Published:Updated:

சுயநலம் வேண்டும்?

சாலைப் பாதுகாப்புர.ராஜா ராமமூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காரில் ஏபிஎஸ், காற்றுப் பைகள் ஆகிய இரண்டும் இருந்தாலே போதும்; அது பாதுகாப்பான கார்’ என்று ஒரு கருத்து இருக்கிறது. இந்த நிலையில், இந்த இரு வசதிகளையும் கொண்ட கார் ஒன்று, சமீபத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடந்த விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த நடிகர் நாசரின் மகன் மற்றும் அவரது நண்பர்களும் இதில் காயமடைந்தார்கள். இவர்களுடன் பயணித்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

சுயநலம் வேண்டும்?

புதுச்சேரியில் இருந்து சென்னைக்குப் புத்தம் புதிய ஃபோக்ஸ்வாகன் போலோ ஜிடி காரில் வந்த அவர்கள், அதிகாலை நேரத்தில் எதிரே வந்த லாரியுடன் மோதியதில், கார் முழுவதும் நொறுங்கி லாரிக்குள் சிக்கிக்கொண்டது. சமீபத்தில் நிறீஷீதீணீறீழிசிகிறி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டுகளில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஃபோக்ஸ்வாகன் போலோ அதிக ஸ்டார்களுடன், 'இந்தியாவின் பாதுகாப்பான ஹேட்ச்பேக்’ என்று கீரிடம் சூட்டியதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

அவர்கள் ஓட்டிவந்தது ஃபோக்ஸ்வாகன் போலோ ஜிடி என்பதால், நிச்சயம் அதில் காற்றுப் பைகள் வசதி இருந்திருக்க வேண்டும். அப்படியும் இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் நமக்கு உணர்த்துவது ஒன்றைத்தான். 'பாதுகாப்பு’ என்பது கார்களில் இருக்கும் ஏபிஎஸ், காற்றுப் பைகள் போன்ற தொழில்நுட்பங்களில் மட்டும் இல்லை. உலகின் பாதுகாப்பான காராக மதிக்கப்படும் வால்வோ காரை, ஒரு மோசமான டிரைவர் ஓட்டினால், என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்!

தமிழகத்தில் 2013-ம் ஆண்டு மட்டும், மொத்தம் 66,238 விபத்துகள் நடந்திருக்கின்றன. இதில் 91,244 பேர் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர். 15,563 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 2012-ம் ஆண்டைவிட 2013-ம் ஆண்டில் சுமார் 1,000 விபத்துகள் குறைவுதான். ஆனால், சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது என நம்மால் ஆறுதல் அடைய முடியாது.  

2012 - 2013 ஆண்டுகளில் மட்டும் 16,54,623 டூவீலர்கள் மற்றும் கார்கள் தமிழகத்தில் புதிதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2012 - 2013 ஆண்டுகளில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை, 19,60,100. இந்த ஆண்டு மார்ச் முதல் தேதி அன்றுக்கான கணக்கின்படி, தமிழகத்தில் உள்ள மொத்த வாகனங்கள் எண்ணிக்கை, 1,86,69,433. இதில் முக்கியமான கேள்வி என்னவென்றால், சுமார் 2 கோடி வாகனங்களில், எத்தனை வாகனங்களை பாதுகாப்பான டிரைவர்கள் இயக்குகிறார்கள்?

கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடக்கும் விபத்துகளைக் கட்டுப்படுத்த, ஆஸ்திரேலியாவில்

சுயநலம் வேண்டும்?

இருந்து நிபுணர்கள் இங்கு வந்து ஆராய இருக்கிறார்களாம். வரட்டும்; விபத்தைக் குறைக்க யோசனை சொல்லட்டும். ஆனால், அவர்களால் சாலையைப் புரிந்துகொள்ள முடியுமே தவிர, அந்தச் சாலையில் கண்டபடி ஓட்டும் வாகன ஓட்டுநர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளவே முடியாது.

சாலைப் பாதுகாப்பு என்பது, சுயநலத்தில் துவங்கி பொதுநலத்தில் முடிய வேண்டும். முதலில் 'நான் ஹெல்மெட் அணிந்துதான் ஓட்டுவேன்’ என்ற சுயநலம் இருந்தால்தான், 'அடுத்தவர் பாதைக்குள் நான் நுழைய மாட்டேன்’ என்ற பொதுநலம் ஏற்படும்.

சரி, ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுபவரெல்லாம் ஒழுங்காக ஓட்டுகிறார்களா என்றால், இல்லைதான். ஆனால், அடிப்படைப் பாதுகாப்பைப் புரிந்துகொண்ட ஒருவர், சிறிது விழிப்பு உணர்வு ஏற்படும்போது, நிச்சயம் நல்ல ஓட்டுநராக மாறுவார். ஆனால், பாதுகாப்பானது என்று தெரிந்தும் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர், இன்னொருவருக்கு ஏற்படும் விபத்தைப் பார்த்துத்தான் புரிந்துகொள்வார். ஹெல்மெட் அணிந்து பழக்கமே இல்லாத ஒருவர், திடீரென்று அதை அணிய ஆரம்பிக்கிறார் என்றால், அவர் சொல்லும் காரணம், 'நேத்து ஒரு ஆக்ஸிடென்ட் பார்த்தேன் சார். அந்த ஆள் ஹெல்மெட் போடலை. அவன் மட்டும் ஹெல்மெட் போட்டிருந்தான்னா, பொழைச்சிருப்பான் சார். அதைப் பார்த்ததுலேர்ந்து நானும் ஹெல்மெட் போட ஆரம்பிச்சுட்டேன்!’

ஒருவருக்குப் பாதுகாப்பு பற்றிய புரிதல் ஏற்பட, இன்னொரு உயிர் பலியாக வேண்டுமா?

போலீஸாரின் கெடுபிடிகள், சட்ட திட்டங்கள், விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் ஆகியவற்றைப் பார்த்தும், ஹெல்மெட் அணியாமலும், சீட் பெல்ட் போடாமலும் பலர் வாகனம் ஓட்டுவது ஏன்?

இந்தக் கேள்வியில் துவங்குவோம்...

(சிக்னலில் சந்திப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு