Published:Updated:

“இசுஸூ என்றால் எனக்கு இஷ்டம்!”

ISUZU MU-7வீ.கே.ரமேஷ், படங்கள்: ரமேஷ் கந்த சாமி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ங்க குடும்பத் தொழில், விவசாயம். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியபட்டியில் வசிக்கிறோம். எங்கள் தோட்டம் சத்தியமங்கலம் மலைப் பகுதியில் இருக்கும் பருகூரில் இருக்கிறது. அடிக்கடி தோட்டத்துக்கு கார் அல்லது ஜீப்பில்தான் போய் வருவோம். என்னிடம் ஏற்கெனவே டாடா சஃபாரி, ஃபோர்டு எஸ்கார்ட், நிஸான் டெரானோ, மஹிந்திரா ஜீப் உட்பட பல கார்கள் இருக்கின்றன.

“இசுஸூ என்றால் எனக்கு இஷ்டம்!”

ஆனால், ஸ்ட்ராங் மற்றும் பாதுகாப்பு - இது இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஒரு காரை வாங்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தேன். அது, என்னிடம் இருக்கும் கார்களைவிட பெஸ்ட்டான காராகவும் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, மோட்டார் விகடனில்  ஜப்பான் இசுஸ¨ நிறுவனத்தின் எம்யூ-7 மாடல் காரைப் பற்றி வந்திருந்தது. காரின் டிஸைனைப் பார்த்ததுமே, என் மனதைக் கவர்ந்துவிட்டது.

ஷோரூம் அனுபவம்

கோவையில் உள்ள இசுஸ¨ டீலரான கேயுஎன் ஷோரூமுக்குச் சென்றேன். ஷோரூமில் இருந்த அனைவரின் அணுகுமுறையும் நன்றாகவே இருந்தது. நான் எழுப்பிய சந்தேகங்களுக்குத் தெளிவான பதில் கொடுத்தார்கள். அதனால், காரைப் பற்றிய என்னுடைய எதிர்பார்ப்பு அதிகரித்தது. டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கச் சொன்னார்கள். சுமார் 120 கிலோ மீட்டர் தூரம் அந்த காரிலேயே எங்கள் வீடு வரை வந்தார்கள். கார் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. உடனே புக் செய்துவிட்டேன். காரை டெலிவரி செய்யும் வரை தினசரி தொடர்பில் இருந்தார்கள். கார் டெலிவரி எடுத்த பிறகு, இசுஸ¨ நிறுவனத்தின் ஜப்பான் பிரதிநிதி ஒருவர் வீட்டுக்கு வந்தார். ''உங்களை எங்கள் வாடிக்கையாளராகப் பார்க்கவில்லை. எங்கள் இசுஸ¨ குடும்ப உறுப்பினராகப் பார்க்கிறோம்'' என்றார்.

எப்படி இருக்கிறது இசுஸ¨?

தமிழ்நாட்டில் இரண்டாவதாக நான்தான் இந்த காரை வாங்கினேன் என நினைக்கிறேன். டெலிவரி எடுத்து ஓட்ட ஆரம்பித்த பிறகு, நான் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக இருந்தது. அதனால் நண்பர்கள், உறவினர்கள் என எனக்குத் தெரிந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் இந்த காரின் அருமை பெருமைகளைச் சொல்லியிருப்பேன். காரின் விலை 28.5 லட்சம். லிட்டருக்கு 12 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கிறது. காரின் உள்ளே நல்ல இட வசதி  இருக்கிறது. டிக்கியில் ஒரு குடும்பத்துக்கான பொருட்களை வைத்துக்கொள்ளலாம். உள்ளே இரண்டு டச் ஸ்கிரீன் எல்சிடி மானிட்டர்கள் இருக்கின்றன. டிஷ் ஆன்டெனா பொருத்திக்கொள்ள வசதி செய்திருக்கிறார்கள். மற்றபடி ஏ.சி, ஆடியோ சிஸ்டம், சீட் எல்லாமே சூப்பராக இருக்கின்றன. ஒரு பெரிய காரை ஓட்டுகிறோம் என்ற உணர்வே இல்லாமல், மிகச் சுலபமாகக் கையாள முடிகிறது. 3.0 லிட்டர் இன்ஜின் செம ஸ்மூத். பெரும்பாலும் 100 முதல் 120 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்து ஓட்டுகிறேன்.

“இசுஸூ என்றால் எனக்கு இஷ்டம்!”

சர்வீஸ்

கார் வாங்கி ஆறு மாதம்தான் ஆகிறது. ஸ்பேர் ஸ்பார்ட்ஸ் சென்னையிலேயே கிடைக்கிறது. வாரன்ட்டி இருப்பதால், கவலை இல்லை. ஆனால், சர்வீஸ் செய்ய கோவைக்குத்தான் செல்ல வேண்டும். ஃபோர்டு எண்டேவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகிய கார்களோடு ஒப்பிடும்போது, இசுஸ¨ எனக்கு இஷ்டமான காராக இருக்கிறது.

பிடித்தது

இந்த காரில் முதலில் எனக்கு ரொம்பப் பிடித்தது, பிரேக். டாப் கியரில் பறந்தாலும், பிரேக் அடித்தவுடனே நிற்கிறது இசுஸ¨. மேலும், எவ்வளவு தூரம் பயணம் சென்றாலும் இன்ஜின் சூடாவதோ, அதிர்வு ஏற்படுவதோ கிடையாது. அடிக்கடி மலைப் பகுதிக்குச் செல்வதால், ஹெட் லைட் சிறப்பாக இருக்க வேண்டும். இந்த காரைப் பொறுத்தவரை ஹெட்லைட் தூரமாகவும், பவர்புஃல்லாகவும் வெளிச்சம் கொடுக்கிறது. எவ்வளவு வேகமாகப் போனாலும் சாலைக்கும் காருக்கும் க்ரிப் பக்காவாக இருக்கிறது. அதனால், டயர்களைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மலைச் சாலைக்குத் தகுந்த டயர்கள். பல சமயம் ஸ்பீடோ மீட்டர் முள்ளைப் பார்த்த பிறகுதான் இவ்வளவு வேகமாகவா செல்கிறோம் என்ற உணர்வு வருகிறது. அந்த அளவுக்கு சொகுசான பயண அனுபவத்தை இது அளிக்கிறது. இப்படி காரின் ஒவ்வொரு பாகமும் எனக்கு மிகவும் பிடித்திருப்பதால், இந்த காரை ஓட்டுவதற்கு மிகவும் பிடிக்கும்.    

பிடிக்காதது

எனக்கு இந்த காரில் ஒரே ஒரு சின்ன வருத்தம் மட்டும்தான். அது, கடைசி வரிசை இருக்கைகளில் குழந்தைகள் உட்காரும்போது எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதில் பெரியவர்கள் உட்காருவது ரொம்ப சிரமம். சீட்டின் உயரம் குறைவாக இருப்பதால், பெரியவர்கள் காலை மடித்துத்தான் உட்கார வேண்டும். இதனால் கால் வலி ஏற்படுகிறது. அதைத் தாண்டி இந்த காரில் ஒரு சின்ன குறைகூடக் கண்டுபிடிக்க முடியவில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு