், நீங்கள் சரியான கியரில், சரியான வேகத்தில் செல்கிறீர்கள் என்பது அர்த்தம். ஆனால், இது சரியாக வேலை செய்கிறதா என்பதைத் தான் கண்டுபிடிக்க முடியவில்லை. முதன்முறையாக ஹோண்டா சிட்டிக்குள் எல்சிடி ஸ்கிரீன் இடம் பெற்றிருக்கிறது. ரிவர்ஸ் கேமரா டிஸ்ப்ளே இதில் உண்டு.

வெர்னாவை வீழ்த்துமா புதிய சிட்டி?

கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி-க்கு சின்ன டச் ஸ்கிரீன் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரதப் பழைய ஏ.சி கன்ட்ரோல்களுக்கு விடை கொடுத்திருக்கிறது ஹோண்டா. சிடி ப்ளேயர் வசதியைத் தர மாட்டேன் என அடம்பிடித்து வந்த ஹோண்டா, இறுதியாக இந்த காரில் சிடி ப்ளேயர் வசதியை அறிமுகப்படுத்தி விட்டது. இது தவிர, ஹூண்டாயுடன் போட்டி போட பட்டன் ஸ்டார்ட், சன் ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல், எலெக்ட்ரிக் ஆட்டோ ஃபோல்டிங் மிரர்ஸ், பின் பக்க ஏ.சி வென்ட், ஏபிஎஸ் மற்றும் இபிடி பிரேக்ஸ், இரண்டு காற்றுப் பைகள் என அதிக சிறப்பம்சங்கள் கொண்ட காராக மாறியிருக்கிறது சிட்டி.

இட வசதியிலும் வியக்கவைக்கிறது சிட்டி. மிட் சைஸ் கார்களிலேயே மிகவும் சொகுசான இருக்கைகள் கொண்ட கார் சிட்டிதான். ஆனால், டிரைவர் சீட்டில் உட்கார்ந்துவிட்டால், சின்னதாக வடிவமைக்கப்பட்டுள்ள கியர் லீவரைக் கையை நீட்டித் தொட வேண்டியிருக்கிறது. டேஷ்போர்டும் மிகவும் உயரம்.

வெர்னாவை வீழ்த்துமா புதிய சிட்டி?

பின்பக்க இருக்கைகள் செம சூப்பர். பழைய காருக்கும் இதற்கும் வீல்பேஸில் 50 மிமீதான் அதிகம் என்றாலும், 50 சென்ட்டி மீட்டர் இட வசதி அதிகரித்திருப்பதுபோல இருக்கிறது. பின் இருக்கைகளில் மூன்று பேர் தாராளமாக உட்காரலாம். பின் பக்கம் ஏ.சி யூனிட் இருந்தாலும் அது நடுவில் இருப்பவருக்கு இடையூறு இல்லாமல் இருக்கிறது. பின் சீட்டின் சொகுசுத்தன்மை, விரைவில் தூங்கவைத்துவிடும். ஆனால், பின்பக்க இருக்கைகளுக்கு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் இல்லை. மேலும், இது மிகவும் சிறிதாக இருப்பது உயரமானவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும். டிக்கியின் கொள்ளளவு 510 லிட்டர் என்பதால், இட வசதிக்குப் பஞ்சம் இல்லை. ஆனால், டிக்கி கதவு திறந்துவிட்டால், மேலே உயரமாகச் செல்வது... மூடுவதற்குச் சிரமமாக இருக்கிறது.

இன்ஜின்

பெட்ரோல் - டீசல் என இரண்டு இன்ஜின்களும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது ஹோண்டா. பெட்ரோல் இன்ஜினைப் பொறுத்தவரை, பழைய சிட்டியில் இருந்த அதே பெட்ரோல் இன்ஜின்தான். பெட்ரோல் இன்ஜின்கொண்ட ஹோண்டா சிட்டி மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் விற்பனையாகின்றன. பெட்ரோல் இன்ஜினில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்பதால், என்னுடைய கவனம் முழுவதும் டீசல் இன்ஜின் மீதுதான் இருந்தது.

ஹோண்டா அமேஸில் இருக்கும் அதே டீசல் இன்ஜின்தான் என்றாலும், பெரிய காரில் இதன் பெர்ஃபாமென்ஸ் எப்படி இருக்கிறது? பவர், டார்க் என இன்ஜினின் டெக்னிக்கல் விஷயங்கள் எதிலும் மாற்றங்கள் இல்லை. மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஹோண்டாவின் 1.6 லிட்டர் டீசல் இன்ஜினில் வேரியபிள் ஜியாமெட்ரி டர்போ உண்டு. ஆனால், அமேஸைப் போல சிட்டியிலும் ஃபிக்ஸட் ஜியாமெட்ரி டர்போதான். சிட்டியின் டீசல் இன்ஜினில் ஹோண்டா, முழுக்க முழுக்க ஆரம்ப வேகத்தில்தான் கவனம் செலுத்தியிருக்கிறது.

வெர்னாவை வீழ்த்துமா புதிய சிட்டி?

டர்போ லேக் இல்லாமல் ஆரம்ப வேகம் சிறப்பாக இருந்து விட்டால், விற்பனையில் ஜெயித்து விடலாம் என்கிற சிம்பிள் லாஜிக்படி வேலை செய்திருக்கிறார்கள். டர்போ லேக் இருந்தாலும் போட்டி கார்களுடன் ஒப்பிடும் போது இதில் மிகவும் குறைவு. சட்டென வேகம் பிடித்துவிடுகிறது சிட்டி.

மற்ற கார்களைப் போல குபீரெனப் புறப்படாமல், பவர் டெலிவரி சீராக இருக்கிறது. ஆனால் வென்ட்டோ, வெர்னா போல பவர்ஃபுல் பெர்ஃபாமராக இல்லை ஹோண்டா சிட்டி டீசல். 0-100 கி.மீ வேகத்தை 13.92 விநாடிகளில் கடக்கிறது சிட்டி. இது, அமேஸைவிட 1.45 விநாடிகள் குறைவு என்றாலும் வென்ட்டோ மற்றும் வெர்னாவைவிட முறையே 2.62 மற்றும் 3.38 விநாடிகள் அதிகம்.

அமேஸில் 5-ஸ்பீடு கியர் பாக்ஸைக் கொண்டிருந்த டீசல் இன்ஜின், சிட்டியில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. கூடுதல் கியர் இருப்பது அதிக வேகம் செல்ல உதவுகிறது. அமேஸைவிட சிட்டியில் இன்ஜின் சத்தம் காருக்குள் கேட்காமல் இருக்க, பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்படி இருந்தும் காருக்குள் சத்தம் அதிகம்.

வெர்னாவை வீழ்த்துமா புதிய சிட்டி?

சிட்டியின் மிகப் பெரிய பலமே, இதன் ஸ்டெபிளிட்டிதான். நெடுஞ்சாலையில் எவ்வளவு வேகமாக மிதித்தாலும் ஸ்டெபிளிட்டியில் எந்த மாற்றமும் இல்லை. திருப்பங்களில் வளைத்துத் திருப்பி ஓட்டுவதற்கும் மிகச் சிறந்த காராக இருக்கிறது சிட்டி.

சின்ன டயர்கள்தான் என்றாலும் ரோடு கிரிப்பில் எந்தக் குறைவும் இல்லை. பெரிய குண்டும் குழியுமான சாலைகளில் பயணிக்கும்போதுதான் காருக்குள் அலுங்கல் குலுங்கல்களை உணர முடிகிறது.

மைலேஜைப் பொறுத்தவரை, இன்ஜினில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், அமேஸைவிட மைலேஜ் அதிகம் என்கிறது ஹோண்டா. இது, லிட்டருக்கு 26 கி.மீ மைலேஜ் தருகிறது என்கிறது ஹோண்டா.

வெர்னாவை வீழ்த்துமா புதிய சிட்டி?

ஹூண்டாய் வெர்னா டீசல் இன்ஜினின் பெர்ஃபா மென்ஸை வீழ்த்தும் அளவுக்கு, புதிய ஹோண்டா சிட்டியின் டீசல் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது இட வசதி, சிறப்பம்சங்கள், கையாளுமை, ஓட்டுதல் தரம் என காருக்கான முக்கியமான விஷயங்களில் நிறைவான காராக இருக்கிறது புதிய  சிட்டி!

சார்லஸ்