Published:Updated:

மலைப்பு... மயக்கம்... மர்மம்....3

இமயமலையில் ஒரு பயணம்!கணேசன் அன்பு

சிம்லாவில் இருந்து மணாலிக்கு 270 கி.மீ. 'பியாஸ்’ எனும் நதிக்கரையை ஒட்டிய பயணம். சிம்லாவில் இருந்து மணாலிக்கு இரண்டு வழித்தடங்கள் இருந்த போதிலும்,  நதிக்கரையை ஒட்டிய இந்த நெடுஞ்சாலையைத்தான் ஓட்டுநர் தேர்ந்தெடுத்தார். வழிநெடுகிலும் பசுமை நிறைந்த இமாலய மலைத் தொடர்கள். ஒரு மலையைக் கடந்தால், இன்னொரு மலை. நான்கு திசைகளிலும் மலைகளே இருந்தாலும், மலையின் அடிவாரத்திலேயே சாலை அமைக்கப்பட்டு இருந்தது. மலை ஏறாமலேயே மலைகளைக் கடந்தோம். பல இடங்களில் மலையைக் குடைந்து சாலை அமைத்திருந்தார்கள். சாலையின் மற்றொரு முனையை பியாஸ் நதி அரிக்க முயன்று கொண்டிருந்தது. இந்த நதியானது, சாகசப் பயணத்தின் முதலாவது கணவாய் ஆன, மணாலியை அடுத்த 'ரொதாங் பாஸ்’-ல் ஊற்றெடுக்கிறது.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....3

தேனீர் அருந்தவும் ஓய்வெடுக்கவும் ஆங்காங்கே சிறுசிறு நகரங்களில், சாலையோர விடுதிகள் இருந்தன. மதிய உணவுக்குப் பிறகு, குல்லு நகரை அடைந்தபோது மாலை 5 மணி. மணாலிக்கு 50 கி.மீ முன்பாக குல்லு நகரம் இருக்கிறது. இங்கும்கூட நகரைச் சுற்றிலும் மலைகள். இதுவரை பார்த்ததைக் காட்டிலும் பசுமை கூடுதலாக இருந்தது. பொதுவாக, 'குலுமணாலி’ என்ற பெயரே வழக்கத்தில் உள்ளது. ஆனால், அந்த ஊரின் பெயர் குல்லு. குல்லுவில் தேனீர் மற்றும் சிறு ஓய்வினைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு மணி நேரத்தில் மணாலியை அடைந்தோம். இந்த நகரின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 6,700 அடி. மணாலியின் மூன்று திசைகளுக்கும் மலைகளே எல்லை. மலை உச்சிகளில் பனி படர்ந்திருந்தது. தென் திசையில் குல்லு நகரை நோக்கிய பள்ளத்தாக்கு.

எங்கள் பயணத் திட்டம் இதுதான்: சிம்லா, மணாலி, ஜிஸ்பா, சார்ச்சு, லே, பெங்காங் ஏரி, கர்துங் லா, கார்கில்  ஸ்ரீநகர்.

தங்குவதற்கான விடுதி, வாகன வசதி, எல்லைப் பகுதிகளில் பயணிப்பதற்கான அனுமதி போன்றவற்றை முன்பே டூர் ஆபரேட்டர் ஒருவர் மூலமாக ஏற்பாடு செய்திருந்தோம். (இணையதளம் அல்லது சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் டூர் ஏஜென்ட்கள் கிடைப்பார்கள்).

மணாலி அடைந்தபோது டூர் ஆபரேட்டர் எங்களை வரவேற்கத் தயாராக இருந்தார். அவரிடம் அடுத்த நாள் திட்டம் குறித்து விவாதித்தோம். மணாலியில் தொன்மையான கிராமம் ஒன்றினைச் சுற்றிப் பார்க்க அனைவரும் ஆர்வமாக இருந்தோம். அதற்கான ஏற்பாட்டை அவர் பொறுப்பில் விட்டுவிட்டோம். மேலும், வாடகை புல்லட்கள் அடுத்த நாள் மாலை தயாராகிவிடும் எனத் தெரிவித்தார். அடுத்த நாள் மதிய உணவுக்காக, 'ஃபேட் ப்ளேட் மணலி கஃபே’ எனும் ரெஸ்டாரன்ட் ஒன்றைப் பரிந்துரைத்தார் டூர் ஆபரேட்டர். அங்கு 'ட்ராட் ஃபிஷ்’ மிகவும் பிரபலம் என்றார். அதற்கேற்றபடியே, மூன்று வகையான சுவையுடன் நன்கு சமைத்திருந்தார்கள். ரம்மியமான சூழலில் மதிய உணவுக்குப் பிறகு, மணாலி நகரின் தென்கிழக்கே சுமார் 10 கி.மீ தொலைவில் இருந்த ஷ§ரு (ஷிலீuக்ஷீu) என்ற கிராமத்தை நோக்கி, ஆப்பிள் தோட்டங்களுக்கு மத்தியில், ஒற்றையடிப் பாதையில் ஊர்ந்து சென்றோம். இருபுறமும் பச்சை, இளம்பச்சை, சிவப்பு என பல வண்ணங்களில் ஆப்பிள்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மரத்தின் எடையைக் காட்டிலும் தொங்குகிற ஆப்பிள்களின் எடையே அதிகமாக இருந்தது. அந்தப் பரவச மிகுதியில் அனைவரும் ஆளுக்கொரு ஆப்பிளைப் பறித்து சாப்பிட்டோம்.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....3

நாங்கள் நடந்து சென்ற ஒத்தையடிப் பாதையின் இருபுறம் மட்டுமின்றி, ஆப்பிள் தோட்டம் முழுவதுமே கஞ்சா செடிகள் படர்ந்திருந்தன. இது மேலும் ஆச்சரியம் அளித்தது. ஒரு மணி நேர நடைப் பயணத்துக்குப் பிறகு கிராமத்துக்குள் நுழைந்தோம். பெரும்பாலும் பழைமையான வீடுகள். 'ரோஜா’ திரைப்படத்தில் அரவிந்தசாமியைக் கடத்தி வைத்திருந்த வீடு மற்றும் சந்துகளைப்போலவே இங்கு வீடுகளும் சந்துகளும் இருந்தன. வீட்டுக்கு ஒரு ஆப்பிள் மரம் இருந்தது. ஆப்பிள் தோட்ட முதலாளிகள் என்பதால், பெரும்பாலான வீடுகளில் கார் வைத்திருந்தனர்.

மலை உச்சியில் இருந்து வழிந்தோடிய சிறுசிறு நீரோடைகள் அனைத்துமே, முறையாக கால்வாய் அமைக்கப்பட்டு வீதியோரம் ஓடிக்கொண்டிருந்தன. நம்மூர் சாலை ஓரங்களில் சாக்கடை ஓடுவதைப்போல, அந்தப் பழமையான கிராமத்தின் சாலையோரக் கால்வாயில் நன்னீர் ஓடிக்கொண்டு இருந்ததைப் பார்த்து, பெருமூச்சுதான் விட முடிந்தது. ஆங்காங்கே இருந்த தெருக் குழாய்களுக்கு  நீரோடைகளில் இருந்து நேரடியாக குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. கிராம மக்களின் முகங்களில் அப்பாவித்தனமும் குழந்தைத்தனமும் ஒருசேரக் குடியிருந்தன. அவர்களுக்குச் சொந்தமான மரங்களில் இருந்து ஆப்பிளைப் பறித்து உண்டபோதும், லேசான புன்முறுவலை மட்டுமே வெளிப்படுத்தினர்.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....3

இரண்டு மணி நேரம் ஊரின் உள்ளே நடைப் பயணம். ஊர் சுற்றிய களைப்பு தீர சிறிது ஓய்வு எடுக்கத் தீர்மானித்தோம். ஆனால், ஓட்டுநரோ, தேனீர் பருகிவிட்டு உடனடியாக ஹடிம்பா தேவி கோவிலுக்குப் புறப்படுமாறு வற்புறுத்தினார். கோவிலுக்குச் செல்வதாக முன்திட்டம் இல்லை. ஆனால், ஓட்டுநர் வற்புறுத்தலின் பேரில் கிளம்பினோம்.

கோவிலை அடைந்தபோது இரவு 7 மணி. இருப்பினும் ஓரளவுக்கு வெளிச்சம் இருந்தது. அடுத்தடுத்த நாட்களில் நாங்கள் பயணிக்கவிருக்கும் 'மலைகளின் அரசி’ ஹடிம்பா தேவி. ஆக, சாகசப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இந்தக் கோயிலைத் தரிசிப்பது அவசியம் என ஓட்டுநர் தெரிவித்தார். அவர் சொல்லி முடிக்கும் முன்பு, 12 பேரும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினோம். இங்கு இருக்கும் ஓட்டுநர்களும் மணாலியில் இருந்து லே செல்லும்போது, இந்தக் கோயிலைத் தரிசிக்கத் தவறுவது இல்லையாம்.

பழங்காலத்தில் ஹடிம்பா தேவி இந்த இடத்தில் கால் தடம் பதித்ததாகவும், இன்னொரு கால் தடத்தை ரொதாங் பாஸில் பதித்ததாகவும் ஒரு புராண நம்பிக்கை உண்டு என ஓட்டுநர் தெரிவித்தார். கூகுள் மேப் உதவியுடன் இந்தக் கோயிலின் அருகினில் கால் தடம் போன்றதொரு பிம்பம் இருப்பதை நீங்களும் காணலாம். கோயிலைப் பற்றிய இன்னொரு தகவல், 'ரோஜா’ படத்தில் மதுபாலா ஒரு கோயிலுக்கு வரும்போது, அரவிந்தசாமி கடத்தப்படுவார் அல்லவா? அந்தக் கோயில் இதுதான்.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....3

கோயிலைத் தொடர்ந்து, அடுத்த நாள் பயணத்துக்கான பர்சேஸிங்கில் இறங்கினோம். சிம்லாவைப் போலவே இங்கும் அழகான மால் ரோட் உண்டு. பயணத்துக்குத் தேவையான முக்கியப் பொருட்களான டார்ச் லைட், மெழுகுவத்தி, சாக்லேட், குளுகோஸ், டேபிள் கத்தி, டிஷ்யூ பேப்பர், வாஸ்லின், லிப் கார்ட், தலைவலி/வாந்தி/காய்ச்சல் மாத்திரைகள், எனர்ஜி டிரிங்ஸ், பிஸ்கட், பழங்கள், தண்ணீர் பாட்டில்கள், ஆக்ஸிஜன் ஸ்ப்ரே, பிளாஸ்டிக் தட்டு ஆகியவற்றை வாங்கினோம்.

ஹடிம்பா கோயில், மால் ரோட் பர்சேஸ் முடித்து விடுதி வந்தபோது, புல்லட் பைக்குகள் தயாராக இருந்தன. கூடவே அதிர்ச்சியும்.

புல்லட்களை ஓட்டிப் பார்த்தால், பிக்-அப் இல்லை; புல்லட்டுக்கு உண்டான சப்தம் இல்லை. 2012 மாடல் புதிய பைக் எனக் கூறினார் டூர் ஆபரேட்டர். ஆனால், 2002 மாடல் 'கட்டை வண்டியை’ ஓட்டுவதைப்போல இருந்தது. கடைசி நிமிடம் என்பதால், வேறு வழியின்றி அந்த புல்லட் பைக்குகளிலேயே பயணிக்க முடிவெடுத்தோம் (இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம், அடுத்த ஏழு நாட்களும் பைக்குகளால் எந்த ஒரு தடங்கலும் ஏற்படவில்லை).

வாடகை புல்லட் பற்றி இன்னொரு தகவலைக் குறிப்பிட விரும்புகிறேன். சாகசப் பயணம் மேற்கொள்பவர்கள், மணாலியில் பைக்குகளை வாடகைக்கு எடுத்து லே நகரில் இருக்கும் ஏஜென்ட்களிடம் அவற்றை ஒப்படைத்துவிட வேண்டும். லேவில் இருந்து, திரும்பவும் மணாலிக்குக் கொண்டுசெல்ல, புல்லட் ஒன்றுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும். ஒருவேளை, அதே புல்லட்டில் நாம் மணாலிக்குத் திரும்பவதாகத் திட்டமிருந்தால், இந்தச் சிக்கல் இல்லை. இது தவிர, புல்லட்டின் ஒருநாள் வாடகை 1,500 ரூபாய் (பழக்கமில்லாத வாடகை புல்லட்களைத் தவிர்க்க விரும்புகிறவர்கள், சண்டிகர் வரை ரயில் மூலம் தங்களது பைக்குகளைக் கொண்டுசெல்லலாம். சண்டிகரிலிருந்தே நமது புல்லட் பயணத்தைத் தொடங்க வேண்டும். மணாலியில் இருந்து மலையேறுவதற்கு முன்பு, லோக்கல் மெக்கானிக் மூலமாக முழுமையாகப் பரிசோதித்துக் கொள்ளவேண்டியது அவசியம்).

பிக்-அப் இல்லாத புல்லட், கூடுதல் கட்டணம் என ஏமாற்றம் இருந்தபோதிலும், மணாலிக்கு வடக்கே விண்ணை முட்டிக் கொண்டிருந்த ரொதாங் பாஸ்-ஐ கடந்துச் செல்லும் தருணத்துக்காகக் காத்துக்கொண்டே கண் அயர்ந்தோம்.

புல்லட் வந்தாச்சு. இனி சீற வேண்டியதுதான்!

(சிகர்...ரூம்)