Published:Updated:

இது நம்ம ஊரு தண்டர்பேர்டு!

பைக் ரீ-டிஸைன் சண்.சரவணக்குமார், படங்கள்:வீ.சக்தி அருணகிரி

பிரீமியம் ஸ்டோரி
இது நம்ம ஊரு தண்டர்பேர்டு!

தை இட்லின்னு சொன்னா, சட்னியே நம்பாது’ என்பதுபோல, இதை தண்டர்பேர்டு என்றால், ராயல் என்ஃபீல்டு நிறுவனமே நம்பாது. ஹார்லி டேவிட்சன் போன்று, தேனி நகரில் சுற்றிக்கொண்டுஇருந்தது செம ஸ்டைல் பைக். அதை ஓட்டிச் சென்றவரை விரட்டிப் பிடித்தோம். 

'சாதாரணமாக பைக் ரீ-டிஸைன் செய்ய, லட்சக் கணக்கில் யாரும் பணம் செலவு செய்யமாட்டார்கள். ஆனால், பைக்கைக் காதலிப்பவர்கள் கணக்குப் பார்க்க மாட்டார்கள். பிடித்த மாதிரி பைக் வேண்டும் என்று ஆசைப்பட்டால், காதலிக்குச் செலவு செய்வது போல செலவு செய்துதான் ஆக வேண்டும். நானும் அப்படித்தான்!'' என உற்சாகமாகப் பேசினார் பிரசாத்.

'சில ஆண்டுகளுக்கு முன்பு, 'மோட்டார் விகடன்’ இதழில் மும்பையில் உள்ள வெர்டென்சி நிறுவனம் பற்றிப் படித்தபோது, பைக்குகளை ஸ்பெஷலாக ரீ-டிஸைன் செய்வதில் கில்லிகள் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. உடனே அந்த நிறுவனத்துக்கு, எனது பல்ஸர் பைக்கை ரீ-டிஸைன் செய்ய எவ்வளவு செலவாகும் எனக் கேட்டு மெயில் அனுப்பினேன். அவர்கள் அனுப்பிய செலவுத் தொகை எனக்கு முதலில் தயக்கத்தை உண்டாக்கியது. அதனால், கோவையில் பல்ஸரை 80,000 ரூபாய் செலவழித்து ரீ-டிஸைன் செய்தேன். ஆனால், அதில் எனக்குத் திருப்தி இல்லை. மனசு வெர்டென்சி மீதுதான் இருந்தது. பிறகு, தண்டர்பேர்டு வாங்கி ஓட்டிக்கொண்டிருந்தேன்.

இது நம்ம ஊரு தண்டர்பேர்டு!

திருப்தி இல்லாத மனசு சும்மா இருக்குமா? தண்டர்பேர்டு பைக்குக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று வெர்டென்சிக்குத் திரும்பவும் மெயில் அனுப்பினேன். நான்கு வகை டிஸைன்கள்; நான்கு வகை பில்களை அனுப்பினார்கள். அதில், எனக்குப் பிடித்த டிஸைனை செலக்ட் செய்துவிட்டு, வெர்டென்சியின் ரீ-டிஸைன் பட்ஜெட்டுக்கு ஏற்பாடு செய்தேன். கடந்த அக்டோபரில் ஆர்டர் கொடுத்துவிட்டு, பார்சல் சர்வீஸ் மூலம் பைக்கை மும்பைக்கு அனுப்பினேன். முதலில் ஒரு சில மாடல் படங்களை அனுப்பி, தேர்வு செய்யச் சொன்னார்கள். பிறகு, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வாட்ஸ்-ஆப்பில் எனது பைக்கில் நடக்கும் ஒவ்வொரு மாற்றங்களையும் போட்டோ எடுத்து அனுப்புவார்கள். எனக்குப் பிடித்த கலர், மாடல் என செலக்ட் செய்ததும், முதலில் 'கேட் புரோகிராமில்’ அந்தப் படத்தை அனுப்புவார்கள். நான் ஓகே சொன்னதும், அந்த பாகத்தைத் தயாரித்து எனக்குக் காட்டுவார்கள். இது எல்லாமே வாட்ஸ் - ஆப்பில்தான் நடக்கும்.  

இது நம்ம ஊரு தண்டர்பேர்டு!

எனது பைக்கின் முதல் பாகம் 'ஃப்யூல் டேங்க்’தான். அதன் வடிவமைப்பு என்னை அசத்தியது. பிறகு, 3டி எஃபெக்ட் ஹெட்லைட், மோனோ சஸ்பென்ஷன், அலாய் வீல், செயின் டிரைவ்-க்குப் பதிலாக பெல்ட் டிரைவ், புது சைலன்ஸர், புதிய ஏர் ஃபில்ட்டர், ஹப், சைடு பேனல் என இன்ஜின், சேஸி தவிர எல்லாவற்றையும் மாற்றி விட்டார்கள். இப்போது எனது பைக், பார்ப்பதற்கு ஹார்லி டேவிட்சன் ஸாப்பர் மாடல் மாதிரி இருந்தது.

பிறகு, 'பைக்கில் பெயர் எழுத வேண்டும். என்ன எழுத?’ என்று கேட்டார்கள். நான் உங்கள் கம்பெனி பெயரைப் போடுங்கள் என்று சொன்னேன். வெர்டென்சி லோகோ வைத்தார்கள். இருந்தாலும் பைக்கின் பில்லியன் பகுதிக்காக, என் மனைவியின் கையெழுத்தை ஸ்கேன் செய்து அனுப்பினேன். அதை அப்படியே அழகாக, ஸ்டைலான விஷயமாக மாற்றி விட்டார்கள். ஃப்யூல் டேங்க்கில் உள்ள மூடியில், லேஸரில் எனது மகள், மகன் பெயர்களை அழகாகப் பொறித்துத் தந்தார்கள்.

இது நம்ம ஊரு தண்டர்பேர்டு!

என் பைக்கை ரீ-டிஸைன் செய்ய வெர்டென்சி பில் செய்த தொகை, 3,77,222 ரூபாய். பைக்கை பார்சலில் அனுப்பியது; திரும்ப வரவழைத்தது என மொத்தம் 4 லட்ச ரூபாய் ஆகிவிட்டது. இந்தச் செலவுக்கு ஒரு காரே வாங்கி இருக்கலாம்தான். ஆனால், இந்தத் திருப்தி கிடைக்காதே!

கொடுத்த பணத்துக்கு மனசு இரட்டைச் சந்தோஷமாக இருக்கிறது' என்றார் பிரசாத்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு