Published:Updated:

மெளனத்தின் மொழி!

மெளனத்தின் மொழி!

 ##~##

மெர்சிடீஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் Vs ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் Vs பென்ட்லி ஃப்ளையிங் ஸ்பர்

எதிர்பார்த்தது போலவே சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மெர்சிடீஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பென்ஸ் நிறுவனம் பெருமையுடன் 'தி பெஸ்ட் கார் இன் தி வேர்ல்டு' என அழைக்கும் எஸ் கிளாஸ் காருக்கு டிமாண்ட் உருவானதால், இந்த காரின் தயாரிப்பை அதிகப்படுத்தியுள்ளது. கார்களில் 'பெஸ்ட்’ என்பதை எப்படி வரையறுப்பது? நல்ல பொறியியல் அம்சங்களுடன், பெர்ஃபாமென்ஸில் பட்டையைக் கிளப்பும் சொகுசு அம்சங்கள் நிறைந்த கார்தான் பெஸ்ட்!

 ஆனால், இது எல்லாவற்றையும்விட 'பெஸ்ட்’ காருக்கான இன்னொரு தகுதியும் இருக்கிறது. 'கார் தயாரிப்பு’ எனும் கலையை முன்னின்று வழிநடத்திச் செல்லும் காராக அது இருக்க வேண்டும். அந்த காரை ஓட்டும்போது, அதில் பயணிக்கும்போது கிடைக்கும் அனுபவம் மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும். முக்கியமாக, இந்த அம்சங்களை உள்ளடக்கிய 'பெஸ்ட்’ கார், அதிகமான விலையிலும் இருக்கக் கூடாது.

மெளனத்தின் மொழி!

எனவே, 'தி பெஸ்ட் கார் இன் தி வேர்ல்டு’ எனப்படும் புதிய மெர்சிடீஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரை, அதைவிட ஒருபடி மேலே இருக்கும் இரண்டு கார்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். முதல் கார், ஸ்போர்ட்டி பெர்ஃபாமென்ஸ் மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் பென்ட்லி ஃப்ளையிங் ஸ்பர். இரண்டாவது, ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் எக்ஸ்டென்டட் வீல்பேஸ் மாடல் கோஸ்ட் கார். எஸ் கிளாஸ், பென்ட்லி போல ஓட்டுதலைத் தூண்டும் விதமாகவும் ரோல்ஸ் ராய்ஸ் போல சொகுசாகப் பயணிக்கத் தூண்டும் காராகவும் இருக்குமா? 'தி பெஸ்ட்’ எது?

பிரமாண்டம், பிரமிப்பு - ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரைப் பார்த்தால் தோன்றும் இந்த இரண்டு உணர்ச்சிகளையும் எப்படிச் சரியாக வர்ணிப்பது என்று தெரியவில்லை. சென்னை சைதாப்பேட்டை சிக்னலில் இந்தக் காட்சியை தினமும் பார்க்கலாம். காலை ஃபீக் ஹவரில் கிண்டி பக்கத்தில் இருந்து ஒரு ரோல்ஸ்ராய்ஸ், டிராஃபிக்கில் நீந்தி வரும். வழக்கமாக, எந்த காராக இருந்தாலும் ஸ்க்ராட்ச் ஆகிவிடும் அளவுக்கு நெருக்கி ஓட்டும் நம் ஊர் வாகன ஓட்டிகள், இந்த ரோல்ஸ்ராய்ஸ் காரிடம் இருந்து தள்ளியே இருப்பார்கள். ஊர்ந்து ஊர்ந்து சிக்னல் வரை வந்த பின், அங்கு சிக்னலில் யு-டர்ன் போடுவதற்காக சற்று வளைந்து நிற்கும். அந்தக் காட்சியை காரின் முன்பக்கத்தில் இருந்து நேராகப் பார்த்தால், அவ்வளவு கெத்தாக இருக்கும். நீளமாக, காரின் பின் பக்கம் ஒரு லேனில் இருக்க, காரின் முன் பக்கம் இன்னொரு லேனில் இருக்கும். கப்பல் போல் ஒரு பக்கம் சாய்ந்துகொண்டு நிற்கும் இந்த ரோல்ஸ் ராய்ஸ். சிக்னல் கிடைத்ததும், மெதுவாகத் திரும்பி, எந்தச் சத்தமும் இல்லாமல், ராக்கெட் போல வேகமெடுத்து சீறிப் பாயும்போது... அதுதான் ரோல்ஸ் ராய்ஸ்!

மெளனத்தின் மொழி!

ரோல்ஸ்ராய்ஸ் காரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, எஸ் கிளாஸையும் ஃப்ளையிங் ஸ்பர் காரையும் பார்த்தால், ஒன்றுமே தோன்றாது. ஆனால், ஃப்ளையிங் ஸ்பர் காரைத் தனியாகப் பார்த்தால், அழகாகவே இருக்கும். பெரிய க்ரில், பின்பக்க வீல் ஆர்ச்சையும் தாண்டிப் பயணிக்கும் கோடுகள் என பிரமாண்டத்தின் இன்னொரு கோணம் பென்ட்லி. எஸ் கிளாஸ், எப்போதுமே தொலைநோக்குப் பார்வையுடன் வடிவமைக்கப்படும் ஒரு கார். பென்ஸின் பாரம்பரியமான க்ரில்லும், ஸ்டாரும் புதிய எஸ் கிளாஸில் இருந்தால்கூட, காரின் ஒட்டு மொத்தத் தோற்றம் பழைமையை நினைவூட்டவில்லை.

மெக்கானிக்கலாகப் பார்க்கும்போது, பென்ஸின் லேட்டஸ்ட் சேஸியைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும். அலுமினியமும், ஸ்டீலும் சேர்ந்து உருவாக்கப்பட்ட இந்த சேஸி, எடை குறைவாகவும் ஸ்திரத்தன்மை அதிகமாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. லாங்-வீல்பேஸ் மாடலுக்காக 17 சென்டிமீட்டர் வீல்பேஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வாகன் ஃபெய்ட்டன் (Phaeton)  காரின் சேஸிதான் ஃப்ளையிங் ஸ்பர் காரில்.

மெளனத்தின் மொழி!
மெளனத்தின் மொழி!
மெளனத்தின் மொழி!

ஆனால், பென்ட்லியின் தேவைக்கேற்ப இந்த சேஸியின் உறுதித் தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கார்களிலுமே ஏர் - சஸ்பென்ஷன்தான். மூன்றிலுமே ட்வின் - டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின்கள். ரோல்ஸ் ராய்ஸிலும், பென்ட்லியிலும் இருப்பது 12 சிலிண்டர் இன்ஜின்கள். பென்ஸில் இருப்பது க்ஷி8 இன்ஜின். இங்கு ஃப்ளையிங் ஸ்பர் மட்டும்தான் ஃபோர் வீல் டிரைவ். மற்ற இரண்டும் ரியர் வீல் டிரைவ்.

பென்ட்லி ஃப்ளையிங் ஸ்பர் - இந்த மூன்று கார்களிலுமே ஓட்டுவதை விரும்புபவர்களுக்கு ஏற்ற கார். கச்சிதமான எடையுடன், அருமையான ஃபீலுடன் இருக்கிறது இதன் ஸ்டீயரிங். ஆக்ஸிலரேட்டரை அழுத்தியதும் பீரங்கியில் இருந்து வெளிப்படும் குண்டுபோல பறக்கிறது இதன் பெர்ஃபாமென்ஸ். அரியணை போல இருக்கும் இதன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துகொண்டு, நாள் முழுக்க ஓட்டிக் கொண்டே இருக்கலாம். இதன் மெல்லிய எக்ஸாஸ்ட் சத்தமும் ரசிக்கும்படி இருக்கிறது.

ரோல்ஸ்ராய்ஸ் காரில் கேட்கும் ஒரே சத்தம், நாம் உட்காரும்போது லெதர் சீட்டில் இருந்து வரும் தேய்க்கும் சத்தம்தான். காருக்குள் உட்கார்ந்து கதவுகளைச் சாத்தியதும், காதில் மஃப்ளர் சுற்றியதுபோல வெளிச்சத்தம் கொஞ்சம்கூட உள்ளே கேட்கவில்லை. இதன் V12 இன்ஜின், வெண்ணெய் போல ஸ்மூத்தாக இயங்குகிறது. இரண்டு டர்போக்களும் இன்ஜினின் சக்தி வெளிப்பாட்டில் இணைந்து கொண்ட பிறகு, பெர்ஃபாமென்ஸ் இன்னும் சூப்பர்.

மெளனத்தின் மொழி!
மெளனத்தின் மொழி!
மெளனத்தின் மொழி!

ஆக்ஸிலரேட்டரை இன்னும் அதிகமாக அழுத்தினால், புயல் போலச் சீறினாலும் பெர்ஃபாமென்ஸையும் இன்ஜின் சத்தங்களையும் ஒன்றாகப் பார்த்தே பழகிய நமக்கு, இது கொஞ்சம் புதியதாக இருக்கிறது. ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரை ஓட்டுவதும் ஒரு வித்தியாசமான அனுபவம்தான். உயரமான, நீளமான பானெட்டின் மேல் இருக்கும் 'ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசி’ சிலையைப் பார்க்கும் விதமாக அமரவைக்கப்படுகிறோம். லெதர் ஸ்டீயரிங் வீலைத் தொடுவதற்கே கொடுத்துவைத்தது போல இருக்கிறது. இவ்வளவு நீளமான லாங்-வீல்பேஸ் கோஸ்ட் காரை ஓட்டுவதற்கு எளிதாகவே இருக்கிறது. ஸ்டீயரிங்கைக் கொஞ்சம் வளைத்தாலே போதும்; அழகாகத் திரும்புகிறது கோஸ்ட். ஆனால், கோஸ்ட் காரின் ஓட்டுதல் ஒன்றும் ஸ்போர்ட்டியாக இல்லை. சஸ்பென்ஷனை ஒரே ஒரு மோடில் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும் என்பதால், கார் கொஞ்சம் அசைந்தாடும். ஆனால், பக்கா அமைதியுடன் இது தரும் பெர்ஃபாமென்ஸை அனைவரும் வாழ்க்கையில் ஒருமுறை அனுபவிக்க வேண்டும்.

பென்ஸ் எஸ் கிளாஸ் காரை ஓட்டுவதும் எளிதாகவே இருக்கிறது. 2,500 ஆர்பிஎம் மேல் வெளிப்படும் டார்க் சிறப்பாக இருக்கிறது. இன்னும் மிதித்தால் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் பறக்கிறது எஸ் கிளாஸ். 'எஸ்’ மோடில் ஓட்டும்போது, கார் இன்னும் தன்னை ஸ்போர்ட்டியாக்கிக்கொள்கிறது. ஆக்டிவ் பாடி கன்ட்ரோல் சிஸ்டம், பாடி ரோல் ஆவதைத் தடுக்கிறது. பெரிய காரை ஓட்டுகிறோம் என்ற உணர்வே இல்லாமல், ஜாலியாக வளைத்து நெளித்து ஓட்டத் தூண்டுகிறது எஸ் கிளாஸ்.

பின்னிருக்கை வசதியைப் பொறுத்தவரை, மற்ற இரண்டு கார்களிலும் சோஃபா போல இருந்தாலும், பென்ட்லியின் பின்னிருக்கை சாதாரண காரின் சீட் போலத்தான் இருக்கிறது. ஆனால், சிவப்பு வண்ண லெதர், ஸ்பெஷலான மர வேலைப்பாடுகள், ஆங்காங்கே கலையுணர்ச்சியுடன் சேர்க்கப்பட்டு இருக்கும் க்ரோம் பூச்சுகள் என பிரமிப்பூட்டுகிறது இன்டீரியர். ஃப்ளையிங் ஸ்பர் சஸ்பென்ஷனில் நான்கு மோடுகள் உள்ளன. இதில் சாஃப்ட்டான மோடில் வைத்து ஓட்டும்போது, மேடு பள்ளங்களை காருக்குள் கடத்துவது இல்லை என்றாலும் மிகவும் ஷார்ப்பான பள்ளங்களில் மெல்லிய சத்தம் உள்ளே கேட்கிறது. டயர்கள், டேஷ்போர்டு, க்ரோம் ஏ.சி வென்ட்டுகள், கியர் லீவர் எல்லாம் உயர்தரத்துடன் பென்ட்லியின் பாரம்பரியத்தைப் போற்றும் விதமாக உள்ளன. ஆனால், விலை மதிப்புமிக்க இந்த காரில், சில இடங்களில் சாதாரண பிளாஸ்டிக் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.

மெளனத்தின் மொழி!

நம்புங்கள். ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரிலும் சில இடங்களில் சாதாரண பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டோர் பாக்கெட்டுகள், சென்டர் கன்ஸோலின் கீழ் பாகம் போன்றவை வீக். ஃபேன்டம் காரில் இது போன்ற சீப்பான பாகங்களை நீங்கள் பார்க்கவே முடியாது. ஆனால், இந்த லாங்-வீல்பேஸ் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் பின்பக்கம் உட்கார்ந்து வரும் அனுபவம் அருமையானது. இதன் சிறப்பம்சமான 'சூஸைடு’ டோர்கள் அகலமாகத் திறக்க, நாம் அப்படியே உடலை வளைத்து பின் சோஃபாவில் அமரும்போது ஒரு நல்ல ஃபீல் கிடைக்கிறது. கைகள், கால்கள், தொடைகள், தோள் பட்டைகள், முதுகு என அனைத்தும் பெர்ஃபெக்ட்டாக இருக்கையில் ஃபிட் ஆகிறது. கார் வேகமாகச் செல்கிறது என்பதையே, ஜன்னல் மூலம் வெளி உலகைப் பார்த்தால்தான் தெரியும். இதன் லாங்-டிராவல் சஸ்பென்ஷன், ஹை-ப்ரொஃபைல் டயர்கள், ஏர்-சஸ்பென்ஷன் அனைத்தும் சத்தமின்றி இயங்கி, வெளி உலகத்தை நம்மிடம் இருந்து பிரித்துவிடுகிறது.

பென்ஸ் எஸ் கிளாஸ் காரின் சஸ்பென்ஷனை 'கம்ஃபர்ட்’ மோடில் வைத்து விட்டு, எக்ஸிக்யூட்டிவ் இருக்கையை முழுவதும் சாய்த்துக்கொண்டால், வெளி உலகம் மறந்து தூங்கலாம். விலையுயர்ந்த 'பர்மெஸ்டர்’ ஆடியோ சிஸ்டம் உங்களுக்காக தனிக் கச்சேரியை நடத்த... 'லைப் இஸ் பெர்ஃபெக்ட்.’ பின்னிருக்கை சொகுசில் ரோல்ஸ்ராய்ஸை நெருங்கி விட்டது பென்ஸ்.

இந்த இரண்டு கார்களையுமே பென்ஸ் தோற்கடிக்கும் இடம் எது என்றால், அது காரின் உள் பக்கத் தரம்தான். டேஷ்போர்டின் டிசைனும் தரமும் சூப்பர். க்ரோம் ஏ.சி வென்ட்டுகள், லெதர், மிகவும் அருமையான மர வேலைப்பாடுகள். சீப்பான பிளாஸ்டிக்குகள் இங்கு இல்லை. அட, ஆன்போர்டு வை-ஃபை சிஸ்டம்கூட உண்டே!

தொலைநோக்குப் பார்வையுடன் வடிவமைக்கப்பட்ட பென்ஸ் எஸ் கிளாஸ், பாதுகாப்பு அம்சங்களிலும் ஃபர்ஸ்ட் கிளாஸ்தான். ஏகப்பட்ட தொழில்நுட்பங்களுடனும் நம் நாட்டில் 8 காற்றுப் பைகளுடனும் அறிமுகமாகியிருக்கிறது. ஐரோப்பாவில் இதே கார் 14 காற்றுப் பைகளுடன் விற்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மெளனத்தின் மொழி!

 616bhp சக்தியை அளிக்கும் W12 இன்ஜின் கொண்ட பென்ட்லி ஃப்ளையிங் ஸ்பர், நல்ல ஓட்டுதலையும், சொகுசு அம்சங்களையும் ஒரு சேரக் கொண்ட அரிதான கார்களுள் ஒன்று. இதன் இன்டீரியரில் இருக்கும் மர வேலைப்பாடுகளும் க்ரோம் பட்டைகளும் லெதரைப் பயன்படுத்திய விதமும் பென்ட்லியின் பாரம்பரியத்தை நினைவூட்டுகின்றன.

ரோல்ஸ்ராய்ஸ் லாங்-வீல்பேஸ் கோஸ்ட் மாடல் காரின் தோற்றமே, இது மகாராஜாக்களுக்கான கார் என்பது போன்ற உணர்வைத் தருகிறது. இதில் பயணிக்கும்போது கிடைக்கும் மரியாதையும், காருக்குள் இருக்கும்போது நிலவும் அமைதியும், ஓட்டுதல் தரமும் நம்மை வேறு ஓர் உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றன.

பென்ஸின் லேட்டஸ்ட் எஸ் கிளாஸ் கார், இந்த இரண்டு கார்களின் ப்ளஸ் பாயின்ட்டுகளைக்கொண்டிருப்பதுதான் இதன் உண்மையான ப்ளஸ் பாயின்ட். பென்ட்லியைப் போல வேகமாகவும் தீர்க்கமாகவும் செல்கிறது. பின் பக்கம் ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு இணையான சொகுசு அம்சங்களைக் கொண்டுள்ளது. முக்கியமாக, பக்கா மாடர்ன் சேஸியையும், பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. மூன்று கார்களின் விலையையும் ஒப்பிடும்போது, எஸ் கிளாஸ் கார்தான் கொடுக்கும் காசுக்கான முழுமையான கார் எனத் தெரிகிறது. ஆம், மெர்சிடீஸ் பென்ஸ் கிளாஸ் - 'தி பெஸ்ட் கார் இன் தி வேர்ல்டு!

தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

மெளனத்தின் மொழி!