Published:Updated:

ஹைடெக் செக்யூரிட்டி நம்பர் பிளேட்டுகள்!

- நா.இள.அறவாழி படங்கள்: ஜெ.முருகன்

திருட்டு வாகனங்களையும் போலி பதிவு எண்கொண்ட வாகனங்களையும் மிகச் சுலபமாகக் கண்டுபிடிக்க, ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது புதுச்சேரி சாலைப் போக்குவரத்துத் துறை. சாலைப் போக்குவரத்துத் துறை ஆணையர் சுந்தரேசன், 'பாதுகாப்புப் பதிவு எண் பலகை’ குறித்து விரிவாகப் பேசினார்.

ஹைடெக் செக்யூரிட்டி நம்பர் பிளேட்டுகள்!

''புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2012 ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். இந்தப் பதிவு எண் பலகை, பல வகைகளில் பாதுகாப்பு வசதிகள் கொண்டது. திருட்டு வாகனங்களை எளிதில் அடையாளம் காண முடியும். ஏனென்றால், இந்தப் பலகையை எளிதில் போலியாக உருவாக்க முடியாது'' என்றவர், இது எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதையும் சொன்னார்.

பதிவு எண் பலகை அலுமினியத் தகட்டில் தான் உருவாக்கப்படுகிறது. இதில், அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்ட குரோமியம் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டடப்பட்டுள்ளது. இதைக் கிழிக்க முடியாது. அதற்குக் கீழே 'ஐஎன்டி’ என நம் நாட்டின் அடையாளத்தைக் குறிக்கும்விதமாக, நீல நிறத்தில் ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். அதற்குக் கீழே அல்லது பக்கவாட்டில், ஒவ்வொரு பலகைக்கும் பிரத்யேக எண்கள், அலுமினியத் தகட்டில் அச்சாக அழுந்திப் பதிந்திருக்கும்.  ஒரு வாகனத்தில் இரு பலகைகளுக்கும் வெவ்வேறு பிரத்யேக எண்கள் (யுனிக் நம்பர்ஸ்) இருக்கும்.

ஹைடெக் செக்யூரிட்டி நம்பர் பிளேட்டுகள்!

புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கு பதிவு எண் ஒதுக்கப்பட்டதும், அந்த எண்களை உயரழுத்த முறையில் அலுமினியத் தகட்டில் பதித்து, அந்தத் தகட்டை 'ஃபாயில்’ இயந்திரத்தினுள் செலுத்தி, எழுத்து அச்சுகள் மீது கறுப்பு நிற ஃபாயில் ஒட்டப்படுகிறது. கறுப்பு நிற ஃபாயில் எழுத்துகள் அழிந்தாலும் அழித்தாலும் பின்னணியில் எண்ணின் அச்சு அப்படியே இருக்கும் என்பதுதான் இதன் சிறப்பு. பின்பு, மத்திய அரசின் 'வாஹன்’ என்ற இணையதளத்தில், குறிப்பிட்ட பதிவு எண் பலகையை உபயோகிக்கும் வாகனத்தின் உரிமையாளர், பதிவு எண்கள், பிரத்யேக எண்கள் போன்ற எல்லா விஷயங்களும் பதிவு செய்யப்படும்.

கடைசியாக, வாகனத்தில் பதிவு எண் பலகைகளை 'ரிவிட்’ முறையில் பொருத்தி விடுவோம். ஒருமுறை பொருத்தப்பட்ட நம்பர் பிளேட்டை ரிவிட்டை அகற்றித் திரும்ப எடுப்பது மிகவும் கடினம். 

ஹைடெக் செக்யூரிட்டி நம்பர் பிளேட்டுகள்!

காருக்கு, இரண்டு பதிவு எண் பிளேட்டுகளுடன் மூன்றாவதாக பதிவு எண் ஸ்டிக்கர் ஒன்றையும் விண்ட் ஸ்கிரீனில் ஒட்டுகிறோம். இந்த ஸ்டிக்கரைக் கிழிக்க முடியாது. கிழிக்க முற்பட்டால், இரு துண்டுகளாக அந்த ஸ்டிக்கர் வந்துவிடும் (செல்ஃப் டிஸ்ட்ரக்டிவ் ஸ்டிக்கர்). இந்த ஸ்டிக்கரில், வாகனத்தின் பதிவு எண், இன்ஜின் நம்பர், சேஸி நம்பர் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

பொதுவாக, வாகனங்களைச் சோதனை செய்யும்போது, அது திருட்டு வாகனமா என்பதைக் கண்டுபிடிப்பது சிரமாக இருந்தது. தற்போது அந்த நிலைமை இல்லை. எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் லேப்டாப் மூலம் மத்திய அரசின் 'வாஹன்’ இணையதளத்துக்குச் சென்று, உடனுக்குடன் சோதித்துப் பார்க்கலாம். இதன் மூலம் போலி பதிவு எண் பயன்படுத்துவர்களைச் சுலபமாகப் பிடிக்க முடியும்.

உயர் பாதுகாப்புப் பதிவு எண் பலகை பெற கட்டணம் உண்டு. இரு சக்கர வாகனத்துக்கு 111 ரூபாய், நான்கு சக்கர வாகனத்துக்கு 326 ரூபாய், கன ரக வாகனத்துக்கு 364 ரூபாய் கட்டணம். பதிவுச் சான்றிதழ், இன்ஷூரன்ஸ், உரிமையாளரின் அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்தால், பழைய வகைப் பதிவு எண் பலகைகளையும் மாற்றிக்கொள்ளலாம்'' என்றார் சுந்தரேசன்.

இந்தத் திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு வகுத்துவிட்டது. ஆனால், டெண்டர் பிரச்னை மற்றும் நிர்வாகச் சிக்கல்களால், பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுக்குப் பிறகு தற்போது புதுச்சேரி, டில்லி, கோவா, சட்டீஷ்கர், அந்தமான் நிக்கோபார் போன்ற இடங்களில் இது நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு எப்போதும் வரும் என்பதுதான் தெரியவில்லை.

அடுத்த கட்டுரைக்கு