Published:Updated:

ஊட்டியில் ஜாலி!

வின்டேஜ் ராலி தி.ஜெயப்பிரகாஷ், படங்கள்: மு.லலித்குமார்

பிரீமியம் ஸ்டோரி

கோடை வெயில் தமிழகத்தில் தகித்துக்கொண்டிருந்த வேளையில், நீலகிரி மலைத் தொடரில் சிறு தூறல்கள் வருடிக்கொண்டிருந்தன. ஊட்டியின் கோடைத் திருவிழா நிறைவடையும் தருணம், வின்டேஜ் கார்களின் அணிவகுப்பைக் காணும் வாய்ப்பு, சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைத்தது. காவியம் போன்ற அந்தக் கால கார்கள், பழைமையின் மிடுக்கை உணர்த்தும் விதமாக ஊட்டி நகர வீதிகளில் அணிவகுத்துச் சென்றபோது, மலரும் நினைவுகளில் பார்வையாளர்களை மூழ்கடித்தது.

ஊட்டியில் ஜாலி!

நீலகிரி வின்டேஜ் மற்றும் கிளாஸிக் கார் சங்கத்தின் ராலியை, ஊட்டி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து மாவட்ட ஆட்சியர் கொடியசைத்துத் துவக்கிவைத்தார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது வாகனங்களை இந்த ராலிக்காகவே தயார் செய்து கொண்டுவந்திருந்தனர். இந்த ஆண்டு 60 கார்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டன.

அரசு உயரதிகாரிகள் பயன்படுத்திய கறுப்பு நிற பிளைமவுத் மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் கார்களுக்கு எப்போதும் போல அணிவகுப்பில் முதல் மரியாதை. அவற்றைத் தொடர்ந்து 1934 மாடலான ஆஸ்டின் ஏ7, மோரீஸ், செவர்லே ஃப்ளீட் மாஸ்டர், டாட்ஜ்,  பக் ஃபியட், ஃபியட் செலெக்ட், ஃபியட் எலிகண்ட், ஃபியட் மில்லிசென்டோ, கவ்லீ, ரெய்லீ, வில்லீஸ் ஸ்டேஷன் வேகன், வாக்ஸ்ஹால், ரஷ்யா தயாரிப்பான UAZ , ஃபோர்டு ஜீப், ஹிந்துஸ்தான் என கார்களின் அணிவகுப்பு... 50 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றது. இது தவிர, அந்தக் காலத்துக் காளையர் வாகனங்களான ஜாவா, லாம்ப்ரெட்டா, பாபி, ராயல் என்ஃபீல்டு ஆகிய இரு சக்கர வாகனங்களும் அசத்தலாகச் சீறிச் சென்றன. ஒய்.டபிள்யூ.சி.ஏ பூங்காவில் காட்சிக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களை, சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். பலரும் தங்களுக்குப் பிடித்த கார்களின் அருகே நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சி பொங்க கார்களைச் சுற்றிச் சுற்றி வந்தனர். விழாவில் சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் கொண்டாட்டம் போட வைத்தது, 1954 மாடல் 'செவர்லே கன்வெர்டபிள் டாப்.’ 'கரகாட்டக்காரன்’ படத்தில் கவுண்டமணி பயன்படுத்திய கார் போன்ற தோற்றத்தில் இருந்த அதைச் சுற்றி நின்றுகொண்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரும், 'ஆஹா சொப்பன சுந்தரி’ என ஆனந்தக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

வயதானவர்களைவிட குழந்தைகளுக்கும், இளசுகளுக்கும்தான் இந்த கார்களின் அணிவகுப்பு அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியது. இறுதியாக, அணிவகுப்பில் கலந்துகொண்ட கார்களிலேயே சிறந்த கார்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதற்காக வந்திருந்த கோவை, அன்னூரைச் சேர்ந்த வின்டேஜ் கார் ஆர்வலர் துரை, வாகனத்தின் ஒரிஜினாலிட்டி மற்றும் அதன் பயண தூரங்களை ஆராய்ந்து மதிப்பிட்டார். இதில், அனைவரின் மனதையும் கொள்ளைகொண்ட கேத்தி நீடில் இன்டஸ்ட்ரீஸுக்குச் சொந்தமான 1954 மாடல் செவர்லே கன்வெர்டபிள் 'டாப் மோஸ்ட் லவ்வபிள் கார்’ பட்டத்தைத் தட்டிச் சென்றது. கோவையைச் சேர்ந்த கணேஷ் என்பவரின் 1951 மோரீஸ் 'வெல் மெயின்டெயின்டு கார்’ பட்டம் பெற்றது. வாளையாரைச் சேர்ந்த நவீன் ஓட்டி வந்த 1956-ம் வருட மோரீஸ் 'அதிக தூரப் பயணம் செய்த கார்’ (லாங் ரன்) பட்டத்தைப் பெற்றது. 'மக்கள் மனதைக் கவர்ந்த கார்’ பட்டத்தை குன்னூர் கண்ணன் என்பவரின் 1956-ம் ஆண்டு ஃபியட் செலெக்ட் பெற்றது.

ஊட்டியில் ஜாலி!

ராணுவ வாகனமான பிளைமவுத் காருக்கு 'மோஸ்ட் பிரஸ்டீஜியஸ் கார்’ பட்டம் வழங்கப்பட்டது. ஈரோட்டைச் சேர்ந்த ஜிப்ஸி பாபு என்பவருடைய 1941 ஃபோர்டு ஜீப், 'சிறந்த ஜீப்’ பட்டத்தைப் பெற, இரு சக்கர வாகனத்தில் முதல் இடத்தை தாஜ் முகமதுவின் 1955 மாடல் ராயல் என்ஃபீல்டும், இரண்டாம் இடத்தை ஜெயக்குமாரின் 1978 லேம்பியும் பிடித்தன. இனி, மீண்டும் தன் இறக்கையை விரித்துச் சிறகடிக்க, இந்த கார்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறை வரை காத்திருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு