Published:Updated:

மலைப்பு... மயக்கம்... மர்மம்....5

மலைப்பு... மயக்கம்... மர்மம்....5
மலைப்பு... மயக்கம்... மர்மம்....5

இமயமலையில் ஒரு பயணம்!கணேசன் அன்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மலைப்பு... மயக்கம்... மர்மம்....5

யிருக்கு உத்தரவாதம் இல்லாத 'சாகசப் பயணம்’ மேற்கொண்ட குழுவில், இரண்டு பேர் காணாமல் போய்விட்டால்... மற்றவர்கள் மன நிலை எப்படி இருக்கும்? டண்டி பெட்ரோல் பங்க்கில் குழுவினர் அனைவரும் ஒன்று கூடுவதாக முன்கூட்டியே திட்டமிட்டிருந்தோம். ஆனால், சாமிநாதன் மற்றும் கருப்பசாமி ஆகிய இரண்டு பேர் மட்டும் எங்களுடன் இணையவில்லை. கோக்ஸரில் மதிய உணவின் போதும் அவர்களை யாரும் பார்த்திருக்கவில்லை. ரொதாங் பாஸ்-ல் இருந்து இறங்கும்போது, அனைவரையும் முந்திக்கொண்டு இருவரும் சென்றுவிட்டதால், டண்டி பெட்ரோல் பங்க்கில் காத்திருப்பார்கள் என நினைத்தோம். ஆனால், டண்டியிலும் அவர்கள் இல்லாதது கண்டு அனைவருக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது. அன்றைய தினத்தின் (ஐந்தாம் நாள்) தங்குமிடமான ஜிஸ்பா எனும் கிராமத்துக்கு அவர்கள் சென்றிருக்க வேண்டும் அல்லது ரொதாங் பாஸ்-ல் இருந்து மலை இறங்கியபோது, அனிச்சைச் செயலாக 'யு-டர்ன்’ எடுத்து காசா நகரம் நோக்கிப் பயணித்திருக்க வேண்டும். அவர்களைத் தேடி நாங்கள் பின்னோக்கிப் பயணிப்பது உகந்தது அல்ல. ஏனெனில், மாலை 4 மணியைக் கடந்திருந்ததால், தேடிச் சென்றுவிட்டு மீண்டும் ஜிஸ்பா திரும்புவது கடினம். ஆகவே, அவர்கள் இருவரும் முன்னோக்கியே சென்றிருப்பார்கள் எனும் நம்பிக்கையில், ஜிஸ்பாவை நோக்கிச் சென்றுவிட்டோம்.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....5

ஜிஸ்பா, முன்னூற்று சொச்சம் பேர் வசிக்கும் ஹிமாச்சல் பிரதேசத்தின் மிக அழகான சிறு கிராமம். இந்தக் கிராமத்துக்கு 20 கி.மீ முன்பாகவே மாவட்டத் தலைநகரான கெலாங் இருந்தாலும், ஜிஸ்பாவில் தங்கவே பயணிகள் விரும்புகிறார்கள். காரணம், ஐரோப்பிய கிராமங்களைப்போலத் தோற்றமளிக்கும் இதன் கொள்ளை அழகு! சாலைக்கும் மலை அடிவாரத்துக்கும் இடையே பாகா ஆறு இரைச்சல் இன்றி ஓடிக் கொண்டிருந்தது. குளிர் காலங்களில் இந்த ஆறு, மணலோடும் பாறைகளோடும் சேர்ந்து உறைந்துவிடும்.

சாலையோர விடுதியான 'பத்மா லாட்ஜ்’ இங்கு ஓரளவுக்குப் பிரபலம். விடுதிக்குச் சில கி.மீ முன்பாகவே வாகனங்களை நிறுத்தினோம். அதுவரையிலும்கூட காணாமல் போன நண்பர்கள் இருவரும் தென்படவில்லை. மணாலியைக் கடந்த சில நிமிடங்களில் செல்போன் அலைவரிசையும் துண்டிக்கப்பட்டுவிட்டது. அவசரக் கால தொடர்புக்கு யாரை அணுகுவது? மணாலி காவல் நிலையம், கோக்ஸர் பரிசோதனை மையம் போன்றவற்றை எப்படித் தொடர்புகொள்வது போன்ற விபரங்களை சில ஓட்டுநர்களிடம் விசாரித்துக்கொண்டு சென்றோம். ஆனால், எங்கள் தேடல் பலன் அளிக்கவில்லை.

கடைசியாக, பதற்றத்துக்கு முடிவு கிட்டியது. நாங்கள் திரும்பியபோது, காணாமல் போன நண்பர்கள் எங்களை எதிர்கொண்டு வரவேற்றனர். நாங்கள் எதிர்பார்த்தபடியே ரொதாங்கின் அடிவாரத்தில் யு-டர்ன் எடுத்து காசா நோக்கி சுமார் 40 கி.மீ பயணித்து இருக்கின்றனர். அந்தச் சாலை மிக மோசமானதாகவும், இடுப்பளவு ஆழத்துக்கு சாலைகளின் குறுக்கே சிற்றாறுகள் கொண்டதாகவும் இருந்துள்ளது. புல்லட் முழுமையாக மூழ்கிய பிறகும் இன்ஜின் அணையாமல் இருந்தது, இமாலயம் நமக்குக் காண்பித்த அதிசயம்! அவ்வளவு நேரமாகியும் குளிர்ந்த ஆற்றில் நனைந்த ஈரம் அவர்கள் உடைகளில் அப்படியே இருந்தது. சந்தேகத்தின் பேரில் சிறிது நேரம் காத்திருந்து, எதிரில் வந்த ஓட்டுநரிடம் விசாரித்துத் திரும்பியுள்ளனர். நண்பர்கள் திரும்பியதில் குழுவில் நிலவிய பதற்றம் தணிந்து, பத்மா லாட்ஜ் நோக்கிப் புறப்பட்டோம்.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....5

விடுதியை நெருங்கியபோது சூரியன் மறைந்து, ஓங்கி உயர்ந்த இரு மலைகளுக்கு இடையில் அமைந்திருந்த அழகிய கிராமத்தின் மீது இருள் படரத் தொடங்கியது. விடுதியில் எங்களைத் தவிர முப்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகளும் தங்கியிருந்தனர். ஜிஸ்பா கிராமத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை விடுதி மேலாளர் தெரிவித்தார்.

அக்டோபரில் பனிப்பொழிவு துவங்கியதும், கிராம மக்கள் அனைவரும் மணாலிக்குச் சென்று விடுவார்களாம். கால்நடைகளைப் பராமரிக்கவும், சாலைகளில் உறையும் பனிப்பொழிவை அப்புறப்படுத்தவும் வீட்டுக்கு ஒருவர் வீதம் சுமார் முப்பது பேர் மட்டுமே இந்தக் கிராமத்தில் வசிப்பார்களாம். அக்டோபரில் இருந்து மே மாதம் வரை இதுதான் நிலை.

நறுக்கி உலர வைத்த காய்கறிகள் மற்றும் இறைச்சியே இவர்களுக்கான உணவு. மாதத்துக்கு ஒருமுறை ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக உணவுப் பொருட்களும், அவசர சிகிச்சைக்கான மருந்துகளும் வந்து சேரும். அப்போது கிராமத்தில் உயிருடன் இருப்பவர்களின் பட்டியலையும் ஒருமுறை சரிபார்த்து விடுவார்களாம்!

மலைப்பு... மயக்கம்... மர்மம்....5

ஒரு நிமிடம் கண்களை மூடி கற்பனை செய்து பாருங்கள். நாம் வசிக்கும் நகரம் (உதாரணத்துக்கு சென்னை) நாற்பது அடி உயரத்துக்கு உறை பனியால் மூடப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா உறைந்துள்ளது. நகரில் மொத்தமே நாற்பது பேர்தான் வசிக்கிறோம். மின்சாரம் கிடையாது; தண்ணீர் கிடையாது; சுவையான உணவு கிடையாது; செய்தித்தாள் கிடையாது...! கற்பனையே பயமுறுத்துகிறது அல்லவா? இமயமலைத் தொடர்களில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களின் ஆறு மாத கால வாழ்க்கைச் சூழல் இதுதான்.

ரொதாங் பாஸ்-ம், அதற்குப் பிறகான சாலைகளையும் கொஞ்சம் தாக்குப்பிடித்துக்

மலைப்பு... மயக்கம்... மர்மம்....5

கடந்துவிட்டால் பெண்களும், குடும்பத்தினரும் இந்தக் கிராமத்தை சொர்க்கமாக உணர்வார்கள். மணாலியில் இருந்து சுமார் 140 கி.மீ. தொலைவில் உள்ளது ஜிஸ்பா. அரசாங்க விதிமுறைகளின்படி சரியாக இயங்கும் டிராவல் ஏஜென்ஸிகளும், வாகனங்களும் எளிதில் கிடைக்கின்றன. 1,000 - 1,500 ரூபாயில் அறைகளும், 300 - 500 ரூபாயில் கூடாரங்களும் கிடைக்கின்றன. இந்தப் பகுதிகள் முழுக்கவும் விடுதி அறைகளில் வழங்கப்படும் கம்பளியும், ரஜாயும் இரவு நேரக் குளிருக்கு இதம் அளிக்கின்றன.

உடலிலும் மனதிலும் திடமான சாகசப் பிரியர்கள், அடுத்த அறுபதாவது கிலோ மீட்டரில் கடக்கப் போகும் அபாயகரமான 'பார லாச்சா பாஸ்’ நோக்கிப் படை எடுக்கலாம்!

(சிகர்ர்ரூ...ம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு