Published:Updated:

மோட்டார் கிளினிக்

கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி-பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்

நான் 2012 மாடல் ஹோண்டா சிட்டி கார் வைத்திருக்கிறேன். பெட்ரோல் மாடலான இதை, 25,000 கி.மீ வரை ஓட்டியிருக்கிறேன். இப்போது, புதிய ஹோண்டா சிட்டி டீசல் காரைப் பார்த்ததும், என் பெட்ரோல் மாடலை விற்பனை செய்துவிட்டு, புதிய டீசல் மாடலை வாங்கலாம் எனத் தோன்றுகிறது. புதிய டீசல் ஹோண்டா சிட்டி எப்படி இருக்கிறது? மேலும், என்னுடைய பெட்ரோல் ஹோண்டா சிட்டி இப்போது யூஸ்டு கார் மார்க்கெட்டில் எவ்வளவு விலை போகும்?

- த.டேனியல் வின்சென்ட், திருச்சி.

புதிய ஹோண்டா சிட்டி இப்போது நன்றாக விற்பனையாகிறது. அமேஸில் இருந்த அதே 'எர்த்ட்ரீம்ஸ்’ டீசல் இன்ஜின்தான் சிட்டி டீசல் காரிலும் இருக்கிறது. இதில் சத்தமும், அதிர்வுகளும் அதிகம் என்று சொல்லப்பட்டாலும், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருப்பதால், மிக அருமையான மைலேஜ் அளிக்கிறது. உங்களுக்கு டீசல் சிட்டி பிடித்திருந்தால், தாராளமாக வாங்கலாம். ஆனால், பெட்ரோல் சிட்டியில் நீங்கள் அனுபவித்த ஸ்மூத்னெஸ், அமைதி ஆகியவை டீசல் சிட்டியில் இருக்காது. டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்ததால், உங்களால் இன்னும் திடமாக முடிவெடுக்க முடியும். உங்களுடைய பெட்ரோல் சிட்டிக்கு எப்போதுமே பழைய கார் சந்தையில் மதிப்பு அதிகம். நீங்கள் எந்த வேரியன்ட்டை வைத்திருக்கிறீர்கள் எனக் குறிப்பிடவில்லை. 25,000 கி.மீ ஓடிய 2012 ஹோண்டா சிட்டி பெட்ரோல் கார், பழைய கார் சந்தையில் 5.5 லட்ச ரூபாயில் இருந்து 7 லட்ச ரூபாய் வரை விலை போகும்.

நான் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 4.5 லட்ச ரூபாய்க்குள் ஒரு பெட்ரோல் கார் வாங்க விரும்புகிறேன். ஒரு நாளுக்கு 40 கி.மீ-க்கு மேல் ஓட்ட மாட்டேன். எனக்கு புதுச்சேரி என்பதால், வாங்கப்போகும் காருக்கு புதுச்சேரியில் சர்வீஸ் ஸ்டேஷன் இருக்க வேண்டும். காரின் மைலேஜ் லிட்டருக்கு 15 கி.மீ வரை இருந்தால் நலம். நான் இப்போது ஹூண்டாய் சான்ட்ரோ ஜிங் அல்லது மாருதி ஆல்ட்டோ கே10 ஆகிய இரண்டு கார்களில் ஒன்றை வாங்கலாம் என இருக்கிறேன். இதில் எது பெஸ்ட்? இது இல்லாமல், நீங்கள் வேறு காரைப் பரிந்துரைத்தாலும் ஓகே!

- ஸ்ரீநிதி, புதுச்சேரி

புதுச்சேரியில் மாருதி சுஸ¨கி மற்றும் ஹூண்டாய் ஆகிய இரண்டு நிறுவனங்களின் கார்களுக்குமே டீலர்ஷிப்புகள் உள்ளன. ஆல்ட்டோ கே10 மற்றும் ஹூண்டாய் சான்ட்ரோ ஜிங் ஆகிய இரண்டு கார்களுமே உங்களுடைய கண்டிஷன்களான மைலேஜ், விலை மற்றும் சர்வீஸ் ஆகியவற்றைத் திருப்திப்படுத்தும். இந்த இரண்டு கார்களை ஒப்பிடும்போது, மாருதி ஆல்ட்டோ கே10 இன்ஜின் விஷயத்தில் பெட்டர் என்பதால், அதை வாங்கலாம்.. ஆனால், சந்தையில் புதிதாக வந்திருக்கும் டட்ஸன் கோ காரையும் நீங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். டட்ஸன் கோ காரும் 4 லட்ச ரூபாய்க்குள்தான் விற்பனைக்கு வந்திருக்கிறது. நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 15 கி.மீ-க்கு மேல் மைலேஜ் அளிக்கும் டட்ஸன் கோ. இந்த மூன்று கார்களிலும் இதுதான் பவர்ஃபுல். ஆனால், புதுச்சேரியில் டட்ஸன் ஷோரூம் கிடையாது என்பதுதான் ஒரே மைனஸ்.

நான் ஹூண்டாய் ஐ10 வைத்திருக்கிறேன். 2009- ம் ஆண்டு மோட்டார் விகடன் படித்துத்தான் இந்த காரை வாங்கினேன். இப்போது புதிதாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட செடான் காரை வாங்க விரும்புகிறேன். ஒரு மாதத்துக்கு 700 கி.மீ, அதுவும் சென்னைக்குள்தான் ஓட்டுவேன். எனது பட்ஜெட் 8 முதல் 11 லட்ச ரூபாய். ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ரேபிட், ஃபோர்டு ஃபியஸ்டா, நிஸான் சன்னி ஆகியவற்றில் எனக்கு ஏற்ற ஆட்டோமேட்டிக் செடான் கார் எது? - எம்.அனந்தராமன், சென்னை.

மோட்டார் கிளினிக்

நீங்கள் சொல்லும் பட்ஜெட்டுக்குள் ஃபோக்ஸ்வாகன் வென்ட்டொ, ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி ஆகிய கார்களின் ஆட்டோமேட்டிக் மாடல் வராது.  ஸ்கோடா ரேபிட் ஆம்பிஷன் ப்ளஸ் ஆட்டோமேட்டிக், ஃபோர்டு ஃபியஸ்டா ஸ்டைல் ஆட்டோமேட்டிக், நிஸான் சன்னி ஙீலி சிவிடி ஆகிய கார்களின் வேரியன்ட்கள் உங்களுடைய பட்ஜெட்டுக்குள் அடங்கும். இதில், நிஸான் சன்னி ஆட்டோமேட்டிக்தான் விலை குறைந்தது. ஃபோர்டு ஃபியஸ்டா ஆட்டோமேட்டிக் காருக்கு ரீ-சேல் வேல்யூ குறைவு. எனவே, ஸ்கோடா ரேபிட் ஆம்பிஷன் ப்ளஸ் ஆட்டோமேட்டிக்தான் உங்களுக்கு ஏற்ற கார். விலை குறைவாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், தாராளமாக நிஸான் சன்னி வாங்கலாம். டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு முடிவெடுங்கள்.

நான் டாடா மான்ஸா 2010 மாடல் வைத்திருக்கிறேன். பெரும்பாலும் நெடுஞ்சாலையில்தான் பயணம் மேற்கொள்வேன். மணிக்கு 100 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்து ஓட்டுவேன். ஆனால், ஒருமுறை உணர்ச்சிவசப்பட்டு காரை மணிக்கு 155 கி.மீ வரை ஓட்டிப் பார்த்தேன். அப்போது காரின் முன்பக்க வலது வீல் மட்டும் அதிர்வதைப்போல உணர்ந்தேன். இந்த அதிர்வை ஸ்டீயரிங் வீலில்கூட என்னால் உணர முடிந்தது. பிறகு அதை மறந்துவிட்டேன். ஆனால், சமீபத்தில் இதே அனுபவம் திரும்பவும் ஏற்பட்டது. காரை ஓட்டி முடித்துவிட்டு பார்க்கிங் செய்யும்போதுதான் முன்பக்க வலது வீலின் டயர் மட்டும் மோசமாகத் தேய்ந்திருப்பதைக் கவனித்தேன். என்ன ஆச்சு என் காருக்கு?

- கே. திருக்குமரன், மதுரை.

குறிப்பிட்ட வேகத்தில் காரின் முன்பக்க வீலில் இருந்து அதிர்வுகள் வந்தால், காரின் வீல் அலைன்மென்ட் அல்லது வீல் பேலன்ஸில் பிரச்னை இருக்கலாம். கடைசியாக எப்போது உங்கள் கார் அலைன்மென்ட் செய்யப்பட்டது என்று நீங்கள் குறிப்பிடவில்லை. முதலில் காரை ஒரு பிரத்யேக வீல் அலைன்மென்ட் / பேலன்ஸிங் சென்டருக்கு எடுத்துச் சென்று, அங்கு உங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள். பின்னர், காரின் டயர்களை ரொட்டேட் செய்துவிட்டு வீல் அலைன்மென்ட் மற்றும் பேலன்ஸிங் செய்துவிடுங்கள். இது முடிந்தவுடன் டெஸ்ட் டிரைவ் செய்து திரும்பவும் அதிர்வுகள் வருகிறதா என்று பாருங்கள். வராவிட்டால் பிரச்னை இல்லை. வந்தால், காரின் முன்பக்க சஸ்பென்ஷனிலும் பிரச்னை இருக்கலாம். கவனிக்காமல் விட்டால், வீல் பேரிங் பழுதாகிவிடும்.

நான் ஐந்து ஆண்டுகளாக ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஓட்டிவருகிறேன். இப்போது புதிய ஸ்கூட்டர் ஒன்றை வாங்கலாம் என இருக்கிறேன். 100 முதல் 125 சிசி திறனுள்ளதாகவும், நல்ல பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் கொண்டதாகவும் இருக்க வேண்டும். டிஸ்க் பிரேக் இருக்கும் ஸ்கூட்டர் எனக்கு வேண்டாம். நான் அதிகமாக நகரத்தில்தான் ஓட்டுவேன் என்பதால், சஸ்பென்ஷன் அதற்கேற்றவாறு டியூன் செய்யப்பட்டு இருந்தால் நல்லது. பட்ஜெட், ரீ-சேல் வேல்யூ போன்றவை முக்கியம் இல்லை. - ஹிந்துஜா ராஜேந்திரன், சென்னை.

நீங்கள் சொல்வதை வைத்து ஆராயும்போது, உங்களுக்குச் சரியான ஸ்கூட்டர் டிவிஎஸ்

மோட்டார் கிளினிக்

ஜூபிட்டர்தான். இந்த ஸ்கூட்டரில் டிஸ்க் ப்ரேக் கிடையாது. முன் பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் என்பதால், சென்னையில் இருக்கும் ஸ்மூத்தான, அதேசமயம் மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில் ஈஸியாக பயணிக்க முடியும். டிவிஎஸ் ஜூபிட்டர், ஆண்களுக்கான ஸ்கூட்டர் போலத் தெரிந்தால், ஹோண்டா ஆக்டிவா வீ ஸ்கூட்டர் வாங்கலாம். இதில் 'காம்பி பிரேக் சிஸ்டம்' (சிஙிஷி) இருப்பதால், பாதுகாப்பான பிரேக்கிங்கும் கிடைக்கும்.

என் குடும்பத்தில் 6 பேர். நாங்கள் வசதியாகச் செல்வதற்கு ஏற்ற ஒரு பெரிய கார் வாங்க வேண்டும். பட்ஜெட் 20 லட்ச ரூபாய். நான் அவ்வப்போது சின்னச் சின்ன சாகசத்திலும் ஈடுபடுவேன். அது, 'ஆல்ரவுண்டர்’ காராக இருந்தால் மகிழ்ச்சி. ஆனால், குடும்பத்துடன் நெடுஞ்சாலையில் சொகுசாக க்ரூஸ் செய்வதற்கு ஏற்றதுபோல கார்தான் முதல் தேவை.  - ஜி.ராஜா, கோவை

20 லட்சம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் 6 பேர் சொகுசாகச் செல்லக்கூடிய கார் எனப் பார்த்தால் - டாடா சஃபாரி ஸ்டார்ம், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, மஹிந்திரா எக்ஸ்யூவி 500, டாடா ஆரியா ஆகிய கார்கள் இருக்கின்றன. உங்களுடைய தேவைகளாக 'நெடுஞ்சாலையில் சொகுசாக க்ரூஸ் செய்வது’ மற்றும் 'சின்னச் சின்ன சாகசங்கள்’ ஆகியவற்றைக் கூறியிருக்கிறீர்கள். இதில் சின்னச் சின்ன சாகசங்கள் செய்ய ஏற்ற கார்களாக இருப்பது டாடா சஃபாரியும், மஹிந்திரா ஸ்கார்ப்பியோவும்தான். இவை இரண்டுமே அடிப்படையில் ரியர் வீல் டிரைவ். ஆனால், ஸ்கார்ப்பியோ நெடுஞ்சாலையில் சொகுசாக க்ரூஸ் செய்ய ஏற்றது கிடையாது. எக்ஸ்யூவி 500 காரில் 6 பேர் பயணிக்க முடியும் என்றாலும், சாகசங்கள் செய்ய ரிஸ்க் எடுக்க முடியாது. உங்களுக்கு ஏற்ற கார் டாடா ஆரியாதான். அருமையான 'க்ரூஸிங்’ காரான இதில், 6 இருக்கைகளும் நன்றாக இருக்கும். ரியர் வீல் ட்ரைவ் என்பதால், 'சின்னச் சின்ன’ சாகசங்களைத் தாராளமாக செய்யலாம். ஆனால், இந்த சாகசங்கள் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், ஆரியாவில் இன்டர்கூலர் தாழ்வாக அமைக்கப்பட்டு இருக்கும்.