Published:Updated:

இமயமலையில் ஒரு பயணம்!

இமயமலையில் ஒரு பயணம்!

இமயமலையில் ஒரு பயணம்!

மயமலை எனும் வார்த்தையைக் கேட்டதும் பசுமையைப் போர்த்திய காடுகளும் உறைபனியால் சூழ்ந்த மலைத் தொடர்களும் நம் கற்பனையில் தோன்றி மறையும். இதுவரை நாம் பார்த்த புகைப்படங்களும் திரைப்படங்களும் இது போன்ற காட்சிகளை மட்டுமே காண்பித்துள்ளன. காஷ்மீர், பாகிஸ்தான் எல்லை, குலு-மணாலி, கார்கில், சீன எல்லை, எவரெஸ்ட் சிகரம் போன்ற குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே ஊடகங்களும் திரைப்படங்களும் நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளன. ஆனால், இவற்றைத் தாண்டி இமயமலைக்குப் பல்வேறு முகங்கள் உள்ளன. மனிதனின் கால் தடங்களும், கண் பார்வையும் படாதவை அவை!

இந்தத் தொடர் மூலம் நான் பார்த்த, வியந்த, ரசித்த, பயந்த இமயமலை அனுபவங்களை, உங்களோடு பகிர்ந்துகொள்ளப் பிரியப்படுகிறேன்.

'ஹிமாலயா’ எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு 'பனி உறைவிடம்’ எனப் பொருள். ஆப்கான் எல்லையில் துவங்கும் மலைத் தொடர்  பாகிஸ்தான், இந்தியா, சீனா, நேபாளம், பூடான் உள்ளிட்ட ஆறு நாடுகளில் 2,400 கி.மீ நீளத்துக்குப் பரந்து வியாபித்துள்ளது. பூகோள மற்றும் ஆன்மிக வரலாற்று ரீதியான விபரங்களைத்  தாண்டி, சாகசம் என்கிற ஏரியாவில் மட்டுமே இந்தத் தொடரில் நாம் பயணிக்கப் போகிறோம்.

இமயமலையில் ஒரு பயணம்!

இமயமலை என்றதுமே, உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் நம் நினைவுக்கு வந்துவிடும். எவரெஸ்ட்டின் உச்சிக்கு வாகனத்தில் போக முடியுமா?

உறைபனியால் உறைந்திருக்கும் எவரெஸ்ட்டின் அடிவார முகாமுக்கே (17,598 அடி உயரம்) கால்நடையாகத்தான் மலையேறிச் செல்ல வேண்டும். எவரெஸ்ட்டுக்கு பைக்கில் போக முடியாது. சரி;  ஆனால், எது வரையில் போகலாம்? எவரெஸ்ட்டைப்  போல நூற்றுக்கணக்கான உச்சிகளை இமயம்  தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றுள் மோட்டார் வாகனங்களால் சென்றடையக் கூடிய மிக அதிக  உயரம்கொண்ட உச்சி, 'கர்துங் லா.’ கடல் மட்டத்தில் இருந்து இதன் உயரம் 18,379 அடி. இதற்கு  அடுத்தபடியான அதிக உயரம் கொண்ட இரண்டு  உச்சிகளும்கூட நாம் பயணிக்கப் போகும் வழித் தடங்களில்தான் அமைந்துள்ளன.

உறைபனியையும் பனிப்பாலைகளையும் ஜாலியாகவும் அதே சமயத்தில் சாகச அதிரடித் திருப்பங்களுடனும் புல்லட்டில் சுற்றப் போகிறோம். கூடவே கொஞ்சம் தலைச் சுற்றலுடனும்தான்!

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலமான சிம்லாவில் இருந்து, வடக்கு நோக்கி மணாலி வரை ஆண்டு முழுவதும் எந்த ஒரு பருவ காலத்திலும் சென்றடையலாம். சாலை வசதிகளும் நன்கு அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை சாதாரண பயணமாகப் பயணிக்கலாம். மணாலியில் இருந்து ரொதாங் கனவாய் (Rohtang Pass)ஐ கடந்து கெலாங் நகரின் வழியாக வடக்கு நோக்கி ’லே’ நகரம் (லடாக் பிராந்தியம்) வரை சுமார் 475 கி.மீ பயணிப்பது சாகசப் பயணம்.

இமயமலையில் ஒரு பயணம்!

இது போலவே, சிம்லாவில் இருந்து கிழக்கு நோக்கி சர்ஹான், கல்பா போன்ற நகரங்கள் வரை சாலைகள் ஓரளவுக்குச் சுமாராக அமைந்திருக்கும். கல்பாவில் இருந்து நேகோ, காசா, லோசர் வழியாக சுற்றிவந்து கெலாங்- ஐ அடைவது உச்சகட்ட சாகசப் பயணமாக அமையும். இங்கே இருக்கும் நேகோ கிராமத்தில் இருந்து சற்று நேர நடைப் பயணத்தின் மூலமாக சீன எல்லையை அடைந்துவிடலாம். காசாவுக்கு அருகில் 10,700 அடி உயரத்தில் அமைந்துள்ள டேபோ எனும் சிறு கிராமம், உலகின் மிகப் பழமையான மலை உச்சி கிராமமாகும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான புத்த மடாலயத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளதே இந்தக் கிராமத்தின் வரலாற்றுச் சிறப்பு.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாத இறுதியில் துவங்கும் கடும் பனிப்பொழிவின் காரணமாக, நான் மேலே சொன்ன இடங்கள் அனைத்தும் 40 அடி வரை உறைபனியால் சூழ்ந்துவிடும். கோடை துவங்கி உறைபனி உருக ஆரம்பித்ததும் மே மாதத்தின் இறுதி அல்லது ஜூன் மாதத்தின் தொடக்கத்தில்தான் மணாலியில் இருந்து லே செல்லும் சாலையும் கல்பாவிலிருந்து காசா வழியாக கெலாங் செல்லும் சாலையும் பொதுமக்கள் பயணிப்பதற்கு அனுமதிக்கப்படும்.

இந்த வழித் தடங்களில் குறைந்த அளவிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். காரணம், வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே சாலைகள் திறக்கப்படும். உலகின் உச்சிகளில் அமைந்துள்ள அபாயகரமான சாலைகள் இவை. கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 12,000 அடி உயரம்கொண்டவை. கடும் குளிரில் பயணிக்கவும் தங்கவும் நேரிடும். உயரம் செல்லச் செல்ல ஆக்ஸிஜன் குறைபாட்டால் மூச்சுத் திணறல், தலைவலி, வாந்தி, மயக்கம், உடல் சோர்வு ஏற்படும். இதனை Acute Mountain Sickness (AMS) என்பார்கள்.

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் மூலமாக, ஆண்டுதோறும் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, 'ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஒடிஸி’ எனும் பெயரில் தில்லியில் இருந்து இமயமலையை நோக்கி புல்லட்டுகளில் சாகசப் பயணம் கிளம்புவார்கள். சகலவிதமான மருத்துவ வசதிகளுடன் மெக்கானிக்களும் உடன் பயணிப்பர். இந்தத் தேர்வுக்கு, குறைந்தபட்ச உடல் தகுதியாக ஒரு மணி நேரத்துக்குள் 5 கி.மீ நடக்க வேண்டும்; 100 புல்-அப்ஸ் எடுக்க வேண்டும். ஒரு ஆண்டு தேர்வாகிச் சென்றவரே, போட்டி போட்டுக்கொண்டு அடுத்தடுத்த ஆண்டுகளிலும் முந்துவார்கள். காந்தந்தைப் போல இமயமலைகள் சாகசப் பயணத்துக்கு நம்மை ஈர்த்துக்கொண்டே இருக்கும்.

வெளிநாட்டுப் பயணிகளை முக்கியமாக இங்கே குறிப்பிட வேண்டும். நம் நாட்டின் மிகப் பெரும் பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்குக்கூட இந்த ஸ்தலங்களைப் பற்றி சரிவர தெரிந்திருக்காது. ஆனால், மிகச் சாதாரணமான நடுத்தர வர்க்க வெளிநாட்டுப் பயணிகளுக்கு, இமயமலை குறித்தும் அதன் வழித் தடங்கள் குறித்தும் தெளிவான பார்வையும் திட்டமிடலும் உண்டு என்பதை என் அனுபவத்தில் உணர்ந்தேன். ஆண்களுடன் அசாத்திய தைரியம்கொண்ட பெண்களும் ஜோடியாக புல்லட்டுகளில் பயணிப்பதைக் காண முடியும்.

இவ்வளவு பூகோளச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் அட்டகாசமான சாகச அனுபவங்களையும் கொண்ட இமயமலைத் தொடரை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தால் தவற விட்டுவிடுவோமா என்ன?

இனி பயணிப்போம்!

(சிகர்...ரூம்)