Published:Updated:

மோட்டார் கிளினிக்!

மோட்டார் கிளினிக்!

மோட்டார் கிளினிக்!

மோட்டார் கிளினிக்!

Published:Updated:
மோட்டார் கிளினிக்!

என் மகனின் வயது 20. அவனுக்குச் சின்ன வயதில் இருந்தே பைக்குகளின் மீது ஆர்வம் அதிகம். ஹார்லி டேவிட்சன் பைக் வாங்க ஆசைப்படுகிறான். ஏற்கெனவே அந்த பைக்குகளைப் பற்றி அதிகம் தெரிந்துவைத்திருக்கிறான். பட்ஜெட் பிரச்னை இல்லை என்றாலும், அவை சக்தி வாய்ந்த பைக்குகள் என்பதால், தயக்கமாக இருக்கிறது. இந்த பைக்கை வாங்கிக் கொடுக்கலாமா?

- கா.சத்யன், கோவை.

உங்கள் மகனுக்கு ஹார்லி டேவிட்சன் பைக் பற்றிய தியரி தெரிந்திருந்தாலும், பிராக்டிக்கலாக அதைக் கையாளத் தெரியுமா என்பது சந்தேகமே! மேலும், உங்கள் மகன் ஒல்லியான உடல்வாகு கொண்டவராக இருந்தால், டிராஃபிக்கில் இந்த பைக்கைச் சமாளிப்பது சிரமம். உங்கள் மகனின் ஆசையை நிறைவேற்றுவதுதான் உங்கள் விருப்பம் என்றால், ஹார்லியில் சக்தி குறைவான என்ட்ரி மாடலான ஸ்ட்ரீட் 750 பைக்கை வாங்கிக்கொடுக்கலாம். ஆனாலும், அவருக்கு இன்னும் அனுபவம் தேவை என்பதே எங்கள் கருத்து.

மோட்டார் கிளினிக்!

என்னுடைய பட்ஜெட் 8 லட்சம் ரூபாய். எங்கள் தொழிலுக்காக நிறைய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்பதால், இடவசதி அதிகம் இருக்க வேண்டும். காரின் அனைத்து இருக்கைகளையும் மடிக்கக்கூடிய வசதி இருப்பது நல்லது. மைலேஜ், லிட்டருக்கு 15 முதல் 18 கி.மீ வரை கிடைக்க வேண்டும். இந்த வரையறைகளுக்குப் உட்பட்ட சிறந்த கார் எது?

- அண்ணாமலை, சிதம்பரம்.

உங்களுக்கு ஏற்ற கார்களாக செவர்லே என்ஜாய், நிஸான் எவாலியா ஆகியவற்றைச் சொல்லலாம். ஆட்களை ஏற்றிச் செல்வதைவிட பொருட்களைத்தான் ஏற்றிச் செல்வீர்கள் என்று தெரிகிறது. அந்த வகையில் பார்க்கும்போது, நிஸான் எவாலியாதான் உங்களுக்கு ஏற்றது. காரணம், எவாலியாவில்தான் இரண்டாவது வரிசை இருக்கைக்கான கதவுகள் 'ஸ்லைடிங்’ டைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. என்ஜாயில் இருப்பதோ சாதாரண காருக்கான கதவுகள். மேலும், எவாலியாவில் அனைத்து இருக்கைகளையும் முழுமையாக மடிக்க முடியும். ஆனால், நிஸான் எவாலியா காரின் விலை சுமார் 9.6 லட்சம் ரூபாய் விலையில் இருந்துதான் ஆரம்பமாகிறது. உங்கள் தேவையைப் பார்க்கும்போது, எவாலியாதான் உங்களுக்கு ஏற்ற காராகத் தெரிகிறது. எனவே, பட்ஜெட்டை சிறிது உயர்த்தி, எவாலியாவை வாங்கலாம்.

மோட்டார் கிளினிக்!

என்னிடம் ஃபோர்டு ஃபியஸ்டா கிளாஸிக் டீசல் கார் இருக்கிறது. மாதம் இரண்டுமுறை சொந்த வேலைகளுக்காக, கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு, கோவை, சென்னை போன்ற ஊர்களுக்குச் செல்வேன். அதனால், தென்னிந்திய நெடுஞ்சாலைகளில்தான் அதிகம் கார் ஓட்டுகிறேன். நெடுஞ்சாலையில் க்ரூஸ் செய்வதற்குச் சரியான வேகம் எது? மைலேஜ் கிடைக்குமே என்று மணிக்கு 80 கி.மீ வேகத்துக்குக் குறைவாக ஓட்டினால், மிக மிக மெதுவாகச் செல்வதுபோல இருக்கிறது. மணிக்கு 120 கி.மீ-க்கு மேல் ஓட்டினால், பாதுகாப்பு குறித்த அச்சம் எழுகிறது. எந்த வேகத்தில் க்ரூஸ் செய்து ஓட்டுவது நல்லது?

- கலைசுரேஷ், கன்னியாகுமரி.

தென்னிந்திய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கி.மீ-க்கு மேல் க்ரூஸ் செய்வது நல்லது அல்ல. மணிக்கு 80 கி.மீ வேகத்துக்குக் குறைவாக ஓட்டினால், நீங்கள் சொல்வதுபோல, மிக மிக மெதுவாகச் செல்வதுபோல இருக்கும் என்றாலும், மைலேஜ் கிடைக்கும். எனவே, மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்யலாம். ஆனால், சாலையில் உள்ள டிராஃபிக்கைப் பொறுத்து வேகத்தைக் குறைத்துக் கொள்வது நலம். மணிக்கு 120 கி.மீ வேகத்துக்கு மேல் ஓட்டுவது நல்லது அல்ல என்பதோடு, மைலேஜும் குறைந்துவிடும்.

மோட்டார் கிளினிக்!

நான் சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். தினமும் சுமார் 30 கி.மீ பைக்கில் பயணித்து அலுவலகத்துக்குப் போய்வருகிறேன். சென்னையின் காலை - மாலை டிராஃபிக் நெரிசலில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ஓட்டிக்கொண்டிருக்கிறேன். சமீபகாலமாக முதுகு வலி வர ஆரம்பித்திருக்கிறது. ஓட்டும்போது வலி இல்லை. ஆனால், பைக்கை விட்டு இறங்கியதும் வலி ஆரம்பித்துவிடுகிறது. முதல் வேலையாக பைக்கைச் சோதித்தேன். சஸ்பென்ஷனில் பிரச்னை ஏதும் இல்லை. வழியில் சிறிது நேரம் ஒய்வெடுத்துக்கொண்டு ஓட்டினாலும், இறங்கியதும் வலி இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு?

- ஜெ.கணேஷ், சென்னை.

தினமும் நீண்ட தூரம் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு முதுகு வலி வரும் வாய்ப்பு உண்டு. மூன்று ஆண்டுகளாக ஓட்டியபோது வராத முதுகு வலி, திடீரென வர ஆரம்பித்திருப்பதை நிச்சயம் கவனிக்க வேண்டும். நீங்களாக எந்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக ஆர்த்தோ சிறப்பு மருத்துவரை அணுகுங்கள். அதுவரை பைக்கின் சஸ்பென்ஷனை சாஃப்ட்டான செட்-அப்-பில் வைத்து ஓட்டுங்கள். பைக்கின் இருக்கையை இன்னும் சாஃப்ட்டான குஷன் வைத்து மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். மோசமான சாலைகளில் பைக் ஓட்ட வேண்டாம்.

நான் கோவையில் உள்ள ஒரு சாப்ஃட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். கார் வாங்குவதற்காக கடந்த 10 ஆண்டுகளாகப் பணத்தைச் சேமித்து வருகிறேன். இப்போது கையில் 13 லட்ச ரூபாய் உள்ளது. என்னைப் பொறுத்தவரை கார் என்பது ஸ்டேட்டஸ் சிம்பல். அதனால், குடும்பத்துடன் டூர் போனாலும், தனியாக அலுவலகம் சென்றாலும், நான் ஓட்டிச் செல்லும் கார் என்னை பெரிய ஆளாகக் காட்ட வேண்டும். 13 லட்சத்துக்குள் எனக்கு ஏற்ற காரைச் சொல்லுங்களேன்!

மோட்டார் கிளினிக்!

- ப.நரேஷ் கார்த்தி, கோவை.

10 லட்ச ரூபாய்க்கு மேல் விற்கப்படும் கார்கள்தான் பெரும்பாலும் 'ஸ்டேட்டஸ் சிம்பல்’ என்ற அம்சத்தை முன்னிறுத்தி விற்கப்படுகின்றன. இவற்றின் விளம்பரங்களைக் கவனித்தாலே இது புரியும். 13 லட்சத்துக்குள் நியூ ஃபோர்டு ஃபியஸ்டா, ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி போன்ற கார்கள் உங்களுக்கு ஏற்ற கார்கள். ஆனால், இவை மூன்றுமே தனித்தனி குணாதிசயங்கள் கொண்டவை. உதாரணத்துக்கு, ஹூண்டாய் வெர்னா - நீங்கள் தினம் அலுவலகம் சென்றுவர டிராஃபிக்கில் ஓட்ட எளிதாக இருக்கும். ஆனால், நெடுஞ்சாலையில் இதன் ஸ்டீயரிங் சிறப்பாக இருக்காது. ஃபோர்டு ஃபியஸ்டா, ஓட்டுவதற்கு அருமையாக இருக்கும். ஆனால், ரீ-சேல் மதிப்பும், இடவசதியும் குறைவு. எனவே, ஹோண்டா சிட்டிதான் உங்களுக்கு ஏற்ற காராகச் சொல்ல முடியும். புதிய சிட்டியின் டிஸைன், பக்கா கார்ப்பொரேட் டிஸைனாக இருக்கும். அலுவலகம் சென்று ஸ்டைலாக இறங்குவதற்கு ஏற்ற கார் இது. மேலும், இப்போது டீசல் இன்ஜினும் உண்டு என்பதால், குடும்பத்துடன் வெகுதூரம் செல்லும்போது மைலேஜும் அதிகமாகக் கிடைக்கும்.