Published:Updated:

ஷோ - ரூம் ரெய்டு - இந்த மாதம் MARUTI

ஷோ - ரூம் ரெய்டு - இந்த மாதம் MARUTI

 ##~##

அம்பாஸடர், கான்டஸா, ப்ரீமியர் பத்மினி போன்ற கார்கள் நொண்டியடித்துக்கொண்டிருந்த காலத்தில், இந்திய கார் மார்க்கெட்டுக்கு ஒரு புத்துணர்ச்சி தரும்விதமாக வந்தது மாருதி. இப்போதும் இந்திய கார் மார்க்கெட்டில் பெரும்பகுதி அதன் வசம்தான். மக்களிடையே மாருதிக்குத்தான் நம்பகத்தன்மை அதிகம். இந்த நிலையை அடைவதற்கு, மாருதி நிர்வாகம் கடுமையாக உழைத்திருக்கும். டீலர்களும் நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றித்தான் இந்த இடத்தை அடைந்திருப்பார்கள். அதனால், ஷோரூம் ஆட்கள் கலக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் கிளம்பினேன்.

 நாள்: 9 டிசம்பர் 2013 - ஏபிடி மாருதி

மாருதி எர்டிகாவைப் பற்றி விசாரிக்கலாம் என்பதுதான் திட்டம். போன் செய்யாமல் நேராக புல்லட்டை விரட்டிக்கொண்டு, அண்ணா சாலையில் இருக்கும் ஏபிடி ஷோ ரூமுக்குச் சென்றேன். வாசலில் இருந்த செக்யூரிட்டி, பைக்கை பார்க் செய்ய உதவினார். அண்ணா சாலையில் அருமையான இடத்தில் அமைந்துள்ளது இந்த ஷோரூம். இடம் விஸ்தாரமாக இருந்தாலும், அது ஏதோ ஒருவகையில் அரசாங்க அலுவலகத்தைப்போல இருந்தது. ஷோரூம் அநியாயத்துக்கு எளிமையாக இருந்ததுகூட காரணமாக இருக்கலாம்.

ஷோ - ரூம் ரெய்டு - இந்த மாதம் MARUTI

உள்ளே சென்ற நான், இரண்டு பாக்கெட்டிலும் கையைவிட்டு சற்று நேரம் காத்திருந்தேன். பார்வையை ஷோரூமுக்குள் சுழலவிட்டேன். இறுக்கிப் பிடித்து பல மாருதி கார்களை நிறுத்தியிருந்தார்கள். ரிசப்ஷனில் யாரும் இல்லை. அந்த 'செட்-அப்’பே சரியில்லை. சேல்ஸ் எக்ஸிக்யூடிவ்ஸ் அனைவரும் கும்பலாக நின்று, ஏதோ விவாதித்துக்கொண்டு இருந்தனர். ஒரு சின்னப் பையன் என்னிடம் ஒருவிதமான சந்தேகத்துடன், ''என்ன வேண்டும்?'' என்றார்.

''எர்டிகா கார் சேல்ஸ் என்கொயரி...'' என்றேன். அவருக்குப் புரியவில்லை.

''எர்டிகா... அப்புறம்?'' என்றார்.

''இல்லீங்க... எர்டிகா புது கார் சம்பந்தமா விசாரிக்கலாம்னு வந்திருக்கேன்!''

''கார் வாங்கப் போறீங்களா?''

''இல்லை, பார்த்துட்டுதான் முடிவு பண்ணணும். இப்ப ஜஸ்ட் என்கொயரி மட்டும்தான்!''

''அப்படியா? சரி, ஆனா வாங்கத் தானே போறீங்க?''.

''ஆமாங்க'' என்றேன், எப்படியாவது இந்த டயலாக்கை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கோடு.

''என்ன கார்?''

''எர்டிகா...''

''கார் உள்ளே இல்லை. வெளியே வர்றீங்களா... காட்டுறேன்?''

''சரிங்க'' என்றபடி அவருடன் வெளியே சென்றேன்.

பார்க்கிங்கில் ஒரு புது எர்டிகா நின்றுகொண்டு இருந்தது.

''பாருங்க'' என்றார்.

பார்த்தேன்.

''காரைத் திறக்க முடியுமா? என்றேன்.

''ஸாரிங்க, சாவி இல்லை. வெளில இருந்து பார்த்தாலே தெரியுமே? நல்லாப் பாருங்க!'' என்றார்.

நல்லாப் பார்த்தேன்.

டக்கென்று ஒரு பேப்பரை எடுத்துக் காட்டினார். லாக் புக் போல குட்டி எழுத்தில் கொசகொச என ஏதேதோ எழுதி இருந்தது. மாருதி, ஏகப்பட்ட மாடல்களில், ஏராளமான வேரியன்ட்டுகளை விற்பனை செய்கிறது. அதனால், நாம் விரும்பும் மாடலின் விலையைத் தேடுவது, மாலை செய்தித் தாளில் 2 ரிசல்ட் பார்ப்பது போலவே இருந்தது. அவர் உதவினார். ''இதுதாங்க விலை. எவ்ளோ டவுன் பேமன்ட் கட்டுவீங்க?''

''ரெண்டு லட்சம் கட்டுவேன்'' என்றதும், ''ஒண்ணும் பிரச்னை இல்லை. மீதிக்கு லோன் ஏற்பாடு செஞ்சிடலாம். எப்ப கட்டுறீங்க?'' என்றார்.

''கலர் என்னாங்க இருக்கு'' என்றேன்.

''நேராவே பாருங்க'' என அங்கேயும் இங்கேயும் பார்க்கிங்கில் அழைத்துக்கொண்டு போய், நான்கு கலரைக் காட்டினார். ''ஸ்போர்ட்டியான மஞ்சள் போன்ற கலர்கள் இல்லையா?'' என நான் கேட்டதும், ''தோ, இதான் கிரே கலர், இது ஸ்போர்ட்டி கலர்தான், இதுவும் மஞ்சளும் ஒண்ணுதான்'' என்றார்.

''சரிங்க, நான் பணத்தை ரெடி பண்ணிட்டு வர்றேன்'' எனக் கழன்று கொள்ளப் பார்த்தேன்.

''சார், அஞ்சாயிரம் கட்டி புக் பண்ணிடுங்க. மீதி எப்ப வேணாக் கட்டி, எப்ப வேணா டெலிவரி எடுத்துக்கலாம்'' என்று அப்போதே 5,000 ரூபாய் கட்டவைக்க முயற்சி செய்தார்.

இவ்வளவும் வெளியே பார்க்கிங்கில் நடந்தது. இவருக்கு கஸ்டமரை கார் வாங்கவைக்க வேண்டும் என்று மட்டும்தான் தெரிந்திருக்கிறதே தவிர, காரைப் பற்றி ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. இது அவரின் தவறு அல்ல. நிர்வாகத்தின் தவறு. வாடிக்கையாளர்களைப் பற்றி அவ்வளவு அலட்சியம். இவருக்கு டிரெயினிங் கொடுத்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. உருவத்தில் இவரை விட நல்ல பெர்சனாலிட்டியான ஆட்களும், பார்ப்பதற்கு எக்ஸ்பீரியன்ஸ்டு போலத் தோற்றமளிக்கும் ஆட்களும் ஷோரூமில் இருக்கிறார்கள். அவர்கள் என்னை அட்டெண்ட் செய்யவில்லை.  

பர்மா பஜாரில் சென்று குழந்தைகள் கார் வாங்கினால்கூட, பேட்டரி போட்டு ஓட்டிக் காட்டி, விளக்கங்கள் கொடுப்பார்கள். இங்கே நடந்ததோ அநியாயம்!

நாள்: 9 டிசம்பர் 2013 - கார்ஸ் இந்தியா

பார்க் ஷெரட்டன் செல்லும் வழியில் சிக்னலில் இருக்கிறது கார்ஸ் இந்தியா ஷோரூம். பார்க்கிங் வசதி சற்று சிரமம்தான். ஏதோ கஷ்டப்பட்டு மேனேஜ் செய்கிறார்கள். இட வசதியும் மிகக் குறைவு. ஷோரூம் அமைந்திருக்கும் லொகேஷன் மிகவும் ஜன சந்தடியான பகுதி; ஆனால், ஷோரூம் லுக் மிகச் சாதாரணம். பைக் ஷோரூம் போல உள்ளது. இருப்பதை வைத்து உள்ளே டீஸன்ட்டாக மெயின்டெயின் செய்ய முயற்சிப்பது தெரிகிறது.

ஷோ - ரூம் ரெய்டு - இந்த மாதம் MARUTI

உள்ளே நுழைந்ததும் ரிசப்ஷனில் பார்த்தேன், யாரும் இல்லை. எனக்கு இது பழகியிருந்தது. ரிசப்ஷனில் யாரேனும் இருந்து, ''வெல்கம் சார், ப்ளீஸ் கம் இன்!'' எனச் சொன்னால் மயங்கி விழும் அளவுக்கு என் மனம் மாறியிருந்தது. அதிர்ஷ்டவசமாக என் மீது மோதிவிடுவது போல ஒருவர் வந்து, சற்றே சுதாரித்து, ''என்ன வேணும் சார்?’ என்றார்.

''எர்டிகா சேல்ஸ் என்கொயரிக்காக வந்திருக்கேன்!'' என்றதும், ''உங்களுக்கா?'' எனக் கேட்டார்.

'எனக்குத்தான் சார்!'' என்றதும், ''வாங்க உட்காருங்க!'' என்று உபசரித்தபடி எதிரே அமர்ந்தார். ''எங்க இருந்து வர்றீங்க?'' என்று பேச்சை ஆரம்பித்தார். ஏரியா பேரைச் சொன்னதும், ''எங்கே ஆபீஸ்?'' என்றார். அதையும் சொன்னேன். இதையே இடையிடையே மூன்று முறை கேட்டார். இது என்ன புது சேல்ஸ் டெக்னிக் எனத் தெரியவில்லை. எர்டிகா விலைப் பட்டியலை எடுத்து, ''மிட்ரேஞ்ச் வேரியன்ட் வாங்கிக்கோங்க சார், அதான் எல்லோரும் வாங்குறாங்க. அதான் பெஸ்ட்!'' என்றார்.

அவ்ளோதான்.

சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசாமல் முக்கோணக் காதல் பிரச்னையில் மாட்டியவர்களைப் போல அமர்ந்திருந்தோம். நான் என் செல்போனை எடுத்து நோண்டினேன்.

நானே, ''எவ்ளோ மைலேஜ் கொடுக்குது?'' என்ற அரதப்பழசான கேள்வியைக் கேட்டேன்.

''ஃப்ராங்கா சொல்லட்டுமா? ஃப்ராங்கா சொன்னா... சிட்டிக்குள்ள 15 குடுக்கும்!'' என்றார்.

நான், ''அடுத்த மாசம்தான் வாங்கலாம்னு இருக்கேன்!'' என்றேன்.

''அடுத்த மாசம் விலை ஏறிடும்'' என ஒரு பேப்பர் கட்டிங்கைக் காட்டினார்.

''இப்பவே புக் பண்ணிவெச்சிடுங்க. பேப்பர்ஸ் ரெடியாகி, லோன் ரெடியாகி, எல்லாம் ரெடியா இருக்கும். அடுத்த மாசம் காரை எடுத்துக்கலாம்!'' என்றார்.

கூடவே, ''பத்தாயிரம் ரூபாய் டிஸ்கவுன்ட் தருவோம், பத்தாயிரம் ரூபாய் ஆக்சஸரீஸ் கொடுப்போம்!'' என்றார் (இதை எல்லாம் ஏபிடி-யில் சொல்லவில்லை).

காரைக் கண்ணில்கூடக் காட்டவில்லை. காரைப் பற்றி எந்தத் தகவலும் கூறவில்லை.

திடீரென அவராகவே எழுந்து விருட்டென சென்று ஒரு விசிட்டிங் கார்டை எடுத்துவந்து கொடுத்தார். ''வாங்கணும்னு டிசைட் பண்ணா, இந்த நம்பர்ல கூப்பிடுங்க!'' என்றார்.

எதற்கு எனத் தெரியாமலேயே இருவரும் கை குலுக்கி விடை பெற்றோம்.

நாள்: 12 டிசம்பர் 2013 - கிவ்ராஜ் மாருதி

மாலை நேரத்தில் சென்றேன். வெளிப் பார்வைக்கு ஷோரூம் நன்றாக இல்லை. வெளியே சின்ன அளவில் பார்க்கிங் வசதி உள்ளது. அதிக கூட்டம் வந்தால் போதாது. உள்ளே சென்றேன். உடனே ஒருவர் வந்து என்னை அட்டெண்ட் செய்தார்.

''மாருதி எர்டிகா?''

''கொட்டேஷன் வாங்க வந்திருக்கீங்களா?''

''ஆ... ஆமா...''

''வாங்க, உட்காருங்க!'' எனக் கூறி அமரவைத்தார்.

ஷோரூமின் இன்டீரியர் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. இங்கே எர்டிகா கார் உள்ளேயே நின்றுகொண்டு ஆச்சரியப்படுத்தியது.

ஷோ - ரூம் ரெய்டு - இந்த மாதம் MARUTI

மேலும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, ''டீ காபி, என்னா சாப்பிடறீங்க?'' என்று கேட்டார். ஏன் ஆச்சரியம் என்று சொல்கிறேன் என்றால், மற்ற ஷோரூம்களில் தண்ணீர் வேண்டுமா என்றுகூடக் கேட்கவில்லை. ''தண்ணீர் போதும்'' என்றதும், ஒரு பேப்பரை எடுத்து விலை, லோன் எடுத்தால் மாதம் எவ்வளவு கட்ட வேண்டும் என்பது போன்ற விபரங்களைத் தெளிவாக கொட்டேஷன் வடிவில் எழுதிக்கொடுத்தார். ''எப்ப எடுக்கப் போறீங்க?’ என்ற அவரது கேள்விக்கு, ''ஜனவரி'' என பதில் சொன்னேன்.

''டெஸ்ட் டிரைவ் போறீங்களா?'' எனக் கேட்டதும் திரும்பவும் ஆச்சரியம். இந்தத் தொடருக்காக சென்ற ஷோரூம் விசிட்களில் பிஎம்டபிள்யூவுக்கு அடுத்து, 'டெஸ்ட் டிரைவ் போறீங்களா?’ எனக் கேட்டது இங்கே மட்டுமே! 'போகலாம்!’ என்றேன்.

''இப்போ போக முடியாது. நாளைக்கு ஏற்பாடு பண்ணலாம். நீங்க இங்கே வர வேண்டாம். நாங்களே உங்க வீட்டுக்கு வந்துடுவோம்!'' என்றார். ''ஞாயிற்றுக்கிழமை சௌகரியம் என்றால் கூடச் சொல்லுங்கள். பரவாயில்லை!'' என்றார்.

கடைசியாக, '20,000 ரூபாய் டிஸ்கவுன்ட்’ தருவதாகச் சொன்னார். இதுவே, நான் அன்று பார்த்த டீலர்களில் அதிகபட்ச டிஸ்கவுன்ட்.

கை குலுக்கிவிட்டு எழுந்து வந்துவிட்டேன்.

நான் பார்த்த மூன்று டீலர்களுமே காரைப் பற்றியோ, காரின் சிறப்பம்சங்களைப் பற்றியோ விளக்கவே இல்லை. அதைப் பற்றிப் பேசவே இல்லை. எர்டிகாவில் இருக்கும் வேரியன்ட்டுகளைப் பற்றிக்கூடச் சொல்லவில்லை. நாம் ஏதேனும் கேட்டால், பதில் சொல்கிறார்கள். 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை விற்பதில் இவ்வளவு அலட்சியமா? ஆச்சரியமாக உள்ளது.

 அராத்து  ப.சரவணக்குமார்