Published:Updated:

வெள்ளைத் தூதன்!

நினைவுகள்அராத்து, ஓவியங்கள்: ஹாசிப்கான்

பிரீமியம் ஸ்டோரி

ப்போது எத்தனையோ வெளிநாட்டு கார்கள் பல வண்ணங்களில் பளபளவென ஜொலிப்புடன் ஓடுகின்றன. அப்படி ஓடும் கார்களில் பல அழுக்காகவும் தூசி படர்ந்தும் ஓடுவதைக் காணலாம். பெரும்பாலும் வெள்ளை நிறத்திலேயே வெளிவந்து கொண்டிருந்த அம்பாஸடர் கார்களை, அழுக்குடனும் தூசி படர்ந்தும் ஓடி நான் அதிகம் பார்த்தது இல்லை. டாக்ஸி ஸ்டாண்டில் நின்றுகொண்டிருக்கையிலும் சரி; சவாரி சென்றுகொண்டிருக்கையிலும் சரி; எப்போதும் பளபளவெனக் காணப்படும். அந்த அம்பாஸடர் காரை வைத்திருக்கும் ஓனர், அதன் மீது ரெண்டாம் பொண்டாட்டிபோல பாசம் வைத்திருப்பார் என்றால், அதை ஓட்டும் டிரைவர் அதன் மீது சின்ன வீட்டைவிடப் பாசம் காட்டுவார். காலை எழுந்ததும் முதல் வேலையாக அம்பாஸடர் காரைச் செல்லமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, அதன் மேல் கிடக்கும் இலை தழைகளை எடுத்துப் போட்டுவிட்டுத்தான் பல் தேய்க்கப்போவார்.

வெள்ளைத் தூதன்!

டீத்தண்ணி குடித்துவிட்டு, கொஞ்சம் தெம்பாக வந்து காரைச் சுத்தப்படுத்தும் வேலை ஆரம்பமாகும். இன்ச் பை இன்ச்சாக காருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கும். பின் சிலர் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு காருக்கு அடியில் எல்லாம் மல்லாக்கப் படுத்துக் கொண்டு தேய்த்துக் கொண்டு இருப்பார்கள். காரின் கண்ணாடிகளில் விபூதியைப் போட்டுத் தேய்ப்பதைக் கண்டிருக்கிறேன். 'ஏங்க விபூதியைப் போட்டுத் தேய்க்கறீங்க’ என்றால், 'நல்லா பளிச்சுன்னு ஆவும் தம்பி’ என்று பதில் வரும். ஒரு வழியாக காருக்குத் தீர்த்தவாரி முடிந்ததும், இடதுபக்க இடுப்பில் கை ஊன்றியபடி, 45 டிகிரியில் காரை பல முனைகளில் இருந்தும் பார்த்து திருப்தி வந்தபின்புதான், தங்கள் வேலைகளைப் பார்க்கச் செல்வார்கள். கடைசி நேரத்தில் திருப்தி வராமல், எச்சில் தொட்டு லேசாக பாலீஷ் போடுபவர்களும் உண்டு.

கார் அன்று வெளியே கிளம்புகிறதோ இல்லையோ, இந்தச் சுத்த நீராட்டல் தினமும் நடந்தேறும். கார் வெளியே கிளம்புகிறது என்று வைத்துக் கொள்வோம். சினிமா தியேட்டருக்குச் சென்றால், காரை பார்க் செய்துவிட்டு டிரைவர் செய்யும் முதல் வேலை, வேறென்ன? காரை மீண்டும் துடைப்பதுதான். எப்போதெல்லாம் இடைவெளி கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அதைத் துடைத்துக்கொண்டே இருப்பார்கள். அந்த அளவுக்கு அதன் மீது பாசம். இன்னொரு முக்கியமான விஷயம் அம்பாஸடர் கார் டிரைவர்களில் பெரும்பாலானோர், முக்கால் மெக்கானிக்காக இருப்பார்கள்.  சின்னச் சின்ன பிரச்னைகளை அவர்களே சரிசெய்து கொள்வார்கள். மெக்கானிக் ஷெட்டில் காரைவிட வேண்டிய நிலை வரும்போதும், நம்மைப்போல காரைவிட்டுவிட்டு, 'எப்போ எடுக்க வரலாம்’ எனக் கேட்க மாட்டார்கள். காரைத் திரும்ப எடுக்கும்வரை மெக்கானிக் ஷெட்டிலேதான் வாசம். மெக்கானிக் சர்வீஸ் செய்து முடிக்கும் வரையிலும் டிரைவர் கூடவே இருப்பார்.

மாடு கன்னுக்குட்டி இருந்தால், அதை வைத்து ஒரு குடும்பமே பிழைத்துக்கொள்ளும் என்பார்கள். அதேபோல, ஒரு அம்பாஸடர் காரை வைத்து ஒட்டுமொத்தக் குடும்பமே பிழைத்துக்கொள்ளும். ஊர்களில் டிரைவர் வூடு எது என்று விசாரித்தால் போதும். அம்பாஸடர் கார் நின்றுகொண்டிருக்கும் வீட்டின் முன்னால் கொண்டுபோய் நிறுத்திவிடுவார்கள். டிரைவர் வீட்டம்மா, டிரைவர் வீட்டுப் பையன், டிரைவர் வீட்டு ஃபிகர் என ஒரு கார் அந்தக் குடும்பத்தில் இருக்கும் பலருக்கும் அடைமொழியைப் பெற்றுத் தந்துவிடும்.

எங்கேனும் சில இடங்களில் சிவப்பு, நீலம் என கலர்களில் அம்பாஸடர் கார்களைப் பார்த்திருந்தாலும் பெரும்பாலும் வெள்ளையும் சொள்ளையுமாகவே அம்பாஸடர் திரிந்ததால், அதன் மேல் ஒரு மரியாதை உருவாகியிருக்கக்கூடும் என நினைக்கிறேன். பெரியவர்களுக்குத்தான் மரியாதை. சிறுவர்களுக்குக் கவர்ச்சி. ஊருக்குள் அம்பாஸடர் நுழைந்தால் போதும், சிறுவர்கள் கூட்டம் அந்த காரின் பின்னால் 'ஹோ...’ வென கத்திக்கொண்டு ஓடுவார்கள். சிறுவர்கள் எனத் தவறாக எழுதிவிட்டேன், சிறுமிகளும் சரிக்குச் சமமாகப் பாவாடையை இழுத்து மேலே சொருகிக் கொண்டு காரின் பின்னால் ஓடுவார்கள். கார் நின்றதும் அதைச் சுற்றிச் சுற்றி வருவதும், கொஞ்சம் தைரியம் இருக்கும் சிறுவர்கள் டிக்கி மீது ஏறி அமர்வதும் நடக்கும். டிரைவருக்கு வெறி கொண்டு இவர்களைத் துரத்துவதிலேயே நேரம் போகும். சில பாசக்கார டிரைவர்கள், சிறுசுகளை ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்ட் அடிப்பதும் நடக்கும்.

வெள்ளைத் தூதன்!

தாசில்தார் முதற்கொண்டு பிரதமர் வரை பயணித்த பெருமைகொண்டது அம்பாஸடர் கார். பின் இருக்கையில்தான் ஓனரோ, விஐபியோ பெரும்பாலும் அமர்வார்கள். சில துடுக்கான விஐபிக்கள் முன் இருக்கையிலேயே அமர்வதும் உண்டு. இவர்களுக்காக ஒரு குட்டி ஃபேன் சைடில் தொங்கிக்கொண்டு இருக்கும். அந்த ஃபேன் கர்ம சிரத்தையாக காத்தாடிபோலச் சுத்திக்கொண்டிருக்கும். பார்ப்பதற்குப் பொழுதுபோக்காக இருக்கும். என்னது காத்தா? ஜன்னல் வழியே இயற்கையாக வரும் காற்றையே இந்த ஃபேன் கொஞ்சம் தடுத்துவிடும். அம்பாஸடரின் கடைசி காலங்களில் 'ஏ/சி’ என சிவப்புக் கலரில் கொட்டை எழுத்துக்களில் போட்டிருக்கும். 'நோ ஹேண்ட் சிக்னல்’ என்றும் எழுதியிருக்கும். ஏ.சி என்று போட்டிருந்தாலும் அம்பாஸடரில் ஏ.சி ஓடி நான் பார்த்ததே இல்லை. அம்பாஸடர் டிரைவர்கள் அவ்வளவு சிக்கனவாதிகள்.

பவர் பிரேக், பவர் ஸ்டீயரிங் என்றெல்லாம் டிக்கியில் எழுதி அட்ராசிட்டி செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், காரில் உண்மையில் இருந்ததென்னவோ பவர் ஹாரன் மட்டுமே!  

சென்னை சென்ட்ரல் வரலாற்றிலும், சென்னை ஏர்போர்ட் வரலாற்றிலும் தவிர்க்க முடியாத இடம் அம்பாஸடருக்கு உண்டு. இவ்வளவு நீண்ட வரலாறும், பாரம்பரியமும், மக்களின் அன்பும் பெற்று, மக்களோடு ஒன்றாகவே கலந்துவிட்ட அம்பாஸடர், இனி வெளிவராது. தொழிற்சாலை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாஸடர் நிறுவனத்தில் ரிசர்ச் - டெவலப்மென்ட் டிபார்ட்மென்ட் இருந்திருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது இப்போது. அந்த அளவுக்கு ஒரு மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கார்களை வெளியிட்டுக்கொண்டு இருந்தார்கள். காலத்துக்கு ஏற்ப நவீன வடிவமைப்புடன் பலப்பல வசதிகளையும் சொகுசுகளையும் சேர்த்துக் கொண்டேவந்திருந்தால், இன்னும் அம்பாஸடர் ஓடிக்கொண்டே இருந்திருக்கும். இப்படி பிரேக் டவுன் ஆகி நின்றிருக்க வேண்டி இருந்திருக்காது.

தன்னுடைய பின் சீட்டில் பல்லாயிரக்கணக்கான பிரசவங்களையும், திருமண ஜோடிகளையும், சுபகாரியங்களைப் பார்த்த அம்பாஸடர், தன் பிரசவத்தை, தானே நிறுத்திக்கொண்டது. அம்பாஸடரை தங்களின் வாழ்க்கையில் ஒரு கேரக்டராகவே நினைத்தவர்களுக்கு மனம் வலிக்கத்தான் செய்யும். கவலையைவிடுங்கள், அம்பாஸடரை கிளாஸிக் கலெக்ஷனில் சேர்த்து விடலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு