Published:Updated:

இது ஃபேமிலி பைக்!

ர.ராஜா ராம மூர்த்தி, படங்கள்: சொ.பாலசுப்பிரமணியம்

பிரீமியம் ஸ்டோரி

பைக் ஆர்வலர்கள், கையில் காசு இருந்தால் ஸ்போர்ட்ஸ் பைக்குகளைத்தான் வாங்குகிறார்கள். ஆனால், ஹார்லி டேவிட்சன் வாங்குவதற்கு, நான் ஒரு குடும்பஸ்தன் என்பதுதான் முக்கியக் காரணம். ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் மிக எளிதாக மணிக்கு 300 கி.மீ வேகத்தைத் தாண்ட முடியும். எனக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதால், பிரீமியம் பைக் ஒன்றை வாங்குவது என்று முடிவானபோது, ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசித்தேன். ஏற்கெனவே டெர்மினேட்டர் படத்தைப் பார்த்ததில் இருந்து, ஹார்லி பைக் மீது ஒரு கண் இருந்தது. மேலும், பாதுகாப்பான வேகங்களில் தொடர்ந்து க்ரூஸ் செய்வதே எனக்குப் பிடிக்கும் என்பதால், ஹார்லி டேவிட்சன் பைக்கையே வாங்கலாம் என முடிவு செய்தேன்.

இது ஃபேமிலி பைக்!

சென்னையில் உள்ள கோரமண்டல் ஹார்லி டேவிட்சன் ஷோரூமில்தான் 50,000 கட்டி புக் செய்தேன். அவர்கள் எனக்கு அயர்ன் 883 பைக்கைப் பரிந்துரைத்தார்கள். ஆனால், 1,000 சிசிக்கு மேல் டிஸ்பிளேஸ்மென்ட் உள்ள பைக்தான் வாங்க வேண்டும் எனத் தோன்றியதால், ஹார்லி டேவிட்சன் 'ஃபார்ட்டி எய்ட்’ பைக்கை புக் செய்தேன். எட்டு மாதங்கள் வெயிட்டிங் பீரியட் என்று சொன்னார்கள். ஆனால், 3 மாதங்களிலேயே என்னைத் தேடி வந்தது, என் ஹார்லி டேவிட்சன் ஃபார்ட்டி எய்ட்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் பெரிய வசதியே, இவற்றை எப்படி வேண்டுமானாலும் கஸ்டமைஸ் செய்யலாம் என்பதுதான். ஹார்லி டேவிட்சன் நிறுவனம் நிறைய டிஸைன்களில் ஆக்சஸரீஸ் விற்பனை செய்கிறது. இவற்றை அவர்களுடைய டீலர்ஷிப்பிலேயே வாங்கிப் பொருத்திக்கொள்ளலாம் என்பது பெரிய ப்ளஸ். பைக்கை வாங்கியதும் முதல் வேலையாக பெட்ரோல் டேங்க்கை மாற்றி விட்டேன். இந்த 48 பைக்கில் இருந்த 7.9 லிட்டர் பெட்ரோல் டேங்க்கை ஒருமுறை முழுதாக நிரப்பினாலும், 100 கி.மீதான் செல்ல முடியும். எனவே, பெரிய சைஸ் பெட்ரோல் டேங்க் வாங்கிப் பொருத்திவிட்டேன். சில சமயம், ஸோலோ ரைடு செல்லும்போது போரடிக்கும் என்பதால், ஸ்பீக்கர் சிஸ்டம் வாங்கிப் பொருத்தினேன். இதன் விலை, 26,072 ரூபாய். வரிகள் மற்றும் ஃபிட்டிங் சார்ஜ் சேர்த்து 32,000 ரூபாய் செலவானது. அலாய் வீல்கள், பெல்ட் கார்டு, நம்பர் பிளேட் ஹோல்டர் என பைக்கில் முடிந்தவரை எதையெல்லாம் கஸ்டமைஸ் செய்ய முடியுமோ, அனைத்தையும் செய்துவிட்டேன். அடுத்து, புதிதாக ஒரு எக்ஸாஸ்ட் சிஸ்டம் வந்திருக்கிறது. அதையும் வாங்கிப் பொருத்த இருக்கிறேன்.

இது ஃபேமிலி பைக்!

பிடித்தது

ஹார்லி டேவிட்சன் 48 பைக், நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்ற சிறந்த க்ரூஸர் பைக். மணிக்கு 150 கி.மீ வேகத்தில் ஸ்டேபிளாக ஓட்டிச் செல்லலாம். சென்னை டீலர்ஷிப் சர்வீஸ் நன்றாக இருக்கிறது. முன்பதிவு செய்துவிட்டு சர்வீஸ் செய்யக் கொடுத்தால், குறித்த நேரத்தில் வேலைகளை முடித்து விடுவார்கள். ஒவ்வொரு முறை சர்வீஸ் செய்யும்போதும் குறைந்தது 6,000 ரூபாய் பில் வரும்.

பிடிக்காதது

இந்த பைக்குடன் வரும் சீட் நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்றது இல்லை. அதனால், அட்ஜஸ்டபிள் இருக்கையை வாங்கிப் பொருத்திவிட்டேன். ஹார்லி டேவிட்சன் 48 பைக்கில் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுவது இல்லை. இது பெரிய மைனஸ். அதேபோல், பைக்குடன் வரும் ஹேண்டில் பார் முதுகு வலியைத்தான் தருகிறது. அதனால், நைட்ஸ்டர் பைக்கின் ஹேண்டில் பாரைப் பொருத்தியிருக்கிறேன். ட்யூப்லெஸ் டயர்களும் கிடையாது. பின்பக்க டயரின் ஆயுள் 12,000 கி.மீ-தான். ஹாரன் சுவிட்ச்சை மட்டும் இதுவரை மூன்று முறை மாற்றிவிட்டேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு