சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்கான S1000RR மாடலை 2009-ல் அறிமுகப்படுத்தி, பல விருதுகளை அள்ளிய பிறகும் பிஎம்டபிள்யூ மோட்டொராட் நிறுவனத்தால், திருப்தியடைய முடியவில்லை. டிராக் ஸ்பெஷல் பைக்கான அது, நம் ஊர் சாலைகளுக்குச் சரிப்பட்டு வராது. இந்த சூப்பர் பைக்கை சாதாரண சாலைகளில் பாதுகாப்பாகப் பயன்படுத்த, பிஎம்டபிள்யூ போட்டிருக்கும் ஸ்கெட்ச்தான், S1000R. ட்யூன் செய்யப்பட்ட பெர்ஃபாமென்ஸ், மேம்படுத்தப்பட்ட எர்கானமிக்ஸ் என தினசரி ஓட்டுவதற்கு வசதியாக இருக்கும்படி, S1000RR நேக்கட் பைக்கை உருவாக்கியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், S1000RR பைக்கின் சாது வெர்ஷன்தான் S1000R .

பேராசை!?

பிஎம்டபிள்யூ S1000R பைக்கின் முன்பக்க டிஸைன், மற்ற பிஎம்டபிள்யூ பைக்குகளைப் போலவே கரடுமுரடாக  உள்ளது. இதன் ஹெட்லைட்ஸ் டிஸைன் சிலருக்குத்தான் பிடிக்கும். நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில், அனலாக் டேக்கோ மீட்டர் வெள்ளை நிறத்தில் பார்க்க ஸ்போர்ட்டியாக உள்ளது. ஸ்பீடோ, ஓடோ, ட்ரிப், லேப் டைமர் என மற்ற மீட்டர்கள் அனைத்தும் எல்சிடி திரையிலேயே உள்ளன.

S1000R பைக்கின் கன்ட்ரோல் லீவர்கள் அனைத்தும் கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சுவிட்ச்சுகளின் தரமும் பயன்படுத்த எளிதாக இருக்கும் விதமும் அருமை. ஃப்யூல் டேங்க் கச்சிதமான டிஸைன். பின்பக்கம் LED டெயில் லைட்டுகள் இருப்பதால், பார்க்க S1000RR பைக்கைப் போலவே இருக்கிறது. இந்த பைக்கின் ஒட்டுமொத்த கட்டுமானத் தரம், சூப்பர்!

S1000R பைக்கில் இருப்பது, இதன் அண்ணனான S1000RR பைக்கில் இருக்கும் அதே 999 சிசி, இன்லைன் 4 சிலிண்டர், லிக்விட் கூலிங், ஃப்யூல் இன்ஜெக்ஷன்கொண்ட இன்ஜின். எக்ஸாஸ்ட் சத்தம் பட்டையைக் கிளப்புகிறது. அதே இன்ஜின் என்றாலும், சாலைக்கான பைக் என்பதால், இதன் வீரியத்தைச் சற்று குறைத்திருக்கிறார்கள்.  S1000RR பைக்கைவிட 30 bhp குறைவாக, அதாவது 160.2bhp சக்தியை 11,000 ஆர்பிஎம்-ல் அளிக்கிறது இந்த இன்ஜின். அதிகபட்சமாக 11.4 kgmடார்க், 9,250 ஆர்பிஎம்-ல் அளிக்கிறது. எண்கள் படிக்க நன்றாக இருக்கின்றன. ஆனால், பைக் ஓட்ட எப்படி?

பேராசை!?

S1000R பைக்கை கவனமாகவே ஆக்ஸிலரேட் செய்ய வேண்டியிருக்கிறது. முதல் மூன்று கியர்களிலும் ஆக்ஸிலரேட்டரை முழுதும் திருகினால், மிக எளிதாக வீலிங் ஆகிறது. மிக வேகமாக முன்னேறும் இந்த நேக்கட் பைக்கை, மணிக்கு 160 கி.மீ வேகத்துக்கு மேல் பயம் இல்லாமல் ஓட்டுவது சிரமம்தான். மிக ஸ்மூத்தாக இருக்கும் இன்ஜின், ஐடிலைத் தாண்டியதும் பாயும் டார்க் வெள்ளம், சுனாமி போல் பிரம்மிக்க வைக்கும் பைக்கின் டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸ், ஓட்டுவதற்கு த்ரில்லாக இருக்கிறது. நிதானமாக ஓட்டினாலும், சிறப்பாக இருக்கிறது.

பேராசை!?

கிளட்ச் மிக கச்சிதமான உணர்வைத் தருகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸின் செயல்பாடும் அருமை. எந்த மோடில் ஓட்டினாலும் பைக்கின் திராட்டில் ரெஸ்பான்ஸ் செம ஷார்ப். ஈரமான சாலைகளுக்கு 'ரெயின்’ மோடு வசதியும் உண்டு. இந்த மோடில் இன்ஜினின் சக்தி 136 bhp ஆக குறைகிறது. மற்றபடி டிராக்ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ் போன்ற எலெக்ட்ரானிக் பாதுகாப்பு அம்சங்களும் நிலைமை கைமீறும் சமயத்தில், 'கைகொடுக்க’ இருக்கின்றன.

இதன் அலுமினியம் ட்வின் ஸ்பார் சேஸியும் RR பைக்கில் இருப்பதைப் போன்ற அமைப்பைக் கொண்டது தான். ஹேண்டில்பார்கள் கொஞ்சம் தட்டையான பைப்பைக் கொண்டுள்ளன. இந்த பைக்கின் முக்கியமான அம்சம், செமி ஆக்டிவ் எலெக்ட்ரிக் சஸ்பென்ஷன். இதில், பட்டன்கள் மூலம் மாற்றிக்கொள்ளக்கூடிய சாஃப்ட், மீடியம், ஹார்டு என மூன்று செட்டிங்குகள் உள்ளன. பைக்கின் கையாளுமையும், ஸ்டீயரிங்கும் கச்சிதம். வளைவுகளில் நேர்த்தியான டைனமிக்ஸைக் கொண்டிருக்கிறது. மேலும், இதன் எடையும் 207 கிலோதான் என்பது ப்ளஸ். முன்பக்கம் 320 மிமீ டிஸ்க் பிரேக்குகளும், பின்பக்கம் இருக்கும் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் மிக அருமையாக இயங்குகின்றன. பைக்கில் இருக்கும் உயர்தர டயர்களும் நல்ல க்ரிப் தருகின்றன.

பேராசை!?

எல்லாமே நன்றாக அமைந்த இந்த பிஎம்டபிள்யூ S1000R  பைக்குக்குப் பெரிய மைனஸ், விலைதான். இது 22.83 லட்சம் (எக்ஸ் ஷோரூம் மும்பை) என்பது மிக அதிகமாகவே தெரிகிறது. இதன் போட்டியாளரான கவாஸாகி Z1000 பைக்கைவிட இது நன்றாக இருந்தாலும், இவ்வளவு விலை ஓவர்.

AUTOCAR INDIA

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு