டி Q7. சமூகத்தில் செல்வாக்கு மிக்க மனிதர்களின் சாய்ஸ், இந்த கார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான இது, இன்றுவரை அதன் செக்மென்ட்டின் ராஜாவாக மட்டுமல்ல, சாலையில் மகாராஜாவாக வலம் வருகிறது. ஆனால், ராஜாவுக்கு வயசாகிவிட்டதுதான் பிரச்னை. எதிர்ப்பக்கம் நிற்பது, இந்த ஆண்டு அறிமுகமான புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ X5. பரம்பரை எதிரிகளான இந்த இரண்டு கார்களையும் டெஸ்ட் செய்தோம்.

பழசா, புதுசா... எது ராஜா?

வயசானாலும் சைஸ் மாறலையே!

ஐந்து மீட்டர்களுக்கும் அதிகமான நீளத்தில், சுமார் இரண்டு மீட்டர் அகலத்தில் சாலையை ஆக்கிரமிக்கிறது ஆடியின் Q7. காரின் டிஸைனில் பெரிய 'ட்ராமா’ ஏதும் இல்லாமல், அளவை மட்டுமே தனது ப்ளஸ்ஸாக வைத்துக்கொண்டு சாலையில் 'கும்’மெனச் செல்கிறது Q7. காரின் முன் பக்கத்தை பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது, மிரட்டலான தோற்றம் கொண்டுள்ளதை உணர முடிகிறது. பிஎம்டபிள்யூ X5 காருடன் நிறுத்தினால், உருவத்தை வைத்துப் பார்க்கும்போது, X5 மாடலைவிட ஒரு செக்மென்ட் மேலே உள்ள காரோ என சந்தேகம் வரும். ஆனால், அளவு என்ற ஒரு விஷயத்தை மட்டும் மறந்துவிட்டால், Q7 காரின் டிஸைன் ரொம்பப் பழசுதான். நம் ஊர் சாலைகளில் நிறையப் பார்த்துப் பழகிவிட்டதால், ஒரு ஃப்ரெஷ் அப்பீல் இல்லை.

பழைய X5 காரைவிட, புதிய மாடல் 29 மிமீ கூடுதல் நீளமும் 5 மிமீ கூடுதல் அகலமும் கொண்டுள்ளது. ஆனாலும், Q7 காரின் பிரம்மாண்டத்துடன் இன்னும் X5 காரால் நெருங்க முடியவில்லை. ஆனால், காரின் டிஸைனில் புதுமை இருக்கிறது. காரின் முன் பக்கம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கிட்னி கிரில் முன்பைவிட இன்னும் அகலமாக இருக்கிறது. பழைய மாடலைவிட பார்ப்பதற்கு உயர்தரமான டிஸைனைக் கொண்டுள்ளது புதிய X5. 20 இன்ச் வீல்கள், செம ஸ்போர்ட்டியான டிஸைனைக் கொண்டிருக்கின்றன.

உள்ளலங்காரம்

ஆடி Q7 காரின் கேபின் மிக விசாலமானது. இடவசதியிலும், சொகுசிலும் Q7 காரின் மகிமையை அனுபவித்தால்தான் புரியும். முன்பக்க இருக்கைகள், அரியணை போல நம்மை அரவணைத்துக்கொள்கின்றன. இரண்டாவது வரிசை இருக்கைகள் வசதியாகவே இருந்தாலும், தட்டையாக இருந்திருந்தால், மூன்று பேர் வசதியாக பயணிக்க முடியும். நீளமான காராக இருந்தாலும், மூன்றாவது வரிசை இருக்கைகளில் பெரியவர்களால் சொகுசாக உட்கார முடியாது. இவற்றை மடித்தால், 765 லிட்டர் டிக்கி இடவசதி கிடைக்கிறது. காரின் மேல் இருக்கும் பெரிய சன் ரூஃப், காருக்குள் அதிக சூரிய வெளிச்சத்தைக் கடத்துகிறது.

பிஎம்டபிள்யூ X5 காரிலும் சன் ரூஃப் இருக்கிறது. ஆனால், இதில் சூரிய வெளிச்சத்தைத் தடுக்க பிரத்யேக கவர் இருப்பதால், வெயிலின் தாக்கம் உள்ளே தெரியாது. புத்தம் புதிய மாடல் என்பதால், காரின் டேஷ்போர்டு பார்க்க ஃப்ரெஷ் ஆகவும், பயன்படுத்த தரமாகவும் இருக்கிறது. 10.2 இன்ச் HD ஸ்கிரீன், i Drive செலெக்டருக்கு மேல் இருக்கும் ஸ்கிராட்ச் பேட் போன்ற டெக் கேட்ஜெட்ஸ் வசீகரிக்கின்றன. முன்னிருக்கை இடவசதி Q7 காரைப் போல வசதியாகவே இருக்கின்றன. ஆனால், பழைய X5  காரைப் போலவே இதிலும் பின்னிருக்கைகளில் தொடைகளுக்குப் போதிய சப்போர்ட் இல்லை. மூன்றாவது வரிசை இருக்கைகளில், நிச்சயம் பெரியவர்களால் உட்கார்ந்து பயணிக்க முடியாது.

பழசா, புதுசா... எது ராஜா?
பழசா, புதுசா... எது ராஜா?

டார்க் டாக்

கடைசியாக Q7  ஃபேஸ்லிஃப்ட் செய்யப் படும்போது, இதில் இருந்த 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸை எடுத்துவிட்டு, 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸைப் பொருத்தி இருக்கிறது ஆடி. விளைவு, இதன் 3.0 லிட்டர் க்ஷி6 இன்ஜினின் 241 bhp சக்தி மற்றும் 56 kgm டார்க், தேவைப்படும்போதெல்லாம் உடனடியாகக் கிடைக்கிறது. இந்த இன்ஜினின் டாப் எண்ட் சுமார்தான் என்பதால், விரைவாக அப் ஷிஃப்ட் செய்துவிட்டு, டார்க் அலையில் சீறிச் செல்லலாம். இந்த இன்ஜின், கியர்பாக்ஸ் காம்பினேஷன் சிட்டியைவிட, நெடுஞ்சாலையில் ரிலாக்ஸ்டாக, நூற்றுக்கணக்கான கி.மீ-களைக் கடக்க ஏதுவாக அமைந்திருக்கிறது. சைஸ் பெரிதாக இருந்தாலும், சிட்டி டிராஃபிக்கில் எளிதாக ஓட்டலாம். ஆனால், பார்க்கிங் செய்யும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். எந்தவிதமான சாலைகளிலும் பயணிகளை அதிகம் குலுக்காமல் அழைத்துச் செல்கிறது ஆடி Q7.

பழசா, புதுசா... எது ராஜா?

பிஎம்டபிள்யூ X5 தான் இந்த இரண்டு கார்களில் ஓட்டுவதற்கு ஜாலியான கார். Q7  காரை ஓட்டிவிட்டு X5 காரை ஓட்டினால், ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டுவது போல இருக்கிறது. ஆப்ஷனலாக அளிக்கப்படும் 20 இஞ்ச் வீல்களும், லோ ப்ரொஃபைல் பைரலி டயர்களும் சாலையை நன்றாகப் பிடித்துக் கொள்வதால், வளைவுகளில் செடான் காரைப் போல தைரியமாக ஓட்ட முடிகிறது. ஆனால், ஓட்டுதல் தரம் கொஞ்சம் இறுக்கமாக இருக்கிறது. அதனால், இந்த ஆப்ஷனல் டயர் - வீல் காம்பினேஷனைப் பொருத்தாமல், ஸ்டாக் வீல்டயர்களையே 'டிக்’ செய்வது நல்லது. இதன் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் இன்ஜின்,  செம ரெஸ்பான்ஸிவ். 5,500 ஆர்பிஎம் வரை ரெவ் ஆவதால், இந்த டீசல் இன்ஜினை விரட்டி விரட்டி ஓட்ட முடியும். இதன் 57.1 kgm டார்க் 1,500 ஆர்பிஎம்-ல் இருந்தே சீரான முறையில் வெளிப்படுகிறது. இதனுடன் அருமையான 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் சேரும்போது, இந்தியாவிலேயே ஓட்டுவதற்கு அருமையான எஸ்யுவி-க்களில் ஒன்றாக மாறுகிறது X5. ஆனால், க்ரூஸ் செய்யும்போது இன்ஜின் இன்னும் அமைதியாக இருந்திருந்தால், X5 இன்னும் நன்றாக இருக்கும். Q7 காரைவிட அளவில் கொஞ்சம் சிறியது என்பதால், நகர டிராஃபிக்கில் ஓட்ட வசதியாக இருக்கும் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

பழசா, புதுசா... எது ராஜா?

பிஎம்டபிள்யூவா? ஆடியா?

இரண்டு கார்களையும் மாற்றி மாற்றி ஓட்டிப் பார்த்ததில், டிரைவர் வைத்துப் பயணிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஆடி Q7 கார்தான் பெஸ்ட் என்று சொல்ல முடிகிறது. இதன் இருக்கைகள் அளிக்கும் சொகுசு மிக அருமை. இதன் ஏர் சஸ்பென்ஷன் நம் ஊர் சாலைகளை நன்றாகவே சமாளிக்கிறது. ஆடி னி7 காரில் ஒரு இடத்துக்குச் சென்று இறங்கினால், 'செல்லும் இடமெல்லாம் சிறப்பு.’ ஆனால், காரை வைத்திருப்பவருக்கு இது பழைய டிஸைன் என்பது நன்றாகவே தெரியும். பிஎம்டபிள்யூ X5 காரைப் போன்ற ஃப்ரெஷ் அப்பீல் னி7 காரில் இல்லை. காரை ஓட்டும்போது மிக ஸ்போர்ட்டியான உணர்வைத் தருகிறது பிஎம்டபிள்யூ. X5 காரில் உள்ள ஒரே குறை, இதன் இடவசதி. மற்றபடி, இன்ஜின், கியர்பாக்ஸ், கையாளுமை ஆகிய துறைகளில் வசீகரிக்கிறது புதிய பிஎம்டபிள்யூ X5. எனவே, இப்போதைக்கு பிஎம்டபிள்யூ X5 வெற்றி பெற்றாலும், ஆடியின் அடுத்த தலைமுறை னி7 கார் தீவிர சோதனையில் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆடி, புதிய X5 காருக்கு என்ன மாதிரியான தலைவலியைக் கொடுக்க இருக்கிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்!

பழசா, புதுசா... எது ராஜா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு