Published:Updated:

மார்க் அள்ளும் மார்க்யூஸ்!

மோட்டோ ஜீபிசார்லஸ்

பிரீமியம் ஸ்டோரி
மார்க் அள்ளும் மார்க்யூஸ்!

மார்க்யூஸை வெல்ல ராஸியிடமும் வேகம் இல்லை; லாரன்சோவிடமும் வேகம் இல்லை. இந்த ஆண்டு இதுவரை நடைபெற்றிருக்கும் 7 ரேஸ்களிலும் தொடர்ந்து வெற்றிபெற்று அசத்தியிருக்கிறார் மார்க்யூஸ். ஹோண்டா அணியைச் சேர்ந்த மார்க் மார்க்யூஸ்தான் நடப்பு சாம்பியன். 21 வயதான மார்க்யூஸ்... ராஸி, லாரன்சோ என முன்னாள் சாம்பியன்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தொடர்ந்து வெற்றி பெறுவது மோட்டோ ஜீபி இதுவரை காணாத வரலாறு.

பிரான்ஸ்

பிரான்ஸின் லே மான்ஸ் ரேஸ் மைதானத்தில் மோட்டோ ஜீபியின் 5-வது சுற்று மே 18-ம் தேதி நடைபெற்றது. தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்தார் மார்க் மார்க்யூஸ். பால் எஸ்பார்கரோ இரண்டாம் இடத்தில் இருந்தும், டொவிஸியோஸோ மூன்றாவது இடத்தில் இருந்தும், ராஸி ஐந்தாவது இடத்தில் இருந்தும், லாரன்சோ ஆறாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். நான்காவது லேப்பின்போது ஐந்தாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய ராஸி, முதல் இடத்துக்கு முன்னேறினார். 12 லேப்புகள் வரை முதல் இடத்தில் இருந்த ராஸியை, 13-வது லேப்பின்போது முந்தினார் மார்க்யூஸ். அதன் பிறகு, ராஸியால் மார்க்யூஸை முந்த முடியவில்லை. ரேஸின் இறுதியில் மார்க்யூஸ் வெற்றி பெற, ராஸி இரண்டாம் இடமும் அல்வரோ பட்டிஸ்ட்டா மூன்றாவது இடமும் பிடித்தனர்.

மார்க் அள்ளும் மார்க்யூஸ்!

இத்தாலி

இத்தாலியின் முகல்லோ ரேஸ் மைதானத்தில், மோட்டோ ஜீபியின் ஆறாவது சுற்று ஜூன் 1-ம் தேதி நடைபெற்றது. வாலன்டினோ ராஸியின் சொந்த ஊர் என்பதால், முகல்லோ மைதானத்தில் ஆயிரக்கணக்கில் ராஸி ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஆனால், தகுதிச் சுற்றில் சொதப்பினார் ராஸி. மார்க்யூஸ் முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற, ராஸி பத்தாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். ஆனால், நான்காவது லேப்பின்போதே, பத்தாவது இடத்தில் இருந்து முன்னேறி மூன்றாவது இடத்துக்கு வந்தார் ராஸி. இப்போது ராஸிக்கு முன்பு மார்க்யூஸும், லாரன்சோவும் இருந்தார்கள். இரண்டு முன்னாள் சாம்பியன்கள் இந்நாள் சாம்பியனோடு மோத... ரேஸ் செம பரபரப்பானது. லாரன்சோவும், மார்க்யூஸும் மைக்ரோ விநாடிகள் வித்தியாசத்தில் மோதிக் கொண்டிருந்தனர். இறுதியில், ரேஸ் முடிய சில விநாடிகளே இருக்கும்போது 0.121 மைக்ரோ விநாடிகள் வித்தியாசத்தில் மார்க்யூஸ் வெற்றி பெற்றார். லாரன்சோ இரண்டாம் இடம் பிடிக்க, ராஸி மூன்றாம் இடம் பிடித்தார்.

மார்க் அள்ளும் மார்க்யூஸ்!

ஸ்பெயின்

மோட்டோ ஜீபியின் ஏழாவது சுற்று, ஸ்பெயினின் பார்சிலோனாவின் கேட்டலுன்யா ரேஸ் டிராக்கில் ஜூன் 15-ம் தேதி நடைபெற்றது. ஹோண்டாவின் டேனி பெட்ரோஸா முதல் இடத்தில் இருந்தும், ஜார்ஜ் லாரன்சோ இரண்டாம் இடத்தில் இருந்தும், மார்க்யூஸ் மூன்றாம் இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர். ஸ்பெயினில் நடைபெற்ற இந்த ரேஸில், முதல் மூன்று இடங்களில் இருந்து ரேஸைத் துவக்கியவர்களும் ஸ்பெயின் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராஸி, ஐந்தாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். ரேஸ் துவங்கிய சிறுது நேரத்தில் லாரன்சோ முதல் இடம் பிடிக்க, நான்காவது லேப்பின்போது முதல் இடத்துக்கு முன்னேறினார் ராஸி. ரேஸ் முடிய ஐந்து லேப்புகளே இருந்த நிலையில், ராஸியிடம் இருந்து முதல் இடத்தைக் கைப்பற்றினார் மார்க்யூஸ். இறுதியில் மார்க்யூஸ் வெற்றிபெற, ராஸி இரண்டாம் இடமும், டேனி பெட்ரோஸா மூன்றாம் இடமும் பிடித்தனர்.

இதுவரை 7 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், மார்க் மார்க்யூஸ் 175 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். ராஸி 117 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், டேனி பெட்ரோஸா 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு