சிவகாசி அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தில் இருந்து, வாசகர் ஜெயபாரதியின் ஐ20-யில் ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்புக்காகக் கிளம்பியபோது, ஐபிஎல் மேட்ச்சில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மோதிக் கொண்டிருந்தன. இந்தமுறை கெயில் சதமும் அடிக்கவில்லை; செவல்பட்டியில் வெயிலும் அவ்வளவாக வதம் செய்யவில்லை. பயணத்தின்போது, ஹூண்டாய் ஐ20-ன் கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி-யும் ரொம்பப் பாடுபடவில்லை.

''பணத்துக்கும் பயணத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம்; பணம் - வரும்போது ஆமை வேகத்தில் வரும். போகும்போது முயல் வேகத்தில் போய்விடும். இதுவே பயணம் என்றால், அப்படியே உல்டாவாக இருக்கும். போகும்போது முயல் வேகத்தில் கிளம்புவோம்; திரும்பி வரும்போது ஆமை வேகத்தில் தொய்வடைந்து விடுவோம்! கரெக்ட்டா?'' என்று பாடம் நடத்தியபடி முயல் வேகத்தில் கிளம்பினார் ஜெயபாரதி. 'ஒருவேளை டீச்சரா இருப்பாரோ’ என்று நாம் நினைத்தது சரிதான். சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் ஜெயபாரதி, கல்வியின் மீதும் ஆட்டோமொபைல் மீதும் அளவு கடந்த ஆர்வம் கொண்டவர்.

''என் முதல் கார் ரெனோ லோகன். ஐ20 - என்னோட இரண்டாவது கார்! 40,000 கி.மீ ஓட்டிட்டேன். இன்னும் இதுல பயணம் போறது எனக்கு அலுக்கவே இல்லை!'' என்று ஜிபிஎஸ்-ஸில் திருநெல்வேலி, நாகர்கோவில், மணக்குடி, தொட்டிப்பாலம் வழியாக திற்பரப்பு அருவிக்கு ரூட் மேப் செட் செய்தார். ''எத்தனையோ அருவிகள் இருந்தாலும், சின்ன வயசுல திற்பரப்பு அருவியில குளிச்சது இன்னும் என்னால மறக்க முடியலை. இப்போ மோட்டார் விகடன் மூலமா பல வருஷம் கழிச்சு, எனக்கு அது நிறைவேறப் போறது ரொம்ப சந்தோஷமா இருக்கு!'' என்றார் ஜெயபாரதி.

பொதுவாக, ஹூண்டாய் கார்களில் எப்போதுமே ஓட்டுதல் தரம், கையாளுமையைப் பற்றி அவ்வளவாக ஃபீட்பேக் இருக்காது. ஆனால், சொகுசு மற்றும் வசதிகளில் என்றைக்குமே கஸ்டமர்களைக் கஷ்டப்படுத்தாது ஹூண்டாய். ஐ20-யிலும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ப்ளூ-டூத், சென்ட்ரல் - ரிமோட் லாக்கிங், ஸ்டீயரிங் அட்ஜஸ்ட், ஸ்டீயரிங் ஆடியோ கன்ட்ரோல் என்று வசதிகள் குவிந்திருக்கின்றன. டீசல் இன்ஜினின் உடன்பிறப்பான 'அதிர்வுகள்’ அவ்வளவாகத் தெரியவில்லை.

மேலும், எல்லா வீல்களிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன், ஏபிஎஸ், இபிடி, காற்றுப் பைகள் என்று பாதுகாப்பு வசதிகளிலும் குறை இல்லை. 4 சிலிண்டர் கொண்ட 1.4 லிட்டர் டீசல் இன்ஜினை உறுமவிட்டுக் கிளப்பினோம். 22.4 ளீரீனீ டார்க் இருப்பதால், பிக்-அப் பிரமாதமாக இருக்கிறது. 1,500 ஆர்பிஎம் வரை டர்போ லேக் இருப்பதால், ஆரம்ப வேகத்தில் கொஞ்சம் மந்தமாகவே இருக்கிறது ஐ20. அதிக வேகத்தில் ஸ்டீயரிங் சென்சிட்டிவ்வாக, அதாவது லேசாக இருப்பதை உணர முடிந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், கிட்டத்தட்ட 140 கி.மீ வரை அசால்ட்டாகப் பயணிக்க உதவுகிறது.

கன்னியாகுமரிக்குச் செல்ல நெடுஞ்சாலையில் இருந்து இடதுபுறம் திரும்ப வேண்டும். நேராகப் போனால், சாலை கடற்கரையில் முடிவடைவது வித்தியாசமாக இருக்கிறது. ஆனால், மகாதானபுரம் பாலம் கட்டுமான வேலை நடைபெறுவதால் (அதாவது, கிடப்பில் போடப்பட்டிருப்பதால்) 'டேக் டைவர்ஸன்’ எடுக்க வேண்டும். கோவளம் கிராமத்துக்கு வலதுபுறம் திரும்பினால், 'பே வாட்ச்’ என்னும் அம்யூஸ்மென்ட் பார்க் இருக்கிறது. இங்கே பெரியவர்களுக்கு 300 ரூபாயும், சிறுவர்களுக்கு 200 ரூபாயும் வசூலிக்கிறார்கள். இங்கு முக்கியமான விளையாட்டு, வாட்டர் கேம்ஸ்தான். குழந்தைகளுக்கு இது செம ஜாலி ஸ்பாட்.

கடற்கரை வழியாகவே நேராகப் போனால், மணக்குடி கிராமம். எந்நேரமும் மீன் வாசமும், கடல் அலையடிக்கும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மணக்குடி, சுனாமிக்குப் பிறகுதான் பிரபலமானது. 2004-ல் ஏற்பட்ட சுனாமியில், இங்குள்ள பாலம் தலைக்குப்புறக் கவிழ்ந்து கிடப்பது, இப்போது சுற்றுலாத் தலமாக மாறி மிரட்டுகிறது. சுற்றுலா வந்த சிலர், ''கன்னியாகுமரிக்கு டூர் வந்தோம். மணக்குடி பாலம் பத்திச் சொன்னாவ.. அதான் அப்படியே ஒரு எட்டு வந்தோம்'' என்றார்கள்.

கடலும் கடல் சார்ந்த இடமான மணக்குடியில் இருந்து, முட்டம் கடற்கரைக்குத் திரும்பினோம். உலகின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான மெரினா மாதிரி தள்ளுமுள்ளுகள் இல்லாத, அழகிய கடற்கரை - முட்டம். அலைச் சீற்றத்தின்போது, சில நேரங்களில் கரையிலிருந்தே ஆழம் ஆரம்பிப்பதால், இங்கு குளிக்கத் தடை. இங்குள்ள சின்ன லைட் ஹவுஸில் ஏறி நின்று, மொத்த கடல் அழகையும் ரசிக்கலாம். சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையும் இங்கிருந்து பார்ப்பது ரம்மியம்.

அங்கிருந்து ஐ20 அடுத்ததாக நின்ற இடம் குளச்சல். சின்ன கடற்கரை நகரமான குளச்சலுக்கு மிகப் பெரிய வரலாறு உண்டு. வாஸ்கோடகாமா, இதை 'குளச்சி’ என்று அழைத்ததாகச் சொல்வார்கள். 1741 ஆகஸ்ட் மாதம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது குளச்சல். திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்டவர்மனுக்கும், டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கும் கடுமையாகப் போர் நடந்த இடம் - குளச்சல் கடற்கரைதான். வரலாற்றில் ஒரு இந்திய நிலப்பரப்பைச் சேர்ந்த அரசு, ஐரோப்பிய கடற்படையை முதன்முறையாக வெற்றிகொண்ட இடம் என்ற பெருமை குளச்சலுக்கு உண்டு. டச்சு - கிழக்கிந்திய கம்பெனியினரின் தோல்விக்குப் பிறகு, பிரிட்டீஷ் கடற்படை அட்மிரல் டெலன்னாய், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திருவிதாங்கூர் கடற்படையில் முதன்மை அட்மிரலாகப் பணிபுரிந்தது இந்திய வரலாற்றிலும், பிரிட்டிஷ் வரலாற்றிலும் மறக்க முடியாத ஒன்று. குளச்சலில் இருந்து சில கி.மீ தொலைவில் இருக்கும் உதயகிரி கோட்டை, அட்மிரல் டெலன்னாய்யின் நினைவாக எழுப்பப்பட்டதே!

வரலாற்றை அசைபோட்டபடியே நாம் அடுத்துச் சென்ற இடம், சங்குதுறை. இதுவும் ஆளரவமற்ற, அடிபிடிகள் இல்லாத அம்சமான கடற்கரை. சோழர்கள் காலத்தில் இங்கு கட்டப்பட்டுள்ள பெரிய கலங்கரை விளக்கத்தின் மீது ஏறிப் பார்த்தால், விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் அருமையாக ரசிக்கலாம். சங்குதுறைக்கு ஏற்ற நேரம் - மாலை நேரம்தான். தங்க நிறத்தில் சூரியன் மறையும் அழகை இங்கிருந்து ரசிப்பது சுகம்.

சங்குதுறையில் இருந்து 7 கி.மீ பயணித்து மீண்டும் நாகர்கோவிலில் தங்கிவிட்டு, மறுநாள் திற்பரப்புக்கு ஐ20-யைக் கிளப்பினோம். ''போற வழியில் தொட்டிப் பாலத்தைப் பார்த்துட்டுப் போலாமே?'' என்று ஐடியா கொடுத்தார் ஜெயபாரதி.

நாகர்கோவிலில் இருந்து சரியாக 20 கி.மீ தாண்டி, பரளியாற்றின் மேலே பிரம்மாண்டமாக நம்மை வரவேற்றது, ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலமான மாத்தூர் தொட்டிப் பாலம். 1966-ல் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரால் கட்டப்பட்டது இந்தப் பாலம். காமராஜரிடம், அவரின் சாதனைகளைப் பற்றிப் பேசிய ஒரு சினிமா அதிபர், ''ஐயா, 4 லட்ச ரூபாய் இருந்தால், உங்கள் சாதனைகளைப் பற்றி ஒரு திரைப்படம் பண்ணலாம்!'' என்றதற்கு, ''5 லட்ச ரூபாயில் நான் ரெண்டு பள்ளிக்கூடமோ, தொட்டிப் பாலம் மாதிரி பாதியோ கட்டி முடிச்சுப்புடுவேன் சாரே!'' என்றாராம்.

கிட்டத்தட்ட வெறும் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், 7.5 அடி அகலத்தில், 28 தூண்களைக் கொண்டு, 115 அடி உயரத்தில், ஒரு கி.மீ. நீளத்துக்கு, தென்குமரியின் விவசாயப் பாசனத்திற்காகக் கட்டப்பட்ட இந்தத் தொட்டிப் பாலம், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் இருந்து, பரளியாற்றின் தண்ணீரை, இன்னொரு புறத்திற்கு, அதன் புவியீர்ப்பு விசையிலேயே கொண்டுவரும் அழகு, அற்புதம்!

'கணினியைத் தட்டி ஆயிரம் மென்பொருள் தயாரிக்கலாம்; ஆனால், ஒரு நெல்மணியைத் தயாரிக்க முடியாது!’ என்பதுபோல, ஆயிரம் ஆயிரம் வசதிகள் வந்தாலும், இன்னும் விவசாயம்தான் நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது என்பதற்குச் சாட்சியாக தொட்டிப்பாலம், தென்குமரியின் விவசாயத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறது.

நாம் சென்ற நேரம், நீர்வரத்து இல்லாமல் வெயிலில் வறண்டு போயிருந்தது தொட்டிப் பாலம். ஆனால், கீழே பரளியாற்றில் தண்ணீர் வரத்து இருந்தது. ஆற்றில் நீரின் வேகம் சில நேரங்களில் அதிகம் இருப்பதால், 'நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே இறங்க வேண்டும்’ என்ற எச்சரிக்கைப் பலகையைப் படித்துவிட்டு, தண்ணீரில் டைவ் அடிப்பது நலம். கும்பலாக வந்து குளித்துவிட்டுப் போகும் சில குடும்பங்களின், அழகான அழிச்சாட்டியங்களை ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

சரியாக 24 கி.மீ தொலைவில், 'குமரி குற்றாலம்’ என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவி, 'ஹோ’வென்ற பேரிரைச்சலுடன் நம்மை வரவேற்றது. 'கோதையாறு’ எனும் நதியிலிருந்து கிளம்பும் திற்பரப்பு அருவி, 50 அடி உயரத்தில் இருந்து விழுவதால், அருவி நீரை நேரடியாகத் தலையில் வாங்கிக் குளிப்பதற்கு, நமக்கு பில்டிங்கும் பேஸ்மென்ட்டும் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் கீழே கெட்டிக் கிடக்கும் அருவி அகழியிலும் அதகளம் பண்ணிக் குளிப்பதால், எந்நேரமும் பெருசுகளும், சிறுசுகளுமாக பரபரப்பாக இருக்கிறது திற்பரப்பு. அருவிக்கு நுழைவுக் கட்டணம் 5 ரூபாய். கன்னாபின்னா இரைச்சலுடன் திற்பரப்பு அருவி நீர் அழகாக கிராமம் முழுவதும் வழிந்தோடுவது, கேரளாவை நினைவூட்டுகிறது.

திற்பரப்பு அணையில் போட்டிங் உண்டு. நான்கு பேர் கொண்ட பெடல் போட்டிங்குக்கு 100 ரூபாயும், துடுப்பு போட்டுக்கு 150 ரூபாயும் கட்டணம். திற்பரப்பு அணை ஓர மீன் கடைகளில் கிடைக்கும் 'கௌலா’ எனும் அணை மீன் வறுவல், சைவ பார்ட்டிகளைக்கூட நா ஊற வைக்கும். திற்பரப்பு அருவிக்கு சீஸன் டைம் உண்டு. வருடத்தில் ஏழு மாதங்கள் மட்டுமே நீர் வரத்து இருப்பதால், ஐந்து மாதங்கள் சுற்றுலாவாசிகளின் வரத்து குறைவாகவே இருக்கும் என்றார்கள். ஆற்றின் இன்னொரு பக்கம் உள்ள சிவன் கோவில், ரொம்பப் பிரசித்தம். இங்குள்ள மகாதேவரைத் தரிசித்துவிட்டு, அணை மீனை ருசித்துவிட்டு, கிரேட் எஸ்கேப்புக்கு 'எண்ட் கார்டு’ போட்டுவிட்டுக் கிளம்பினோம்.

ஜெயபாரதி சொன்னது போலவே, முயல் வேகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பயணம், இப்போது செவல்பட்டி நோக்கி ஆமை வேகத்துக்கு மாறி இருந்தது.

வாசகர்களே!

நீங்களும் இதுபோல் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி (044 - 66802926) தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!