Published:Updated:

மீட்டருக்கு மேலே பிரச்னை! எப்போது தீரும்?

நா.சிபிச்சக்கரவர்த்தி

மீட்டருக்கு மேலே பிரச்னை! எப்போது தீரும்?
##~##
மீட்டருக்கு மேலே பிரச்னை! எப்போது தீரும்?

ன்னையின் அடையாளமான ஆட்டோ, அண்மைக் காலமாக சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கிறது. ஆட்டோக்களுக்குப் புதிய கட்டண நிர்ணயம் செய்தது முதல் பல்வேறு பிரச்னைகள். மீட்டர் திருத்துவது; மீட்டர் போட்டு அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்குவது எனத் தொடங்கிய பிரச்னை, இப்போது ஸ்டிக்கர் ஒட்டுவதில் முட்டிக்கொண்டு இருக்கிறது. 'அரசு - ஆட்டோ ஓட்டுநர்கள் - பொதுமக்கள்’ - இந்த மூன்று தரப்பிலும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துகின்றனர். சமீபத்தில், மீட்டர் போட்டு அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களுக்கு, 'சிறந்த ஆட்டோ’ என ஸ்டிக்கர் ஒட்டப்படும் என அறிவித்தது காவல் துறை. இது, ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் சலசலப்பைக் கிளப்ப... பயணிகளோ, 'சூப்பர்’ என்கிறார்கள். ஆட்டோ டிரைவர்களுக்கு என்னதான் பிரச்னை? சென்னை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் நல சங்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினோம்.

'ஆட்டோவுக்குக் குறைந்தபட்சம் 25 ரூபாயும், ஒரு கிலோ மீட்டருக்கும் 12 ரூபாயும் அரசு நிர்ணயித்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு ஆட்டோ சராசரியாக ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டர் தூரம் இயங்குகிறது என்றால், அதில் பயணிகள் இல்லாமல் காலியாக 25 கிலோ மீட்டர் தூரமாவது இயங்கும். மீதம் உள்ள 75 கிலோ மீட்டரில்தான் வருமானம் ஈட்ட முடியும். ஒருவருடைய ஒருநாள் வருமானம், அதிகபட்சமாக 900 ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும் அதில் உள்ள செலவுகளையும் பார்க்க வேண்டும். ஒரு நாளைக்கு எரிபொருள் மற்றும் ஆயில் செலவு 400 ரூபாய்; ஆட்டோ வாடகை, 150 ரூபாய்; டிரைவரின் சாப்பாட்டுச் செலவுகள், 100 ரூபாய்; ஆக மொத்தம் 650 ரூபாய். ஒருநாள் வருமானம் 900 ரூபாய் என்றால், மொத்தச் செலவு மட்டுமே 650 ரூபாயாக இருக்கிறது. மீதம் இருப்பது 250 ரூபாய் மட்டும்தான். இந்த சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் எப்படிக் குடும்பம் நடத்த முடியும்?'' என்று கேட்டார், ஆட்டோ நலச் சங்க நிர்வாகியான ராஜி அசோக்.

''இது மட்டுமல்ல, ஆர்.டி.ஓ, போலீஸ் சோதனை என்ற பெயரில் கெடுபிடி அதிகம் செய்கிறார்கள். இப்போது ஸ்டிக்கர் வேறு ஓட்டுகிறார்கள். இதுவரை கேஸே இல்லாத ஆட்டோக்களுக்குச் சிவப்பு வண்ண ஸ்டிக்கரும், மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோக்களுக்கு நீல வண்ண ஸ்டிக்கரும் ஒட்டப்படும் என அறிவித்திருக்கிறார்கள். இது, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உள்ளேயே பிரிவினையை உருவாக்குவது போல இருக்கிறது.

எஸ்.எம்.எஸ், தொலைபேசி மூலம் வரும் ஆட்டோ மீதான புகாரின் பேரில், ஆட்டோ ஓட்டுநர்களின் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். சில இடங்களுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகள் கூப்பிடும் இடத்துக்குப் போக முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், ஆட்டோ வராத காரணத்தை வைத்துக்கொண்டும் வீண் புகார் செய்கிறார்கள். ஒரு புறம் அரசாங்கம், மற்றொருபுறம் மக்கள் என எங்களைக் கட்டம் கட்டிவைத்து அடிக்கிறார்கள்'' என்று குமுறினார் சங்கத் தலைவர் வெங்கடேசன்.

ஆனால், ஆட்டோ பயணிகள் தரப்பு, ''அழைத்த இடத்துக்கு வருவது இல்லை. மீட்டர் போடுவீர்களா என்று கேட்டால், ஏளனமாகப் பார்க்கிறார்கள். மீட்டருக்கு மேல் எவ்வளவு தருவீர்கள் என்று கேட்கிறார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது மீட்டர் போடும் வழக்கம் வந்துள்ளது. அதைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், புகார் செய்யாமல் என்ன செய்வது?'' என்கின்றனர்.

இது குறித்து போக்குவரத்து உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''முத்தரப்புக் குழு அமைத்து, ஒப்புக் கொண்ட கட்டணத்தில், குறிப்பிட்ட காலக்கெடு அளித்துத்தான் இதை அரசு அமல்படுத்தியுள்ளது. அதைக் கடைப்பிடிக்காமல் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுதான் எங்கள் பணி. எங்களுக்கு எந்தப் பாகுபாடும் இதில் இல்லை. ஸ்டிக்கர் விஷயம் பொதுமக்களுக்கு உதவுவதற்காகவே! இதைப் பார்த்து அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த வளையத்துக்குள் வருவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு வழக்குக் கூட பதியப்படாமல் இருக்கும் ஆட்டோக்களுக்கு மட்டும்தான் சிவப்பு ஸ்டிக்கர் அளிக்கிறோம். இப்போது 3,000 ஆட்டோக்களுக்கு இந்த ஸ்டிக்கர் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். இதுபோலச் செய்வதால், மக்களுக்கும் ஆட்டோக்கள் மீது நம்பிக்கை வரும். பல ஆட்டோ டிரைவர்களே இந்தத் திட்டத்தைப் பாராட்டுகிறார்கள்'' என்கிறார்.

ஆட்டோவுக்கும் மீட்டருக்கும் ஏழாம் பொருத்தம் என்பது முடிவுக்கு வரும் நாள் எப்போது?  

மீட்டருக்கு மேலே பிரச்னை! எப்போது தீரும்?

ப.சரவணக்குமார்

அடுத்த கட்டுரைக்கு