Published:Updated:

காசுக்கேற்ற ஹார்லி!

தொகுப்பு: சார்லஸ்

பிரீமியம் ஸ்டோரி

ந்திய இன்னிங்ஸில், ஹார்லி டேவிட்சனின் முக்கியமான பைக், ஸ்ட்ரீட் 750. 'இந்தியாவுக்காக... இந்தியர்களுக்காக... இந்திய சாலைகளுக்காக...’ என்றுதான் இந்த பைக்கை அடையாளப்படுத்துகிறது ஹார்லி. இந்திய மார்க்கெட்டில், ஹை-ஃபை வாடிக்கையாளர்கள் மட்டுமே வாங்கக்கூடிய பைக்காக இருப்பதால், அப்பர் மிடில் கிளாஸ் மக்களை டார்கெட் செய்து, இந்த ஸ்ட்ரீட் 750 பைக்கை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ஹார்லி.

காசுக்கேற்ற ஹார்லி!

அமெரிக்காவுக்கு வெளியே முதன்முறையாகத் தயாரிக்கப்படும் ஒரே ஹார்லி பைக், இந்த ஸ்ட்ரீட் 750 பைக்தான்.  ஆன்-ரோடு விலை: 4.70 லட்சம்.

டிஸைன்

பார்க்கிங் செய்திருக்கும்போதும் சரி; சாலையில் பறக்கும்போதும் சரி; தனி அடையாளத்துடன் ஹார்லி என்பதை அனைவரும் கண்டுகொள்ளும் வகையில் யுனிக்காக டிஸைன் செய்யப்பட்டுள்ளது, ஸ்ட்ரீட் 750. முன்பக்க கறுப்பு வண்ண ஒற்றைக் கவசத்துக்குப் பின்னால், பிரம்மாண்ட கிளியர் லென்ஸ் ஹெட்லைட் இடம் பிடித்திருக்கிறது. ஒற்றை டயலில் ஸ்பீடோ மீட்டர் அனலாக் மீட்டராகவும், ஓடோ, ட்ரிப் மீட்டர்கள் டிஜிட்டலிலும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பெட்ரோல் இருப்பைக் காட்டும் ஃப்யூல் மீட்டர் இல்லை. அதற்குப் பதில் ஃப்யூல் இண்டிகேட்டர், பெட்ரோல் குறிப்பிட்ட அளவு குறைந்து ரிஸர்வுக்கு வரும்போது, ஒளிர்ந்து எச்சரிக்கை செய்யும்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளில், வலது மற்றும் இடதுபக்க இண்டிகேட்டர் சுவிட்சுகள் ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும். ஆனால், ஹார்லி ஸ்ட்ரீட் 750 பைக்கில் நம் ஊர் பைக்குகளைப் போலவே, இடது பக்கத்திலேயே இண்டிகேட்டர் சுவிட்சுகள் கொடுக்கப் பட்டுள்ளன. இது, பட்ஜெட் ஹார்லி என்பதால், 'டே டைம் ரன்னிங் லைட்ஸ்’ இதில் இல்லை. ரியர்வியூ கண்ணாடி மிகவும் சிறிதாக இருப்பதால், பின்னால் வரும் வாகனங்கள் கண்ணாடியில் முழுமையாகத் தெரியவில்லை.

காசுக்கேற்ற ஹார்லி!

பைக்கின் பின்பக்கத்தை பார்த்தாலே, 'இது ஹார்லி’ என்பதைக் கண்டுபிடிக்க, தனித்துவமான டெயில் லைட் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், சைலன்ஸர் சாதாரண பைக்குகளில் இருப்பதுபோல, எந்த பிரம்மாண்டமும் இல்லாமல் இருப்பது மைனஸ்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஹார்லி ஸ்ட்ரீட் 750 பைக்கின் ஃபிட் அண்டு ஃபினிஷ் மற்றும் பில்டு குவாலிட்டி, ஹார்லியின் தரத்துக்கு இல்லை. ஹார்லி டேவிட்சன் ஷோரூமுக்குச் சென்று ஸ்ட்ரீட் 750 பைக்கையும், ஹார்லியின் மற்ற பைக்குகளையும் பார்த்தாலே, தர வித்தியாசம் புரிந்துவிடும்.

காசுக்கேற்ற ஹார்லி!

இன்ஜின்

ஹார்லியின் புதிய V-Twin இன்ஜினுடன் வெளிவருகிறது ஸ்ட்ரீட் 750. லிக்விட் கூல்டு, ட்வின் சிலிண்டர், 749 சிசி, ஃப்யூல் இன்ஜெக்ஷன் இன்ஜின் கொண்ட இது, ஒரு சிலிண்டருக்கு 4 வால்வுகளைக் கொண்டுள்ளது. இது, அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 56.3தீலீஜீ சக்தியை வெளிப்படுத்துகிறது. இதன் அதிகபட்ச டார்க் 4,000 ஆர்பிஎம்-ல் 6.62 kgm. ஹார்லி டேவிட்சனுக்கே உரியவகையில் இதில் டிரைவ் செயின் கிடையாது. பெல்ட் மூலமாகத்தான் பின் வீலுக்கு பவர் கடத்தப்படுகிறது. இதனால், சத்தம் அதிகமாக இல்லை என்பதோடு, செயினை அடிக்கடி அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த ஹார்லி, 0-60 கி.மீ வேகத்தை 2.45 விநாடிகளில் கடக்கிறது. க்ரூஸர் பைக்கான இது, 160 கி.மீ வேகத்தை 18.52 விநாடிகளில் கடக்கிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 177 கி.மீ. இந்த ஹார்லியின் மிகப் பெரிய பலமே, 100 கி.மீ வேகத்தைத் தாண்டினாலே அதிர்வுகளால் ஆட ஆரம்பிக்கும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளைப் போல இல்லாமல், எவ்வளவு வேகமாகப் போனாலும் அதிர்வுகள் இல்லாமல் இருப்பதுதான்.

130 கி.மீ வேகத்தில் செம ரிலாக்ஸ்ட்டாக நெடுஞ்சாலையில் பறக்க முடிகிறது. 6-வது கியரில் 55 கி.மீ வேகத்தில் செல்லும்போதுகூட இன்ஜினில் எந்தத் தடங்கலும் இல்லை. இதனால், நகருக்குள் ஓட்டுவதும் எளிது.

கையாளுமை

காசுக்கேற்ற ஹார்லி!

சீட்டின் உயரம் குறைவாக இருப்பதால், உயரம் குறைவானவர்கள்கூட சுலபமாக உட்கார்ந்து ஓட்ட முடியும். ஆனால், ஓட்டுபவருக்கு இருக்கும் சௌகரியம், பின்னால் உட்காருபவருக்கு இல்லை. இடம் மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த ஹார்லியின் எடை 222 கிலோ. இதனால், நகருக்குள் வளைத்து நெளித்து விருப்பத்துக்கு ஏற்ப ஓட்ட முடியாது. எம்.ஆர்.எஃப் டயர்கள் நல்ல கிரிப்பைத் தருகின்றன. 80 கி.மீ வேகத்தில் சென்று சடர்ன் பிரேக் அடித்தால், 26.96 மீட்டர் இடைவெளியில் மொத்தமாக நின்றுவிடுகிறது ஹார்லி ஸ்ட்ரீட் 750. பிரேக்குகள் இன்னும் பவர்ஃபுல்லாக இருந்திருக்கலாம். ஏபிஎஸ் பிரேக்ஸ் இல்லை என்பது, இங்கே மிகப் பெரிய குறை.

மைலேஜ்

இந்த ஹார்லி பைக் விலை குறைவாக இருக்கிறதே என்பதற்காக, மைலேஜ் அதிகம் இருக்கும் என நினைத்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும். 750 சிசி திறன் கொண்ட இந்த பைக், நகருக்குள் லிட்டருக்கு 18.7 கி.மீ மைலேஜ் தருகிறது. நெடுஞ்சாலையில் 21.3 கி.மீ மைலேஜ் தருகிறது.

காசுக்கேற்ற ஹார்லி!

'ஹார்லி டேவிட்சன் பைக்குடா’ என மார்தட்டும் அளவுக்கு தரத்தில் சிறந்த பைக்காக இல்லை, ஸ்ட்ரீட் 750. ஆனால், பெர்ஃபாமென்ஸில் செம பவர்ஃபுல் பைக். மேலும், அதிர்வுகள் இல்லாத இன்ஜினாக இருப்பது, இதன் மிகப் பெரிய பலம். கியர்பாக்ஸும் செம ஸ்மூத். 'காசு கையில் அதிகமாக இல்லை. ஆனால், வாழ்க்கையில் எப்படியும் ஒரு ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கிவிட வேண்டும்’ என்பவர்கள், ஸ்ட்ரீட் 750 பைக்கை வாங்கலாம்.

AUTOCAR INDIA

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு