Published:Updated:

கிழக்கில் மலை... மேற்கில் கடல்... நடுவில் அம்பாஸடர்!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்தமிழ், படங்கள்: ரா.ராம்குமார்

பிரீமியம் ஸ்டோரி
கிழக்கில் மலை... மேற்கில் கடல்... நடுவில் அம்பாஸடர்!

ந்தக் காலத்துல அம்பாஸடர் வெச்சிருந்தாலே அம்பானிதான். இனி, அந்த அம்பானி நினைச்சாக்கூட புது அம்பாஸடரில் போக முடியாது. கிரேட் சல்யூட் டு அம்பாஸடர்!''

''வானம் எப்போதும் இருட்டாக இருப்பது இல்லை; வாழ்க்கை எப்போதும் கறுப்பாக இருப்பது இல்லை; எது எப்படியானாலும், அம்பாஸடருக்கு முடிவு இல்லை!''

The entire world shocks...அம்பாஸடர் ராக்ஸ்!'' - என்று மோட்டார் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில், அம்பாஸடர் சம்பந்தமான போஸ்ட்டுக்கு வாசகர்களிடம் இருந்து வந்த சென்ட்டிமென்ட் கமென்ட்களைப் படித்துக் கொண்டிருந்தபோது, அந்த அழைப்பு வந்தது. ''தம்பி, 1997 மாடல் அம்பாஸடர் நோவா வெச்சிருக்கேன். அம்பாஸடர்ல ஒரு 'ஸ்வீட் ரைடு’ போலாம் வாரீயளா?'' என்று ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்புக்கு நம்மை அழைத்தார், குமாரசுவாமி. நாகர்கோவிலில் வசிக்கும் முன்னாள் தமிழ்ப் பேராசிரியரான குமாரசுவாமிக்கு, தமிழ்மொழிக்குப் பிறகு பிடித்தது, தனது அம்பாஸடர் கார்தானாம்!

''எனக்கும் எங்கப்பாவுக்கும் காரை ரீ-டிஸைன் பண்றது பிடிக்காது, ஒரிஜினாலிட்டி மாறாம அப்படியே எங்களோட அம்பாஸடரை இன்னும் பாதுகாத்துட்டு வர்றோம்.. பார்க்கிறீயளா?'' என்று சாவியை நம் கைகளில் திணித்தார் குமாரசுவாமியின் மகன் செண்பகராமன். மங்கலான வெள்ளை நிறத்தில் மங்களகரமாக அம்பாஸடர் நின்றுகொண்டிருந்தது. ''ஆலப்புழா, கொச்சின்ல போட் சவாரி பிரமாதமா இருக்குமாம்லடே! போலாமா?'' என்று தனது தோட்டத்தில் விளைந்திருந்த மட்டி வாழைப்பழம், முந்திரிப் பழம் என்று டிக்கியில் நிறைத்தபடி உற்சாகமானார் குமாரசுவாமி.

கிழக்கில் மலை... மேற்கில் கடல்... நடுவில் அம்பாஸடர்!

­­ஏ.சி., பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், ஏபிஎஸ், டிஸ்க் பிரேக்ஸ், காற்றுப் பைகள் என்று எந்த வசதியும் இல்லை என்றாலும், அம்பாஸடரில் செல்லும்போது பாதுகாப்பாக உணர முடிவதுதான் இதன் மிகப் பெரிய ப்ளஸ். காரணம், இதன் பில்டு குவாலிட்டி. கரடுமுரடான சாலைகளிலும், ஏற்ற இறக்கங்களிலும் முதல் கியரிலேயே மெயின்டெயின் செய்தால், எப்படிப்பட்ட அட்வென்ச்சர் பயணத்தையும் நிறைவேற்றலாம். அம்பாஸடர் நோவாவில் இருப்பது பழைய 1.5 இன்ஜின்தான் என்றாலும், புது கார்களுக்குரிய பவர் இன்னும் பீறிடுகிறது. 4 ஸ்பீடு கியர் பாக்ஸைக் கையாள நன்கு பழக்கம் இருக்க வேண்டும்.

சீட் மற்றும் ஸ்டீயரிங்கை நமக்கேற்றபடி அட்ஜஸ்ட் செய்து, லாவகமாக வளைத்துத் திருப்பி கட் அடிக்க முடியவில்லை; 'விர்ர்ரூம்’ என ஹைவேஸில் 90-க்கு மேல் க்ரூஸ் செய்ய முடியவில்லை; சட்டென பிரேக் பிடித்து சில பல விநாடிகளுக்குள் காரை நிறுத்த ஏபிஎஸ் இல்லை; ஆனாலும், ஆன்-ரோட்டிலும், ஆஃப் ரோட்டிலும் அம்பாஸடரை விரட்டுவதற்கு ஆர்வம் கூடிக்கொண்டே இருந்தது. ''5 லட்சம் கி.மீ. தாண்டீருச்சு கேட்டியளா... அதான் ரொம்ப ஸ்பீடு போறதில்லை!'' என்றார் குமாரசுவாமி.

கிழக்கில் மலை... மேற்கில் கடல்... நடுவில் அம்பாஸடர்!

குளித்துறை பழைய பாலத்தில், கொண்டுவந்திருந்த மதிய உணவை அருந்திவிட்டு, மறுபடியும் கிளம்பினோம். இங்குள்ள கேரளபுரம் விநாயகர் கோயில், பிள்ளையார் பிரியர்களுக்கு ஏற்ற கோயில். பல நூற்றாண்டு வரலாறுகொண்ட இந்தக் கோயிலில் உள்ள விநாயகர், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வண்ணம் மாறிக் கொள்ளும் அதிசயம் நடப்பதாகச் சொல்கிறார்கள். மார்ச் - ஜூன் வரை கறுப்பாகவும், ஜூலை - பிப்ரவரி வரை வெள்ளையாகவும் விநாயகர் நிறம் மாறுகிறாராம். அதனால் இதன் பெயரே அதிசய விநாயகர். இன்னொரு அதிசயம் - இங்குள்ள கிணற்று நீரும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுவதாகச் சொல்கிறார்கள்.

அதிசய விநாயகரைத் தரிசித்துவிட்டுக் கிளம்பினோம். கேரள எல்லையிலேயே டிராஃபிக் நெருக்கடி ஆரம்பமாகி இருந்தது. பவர் ஸ்டீயரிங் கிடையாது என்பதால், அம்பாஸடரில் ஓவர்டேக் செய்ய, கூடுதல் பலம் தேவைப்பட்டது. பூவார் வழியாக திருவனந்தபுரத்தை அடைந்தோம். பூவாரில் படகு சவாரி போவது அற்புதமான விஷயம். 4 பேருக்கு, 400 ரூபாய் கட்டணத்துடன், காயலில் போட்டிங் செய்யலாம். விதவிதமான பறவைகளைக் கண்டுகளித்தபடி, சின்ன வலைகளில் மீன் பிடித்தபடி, ஏரிக்கு நடுவில் இருக்கும் படகு ரெஸ்டாரன்டில் மீன் வறுவல் சாப்பிட்டபடி அற்புதமாக என்ஜாய் பண்ணலாம்.

கிழக்கில் மலை... மேற்கில் கடல்... நடுவில் அம்பாஸடர்!

திருவனந்தபுரத்தில் இருந்து 68 கி.மீ தாண்டியதும் வருகிறது கொல்லம் கடற்கரை. கேரளாவில் அழகான, அமைதியான, கடற்கரை நகரம் கொல்லம். ஆளுயரத்துக்கு மேலெழும் ஆரவார அலைகளால், இங்கு குளிக்கத் தடை செய்திருக்கிறார்கள். இங்குள்ள பூங்காவுக்கு மகாத்மா காந்தி பூங்கா என்று பெயரிட்டதால், இதை மகாத்மா காந்தி பீச் என்றும் அழைக்கிறார்கள். மேலும், கேரளாவில் இரண்டாவது பெரிய துறைமுக நகரமும் கொல்லம்தான். முன்னொரு காலத்தில் இங்கு முந்திரி வணிகம் நடைபெற்றதாகச் சொல்கிறார்கள். சாதாரண பீச்தான்; ஆனால், அட்டகாசமான டூரிஸ்ட் நகரமாக மனத்தை கொள்ளைகொள்கிறது கொல்லம்.

கொல்லம் தாண்டி ஆலப்புழா சென்றபோது, இருட்டியிருந்தது. ஆலப்புழாவில் தங்கும் இடத்துக்குப் பஞ்சம் இல்லை. நான்-ஏ.சி ரூம்கள் 800 முதல் 1,200 வரை கிடைக்கின்றன. போட் ஹவுஸும் உண்டு. 6,000 முதல் 12,000 வரை வாடகை வசூலிக்கிறார்கள். எந்த நேரமும் படகில் மிதந்தபடி பொழுதைக் கழிப்பது சூப்பரான அனுபவம்.

கிழக்கில் மலை... மேற்கில் கடல்... நடுவில் அம்பாஸடர்!

மறுநாள் விடியற்காலையில் ஆலப்புழா அரபிக் கடலோரம், குமாரசுவாமி வாக்கிங் போக ஆரம்பித்திருந்தார். ''அம்பாஸடருக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு கேட்டியளா? எங்க ரெண்டு பேருக்குமே கிட்டத்தட்ட ஒரே வயசு. என் இளமைக்குக் காரணம் இந்த நடைப்பயிற்சிதான்! 'உன் ஆரோக்கியம் 3 கி.மீ-க்கு அப்பால் இருக்கிறது; அதை நடந்து சென்று நீதான் வாங்கி வர வேண்டும்’னு காந்தி சொல்லியிருக்காரு. அதை நான் இப்போமும் ஃபாலோ பண்றேன்!'' என்று ஆரோக்கியசுவாமியாகப் பேசினார் குமாரசுவாமி.

உலகம் கடலால் சூழ்ந்திருப்பதைப் போல, ஆலப்புழாவும் நீரால் சூழ்ந்துள்ளது. சாலையின் ஒருபுறம் கூடவே வரும் கால்வாய்; மிதக்கத்தான் செய்கின்றனவோ என்று ஆச்சரியப்படுத்தும் கரையோர வீடுகள் என்று இத்தாலியின் வெனிஸ் நகரை நினைவுப்படுத்துகிறது ஆலப்புழா. நம் ஊர் டவுன் பஸ் மாதிரி, அரசாங்கத்தால் நடத்தப்படும் 'டவுன் போட்’டில், எந்த நேரமும் பயணப் போக்குவரத்து ஜரூராக நடக்கிறது. அத்தனை நெரிசலிலும், மங்கலான நீரோடையின் மேல் தெளிந்த நீரோடை மாதிரி அழகாகப் பயணிக்கிறார்கள் பள்ளி மாணவர்கள். ஆலப்புழாவைச் சுற்றி சில கிராமங்களில் பஸ் போக்குவரத்து கிடையாது. எனவே, போக்குவரத்துக்கு படகுப் பயணம்தான் ஆதாரம். அரசாங்கப் படகுகளில் 8 ரூபாயில் இருந்து கட்டணம் ஆரம்பிக்கிறது. இதுவே தனியார் போட்டுகள் என்றால், கொஞ்சம் கூடுதலாக வசூலிக்கிறார்கள்.

ஆலப்புழாவுக்குச் சுற்றுலா செல்பவர்கள், படகு சவாரிக்கு என்று அலைய வேண்டியது இல்லை. வெளியூர் வாகனங்களைப் பார்த்ததுமே சுற்றி வளைக்க ஆரம்பிக்கிறார்கள் படகோட்டிகள். ''ஞான் மனோகரமாயிட்டு சுத்திக் காணிக்கா, ஒரு மணிக்கூர்னு 300 ரூவா தந்னால் மதி!'' என்று பணிவோடு இறைஞ்சினார் ஒரு படகோட்டி.

கிழக்கில் மலை... மேற்கில் கடல்... நடுவில் அம்பாஸடர்!

மேலும், கேரளாவில் சில்லறை லாட்டரிச் சீட்டு வியாபாரிகளிடம் இருந்து தப்பிப்பது மகா சாமர்த்தியமான விஷயம். நம் ஊர் மாதிரி 'போதை நிலையம்’ அரசுடைமையாக்கப் படவில்லை என்பதால், தனியார் பார்களில் கூட்டம் அலைமோதுகிறது. அதனால், எந்த நேரமும் காவல்துறை கடுமையான சோதனைப் பணிகளில் ஈடுபட்டவாறே இருக்கிறது. தண்ணீர் தேசத்தில் யாரும் தண்ணி அடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கின்றனர் காவல் துறையினர். ஆனால், ''வண்டியை நிறுத்து... எங்க வேலை பார்க்குற? வாயை ஊதுறா!'' என்றெல்லாம் காட்டமான சோதனை நடைபெறவில்லை. மரியாதையான சோதனை முடிந்த பிறகு, நாம் நிரபராதிகள் என்று தெரிந்தால், 'ஸாரி’ கேட்கவும் மறப்பதில்லை கேரள காவல் துறையினர்.

அழகான ஆலப்புழாவில் இருந்து வடக்கு நோக்கிக் கிளம்பினோம். 57 கி.மீ தாண்டி கொச்சினை வந்தடைந்தபோது, மழை பின்னியது. மலைகளின் ராணி ஊட்டி மாதிரி, அரேபியக் கடலின் ராணி இந்த கொச்சின்தான். இது, கேரளாவின் 'கேட்-வே’-யும் கூட! அழகிய கடற்கரை நகரமான கொச்சினின் ஒரு பக்கம் மேற்குத் தொடர்ச்சி மலை, இன்னொரு பக்கம் அரபிக் கடல், நடுவே மழையில் நமது அம்பாஸடர் என்று வர்ணனையின் உச்சகட்டத்தை எட்டியிருந்தது பயணம். உலகத் தரத்துக்கு இணையான துறைமுகம் - கொச்சினுக்குப் பெருமையான விஷயங்களில் ஒன்று.

சுற்றுலாவாசிகளுக்காக எந்த நேரமும் கப்பல் துறைமுகம் திறந்தே இருக்கிறது. இங்கு குறைந்த விலையில் கேன்ட்டீன்கூட உண்டு. சுற்றிலும் கடல் என்பதால், மீன் உணவுகளுக்குப் பஞ்சம் இல்லை. எந்த நேரமும் மீன்களுக்கு மசாலா ஆடை உடுத்தி தயாராக வைத்திருக்கிறார்கள். துறைமுக கேன்ட்டீனில் குறைவான விலையில் மீன் வறுவல்களை ஒரு பிடி பிடித்தனர் குமாரசுவாமியும், செண்பகராமனும்.

கிழக்கில் மலை... மேற்கில் கடல்... நடுவில் அம்பாஸடர்!

கொச்சி பீச், சூரிய அஸ்தமனத்தில் பார்க்க வேண்டிய இடம். சீன மீன்பிடி வலைகள் மற்றும் கப்பல்களின் பின்னணியில் சூரிய அஸ்தமனம், அம்சமான விஷயம். இங்குள்ள செயின்ட் ஃபிரான்சிஸ் சர்ச், வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். போர்ச்சுக்கீசிய வணிகர் வாஸ்கோட காமா, ஐரோப்பாவில் இருந்து  கடல் மார்க்கமாக இந்தியா வந்தபோது, உடல் நலம் குன்றி கொச்சியில் இறந்து போனதாகவும், அவர் புதைக்கப்பட்ட இடம் செயின்ட் ஃபிரான்சிஸ் சர்ச் என்றும் சொல்கிறது வரலாறு. அவர் நினைவாக 'வாஸ்கோ ஹவுஸ்’ என்னும் வீடும் இங்கு உண்டு. இங்கு வாஸ்கோடகாமா வாழ்ந்ததாகவும் நம்பப்படுகிறது.

கொச்சியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள வெல்லிங்டன் தீவுக்கும் வரலாறு உண்டு. 1933-ல் கொச்சின் துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்காக, காயல் பகுதியை ஆழப்படுத்தி தூர் வாரப்பட்டபோது, செயற்கையாக உருவான தீவு - வெல்லிங்டன் தீவு. இப்போது, கொச்சின் துறைமுகத்தின் ஆரம்பப் பகுதி மட்டுமல்ல; இந்திய கடற்படையின் தலைமைச் செயலகமும் இதுதான்.

துறைமுகத்திலிருந்து கிளம்பியபோது, திரும்பவும் மழையில் அழகாக நனைய ஆரம்பித்திருந்தது கொச்சி. பயணமாக இருந்தாலும்; பாசமாக இருந்தாலும் சில விஷயங்கள் எல்லை தாண்டும் வரைதான் சலிக்காது. ஆனால், கொச்சினின் அழகு, எல்லை தாண்டினாலும் சலிக்கவில்லை.

வாசகர்களே!

நீங்களும் இதுபோல் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி (044 - 66802926) தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு