Published:Updated:

மலைப்பு... மயக்கம்... மர்மம்....4

கணேசன் அன்பு

மலைப்பு... மயக்கம்... மர்மம்....4

புல்லட்டை கிக் செய்ததும், ஷேவாக் போல ஆக்ரோஷமும் அதிரடியும் காட்டாமல், டிராவிட் போல ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையுடனும் மன உறுதியுடனும் ஆக்ஸிலரேட்டரை முறுக்குவதே சாகசப் பயணத்துக்கு ஏற்றது. பைக் ஓட்டிகளுக்கு லெதர் ஜாக்கெட், லெதர் கிளவுஸ், வாட்டர்  புரூஃப் ஷூ ஆகியவை மிகவும் அவசியம். இவை, மணாலி 'மால் ரோட்’ மார்க்கெட்டில் ஓரளவுக்குத் தரத்துடன் கிடைக்கின்றன. சென்னையில், சென்ட்ரல் அருகே பெரியமேடு 'பஞ்சாப் நேஷனல் பாங்க்’ சுற்றுப் பகுதிகளில் 2,000 ரூபாயில் இருந்து தரமான லெதர் ஜாக்கெட்டுகள் கிடைக்கின்றன. இவை குளிரைச் சமாளிக்க உதவுவதுடன், வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாலும் எளிதில் கிழியாது. சிராய்ப்புகளில் இருந்து பாதுகாக்க, லெதர் ஜாக்கெட் உதவும். ராயல் என்ஃபீல்டு ஷோரூம்களில், பனிமலைப் பயணத்துக்கான இன்னபிற உபகரணங்கள் கிடைக்கின்றன.

திட்டமிட்டபடி ஐந்தாம் நாள் காலை 7.30 மணிக்கு அனைவரும் தயாராக நின்றோம். மிதமான பனி மூட்டமும் குளிர்ந்த காற்றும் மிக மிகக் குறைவான அளவில் மழைச் சாரலும் இருந்தன. அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கில் டேங்க்கை முழுமையாக நிரப்பிக் கொண்டு, கூடுதலாக 'கேன்’களிலும் நிரப்பிக்கொண்டு, ரொதாங் பாஸ் நோக்கிப் புறப்பட்டோம். அரை மணி நேரப் பயணத்தில், சிறிது சிறிதாக சில பைக் ரைடர்ஸ் இணைந்தனர். அதில், ஓரிரு ஜோடிகளும் அடக்கம். அட்வென்ச்சர் பயணம் சூடுபிடிப்பதை அப்போதுதான் உணர முடிந்தது.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....4

மணாலியில் இருந்து ரொதாங் பாஸ் 50 கி.மீ தூரமே இருந்தாலும், ரொதாங்கின் உச்சியை அடைய, மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை ஆகும். இந்தக் கனவாயின் உயரம் 13,000 அடி. மணாலி நகரம் 6,500 அடி. அதாவது, இரண்டு மடங்கு உயரம்.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, 'பால்ச்சான்’ என்ற இடத்தில் காலை உணவை ருசித்தோம். சிறிது ஓய்வுக்குப் பின்பு மலையேற்றம் ஆரம்பமானது. பசுமையை வார்த்தெடுத்த மலை முகடுகள்; வழிநெடுகிலும் அருவிகள். பாதி தூரம் கடந்ததும், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மலை முழுவதையும் மேகம் மூடியிருந்தது. பெரும்பாலான இடங்களில் சாலை மிகவும் குறுகலாக இருந்தது. ஒரு பக்கம் மலை; இன்னொரு பக்கம் பாதாளம். சரக்கு லாரிகள் மொத்த பாரத்தையும் சுமந்து கொண்டு, மணிக்கு 10 கி.மீ வேகத்தில் ஊர்ந்தன. ரொதாங்கின் உச்சியை நெருங்க நெருங்க தார் சாலைகள், மண் சகதிகளாக உருமாறின. கவனத்தைச் சிதறவிட்டால், பைக் ஸ்கிட் ஆகிவிடும் வாய்ப்பு.

சற்றும் எதிர்பாராத வண்ணம், அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சகதிகளில் சிக்கித் தவிக்க நேரிட்டது. இருப்பினும், ஒரு வகையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். அரைமணி நேரத்தில் டிராஃபிக் க்ளியர் ஆனது. சமயங்களில் மணிக்கணக்கில் டிராஃபிக் ஜாம் இருக்கும் என ஓர் ஓட்டுநர் தெரிவித்தார்.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....4

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ரொதாங் பாஸ் அடைந்தபோதும், அந்தப் பகுதி முழுவதும் மூடுபனி போர்த்தியிருந்தது. ரொதாங்கின் அழகை ரசிக்க முடியவில்லை. உடல் முழுக்க பனிச்சாரல் படர்ந்து கொண்டது. மீசை மற்றும் இமை ரோமங்களில் பனித்துளி படர்ந்து நரைமுடி போலக் காட்சியளித்தது.

பியாஸ் நதி ஊற்றெடுக்கும் கோவிலைத் தரிசித்துவிட்டு, குளிருக்கு இதமாக தேனீர் பருகிக் கொண்டிருந்தபோது, தமிழ்நாடு பதிவு எண்கள் கொண்ட மூன்று பைக்குகளைப் பார்த்தோம். அதில் ஒன்று, யமஹா ஸிஙீ100. அதனை ஓட்டிக்கொண்டு வந்தவர் ஒரு பெண்மணி. கோவையில் வசிப்பதாகத் தெரிவித்தார். இந்தச் சாலையில் பைக்கை, ஒரு பெண்மணி ஓட்டிச் செல்வது, அதுவும் நம் ஊர் பெண் ஒருவர் ஓட்டிச் சென்றது, எங்களுக்கு ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருந்தது. இதனைக் காட்டிலும் அடுத்த ஆச்சரியத்தை ஐந்து நிமிடப் பயணத்தில் காண்பித்தது இமயம்.

மலை இறக்கம் ஆரம்பமாக, சடாரென்று மேகக்கூட்டம் மறைந்து, சட்டென 'ஸ்பிதி’ பள்ளத்தாக்கு பிரம்மாண்டமாக கண் முன் விரிந்தது. திடீரென நிகழும் விபத்துபோல, ஷேவாக் அடித்த பந்து பவுண்டரியை நோக்கி சீறுவதுபோல... மேகமூட்டத்துக்குள் பயணித்துக்கொண்டிருந்த நாங்கள், சட்டென வெட்டவெளிக்கு வெளியேற்றப்பட்டோம். சூரிய ஒளியால் கண்கள் கூசின. அத்தனை நேரம் உடல் முழுக்க விரவிக்கிடந்த குளிர் விட்டு விலகி, உடல் கதகதப்பை உணர்ந்தது. கனவுலகில் இருந்து நிஜ உலகுக்கு வந்ததைப்போல... திரும்பிப் பார்த்தால், வெண்புகை போன்று மேககங்கள் தெரிந்தன.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....4

ஸ்பிதி பள்ளத்தாக்கின் இரண்டு மலைத் தொடர்களுக்கு இடையே, சந்தரா ஆறும், குன்ஸும் பாஸ், சந்தரதால் ஏரி, காஸா கிராமத்துக்குச் செல்லும் பாதையும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து இருந்தன. சாலையை ஒட்டி, சிறிது இளைப்பாறுதலுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டோம்.

ஓரளவுக்கு நன்றாக இருந்த சாலைகள், படிப்படியாக மோசமாக மாறின. மலை இறக்கத்தின் கடைசி வளைவில், யு டர்ன் எடுத்தால் செல்லும் பாதையானது, குன்ஸும் பாஸ் வழியாக காஸா கிராமத்துக்கும், நேராகச் செல்லும் பாதை கெலாங் வழியாக லே-வுக்கும் செல்கின்றன. மரத்தாலான பெயர்ப் பலகையில் அம்புக்குறி காண்பித்தது. அந்தப் பலகை மிகவும் சிறிதாகவே இருந்தது. உற்றுக் கவனிக்காவிட்டால், அனிச்சை செயலாக 'யு டர்ன்’ எடுத்து காஸாவுக்குச் செல்ல நேரிடும். இங்கே கவனம் தேவை.

கெலாங் நோக்கிய சாலையில் அரை மணி நேரப் பயணத்துக்குப் பின்பு, லாஹூல் பள்ளத்தாக்கின் முதல் கிராமமான 'கோக்ஸர்’ எங்களை வரவேற்றது. இங்கே காவல் துறையின் பரிசோதனை மையம் உள்ளது. நமது பைக்கின் எண், ஆர்.சி புத்தகம், லைசென்ஸ் ஆகியவற்றின் நகலைக் காண்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இங்கிருந்து செல்கிறவர்கள் 'லே’-வைச் சென்றடைகிறார்களா எனப் பரிசோதிக்கவும் இது உதவுகிறது. இதைத் தவிர 'லே’-வுக்கு முன்பாக டார்ச்சா, சார்ச்சு, உப்ஷி போன்ற இடங்களிலும் பரிசோதனை மையங்கள் உள்ளன.

இரு பக்கமும் ஓங்கி உயர்ந்த பனி மலைகள், பள்ளத்தாக்கின் நடுவில் சந்தரா ஆறு சலசலத்து ஓட, மற்றொரு பசுமையான பிரதேசமாக இருந்தது கோக்ஸர் கிராமம். மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு, அரைமணி நேர ஓய்வுக்குப் பின்பு மீண்டும் பயணத்தைத் தொடந்தோம். எங்களது அடுத்த நிறுத்தம் 'டண்டி’ என்ற ஊர்.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....4

கோக்ஸரில் இருந்து டண்டி செல்லும் வழியில் ஏராளமான பனிச் சிகரங்களைக் கண்டு சிலாகித்தோம். சூரிய வெப்பத்தால் மலை உச்சியில் உருகும் பனி, பாறைகளையும் மலைச் சரிவுகளையும் உரசியபடியே அருவிகளாகக் கீழிறங்கி, ஆற்றில் சங்கமிப்பதை வழிநெடுகிலும் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டே சென்றோம். ஒன்றா இரண்டா... கோக்ஸரில் இருந்து டண்டி செல்லும் 40 கி.மீ இடைவெளியில், கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட அருவிகள் பரவசப்படுத்தின. அளவிலும், வடிவத்திலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. சில அருவிகள் மலைகளை உரசியபடி நேரடியாக ஆற்றில் கலந்தன. சில அருவிகள் பாதி தூரம் வரைதான் கண்களுக்குத் தென்பட்டன. பின்னர், மலைகளின் மீது உறைந்திருக்கும் பனிக்கட்டிகளுக்கு உட்புறமாக வழிந்தோடி, தரையில் ஆற்றுடன் கலக்கும்போதுதான் வெளிப்பட்டது. இப்படி திரும்பும் திசைதோறும் அற்புதக் காட்சிகள்.

நாங்கள் பயணித்தது நண்பகல் என்பதால், மலை உச்சிகளில் கரும்பாறைகளின் மீது படர்ந்திருந்த பனி, சூரிய ஒளிபட்டு வெள்ளியைப் போல் மின்னிக் கொண்டிருந்தது. ஆனால், அதே பனிக்கட்டிகள் அடிவாரங்களில் அழுக்கு படிந்து பாறைகளைப்போலக் காட்சியளித்தன.

இதுவரை கண்ட பசுமை நிறைந்த மலைகள், 'டண்டி’யை நெருங்கியபோது முற்றிலுமாக பழுப்பு நிறமாக மாறி இருந்தது. தவிர, இந்தச் சாலை மிகவும் ஆபத்தானதாக இருந்தது. சந்தரா ஆற்றை ஒட்டியவாறு மலையைக் குடைந்து சாலை அமைக்கப்பட்டிருந்தது. வெட்டி எடுக்கப்பட்ட மலையில் பாறைகளும், பெரிய பெரிய கற்களும் ஒன்றையொன்று இறுக்கமாகப் பற்றித் தொங்கிக்கொண்டிருந்தன. காந்தத்தைச் சுற்றி ஒட்டியிருக்கும் இரும்புத் துகள்களைப் போலக் காட்சியளித்தன. ஏதாவது ஒரு கல் கீழே சரிந்தாலும், பெரும் நிலச்சரிவும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்படக் கூடிய அபாயகரமான சாலையாக இருந்தது. மண் சாலையாக இருந்ததால், வழி நெடுகிலும் புழுதியும் தூசுமாக இருந்தது அந்தப் பகுதி.

ஆள் அரவமற்ற மலைப் பாதையில் 'டண்டி’ யில் பெட்ரோல் பங்க் ஒன்று கண்ணில்பட்டது. இங்கு எரிபொருள் தவிர, வேறொன்றும் இல்லை. நடுக்காட்டில் ஒரு பெட்ரோல் பங்க்; அவ்வளவுதான். இந்த இடத்தில் இருந்து அடுத்த 365 கி.மீ தொலைவுக்கு (லே செல்லும் வரை) பெட்ரோல் பங்க் கிடையாது. மணாலியில் பெட்ரோல் வாங்கத் தவறியவர்கள், கடைசி வாய்ப்பாக இங்கு 'பார்சல்’ கட்டிக்கொள்ளலாம். பெட்ரோல் பங்க்கை ஒட்டியவாறு 'ராயல் என்ஃபீல்டு’ என்ற பெயரில், சின்ன மெக்கானிக் ஷாப் ஒன்றும் இருந்தது. பொதுவாக, இந்தப் பகுதிகளில் வாடகைக்கு விடப்படும் பைக்குகளில் பெட்ரோல் கேன்கள் வைப்பதற்காகவே பிரத்தியேகமாக இரு பக்கமும் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டிருந்தது.

என்னைப் பொறுத்தவரை, மணாலியில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் உள்ள இந்த பங்க்குக்கு, ரொதாங் பாஸையும் கடந்து பெட்ரோலைக் கொண்டுவந்து, சேகரித்து விநியோகிப்பதே.... ஆகச் சிறந்த அட்வென்ச்சர்தான்!

(சிகர்ர்ரூம்...)